Translated by Sandhya Raju
2015-ம் ஆண்டுக்கு பின், இது வரை கண்டிராத அளவு மழை கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் கொட்டித் தீர்த்தது. வடகிழக்கு பருவ மழைக்கு பின் வந்த இந்த அடர் மழையால் சென்னையின் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
நாட்டின் பல நகரங்களைப் போலவே, சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இது சில ஆண்டுகளாக இன்னும் மோசம் அடைந்துள்ளது. இந்த பிரச்சனைகள் களையப்படவில்லை எனில், அடுத்த பத்து வருடங்களானாலும் வெள்ள பாதிப்பை தடுக்க முடியாது.
நகர்ப்புற வெள்ளத்திற்கு வித்திடும் விரிவாக்கம்
சென்னை மாநகராட்சிக்கு கீழ் வரும் நகர்ப்புற பகுதி, கடலை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு விவசாயப் பகுதியாக இருந்த சமயத்தில் அதற்காக பல ஆயிரம் ஆழமற்ற பெரிய ஏரிகள் அமைக்கப்பட்டன.
காலப்போக்கில், நகர விரிவாக்கம் காரணமாக, கடலை ஒட்டிய தாழ்வான பகுதிகளிலும், சதுப்பு நிலங்களிலும், கட்டிங்கள் வந்தன. இதனால், 2015 வெள்ளம் போல, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பல வெள்ளங்களை சந்தித்தும், அதிலிருந்து கற்றுக் கொள்ளாமல், அடையாறு போன்ற பகுதிகளில், ஆற்றின் கரையோரம் பல கட்டிங்கள் உருவாகி உள்ளது. இந்த நிலையில், பழைய இயல்பு நிலைமைக்கு மீண்டும் திரும்புவது முற்றிலும் சாத்தியமற்றது.
உதாரணமாக, 2020-ம் ஆண்டு அடையாறு ஆற்றின் அருகே உள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது கீழே வரைப்படத்தில் காணலாம்.
பெரு மழை ஏற்படும் போது, அரணாக செயல்பட வேண்டிய பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நில பகுதிகளிலும் கட்டிங்கள் முளைத்து, நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டிடங்களால் நிலத்திற்குள் நீர் செல்வதற்கும் வழி இல்லாததால், இது போன்ற நிலை ஏற்படுகிறது.
Read more: Madipakkam: Where roads disappear after a few spells of rain
செயற்கை உள்கட்டமைப்பு நகர்ப்புற வெள்ளத்தைத் தடுக்கத் தவறிவிட்டது
இது போன்ற பேரிடர் காலத்தில், இயற்கை கட்டமைப்பு இல்லாத பட்சத்தில், செயற்கை கட்டமைப்பு உதவும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால், தெருக்கள் அமைப்பு, மழை நீர் வடிகால் அமைப்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளால், இது உதவுவதில்லை.
ஒரு காலத்தில் விளை நிலங்களுக்காக அமைக்கப்பட்ட செயற்கை ஏரிகள், வேறு விதமாக பயன்பாட்டுக்கு அமைத்திருக்கலாம். ஆனால், காலம் கடந்ததால், கழிவு நீர் கலந்ததால் இவை உபயோகமற்று உள்ளன. கீழுள்ள வரைபடம் வேளாச்சேரி ஏரியின் சுருங்கிய பரப்பை காட்டுகிறது.
Read more: Rivers remember, but why don’t we?
அறிவியல் திட்டமிடல் இல்லாமை
சென்னையின் மாஸ்டர் திட்டமாகட்டும், அல்லது பேரிடர் மேலாண்மை திட்டமாகட்டும், இரண்டிலும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த தேவையான அறிவியல் பூர்வமான அணுகமுறை இல்லை. பேரிடர் மேலாண்மை திட்டம் (2017) சில வரைமுறைகளை வகுத்திருந்தாலும், அறிவியல் ரீதியான விளக்கங்களோ, பகுதி அடிப்படையிலான திட்டமோ அல்லது பிரச்சனை தீர்க்கும் திட்டமோ இதில் இடம்பெறவில்லை.
அப்படியே திட்டமிட்டு, தெரு அமைப்புகளையும், மழை நீர் வடிகால்களையும் மாற்றி அமைப்பதென்றால் பல கோடிகள் செலவு மட்டுமின்றி பல வருடங்கள் ஆகும்.
நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள்
சரியான வெள்ள மேலாண்மை இல்லாதது மட்டுமே நகர்ப்புற வெள்ளத்திற்கு காரணமல்ல. நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன. நகராட்சி தேர்தல் நடத்தப்படாததால், கடந்த ஆறு ஆண்டுகளாக மக்கள் குறை தீர்க்க மக்கள் பிரதிநிதி என யாரும் இல்லை.
அறிவியல் பூர்வமான தீர்வை நோக்கி பயணிக்கும் அதே வேளையில், நகராட்சி நிர்வாக சீரமைப்பும் அவசியமாகிறது. இவை அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தாலும், சென்னையை வெள்ளப்பெருக்கு தாக்கத்திலிருந்து மீட்க பல ஆண்டுகள் ஆகும்.
நீண்ட கால தேவைகளை நினைவில் கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டால் மட்டுமே, அடுத்த பத்து ஆண்டுகளில் எவ்வித தீவிர மழை என்றாலும், வாழத்தக்க பாதுகாப்பான நகரமாக சென்னை இருக்கும்.
(இந்த கட்டுரை ஆசிரியர் தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் செய்த தொடர் ட்வீட்களை அடிப்படையாகக் கொண்டது.)
[Read the original article in English here.]