2020 ஆம் ஆண்டு பெரும்பாலும் பலர் வீட்டினுள்ளே கடந்து விட்ட நிலையில், பொது இடங்களின் பயன்பாடு இந்த வருடம் அவ்வளவாக இல்லை என்றே கூறலாம். அரசும் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் தன் முழு கவனத்தையும் செலுத்தியது. இதனிடையே, நிலைமை சற்றே சீராக தொடங்கியதும், சென்னை நகரில் பல திட்டங்கள் மீண்டும் உயிர் பெற்றன அல்லது கவனம் பெற்றன. இதில் குறிப்பிட்ட சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
அனைவருக்குமான மெகா தெருக்கள்
அகலமான நடைபாதைகள், பிராகசமான தெரு விளக்குகள், சைக்கிளுக்கென தனி பாதை, நியமிக்கப்பட்ட பார்க்கிங் வசதி என நகரின் முக்கிய இடங்களில் 426 கி.மீ தூரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தெருக்களை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மெகா தெருக்கள் ஆக உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
இந்த திட்டம் செயல் வடிவம் அடைய நீண்ட காலம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு, அண்ணாநகர், வேளாச்சேரி, மைலாபூர், அடையாறு, நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை என தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் முதலில் 2.5 கி.மீ சாலைகளை விரைவு திட்டம் அடிப்படையில் செயலாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வரும் ஆண்டில் சென்னையின் பல முக்கிய தெருக்கள் உருமாறி அனைவருக்குமான மெகா தெருக்களாக மாறும் என எதிர்பார்க்கலாம்.
புத்துணர்ச்சி பெற்ற நீர் நிலைகள்
பருவ மழை காரணமாக பெரும்பாலான ஏரிகளும் குளங்களும் நிரம்பியுள்ளன. சென்னையில் நிரம்பி வழிந்து உள்ள ஏரிகள், நீர் நிலைகளை காண பலர் ஆர்வமாக வந்து செல்கின்றனர். சென்னை மாநகராட்சியும் பொது பணித்துறையும் இணைந்து நகரின் பல ஏரிகளை தூர் வாரியுள்ளது. கடந்த ஆண்டு தெரிந்தெடுக்கப்பட்ட 210 ஏரிகளில், 160 ஏரிகளும் குளங்களும் சீரமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தவிர, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இணைந்து பல குளங்களை சீரமைத்துள்ளனர். உதாரணமாக, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தாழம்பூர் ஏரி புனரமைக்கப்பட்டது.
வரும் ஆண்டில் வில்லிவாக்கம் ஏரி புது பொலிவை பெற்று முக்கிய பொழுது போக்கு மையமாக திகழும். இதே போல் 130 ஏக்கர் பரப்பளவை கொண்ட காடப்பாக்கம் ஏரியை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முடக்கப்பட்ட மழை நீர் வடிகால் திட்டம்
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஒரு முக்கிய திட்டம் கடும் எதிர்ப்பை சந்தித்ததோடு, தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை மாநகராட்சி மேற்கொண்ட ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் திட்டம், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) விதிகளை மீறியுள்ளதாக கூறி, கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் சென்னை மாநகராட்சி மீது வழக்கு தொடுத்துள்ளது.
முன்னதாக, இந்த திட்டத்திற்கு ஈ.சி.ஆர் குடியிருப்பு வாசிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. கான்கிரீட் வடிகால் நிலத்தடி நீரை பாதிக்கும் எனவும் எந்த வித கலந்துரையாடலும் இல்லாமால் மாநகராட்சி இந்த திட்டத்தினை மேற்கொண்டுள்ளதாக இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாநகராட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மையான சென்னை
குப்பையில்லா நகரத்தில் வாழ யாருக்கு தான் விருப்பமில்லை? கழிவு மேலாண்மையில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றாலும் நாம் கடக்க வேண்டிய பாதை வெகு தூரம் உள்ளது. அரசும் இதற்காக பல திட்டங்களை வகுத்துத்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக செயல் திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணி, சென்னை மாநகராட்சியின் 7 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்திற்குள் அனைத்து வீடுகளிலிருந்தும் 100 சதவீதம் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் முறைப்படி பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பழைய மூன்று சக்கர மிதிவண்டிக்குப் பதிலாக ஈ-ரிக்ஷாக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை தெருக்கள் இனி குப்பையின்றி இருக்குமா? இது எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றாலும் குப்பையில்லா நகரத்தை உருவாக்க மக்களாகிய நம் பங்களிப்பும் முக்கியம் எனபதையும் நாம் உணர வேண்டும்.
பசுமை நகரம்
பசுமை போர்த்திய நகரமாக சென்னை மிளிரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. 675 பூங்காக்கள் கொண்ட சென்னையில் மேலும் 350 புதிய பூங்காக்கள் நிறுவப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மியாவாக்கி முறை காடுகளை நகரில் வடிவமைக்கவுள்ளதாகவும் நகரை பசுமை போர்வையாக மாற்ற 1000 அர்பன் காடுகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு இது வரை கண்டிராத பல சவால்கள் நிறைந்த ஆண்டாக நமக்கு அமைந்தாலும், சென்னை மாநகர கட்டமைப்பை பொறுத்த வரை குறிப்பிடத்தக்க திட்டங்களையும் எதிர்ப்பார்ப்புகளையும் அளித்துள்ளது.
புதிய ஆண்டு நம் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, சென்னையை ரம்யமான அனைவருக்குமான நகராக மாற்றும் திசையில் முன்னெடுத்து செல்லும் என நம்புவோம்.