Translated by Krishna Kumar
வேலைக்கு இடம்பெயர்ந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ‘ரௌடிகள்’ என்றும், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களை பாலியல் ரீதியாக தாராளமானவர்கள் என்று ஏளனமாகவும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் ‘அழுக்கு’ என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள். உள்ளூர் தேயிலைக்/காபி கடைகளில் இம்மாதிரியாக கோணங்களில் சர்வ சாதாரணமாக கிண்டல் கேலி செய்வது நாமெல்லாம் பார்க்க முடியும், சென்னை போன்ற நகரங்களுக்கு குடியேறியவர்கள், பொதுவாக இத்தகைய தவறான அபிப்ராயங்களுக்கு ஆட்படுகிறார்கள்.
ஜே ஜெயராஜனின் 2013 ஆராய்ச்சி கட்டுரையின் படி சென்னைக்கு குடியேறுபவர்களில் அஸ்ஸாமில் இருந்து 23 சதவீதம், மேற்கு வங்கத்திலிருந்து 14 சதவீதம், பீகாரிலிருந்து 13.7 சதவிகிதம், ஒடிஷாவிலிருந்து 14.6 சதவிகிதம், ஆந்திராவில் இருந்து 9.5 சதவிகிதம் மற்றும் திரிபுராவிலிருந்து 0.3 சதவிகிதம்.ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களே அதிகரித்து வருகின்றனர்.
“சென்னையில் உணவு, உற்பத்தி மற்றும் ஆடை துறைகளில் மலிவான கூலிக்கு ஆட்கள் கிடைகாத பிரச்சனைக்கு, வடகிழக்கு மாநிலங்களிலுருந்து ஆட்கள் இந்த தேவையை பூர்த்தி செய்கின்றனர். அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி மட்டுமே போதுமானது” என்கிறார் குடியேற்றம் பற்றி ஆராய்ச்சி செய்த சமூக சேவகர் அனுபிரிய முருகேசன்.
ஆறாத புண்கள்
“காலம் காலமாக இப்படியே ஒரு வெளிநாட்டவர் போல் நடத்தப்பட்டால் எவ்வாறு உணர்வீர்கள்? நீங்கள் சாலையில் நடந்து செல்லும் போது, உங்கள் தோல் அல்லது உங்கள் தோற்றத்தை வைத்து மதிப்பிட்டால் அல்லது முத்திரையிட்டால் நிம்மதியாக நடக்க முடியுமா?” என்று வினவினாள் நாகாலாந்திலிருந்து சென்னையில் குடியேறிய 24 வயது ஆலிஸ்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு ஒப்பனை கலைஞராகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தார், ஆலிஸ். ஆனால் அவரது கனவுகள் நனவாகும் பொழுது கடுமையாக குறுக்கீடுகளை எதிர்கொண்டார். அவரது திறமைகள் சந்தேகத்திற்க்குள்ளாயின.”வடகிழக்கிலிருந்து குடியேறியவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைப்பது கடினம் .நான் வட கிழக்கில் இருந்து வந்ததாலேயே தேர்வு செய்தோருக்கு என் மீது போதுமான நம்பிக்கை இல்லை.நான் பிற்பட்ட பகுதியிலிருந்து வந்தவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள்” என்றார் அவர் . ஆலிஸ் ஒரு புகழ் பெற்ற அழகு நிலையத்தில் ஒரு ஒப்பனை கலைஞராக வேலை கிடைத்தது என்றாலும்,ஆனால் அதற்க்கு பின்னர் அவரது வாழ்க்கையில் அதிக வளர்ச்சி காணவில்லை.
வேறு மாநிலங்களிலிருந்து வந்தோரின் பெரும்பாலான கதை அதே தான். மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங்கிலிருந்து வந்த மீனு பத்து வருடங்களுக்கு மேல் அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கான ஊதிய உயர்வு மற்றவர்களை விட எப்போதுமே குறைவு தான். “வாடிக்கையாளர்களுடனான என் சமூக திறமை நன்றாக இருந்தாலும் எப்போதும் என் மொழியில் குற்றம் காண்பார்கள். அவர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும் பொழுது தமிழ் தெரியாதது ஏன் ஒரு பெரிய பிரச்சனை?” என்று கேட்கிறார் மீனு .
எல்லோரையும்விட மோசமானவர்கள் ஆட்டோ டிரைவர்கள் என்றனர். ஆலிஸும் மீனுவும் ஆட்டோ-டிரைவர்கள் அவர்களிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் அளவிலான தொகையை வசூலித்த கதைகள் கூறினர். “ஒரு முறை 5 கி.மீ தூரம் செல்வதற்கு நான் ரூ 700 கொடுத்தேன்,” ஆலிஸ் நினைவுகூர்ந்தார்.
“முரண்பாடுகள் இருந்தாலும், மக்கள் வேலை தேடுவதற்காக சென்னைக்கு குடிபெயர்வதற்கான காரணம் சென்னை பாதுகாப்புக்கு பெயர்போனது. குற்ற விகிதம் மற்ற மெட்ரோக்களை காட்டிலும் குறைவாக உள்ளது. பெங்களூருவிலிருந்து ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு நான் சென்னைக்கு திரும்பி வந்ததற்கு காரணம் அது தான்” என்றார் ஆலிஸ்.
கடுமையான காலங்கள்
புலம்பெயர்ந்தோரை பற்றி யாரும் இங்கு கவலை படுவதாக தெரியவில்லை. இந்த ஆண்டு சர்வதேச குடியேறுபவர்களின் தினத்தை ‘நகரத்துடன் குடியேறுதல்’ என்ற கருப்பொருளாக வைத்து அனுசரிக்கும் வேளையில் நமது நகரங்களில் உள்ள நிகழ்வுகளை பார்த்தால் அந்த குறிக்கோளுக்கு நாம் வெகுதொலைவில் உள்ளோம் என்பது தெள்ளத்தெளிவாகிறது. வேலை இடங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தூய்மையான கழிப்பறை, குடிநீர் மற்றும் ஓய்வெடுப்பதற்கான ஒரு இடம் போன்ற மிகவும் அவசியமான மற்றும் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை என்பது தான் நிதர்சனம். எடுத்துக்காட்டாக, செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ கட்டுமானத்தின் போது, பீகாரிலிருந்து குடியேறிய தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் தாள்கள் போடப்பட்ட பாழடைந்த அறைகளில் தங்க வேண்டியிருந்தது.
“கட்டுமான நிறுவனம் எங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சம்பளம் கொடுத்தது. எங்கள் வீடுகள் போர் நேர முகாம்களை ஒத்திருந்தன. எங்களிடம் எதுவும் இல்லாததால் வீடுகளுக்கும் திரும்ப செல்ல முடியாத நிலை.” என்று கூறினார் பாணீன்திரா (நிஜ பெயர் இல்லை), செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ இரயில் தளத்தில் பணிபுரிந்த ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி.
இதேபோல்,அடுக்குமாடி ஒப்பந்ததாரர் இந்த தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான போதுமான செலவு செய்ய திட்டமிடுவது கிடையாது. “அவர்களுக்கு கௌரவமான வீடுகள் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், தொழிலாளர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் குறைந்தபட்ச பணத்தை வைத்துக்கொண்டு அவ்வளவு தான் செய்ய முடியும். மேற்கு வங்கத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் மிகவும் அசுத்தம் என்பதால், இது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.” என்றார் ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளர்.
வாடகை வீடுகள் அதன் பங்கு சவால்களுடன் வருகிறது. உதாரணமாக, ஆலிஸ் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு வீட்டில் தங்கவில்லை. வீட்டு உரிமையாளர்கள் அசைவ உணவை சமைக்கக்கூடாது என்பதிலும் மற்றும் வீட்டில் பார்வையாளர்களை அனுமதிப்பதிலும் கண்டிப்பான நிலைமைகளை நிலைநிறுத்துகின்றனர்.
“என்னிடம் பல முறையற்ற அந்தரங்க கேள்விகள் கேட்கப்படும். பாலியல் உறவுகள் பற்றிய மிகவும் தனிப்பட்ட கேள்விகள் எழும்பும் . என் வீட்டு உரிமையாளர்களுக்கு, நான் உடுக்கும் உடை முதல் சிக்கல் இருந்தது” என்றார் ஆலிஸ். “பல சந்தர்ப்பங்களில், பணியமர்த்தர்கள் ஒரு வேலை தருவதற்கு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டேன். என் முதலாளி சாதாரணமாக வடகிழக்கு மக்கள் பொதுவாக பாலியல் தாராளமானவர்கள் என்று குறிப்பிட்டார்” என்று அவர் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டது பற்றி பேசுகையில் கூறினார் ஆலிஸ்.
புலம்பெயர்தலின் பாங்கு
குடியேற்றத்திற்கு சமூகத்தின் பொருளாதார நிலை மோசமடைவதே தார்மீக காரணம் என்று தெளிவாகக் கூறியது ஜெயராஜன் அறிக்கை. “பத்து ஆண்டுகளுக்கு முன் சிறிதாக தொடங்கிய மாநிலத்தைவிட்டு -மாநிலம் புலம்பெயர்தல், வேகமாக வளர்ந்து, தற்போது தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாகிவிட்டது . குடியேற்ற முறைமை, பணியமர்த்தல், வீட்டுவசதி மற்றும் பிற வசதிகள், சம்பளம், பணம் செலுத்துதல், உருக்கு திரும்பி செல்லுதல், என்று பாகங்களைக் கொண்ட ஒரு வடிவமைபோடு உருவாகியுள்ளது “புலம்பெயர்தல்”. புதிதாக குடியேற்ற ஒருவர் அந்த அமைப்பில் இதெல்லாம் புரிவதற்குள் அவர் அதில் ஒரு பகுதியாகவிடுகிறார்”, என அறிக்கை கூறிகிறது.
பெரும்பான்மையான மக்கள் புலம்பெயர்ந்தோரை பார்த்தாலே புருவங்களை உயர்த்தினாலும், கிராமங்களிலும், சிறு நகர் புறங்களிலும் வேலை வாய்ப்புகள் இல்லாததால்தான் பெருநகரங்களுக்கு புலம்பெயர்கிறார்கள். சென்னையில் குடியேறியவர்களுக்கு பணத்தை சேமித்துவிட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற தற்காலிகமான குறிக்கோள். “எந்தவொரு ஊதிய உயர்வோ, வார விடுமுறையோ இல்லாமல் இந்த ஹோட்டலில் மூன்று ஆண்டுகளாக துப்புரவு வேலைசெய்கிறேன். எங்கள் யோக்கியதைக்கு ஏற்ற எல்லாவற்றையும் கொடுப்பதாக முதலாளிகள் நினைப்பதால், எந்த வித பேரமும் பேச முடியாது” என்கிறார் மணிப்பூரை சேர்ந்த மால்ஸ்வாம்துலங்கா. இவர், மணிப்பூரில் சொந்த விவசாய நிலம் இல்லாததால் வேலைக்கு சென்னை போகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். “மணிப்பூரில் ஒரு தேநீர் கடையை தொடங்க நான் பணத்தை சேமித்து வருகிறேன். சொந்த ஊரில் மட்டும் தான் யாரும் உங்களை அந்நியனாக பார்க்கமாட்டார்கள்” என்றார்.