பெருநகர சென்னை மாநகராட்சி, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் (Integrated Solid Waste Processing Facility (IWPF)) கீழ், 2100 மெட்ரிக் டன் கழிவுகளை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் எரிவுலையை கொடுங்கையூரில் நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் தளம் – 01 குப்பை எரிவுலை (Waste-to-Energy Facility) திட்டமிடப்பட்டுள்ள இடம், ஈரநிலமாக அறியப்படும் சர்க்கார் நஞ்சை பகுதியில் அமைந்துள்ளது, இது வெள்ள பாதிப்புக்குட்பட்ட ஒரு பகுதியாகும். அதே நேரத்தில், இந்த இடம் ஏல ஆவணங்களில் (Tender Documents) குறைந்த வெள்ள பாதிப்புள்ள பகுதியில் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் அதிக வெள்ளம் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும்.
இயற்கையான ஈரநிலங்களின் முக்கியத்துவம்
பெருநகர சென்னை மாநகராட்சி – ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மண்டலம் 1 முதல் 8 வரை உற்பத்தியாகும் திடக்கழிவுகள் மற்றும் மண்டலம் 9 முதல் 15 வரை பிரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை கையாளுவதற்கான திட்டத்தின் ஏலத்தை வெளியிட்டுள்ளது.
மூன்று கட்டமைப்புகளை கொண்ட இத்திட்டத்திற்கு இடங்களை தேர்ந்தெடுத்து உள்ளது. தளம் 1 – திருவொற்றியூர் தாலுக்கா சாத்தங்காட்டில் குப்பை எரிவுலையும் (Waste to Energy Facility), தளம் 2 – பெரம்பூர் தாலுக்கா சேலவாயலில் உரம் தயாரிக்கும் வசதியும், தளம் – 3 திருவொற்றியூர் தாலுக்கா சின்னசேக்காட்டில் இயற்கை எரிவாயு தயாரிப்பதற்கு இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.


இதில் தளம் – 01 குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டமிடப்பட்டுள்ள இடம் அதிக வெள்ள பாதிப்பு உள்ள பகுதியாகும்.

முன்மொழியப்பட்ட திட்டத்தின் தளம்-01ல் சர்வே ஆஃப் இந்தியா (Survey of India Map) வரைபடத்தின்படி நீர்நிலை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேரில் அந்த இடத்தை ஆய்வு செய்ததில் ஈரநிலமாக காட்சியளித்தது. இதுபோன்ற இயற்கையான ஈரநிலங்கள் இப்பகுதிக்கு மிக முக்கியமான சூழலியல் அறனாக செயல்படும். இவை நிலத்தடி நீரை உயர்த்தும், பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும். வலசை மற்றும் உள்ளூர் பறவைகளுக்கு கூடாரமாக விளங்கும்.
எளிய உழைக்கும் மக்களைக் கொண்டிருக்கும் வடசென்னை பகுதிக்கு இது போன்ற நீர்நிலைப் பகுதிகள் வெள்ளம் மற்றும் வறட்சி காலத்தில் அரணாகச் செயல்படும். பல ஆண்டுகளாக நீர் நிலையாக இருப்பதினால் இங்கு மீத்தேன் மற்றும் கரியமில வாயுவை தனக்குள் அடக்கி வைத்திருப்பதிலும் அதிக பங்கு வகிக்கின்றது. இதனை இத்திட்டத்திற்காக அழிக்கும்போது அதிகப்படியான பசுமை இல்ல வாயுக்களை (Greenhouse gases) காற்று மண்டலத்தில் கலப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
Read more: Women of Ennore are living testimony to the many costs of pollution
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தீவிரப்படுத்தும் திட்டம்
தற்போது முன்மொழியப்பட்டுள்ள எரிவுலை திட்டத்தினால் சாம்பல் மற்றும் முழுமையாக எரியாத பல பொருட்கள் கழிவாக மிஞ்சி இருக்கும். இந்த சாம்பல் கழிவினை எங்கு சேமிக்க போகிறார்கள் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. ஒருவேளை அதை இதே பகுதியில் சேமித்து வைத்தால் சாம்பல் கழிவுகள் வெள்ள நீரில் கலந்து ஈரநிலங்கள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை அதிகமாக பாதிக்கும்.
34க்கும் மேற்பட்ட சிவப்பு பட்டியல் தொழிற்சாலைகள் கொண்ட இப்பகுதியில் இந்தத் திட்டத்திலிருந்து கரியமில வாயுவானது நாள் ஒன்றுக்கு ஒன்பது லட்சம் கார்கள் வெளியேற்றும் கரியமில வாயுவுக்கு சமமாக வெளியேற்றும். அதிக காற்று மாசு அடைந்த இப்பகுதியை இத்திட்டம் மேலும் நஞ்சாக்கும்.
இது போன்ற தொழிற்சாலைகளை அமைத்தால் சுற்றியிருக்கும் மக்கள் குடியிருப்புகள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். “வடசென்னையில் அதிகப்படியான தொழிற்சாலைகள் உள்ளது. இதனால் இங்கு வாழக்கூடிய மக்கள் பொருளாதார ரீதியிலும் உடல் ரீதியிலும் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இது போன்ற தொழிற்சாலைகள் இப்பகுதிக்கு வருமானால் எங்களின் நிலை இன்னும் மோசமாகக் கூடும். ஆகையால் இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம்”, என்று ஜெ.ஜெ.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் கூறினார்.
Read more: Why a waste-to-energy plant is not the answer to Chennai’s garbage problems
வெள்ள அபாயத்திற்கு அடிக்கல் நாட்டும் திட்டம்
வடசென்னையின் வெள்ளம் வடிவதற்கான வழி எண்ணூர் முகத்துவாரம் ஆகும். பக்கிங்காம் கால்வாய் பல்வேறு கால்வாய்களின் நீரைக் கொண்டு செல்லும் பிரதான கால்வாயாகும். ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய், மற்றும் கொடுங்கையூர் கால்வாய் ஆகியவை பக்கிங்காம் கால்வாயில் இணைந்து வெள்ள நீரை கொண்டு செல்லும். கடலின் வத்தபாசி (low tide) மற்றும் எண்ணூர் முகத்துவாரம் சூழலைப் பொறுத்தே வெள்ள நீர் வடிவதற்கான நேரம் தீர்மானிக்கப்படும். இந்நிலையில் எண்ணூர் முகத்துவாரத்தில் உள்ள சாம்பல் கழிவுகளும் ஈரநில ஆக்கிரமிப்புகளும் வெள்ள நீர் வடிவதற்கான காலத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதினால் வெள்ளம் வடிவதற்கான காலத்தையும் தாழ்வான இடத்தில் தேங்கி நிற்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ள இடத்தின் அருகில் இருக்கும் பகுதி அதிக வெள்ள பாதிப்பை சந்திக்கும் இடமாகும். இங்கு இருக்கும் கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் கால்வாயின் வெள்ள நீர் பக்கிங்காம் கால்வாயில் ஏற்படும் வெள்ளத்தினால் அதில் வடிய முடியாமல் வியாசர்பாடி, MKB நகர், எழில் நகர், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
சமீபத்திய ஃபெங்கல் (Fengal) புயல் சென்னையில் அதிக மழையை (228.8 மி.மீ.) சாத்தான்காட்டில் பதிவு செய்துள்ளது. மேலும் டிசம்பர் 2023ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் இத்திட்டத்தின் அருகாமையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)-இல் உள்ள கச்சா எண்ணெய் கசிந்து மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது. மக்களின் வாழ்வாதாரம், ஈரநிலம், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மக்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தியது. எண்ணெய் கசிவின் காரணமாக அந்த நிறுவனத்திற்கு Rs 73 கோடி அபராதத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற எரிவுலை திட்டங்கள் இந்தியாவில் பல இடங்களில் தொடங்கி செயல்படாமலும், காற்றை அதிக அளவில் மாசுபடுத்தியதாலும் இவை கைவிடப்பட்டன என்பதை பெருநகர சென்னை மாநகராட்சி கருத்தில் கொண்டு இத்திட்டத்தை கைவிட வேண்டும். எஞ்சியிருக்கும் நீர்நிலைப் பகுதிகளை பாதுகாப்பதே மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை.