இசை என்பது நம் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சந்தோஷமோ, துக்கமோ அதைப் பரிமாறிக்கொள்ளவும், வெளிப்படுத்தவும் இசை ஒரு முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. சென்னையிலும் எந்தவொரு விசேட நிகழ்வானாலும் அதில் ஒரு அத்தியாவசிய அம்சமாக மாறிப்போனவை மெல்லிசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள்.
இதில் ’ஏ’ ‘பி’ ‘சி’ என்று வகைப்படுத்தப்பட்டு ‘ஏ’ பிரிவில் 20 குழுக்களும் ‘பி’ வகையில் 60 ம் ‘சி’ வகையில் சுமார் 500க்கு மேலும் என இசைக் கருவிகளின் பயன்பாடு மற்றும் இசைக் கலைஞர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் ரூபாய் பத்தாயிரம் முதல் பல லட்சம் வரை அவரவர் தேவைக்கேற்ப இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொள்ளும் நிலை இருந்தது
ஆனால், தற்போதைய கட்டுப்பாட்டு சூழலில் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமென்ற விதியினால், திருவிழாக்கள் மற்றும் வேறு பல சுப நிகழ்வுகளையும் எளிமையாக நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், இவற்றிற்கான வாய்ப்புகள் இல்லாது போய் இதை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் பறிபோயுள்ளது.
அதேவேளையில், அத்தகைய எல்லா நிகழ்வுகளோடும் தமது வாழ்வாதாரத்தைப் பிணைத்துக் கொண்டிருந்த ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் மேடையமைப்பவர்கள் ஆகிய பலரும் இன்று எவ்வித வருமானமுமின்றி பரிதவித்துக் கொண்டும் மாற்று வழிகள் தேடி போராடிக் கொண்டும் இருப்பது கவனிக்கத் தக்க ஒன்றாக இருக்கிறது.
மெல்லிசைக் குழுக்களைப் பொருத்தவரை, தன்னிறைவடைந்தவர்கள், பிரபலமானவர்கள் என ஒரு தரப்பினர் உள்ளனர். இன்னொரு தரப்பினரோ, அன்றாட நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் கொண்டு தமது வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தவர்களாகவும் உள்ளனர். இப்போதைய சூழலில் தமது வாழ்வின் தேவைகளுக்கு அன்றாடம் கிடைக்கும் நிகழ்ச்சிகளை நம்பியிருந்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்ட தரப்பினராகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மற்ற இசைத் தடங்கள்
அவ்வாறே கானா பாடல் குழுக்கள். இவை சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தன எனலாம். திருவிழாக்கள் மட்டுமின்றி திருமணங்கள், ’16 ம் நாள்’ என சொல்லக்கூடிய நினைவு நாள் அனுசரிப்புகள் என எல்லாவற்றிலும் சொந்தமாக பாடல்கள் இயற்றி பாடி சமூகத்துடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருந்தனர்.இப்போது இவர்களும் மாற்று வழிகள் தேடி சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். அதுபோன்றே சபாக்களில் இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வந்த இசைக் கலைஞர்களின் நிலையும்.
அது போன்று தப்பு,மேள நாதஸ்வரம், பேண்ட், கிளாரினெட் மற்றும் சாக்ஸஃபோன் போன்ற இசைக்கருவிகள் கொண்டு நிகழ்ச்சிகளுக்கு சுவை சேர்த்த குழுக்களும் இவர்களில் அடங்குவர். இந்த குழுக்களில் பங்கேற்றவர்கள் தமது வாழ்க்கை தேவைகளுக்கு இந்த தொழிலையே முழுவதுமாக நம்பியிருந்தனர்
இணைய மேடையில் இசைக் கச்சேரிகள் ஒரு தீர்வாகுமா ?
தற்போது ஓரளவு தன்னை சுதாகரித்துக் கொண்ட சில மெல்லிசைக் குழுக்கள் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தமது நிகழ்ச்சிகளை முகநூல் நேரலையில் நடத்தத் துவங்கியுள்ளனர். இந்த நிகழ்வுக்கு பார்வையாளர்கள் சிறிது சிறிதாக பெருகிக் கொண்டுள்ளனர். நிகழ்வும் சற்று பிரபலமாகி வருகிறது.
இந்த நேரலையை இசை ரசிகர்கள் நிறைய இடங்களில் பகிர்கின்றனர். அத்துடன் குறித்த நேரத்திற்கு பார்வையாளர்களாக அமர்ந்து விடுகின்றனர். முகநூல் நேரலையில் இந்த கணத்தில் எத்தனை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர் என்ற எண்ணிக்கையைக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஏற்பாடும் இருக்கின்றது.
இவ்வாறு, இந்த நேரலை நிகழ்வின் பார்வையாளர்களும் பாராட்டுகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க குழுவினர் அதற்கு மறுபதில் கூறியும், நன்றி தெரித்தும், விருப்பப் பாடல் பாடியுமென நிகழ்வு புதிய பரிமாணமெடுக்கிறது.
அத்துடன் அந்த காட்சி மேடையின் பின்னணியில் நன்கொடை அனுப்ப வேண்டியதற்கான விபரங்களும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நன்கொடைத் தொகையும் ஓரளவு கிடைப்பதாகத் தெரிகிறது. அவர்கள் இதன் மூலம் மேலும் நலிவடைந்து கொண்டிருக்கும் இசைக் கலைஞர்களுக்கு அதிலிருந்து உதவி செய்வதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன், இதனை பெரும்பான்மையானோருக்கு கொண்டு செல்ல வேண்டுகோளும் விடுக்கின்றனர்.
அதுபோலவே சபாக்களில் பாடிய கர்னாடக இசைப் பாடகர்களும் தற்போது நேரலையில் வந்து பாடத் துவங்கியுள்ளனர். இதுவும் புதிய பரிமாணத்தை நோக்கி செல்லும் என்றே தோன்றுகிறது. நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய வருவாய்க்கு வழிசெய்யும் வகையில் இது நாளை உருபெறலாம். ஏனெனில், இப்போது நடைபெறத் துவங்கியுள்ள நேரலை இசை நிகழ்வுகளை சில அமைப்புகள் முன்னின்று ஏற்பாடு செய்கின்றன.
இத்தகைய நிகழ்வு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது. ஆனால், இவ்வாறு இசைக் கலைஞர்களை ஒரு புரிந்துணர்வுடன் ஒன்றுசேர்க்க முடியாத குழுக்களின் நிலை இன்னும் சவாலாகவே உள்ளது. மேலும், இந்த நிகழ்வானது எண்ணிக்கையில் குறைவாக உள்ளதால் அல்லது தமக்கென ஒரு பெயர் விளங்கக் கூடிய அளவு இருந்த குழுக்களுக்கே ரசிகர்கள் இருப்பதால் எல்லா இசைக் கலைஞர்களுக்கும் இதில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
மெல்லிசைக் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் கருத்துப்படி இதுவரை சுமார் 15 லட்சம் ரூபாய் இவ்வாறு திரட்டப்பட்டு நலிந்த கலைஞர்களுக்கு கொடுத்து உதவப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. அவ்வாறே, ஆன்லைனில் இசை கற்றுக் கொடுக்க இசைக் கலைஞர்கள் முயன்றுவருவதாகவும் தெரிகிறது. ஆனால், ஒட்டுமொத்த மக்களுக்குமே வருவாய் சவாலாக உள்ளதால் இதில் கிடைப்பது சொற்பமே என அவர் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.
அத்துடன் இவர்கள் வேறு வேலைகளுக்கு சென்று வருவாய் தேட முயன்றதாகவும் ஆனால், இந்தத் துறையிலேயே வாழ்நாளை செலவிட்டு அதற்கான திறமையைப் பெறவே உழைத்து வந்ததால் மற்ற தொழில்களில் ஈடுபட முடியவில்லையென்றும் அதேவேளை, அப்படியே துணிந்து இறங்கினாலும் கொரோனா தடுப்பு விதிகளால் அதுபோன்ற வாய்ப்பும் அதிகம் இல்லையெனவும் கூறுகின்றனர்
மேற்சொன்ன முகநூல் நேரலை நிகழ்வைத் தவிர, குடும்ப மற்றும் சமூகவிழாக்களை நடத்துவோர் இவ்வாறு நேரலையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் சாத்தியம் உண்டாகலாம். அப்போது மீண்டும் இவர்களது வாழ்வு மீளலாம் என்பதே தற்போது நமக்கு ஆறுதல் தரும் நம்பிக்கையாக உள்ளது. ஏனெனில், மீண்டும் மனிதர்கள் பெருமளவில் ஒன்றுகூடி விழாக்களைக் கொண்டாடப் போவது எப்போது என உறுதியாகக் கூற முடியாத சூழல் நிலவுகிறதல்லவா?.
அதுபோலவே இசைக் கருவிகள் இசைக்கும் குழுக்களுக்கும் விழாக்களை நடத்துவோர் மூலமாக இவ்வாறு நேரலையில் வாய்ப்புகள் கிடைப்பது சாத்தியமானால் அவர்கள் வாழ்விலும் இது ஒளியேற்றும்.
அத்துடன் இவர்கள் வேறு வேலைகளுக்கு சென்று வருவாய் தேட முயன்றதாகவும் ஆனால், இந்தத் துறையிலேயே வாழ்நாளை செலவிட்டு அதற்கான திறமையைப் பெறவே உழைத்து வந்ததால் மற்ற தொழில்களில் ஈடுபட முடியவில்லையென்றும் அதேவேளை, அப்படியே துணிந்து இறங்கினாலும் கொரோனா தடுப்பு விதிகளால் அதுபோன்ற வாய்ப்பும் அதிகம் இல்லையெனவும் கூறுகின்றனர்.
மீட்டெடுக்கும் முயற்சிகள்
இசைக் கலைஞர்கள், பாடகர்கள், மேடை அமைப்போர், ஒலி மற்றும் ஒளியமைப்போர் என பலதரப்பினர் இணைந்த இவர்களை நலிந்த இன்றைய நிலையிலிருந்து மீட்டு உதவ அரசு ஒரு நலவாரியம் அமைத்து ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு மெல்லிசைக் குழுக்களின் சங்க நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை பரிசீலித்து உதவும் பட்சத்தில் இவர்களின் நலன் காக்கப்படும்.
இப்போதைய சூழல் எவ்வளவு சவால் மிகுந்ததாக இருந்தாலும் இசையின் களஞ்சியமாக இருந்து வரும் சென்னை எத்தகைய இடர்பாட்டையும் வென்று இந்த அம்சத்தை இழந்து விடாது மீண்டும் அதனை அழகுற அணிந்து கொள்ளும் என்பது திண்ணம் என்பது தெரிகிறது.