Translated by Sandhya Raju
கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த 58 வயது ஜி கண்ணையன் தீக்குளித்த காட்சி சென்னை நகரையே உலுக்கியது. கட்டாய வெளியேற்றத்தை எதிர்த்து மே 8-ம் தேதி நடந்த போராட்டத்தில் இந்த விபரீத முடிவை எடுத்த அவர் மறுநாள் 90% தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகாரர்கள் என கூறி வெளியேற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தவரை கண்டித்து அந்தப்பகுதியை சேர்ந்த பலரைப் போலவே, இவரும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஏப்ரல் 29-ம் தேதி முதல் இதுவரை 116 வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது, மேலும் 159 வீடுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட போராட்டம்
நீர்நிலை மறுசீரமைப்பு, மெட்ரோ ரயில் பணிகள், சாலை விரிவாக்கம், அழகுபடுத்தும் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகியவை சென்னையில் ‘கட்டாய வெளியேற்றப்படுவதற்கு’ முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பினும், கோவிந்தசாமி நகர் வெளியேற்றம் இதில் தனித்து நிற்கிறது.
கோவிந்தசாமி நகரில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை வெளியேற்றக் கோரி, 2006 ஆம் ஆண்டில், அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலதிபர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தபோது சட்டப்பூர்வ விவாதம் தொடங்கியது. அவருக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது, கட்டிடங்களை இடித்து குடியிருப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்றும், கலெக்டர் உத்தரவின்பேரில் வீடுகள் அகற்றப்படும் என்றும் மனுதாரரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால், வீடுகளை முழுமையாக அகற்றக் கோரி மனுதாரர் 2008-ல் பொதுநல வழக்கு (PIL) தொடர்ந்தார். இந்த மனுவை குடியிருப்புவாசிகள் எதிர்த்து வந்தனர். 2011 இல் மனுதாரருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கணக்கெடுப்புக்குப் பிறகு, முந்தைய தமிழ்நாடு குடிசைப்பகுதி ஒழிப்பு வாரியம் (TNSCB) அப்பகுதியில் 366 வீடுகளை அகற்றியது.
அனைத்து வீடுகளையும் அகற்றாதது 2011-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாகக் கூறி, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். குடியிருப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர் மற்றும் தாங்கள் அத்துமீறுபவர்கள் அல்ல என்பதை நிருபிக்க சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகவும் அனுமதி வழங்கப்பட்டது.
வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற போது, வீடுகளை அகற்ற உத்தரவிட்டது, இதுவே ஏப்ரல் இறுதியில் நடந்த வெளியேற்ற நடவடிக்கையின் துவக்கமாக அமைந்தது. இந்த உத்தரவை எதிர்த்து குடியிருப்பாளர்கள் மேற்கொண்ட மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, அடுத்த விசாரணை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வெளியேற்றதிற்கு எதிரான வாதங்கள்
குடியிருப்பாளர்களின் சட்டப் போராட்டம் மற்றும் வாதத்தில் உதவி வரும் பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த ஆர் கீதா, ‘அறிவிக்கப்பட்ட குடிசைப்பகுதியில்’ வசிக்கும் குடியிருப்பாளர்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று அழைக்க முடியாது, மேலும் இது ‘ஆட்சேபனையற்றது’ என்பதன் கீழ் வருகிறது.
தமிழ்நாடு குடிசைப் பகுதிகள் (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம், 1971ஐ மேற்கோள் காட்டி, இந்தச் சட்டம் ‘அறிவிக்கப்பட்ட பகுதிகளில்’ வசிப்பவர்களை வெளியேற்றுவதில் இருந்து பாதுகாக்கிறது என்றும், அரசாங்கம் அந்தப் பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அறிவிக்கப்பட்ட குடிசைப்பகுதி: அந்தந்த நகராட்சிகள், மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது மேம்பாட்டு அதிகாரிகளால் குடிசைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்ட குடிசைகளாகக் கருதப்படுகின்றன.
பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படாவிட்டால், ‘அறிவிக்கப்பட்ட பகுதிகளில்’ வசிகக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்ற முடியாது என்று அவர் மேலும் கூறினார். நகரம் முழுவதும் உள்ள மற்ற வெளியேற்றும் இடங்களைப் போன்று சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏதேனும் வளர்ச்சித் திட்டங்கள் வருமா என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, தனிநபரின் மனு மற்றும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். வெளியேற்றப்பட்ட பிறகு நிலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து எந்த பதிலும் இல்லை.
அப்பகுதியை மறுமதிப்பீடு செய்யாவிட்டால், வெளியேற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என்று அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.கணேசன் குறிப்பிட்டார். “ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நாங்கள் அரசுக்கு சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறோம். அரசு ஆணை இருந்தும், பட்டா கோரி, அலைந்து வருகிறோம். பட்டா கோரி நாங்கள் அளித்த மனுக்களுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறிய நிலையில், போர்க்கால அடிப்படையில் எங்கள் வீடுகளை இடித்தது ஏன்? என அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஜூன் 27, 1979 தேதியிட்ட அரசாங்க உத்தரவை (G.O Ms. No 1117 Housing and Urban Development) குடியிருப்பாளர்கள் மேற்கோள் காட்டினர். 1979 ஆம் ஆண்டுக்கு முன் அப்பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத மற்றும் குடிசைவாசிகளின் குடியிருப்புகளை முறைப்படுத்த இந்த அரசாணை நிறைவேற்றப்பட்டது.
“கால்வாயின் மறுபுறத்தில் உள்ள நிலத்திற்கு அரசு பட்டா வழங்கியுள்ளது, அங்கு 20 அடி தூரத்தில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளும் பங்களாக்களும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கால்வாயில் இருந்து 50 அடி தூரத்தில் வீடுகள் உள்ள இளங்கோ தெருவில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. ஏழை மக்களுக்கு மட்டும் பட்டா வழங்க அரசு ஏன் திட்டவட்டமாக மறுக்கிறது? என வினவும் கீதா, நீர்வழிப் பாதையில் இந்த நிலம் இருந்திருந்தால், அரசாங்கம் அந்த பகுதியை ‘ஆட்சேபனையற்ற பகுதிகள்’ பிரிவின் கீழ் பட்டியலிட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read more: When eri restoration is just another name for eviction of the working classes
மனிதாபிமானமற்ற நடவடிக்கை
வெளியேற்றம் என்பது மனிதாபிமான முறையில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதப் பிரச்சினையாகும், அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வேரூன்றி வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றும் போது இதை சரியாக அணுக வேண்டும்” என 2015 ஆம் ஆண்டுஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.
ஆனால், தமிழக அரசு கோவிந்தசாமி நகரில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி ஏப்ரல் மாதத்தில் நடத்திய வெளியேற்றும் நடவடிக்கை மிகவும் ‘மனிதாபிமானமற்றது’ என்று பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களால் கூறப்படுகிறது.
“ஒருபுறம் பெரும்பாக்கத்தில் குடியிருப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டு, எங்களின் பொருட்களை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உணர்வதற்கு முன்பே, நான்கு தலைமுறையாக இரத்தம் மற்றும் வியர்வை சிந்தி கட்டப்பட்ட வீடு புல்டோசர் மூலம் தரைமட்டம் ஆக்கப்பட்டது. இப்போது, நாங்கள் தெருவில் நிற்கிறோம், ”என்று ஒரு வயது குழந்தையின் தாயான ஆர் சரண்யா கூறினார்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகள் இடிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். “இருப்பினும், இப்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் எனது மகனின் அடையாள அட்டையைக் காட்டிய பிறகும், எங்கள் வீடு இடிக்கப்பட்டது,” என்று ஆர் சாந்தி கூறினார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ‘பாஸ்’ ஆகக் கருதப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, 7ஆம் வகுப்பு மாணவி வி கார்த்திகேனி கூறுகையில், “எங்களை 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்கும். அதன் பிறகு என்ன செய்வோம்? இப்போது நன்றாகப் படிக்கவில்லை என்றால், பொதுத் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்? கடந்த 10 நாட்களாக எந்த வீட்டிலும் விளக்கு எரிவதில்லை, தேர்வுகள் நடந்து வருகின்றன. எப்படி படிப்போம்?” என கேட்கிறார்
அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணிப்பெண்ணாக பணிபுரியும் சிவகாமி பி இதன் மூலமே முக்கிய வருமானத்தை ஈட்டுகிறார். இப்போது நகரத்தின் வெளிப்புறம் உள்ள நாவலூரில் 3வது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது, அவர் மற்றும் அவரது 60 வயதுடைய கணவனலோ படிக்கட்டுகளில் ஏற முடியவில்லை. “மின் இணைப்பு, லிப்ட் வசதி, அடிப்படை வசதிகள், கடைகள் என எதுவும் இல்லை, வாழ்வாதாரத்திற்கான ஆதாரமும் இல்லை,” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாட்டு நடைமுறைக்கு (SOP) எதிராகவும் இந்த வெளியேற்றம் அமைந்துள்ளது. வெளியேற்றப்படுவதற்கு முன்னர் குடியிருப்பாளர்களுக்கு போதுமான அறிவிப்பு மற்றும் அவகாசம் வழங்குவது, குடியிருப்பாளர்கள் தங்கள் சொத்துக்களை மீள்குடியேற்ற பகுதிகளுக்கு மாற்றுவதற்கும், உதவுவதற்காக பேக்கர்கள் மற்றும் மூவர்களை ஈடுபடுத்துவது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் போன்ற ஆவணங்களில் அவர்களின் புதிய குடியேற்ற முகவரியுடன் பொருந்துமாறு மாற்றங்களைச் செய்வது போன்ற எந்த நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படவில்லை.
Read more: Government should not use slum eviction to further ‘Singara Chennai’ agenda : Migration expert
அரசின் நடவடிக்கைகள்
அவமதிப்பு வழக்கில் மனுதாரருக்கு பதிலளிக்கும் விதமாக, மாநில அரசு குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வழங்கியது மட்டுமல்லாமல், தொழிலதிபருக்கு இதில் ஆதாயம் உள்ளதாக தெரிவித்தது.
“தனது நிலத்திற்கு அகலமான வழியை ஏற்படுத்துவதோடு, சொத்து மதிப்பீட்டை அதிகரிப்பது இவரது குறிக்கோளாக இருந்தது, தனது சொந்த இலாபத்திற்காக இந்த வழக்கை போட்டதோடு, இந்த வெளியேற்றம் இங்கு வசிக்கும் மக்களுக்கு எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என அறிந்திருக்கவில்லை.” என தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் 2015 அளித்த தாக்கல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி செயல்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கு பல அஆண்டுகாள் நிலுவையில் இருந்தாலும், கண்ணையனின் மரணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், வெளியேற்றத்திற்கு முன், மக்களிடம் மீள் குடியேற்ற இடம் குறித்து கருத்து கேட்கப்படும் என தெரிவித்தார்.
மீள் குடியேற்ற பகுதியில் அனைத்து வசதிகளும் முழுமையாக முடிந்த பிறகே, வெளியேற்றம் துவங்கப்படும். இதற்கான கொள்கை கூடிய விரைவில் வகுக்கப்படும். மந்தவெளி, மைலாபூர் போன்ற பகுதிகாளில் உள்ள TNUHDB கட்டிடங்களில் இடம் ஒதுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.
259 குடியிருப்பு வாசிகளுக்கு ஏற்கனவே வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு விட்டது. அருகாமையில் TNUHDB வசிப்பிடங்கள் இல்லாததால், 126 குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்திலும், 48 குடும்பங்களுக்கு கண்ணகி நகர் மற்றும் எழில் நகரிலும், 17 குடும்பங்களுக்கு செம்மன்சேரியிலும், 68 குடும்பங்களுக்கு நாவலூரிலும் வீடுகாள் ஒதுக்கப்பட்டுள்ளது.” என தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குடியிருப்பாளர்களின் புகார்களுக்கு எதிராக, 259 குடியிருப்புகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயாராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 159 வீடுகளுக்கு இடிப்பு உத்தரவு போடப்பட்டாலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இருந்ததால் 43 வீடுகள் இடிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்த உத்தரவு மற்றும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை நிலையை பறைசாற்றுகிறது. சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் நகரில் நீண்டகாலமாக வசிப்பவர்களின் வெளியேற்றம் மற்றும் இடமாற்றம் தவிர்க்க முடியாதது என காட்டுவதோடு, இத்தைகைய நிகழ்வுகள் பாதுகாப்பற்ற சூழலை அதிகரிப்பதையும் காட்டுகிறது.
[Read the original article in English here.]