Translated by Sandhya Raju
கிழக்கு கடற்கரை சாலையில் திட்டமிடப்பட்ட மழை நீர் வடிகால் திட்டம் , அங்குள்ள குடிமக்களின் எதிர்ப்பால் பின்னடைவை சந்தித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்திலும் இந்த பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்று வாதாடும் இவர்கள், இங்குள்ள மணல் மண் இயற்கையாகவே பாதுகாப்பு அரணாக அமைகிறது என்கின்றனர்.
270 கோடி ரூபாய் மதிப்பில் கொட்டிவாக்கம் – உத்தண்டி இடையே வடிகால் அமைக்கும் இந்த பணி, ஜெர்மன் வளர்ச்சி வங்கியான KfW வின் நிதியதவி பெற்றது. இங்கு வசிக்கும் மக்களின் எதிர்ப்பால் திட்டம் கிடப்பில் போடப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தில் திட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வடிகால் திட்டம்
ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு, சென்னையின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வடிகால் கட்டும் முதன்மை திட்டம் அமைக்கப்பட்டது. இதன் படி, அடையாறு மற்றும் கூவம் பேசின், கோவளம் பேசின் மற்றும் கொசஸ்தலையாறு பேசின் என பகுதிகள் பிரிக்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதாவால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
உலக வங்கி நிதியதவியுடன் முதலில் அடையாறு மற்றும் கூவம் பேசினில் தொடங்கப்பட்ட இந்த பணி படிப்படியாக முடிக்க திட்டமிடப்பட்டது. ஆறு வருடம் கடந்து, இந்த ஒரு பகுதியில் மட்டுமே இந்த திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது. வட சென்னையை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட கொசஸ்தலையாறு பேசின் திட்டம் இன்னும் தொடங்கப்படவே இல்லை.
தற்போது சர்ச்சையில் உள்ள கோவளம் பேசின் திட்டம், எம்1,எம்2, எம்3 என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோளிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், கானாத்தூர் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளை கொண்ட 52 கி.மீ தூரம் எம் 3 திட்டத்தின் கீழ் வருகிறது. இது தான் குடியிருப்பு வாசிகளின் எதிர்ப்பை பெற்றுள்ளது.
குடியிருப்போரின் எதிர்ப்பு
மண்ணில் நீர் ஊடுருவதால், மணல் மண் நிறைந்திருக்கும் பகுதியில் கான்கிரீட் வடிகால்கள் தேவையில்லை, என்பதே குடியிருப்பு வாசிகளின் முதன்மையான எதிர்ப்பு. எந்தொவொரு கலந்துரையாடலும் இல்லாமால் மாநகராட்சி இந்த முடிவினை எடுத்துள்ளதாக இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கான்கிரீட் வடிகால் நிலத்தடி நீரை பாதிக்கும் என இவர்கள் அஞ்சுகின்றனர். இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதயை நீண்ட கால கோரிக்கையான குழாய் வழி நீர் மற்றும் கழிவு நீர் அமைப்பிற்கு ஒதுக்கலாம் எனக் கூறுகின்றனர்.
வெள்ள பாதிப்பு இது வரை ஏற்படாத நிலையில், முறையாக சுத்தம் செய்யாவிடில் இந்த வடிகால் அமைப்பு தொல்லையாக மாறும் என கருதுகின்றனர். இத்திட்டத்தை கைவிடக் கோரி, பல்வேறு குடியிருப்பு சங்கங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
“நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதிலும் இந்த பகுதி பாதிக்கப்படவில்லை. நிலத்திற்குள் தண்ணீர் ஊடுருவ சில மணி நேரம் ஆகும், இது வரை நாங்கள் யாரும் பிரச்ச்சனையை சந்திக்கவில்லை”, என நீலாங்கரையில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் நகர் நலச் சங்கத்தின் செயலாளர் ரோஹித் மேனன் கூறுகிறார்.
இந்த திட்டம் தொடங்கிய நாள் முதலே நகராட்சி அதிகாரிகளுடன் பேச முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை என மேலும் அவர் தெரிவித்தார்.
பம்ப் ஹவுஸ் போன்றவை வழியில் இருந்த போதும் எதையும் கருத்தில் கொள்ளாமல் தொடங்கிய பணியும் மோசமாக செயலாக்கப்படுகிறது என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தங்களின் கருத்துகளை கூற சரியான தளமின்றி, இவர்கள் தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.
பராமரிப்பு சிக்கல்
கடந்த பருவ மழையின் போது தேக்கமடைந்த நீரை அப்புறப்படுத்த 75 பம்புகளை தயார் நிலையில் வைக்க நேர்ந்ததாகவும் இந்த சூழலை தவிர்க்க இத்திட்டம் உதவும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எகோ பிளாக்ஸ் மற்றும் பெர்கோலேஷன் குழிகள் அமைக்கப்படுவதால் மழைநீரின் சேகரிப்பு அளவை அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
“இத்திட்டத்தில் பராமரிப்பு சவாலாக இருக்கும். மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்கியது தமிழக அரசு. ஆனால் பெரும்பாலும் இது சரியாக அமைக்கப்படாமல், ஒழுங்குமுறை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறை முறையாக செய்யப்பட்டால், மணல் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கவே தேவையில்லை” என அண்ணா பல்கலைகழகத்தின் நீர்வளவியல் துறை பேராசிரியர் எல் இளங்கோ கூறினார்.
தற்போது அமைக்கப்படும் வடிகால் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். திட்டம் சிறப்பாக இருந்தாலும், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டால் அதுவே வெள்ளம் உருவாக காரணமாக அமையும், என்கிறார் இளங்கோ.
நடைபாதைகள் உட்பட சாலை முழுவதும் கான்கிரீட் அமைக்கப்படுவதால், நகரத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம் அடைகிறது. இந்த முறையை மாற்றியமைத்து சாலையின் இருபுறத்திலும் சிறிதளவு மண் இருந்தால், இயற்கையாகவே தண்ணீர் நிலத்தடிக்கு செல்லும், என்கிறார் பேராசிரியர் இளங்கோ.
கோரிக்கையில் உறுதியாக இருக்கும் குடிமக்கள்
நகரின் பிற பகுதிகள் பாதிக்கப்பட்டதை பார்த்துள்ளோம். ஆகையால் இந்த கோரிக்கையில் பின் வாங்க மாட்டோம். எங்களின் தேவையை அறிந்து கொள்ளாமல், கலந்துரையாடாமல், மாநகராட்சி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எங்களின் வலுவான கோரிக்கையே இந்த பிரச்சனையை முதன்மையாக்கியுள்ளது,”என்கிறார் ரோஹித்.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டத்திற்கு திருப்ப முடியாது என்கின்றனர் அதிகாரிகள். எம்3 பகுதிக்கு 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் முழுமையாக தொடங்கப்படவில்லை, எதிர்ப்பு இல்லையென்றாலும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் கபாலீஸ்வரர் RWA உறுப்பினர்கள்.
இத்திட்ட எதிர்ப்பு தேசிய பசுமை தீரிப்பாயத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடிமக்களின் எதிர்ப்பை விசாரிக்க வல்லுனர் குழு ஒன்றை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.
[Read the original article in English here.]