Translated by Krishna Kumar
சென்னையில் கோடை காலம் இப்போது தான் ஆரம்பம், ஆனால் இப்போதுள்ள நிலைமையை பார்த்தால் கொடூரமாக இருக்கும் என்று தான் கணிக்க முடியும். சென்னையின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான 50% தண்ணீர் மட்டும் தான் நம்மிடம் உள்ளது.பல இடங்களில் தண்ணீர் சேவை வாரம் ஒருமுறை மட்டுமே என்று குறைக்க பட்டுள்ளது. நிலத்தடிநீர் நிலைமையோ கடந்த மூன்று வருடத்தில் குறைவாக உள்ளது மற்றும் ஏரி நீர்தேக்கங்கள் அதைவிட மோசமான நிலை.
நிலத்தடி நீர் நிலைமை பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் உள்ள அளவுக்கு இப்போதே தள்ளப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னை சேர்ந்த 24 கிணறுகளில் எடுத்த கணக்கின்படி நிலத்தடி நீர் நிலை வெகுவாக குறைந்துள்ளது – மூன்று ஆண்டுகளில் இதுதான் மோசம். பெரிய மழை வரும் வாய்ப்பு குறைவு என்பதால் இந்நிலை மேலும் மோசமாகத்தான் போகும் என்று எதிர்பார்க்கலாம்.
குறைந்துவரும் நீர்நிலை
மழை மய்யம் (The Rain Center) கொடுத்த தகவலின்படி 24இல் எட்டு கிணறுகள் ஜனவரி முதல் வாரத்திலேயே வற்றி கிடக்கின்றன. அண்ணாநகர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்,வடபழனி, மைலாப்பூர் மாதவ பெருமாள் கோயில் கிணறு, அசோக்நகர் 18ஆம் அவென்யூ, நெசப்பாக்கம் மற்றும் அடையார் சாஸ்திரி நகர்களில் வற்றி கிடக்கும் கிணறுகளை பார்த்தால் இந்த கோடை காலம் முன்காணாத மோசமான நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. கோயம்பேடு, சாலிக்க்ராமம், சேத்துப்பட்டு, கோட்டூர்புரம், சேமியர்ஸ் சாலை, போன்ற சென்னையின் முக்கியமான பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் நிலை 5 அடி யிலிருந்து 11 அடியாக இறங்கியுள்ளது, மழை ஏமாற்றிய நிலையில் நிலத்தடி நீரை வைத்து சமாளிக்கலாம் என்றால் முடியாது போலிருக்கிறது
2016இல் 2018ஐ விட மழை குறைவு என்று Regional Meteorological Centre (RMC) புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, அதாவது 2016இல் 324.6mm மற்றும் 2018 இல் 390.3mm மழையும் பெய்தவகையிலுள்ளது. அப்படியென்றால் ஜனவரி 2019, ஜனவரி 2017யை விட நிலத்தடி நீர் அதிகமாக இருக்கவேண்டும் ஆனால் அப்படி ஏன் நடக்கவில்லை?
இதற்கு பதிலாக ‘TamilNadu Weatherman” பிரதீப் ஜான் விவரிக்கையில் “2015 மழை பலமாக வந்து நவம்பர்-டிசம்பர் வெள்ளம் வந்து 2017வரை நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறையாமல் சமாளிக்க முடிந்தது. 2018இல் மோசமான வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீர் நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது”, என்றாலும் இன்னும் பல காரணிகளை நாம் கவனிக்க வேண்டும்
முதலில் நிலத்தடி நீர் நிலைமைக்கும் பொது நீர் விநியோகத்திற்கும் உள்ள சம்பந்தத்தை தெரிந்துகொள்ளவேண்டும். கடந்த 2 மாதங்களில் குடிநீர் வழங்கல் வெகுவாக குறைந்துள்ளது என்கின்றனர் சென்னை வாழ்மக்கள். “தண்ணீர் சப்ளை ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது ஆதலால் நிலத்தடி நீரை தான் நம்பியிருக்கிறோம்” என்றார் பல்லாவரம் விவேக் நகர் வாசி உதய்குமார். வாரத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என்று புலம்பினர் மாம்பலம் வாசிகள். “பெப்ரவரியே இப்படி நா, ஏப்ரல் மே நினைச்சாலே பயமா இருக்கு” என்றார் மாம்பலத்தில் வசிக்கும் ஸ்வேதா.
“சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (CMWSSB) நீர்பிடி இடங்களில் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது , ஆதலால் மக்கள் தங்கள் தேவைகளுக்கு மேலும் மேலும் நிலத்தடிநீரையே பயன்படுத்துகின்றனர், இந்நிலையில் குவாரி நீர்தேக்கங்களிலிருந்து பதம்செய்த நீரும், கடல்நீர்-குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் தான் மாநகரின் தாகம் தணிந்துவருகிறது ” என்கிறார் நீர் வளங்களில் நிபுணரான ஜே சரவணன். “நம் மாநகரின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இங்குள்ள மண்ணின் தன்மை எளிதில் தண்ணீர் கசிந்து ஊற்றுக்குள் சென்றுவிடும். மழை வந்தால் போதும் நீர் ஒட்டுரக்கள் மறுமலர்ச்சி பெரும். ஆனால் வானிலை நிபுணர்களோ, இந்திய வானிலை துறையோ தற்போது மழைக்கு வாய்ப்பு எதுவும் இல்லை என்று கணிப்பதால், நிலைமை இன்னும் மோசமாக தான் போகும்.
வற்றும் ஏரிகள்
சென்னையின் தண்ணீர் தேவை 830 MLD, ஆனால் தற்போது 550 MLD யாக குறைக்கப்பட்டுள்ளது, என்றார் CMWSSB தொடர்பாளர். “தற்பொழுது நாங்கள் 200MLD கடல்நீர்-குடிநீர் திட்டம், 180MLD வீராணம் ஏரியிலிருந்தும், மற்றும் 170 MLD நான்கு பெரிய நீர்தேக்கங்களான பூண்டி , சோழவரம், செம்பரம்பாக்கம், மற்றும் புழலிருந்து எடுக்கிறோம். விரைவில் 30MLD அனாதை குவாரிகளிலிருந்தும், 70MLD திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளிலுருந்தும் எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் உதவியாக உள்ளது.
சென்னை குடிநீர் வாரிய பதிவுகளின் படி 11 பிப்ரவரி கணக்கின் பொழுது 4,969 mcft மொத்த கொள்ளளவில், சென்னைக்கு நீர் கொடுக்கும் நான்கு பெரிய நீர்தேக்கங்களில் நீரின் அளவு 893 mcft ஆகவும், மற்றும் 11 பிப்ரவரி 2017ல் 1542 mcft ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்று வழிகள் என்ன?
நிலத்தடி நீரை ஊற்றுவிக்க சென்னை நூற்றுக்கணக்கான நீர்நிலைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எரிகுளங்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பினால் அவைகளில் தண்ணீர் கொள்ளளவு கணிசமாக பாதித்துள்ளது. தற்பொழுது ஏரிகளில் நீர் அளவு கடந்த வருடத்தைவிட 5.5 மடங்கு மற்றும் 2017ஐ காட்டிலும் 1.7 மடங்கு குறைவு.
USGS மற்றும் NASA வின் புவிகவனிப்பு செயற்கைகோள்கள் மூலம் 1977- 2019 ஆண்டுகளிலிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் சென்னையில் ஏரிகள் குறுக்கம் அடைந்ததை காட்டும்வகையில் உள்ளன. அவை இதோ/பின்வருமாறு :
“ஏரிகளை பராமரிப்பதற்கு மட்டும் பிரத்தியேகமான அரசுதுறை இல்லாததே இந்நிலைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. நகர்ப்புற நீர்நிலை மேலாண்மைகென்று ஒரு தனி துறை இல்லை. மேற்பரப்பு நீர் மற்றும் நீர் பாசனத்திற்கு பொறுப்பான பொதுப்பணி துறைதான் ஏரிகளுக்கெல்லாம் பொறுப்பாளி ஆனால் நகர்புறங்களில் ஏரியின் பங்கு பாசனம் மட்டும் இல்லை, வெள்ளம் மற்றும் வறட்சி சமாளிக்க மட்டுமில்லாமல் நிலத்தைடி நீருக்கு மருவூட்டம் கொடுப்பதிலும் முக்கியமான பங்குவகிக்கிறது” என்கிறார் ஜே சரவணன்.
இந்த மோசமான நிலையின் அறைகூவல்கள் இருப்பினும், சென்னை மாநகராட்சி இது குறித்து எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. 2001 மழைநீர் சேகரிப்பு திட்டம் பெரும்பாலும் ஏடுகளில் மட்டுமே உள்ளது. சுத்திகரித்து கழிவுநீரை தொழிற்சாலைகளுக்கு கொடுப்பதை ஒரு சேகரிப்பு வழியாக சென்னை குடிநீர் வாரியம் செய்துவருகிறது. இருப்பினும், மாநகரில் தண்ணீரை இடம்பெயர்த்தலிலும், விநியோகிப்பதிலும், உள்ள விரயத்தை கண்காணிப்பதாக தெரியவில்லை.
கிருஷ்ணா நீர் போன்று வெளிமாநிலங்களிலிருந்து வரும் நீரை பற்றி மட்டும் கவலைப்படாமல், சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகளை நன்கு செப்பனிட்டு பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். “சென்னையின் 8800 sq km பரப்பளவில் 1400 ஏரிகள் உள்ளன, இவைகளை செப்பனிட்டு உயிர்ப்பித்தால் நல்ல பலன் தரும் ” என்கிறார் MIDS லிருந்து ஒய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன்.
சென்னையின் நான்கு பெரிய நீர்ப்பிடிப்பு ஏரிகளின் கொள்ளளவை அதிகரித்தால் நீர் விரயமாவதை தவிர்க்கலாம் என்கிறார் ஜெ சரவணன். “அதிக மழை பெய்யும் பொழுது கடலுக்கு சென்று விரயமாகும் நீரை சேகரிக்கலாம்” என்றார். மேலும் பொது மக்கள் தங்கள் பங்கிற்கு கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் மழைநீர் சாகுபடி செய்து நிலைமையை சமாளிக்க உதவவேண்டும் என்றார்.
தனிநபர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை சற்று மாற்றிக்கொண்டால், எதிர்காலத்தில் இப்போதுள்ள நிலையை மாற்ற உதவும். நாம் பல்துவக்கும் பொழுது குழாயை மூடாமல் இருப்பது, மற்றும் துாவாலைக்குழாய்(shower) உபயோகிப்பது போன்றவை ஒருவருக்கு ஒரு சில லிட்டர் தான் விரயம் என்றாலும் ஊரே செய்தால் அது எவ்வளவு பெரிய விரயம் என்று சற்று சிந்தித்தால் தலைசுற்றும்.
மொத்தத்தில், அடுத்த சில மாதங்கள் கடுமையானதே, எல்லோரும் இணைந்து செயல்பட்டால் தான் பிரச்சனையை பெரிதாகாமல் சமாளிக்க முடியும்.
Read the original article in English here.