Translated by Sandhya Raju
தினந்தோறும் காலையில் நம் வீட்டு வாசலில் போடப்படும் செய்தித்தாளை எடுக்கையில், அது எவ்வாறு நம்மை வந்தடைகிறது என சிந்திப்பதில்லை. உலகின் நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள, பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் மற்றும் அதைச்சுற்றி இயங்கும் சங்கலித்தொடர் பெரும் பங்கு வகிக்கின்றன. புயல், மழை, வெய்யில் எதையும் பொருட்படுத்தாமல் , ஏன் இந்த பெருந்தொற்று காலத்திலும் செய்த்தித்தாள் விநியோகம் தொடர்ந்தது. செய்தியை தரும் பத்திரிக்கையாளர்களுக்கு நிகராக விநியோகிஸ்தர்களும் முக்கியம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, செய்தி விநியோகத் துறையில் உள்ளவர்களுக்கு எப்போதுமே அரசாங்க நலன்கள் அல்லது அங்கீகாரம் கிடைப்பதில்லை.
2500 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், துணை முகவர்கள்/விநியோகஸ்தர் மற்றும் விநியோக பணியாளர்கள் பலவீனமான சமூக பாதுகாப்பு வலையில் உள்ளனர். எந்தவொரு நலவாரியத்திலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை, அல்லது தமிழக அரசாங்கத்தால் எந்தவொரு திட்டத்திற்கும் கருதப்படவில்லை. “ஐந்து வருடம் முன், விநியோக பணியாளர் பணியில் இருக்கும் போது சாலை விபத்தில் இறந்தார். ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்பாடு ஏதும் இல்லாததால் குடும்பத்திற்கு நிதி இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை ”என்று தமிழ்நாடு செய்தித்தாள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் எம் டில்லி கூறுகிறார்.
Read more: Do not stop press: Chennai printers lose business of 5.1 crore daily due to COVID
விநியோக சங்கிலி
முதலில், வெளியீட்டாளர்களிடரின் குறிப்பிட்ட அச்சு ஊடக அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட முகவரால், செய்தித்தாள்கள் தள்ளுபடி விலையில் எடுக்கப்படுகின்றன. துணை முகவர்கள்/விநியோகஸ்தர்கள் இவற்றை அங்கீகரிக்கப்பட்ட முகவரிடமிருந்து வாங்குவார். பின்னர், டெலிவரி பணியாளர்கள், செய்தித்தாளை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கின்றனர். இவர்கள் முகவர்/துணை முகவர்களிடமிருந்து மாத சம்பளத்திற்க்கு பணி புரிவார்கள். சம்பளம் தவிர, அவ்வப்பொழுது, செய்த்திதாளில் உள்ளே இணைக்கப்படும் விளம்பர துண்டுப்பிரசுரங்களுக்கு சிறிய தொகை அளிக்கப்படும்.
₹5 மதிப்புள்ள ஒரு செய்தித்தாள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு ₹3-க்கு விற்கப்படும். துணை முகவர்கள் இதனை ₹3.50 விலைக்கு பெறுவர். நமக்கு இது ₹5-க்கு விற்கப்படுகிறது. “சேவை கட்டணமாக ஒவ்வொரு நாளுக்கும் ₹1 முகவர்/துணை முகவர் சேர்ப்பார். ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் மாதந்தோறும் பெறப்படும் ₹30-லிருந்து பெரும்பாலான தொகை, டெலிவரி நபரின் சம்பளத்திற்க்கு உபயோகிக்கப்படுகிறது. தங்களின் விளம்பர துண்டுப்பிரசுரங்களை இணைக்க, விளம்பரதாரர்கள் சிறு தொகையை அளிப்பர்,” என்கிறார் டெக்கான் கிரோனிகல் விநியோக துறையில் பணிபுரியும் கே ஷங்கர்.
நெருக்கடி காலம்
பொழுது விடியும் நேரம், மாத்ருபூமி பத்திரிக்கையின் முகவரான மேடவாக்கத்தில் உள்ள 35 வயது எம் ஹரிதாஸ், தன் டெலிவரி ஆள் வராததால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். மற்ற டெலிவரி ஆட்கள், பல்வேறு செய்தித்தாள்களை கட்டி தங்கள் பையில் வைக்க தொடங்குகின்றனர். வானம் மேகமூட்டமாக இருப்பதால், மழையில் நனையாமல் இருக்க, பாலிதீன் கவரால் சுற்றுகின்றனர். சில நாட்களாகவே வியாபாரம் மோசமாகவே உள்ளது. விளம்பர துண்டுப்பிரசுரங்கள் கிடைத்து பல மாதங்களாகிவிட்டன, சந்தாக்களின் எண்ணிக்கை கூட கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
“கோவிட் முன்பு 15 டெலிவரி ஆட்கள், 5000 தாள்கள் என இருந்த நிலைமை மாறி, தற்போது வெறும் 3 பேர் 1000 தாள்கள் மட்டுமே போடுகிறோம்,” என்கிறார் 15 வருடங்களாக இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஹரிதாஸ். “பின், ஏன் இன்னும் இந்த தொழிலில் உள்ளார்?” நஷ்டம் ஏற்பட்டாலும், கடைகள் செய்தித்தாள்களை வாங்குவதால், இதில் மட்டும் தான் தின வருமானம் உள்ளது. இந்த பணம் என்னுடைய பிற தொழில்களுக்கு உதவுகிறது,” என்கிறார் அவர்.
வீடுகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்வதிலும் ஈடுபட்டுள்ள இவர், இதற்காக 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதா மாதம் பணம் பெறுகிறார். “ஐந்து வருடம் முன்பு வரை மாற்று தொழிலுக்கான அவசியம் ஏற்பட்டதில்லை” ஆனால் இப்பொழுது நிலைமை மாறியுள்ளது. பலரைப் போலவே, கடன் ஏறிக்கொண்டிருக்க, குறைவான வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.
டெலிவரி ஆட்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. “என்னுடைய முகவருக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தால், என் வேலையை இழந்தேன்,” என கூறும் சரத் மோகன் கல்லூரியில் படித்துக் கொண்டே, தன் கல்லூரி கட்டணத்திற்காக செய்தித்தாள் டெலிவரி செய்து வந்தார். ” நிலைமை சீரானால் மீண்டும் வேலைக்கு செல்வேன். இல்லையென்றால், வாழ்வாதரத்தை காக்க, படிப்பை நிறுத்திவிட்டு வேலை தேட வேண்டும்,” என்கிறார் சரத்.
கோவிட் ஏற்படுத்திய பாதிப்பு
செய்தித்தாள் விநியோகிஸ்தர்களுக்கு எதிர்காலம் நம்பிக்கை தருவதாக இல்லை – பல தேசிய மற்றும் உள்ளூர் பத்திரிக்கைகள் தங்களின் அச்சு பதிப்பை தவிர்த்து டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளன. இந்தியா ரேடிங்ஸ் மற்றும் ஆய்வு நிறுவனம்((Ind-Ra)) செப்டம்பர் 2020 நடத்திய ஆய்வு படி, 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில், பெரும்பாலான அச்சு ஊடகம் 60% மேல் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. 76% விளம்பர வருவாய் இழப்பு மற்றும் 32% விநியோக வருவாய் இழப்பு ஆகியன இந்த வருவாய் இழப்பிற்க்கு காரணிகளாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் மீடியா வருகைக்கு பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், செய்தித்தாள் சந்தா கோவிட் நிலைக்கு முன்னரே சரியத் தொடங்கியது. இருப்பினும், காலை செய்தித்தாள் வாசிப்பு பிரியர்களால் உயிர்ப்புடன் இருந்து வந்த போதிலும், கோவிட் சூழல், வாசிக்கும் பழக்கத்தை கைவிட முக்கிய காரணமாக அமைந்தது. தொற்று ஏற்படும் அபாயத்தால், பலர் ஆன்லைன் வாசிப்புக்கு மாறிவிட்டனர்.
“ஆன்லைன் சந்தா மலிவான விலையில் இருப்பதொடு, உள்ளூர் பதிப்புகளை விட அதிக தேசிய செய்திகளை அளிக்கும் போது, ஏன் செய்தித்தாளுக்கு சந்தா கட்ட வேண்டும்? என கேட்கிறார் நடப்பு விவகாரங்கள் மற்றும் செய்திகளில் ஆர்வமுடைய கிரி குமார். “டெலிவரி ஆட்கள் மூலம் தொற்று ஏற்படாது என என்ன நிச்சயம்?” என்றும் கேட்கிறார்.
இந்த மாற்றம் தான் சித்தலபாக்கத்தில் இரண்டு வருடங்களாக செய்தித்தாள் டெலிவரியில் ஈடுபட்டுள்ள 29 வயது முத்துகுமார் கொளஞ்சிநாதன் போன்ற பலரை பாதித்துள்ளது. தன் தந்தையை போலவே, இதில் ஈடுபட்டுள்ள முத்துகுமார் ஒரு நாளில் 4 மணி நேரம் வேலை பார்த்து மாதம் ₹4000 சம்பாதிக்கிறார், மற்றொரு வேலையில் சொற்ப சம்பளமே பெற்று வந்த நிலையில், சந்தா சரிவால், அவரின் மாத வருமானமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
“ஒரு வருடம் முன்பு வரை, ஒரு நாளைக்கு 125 பேப்பர் போடுவேன். இன்று, 35 தான் போடுகிறேன்.” எனக் கூறும் முத்துகுமார் இதன் மூலம் சுமார் ₹1000 மட்டுமே பெறுகிறார். இது பெட்ரோல் செலவுக்கே சரியாக உள்ளது. இருப்பினும், வருங்காலம் மீதான நம்பிக்கையில் இந்த பணியை தொடர்ந்து வருகிறார்.
Read more: How’s your neighbourhood grocer surviving the second wave?
சமூக பாதுகாப்பு அற்ற நிலை
இந்த சூழலில், ஆதரவு இல்லாதது இவர்களை மிகவும் பாதித்துள்ளது. பெருந்தொற்றால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, அரசிடமிருந்து எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை. அச்சு ஊடக துறை மீண்டும் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையில் கடன் பெற்று சமாளிக்கும் இந்த நிலை விரைவில் மாறும் என காத்திருக்கின்றனர்.
டெலிவெரி ஆளாக இருந்த தற்போது முகவராக உள்ள ரஞ்சிதவல்லி ராஜேஷ் போன்ற பலரும் இந்த நம்பிக்கையில் தான் உள்ளனர். பெருந்தொற்று காலம் முடிந்து, வணிகம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கும் என நம்பிக்கையுடன் உள்ள இவர், இந்த துறையை தேர்ந்தெடுத்ததில் வருத்தமில்லை என்கிறார். “இந்த துறை மூலம் வந்த வருமானத்தில் தான் என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடிந்தது,” என்கிறார் அவர்.
ஆனால், எல்லோரும் நம்பிக்கையுடன் இல்லை. தொற்று பயத்தால் பலர் சந்தாவை கேன்சல் செய்துள்ளதால், சுமார் 30% வணிகம் பாதித்துள்ளதாக பலர் தெரிவித்தனர். தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் பாதி பேருடன் செயல்படுவதால், செய்தித்தாள் வாங்குவவதில்லை – செலவுகளை கட்டுப்படுத்தும் நிர்பந்தத்தில் அரசு துறை உள்ளது. விளம்பர துண்டுசீட்டுகள் மூலம் வரும் வருமானமும் குறைந்துள்ளது.
மற்ற பயனாளிகள் போல், செய்தித்தாள் விநியோகிஸ்தர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையளர்களுக்கு அரசு ₹5000 நிவாரண நிதி வழங்கியது, ஆனால் விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்படவில்லை. “முன்களப் பணியாளராக அங்கீகரிக்கப்படாததே இதற்கு காரணம். களத்திற்கு சென்று செய்தி சேகரிக்கும் முன் களப் பணியாளராக கருதப்படும் போது, தினமும் ஒரு நாள் கூட இடைவெளியில்லாமல் களத்தில் பணியாற்றும் எங்களை ஏன் அப்படி கருதவில்லை?” என கேள்வி எழுப்புகிறார் எம் டில்லி.
“அரசு அல்லது ஊடக நிறுவனத்திலிருந்து அடையாள அட்டை இருந்திருந்தால் ஊரடங்கின் போது எங்கள் வாழ்க்கை எளிதாகியிருக்கும். பல நேரங்களில், அடையாள அட்டை இல்லாததால் காவல் துறையினர் எங்களை மடக்கி உள்ளனர். அடையாள அட்டை ஒரு வித உரிமை உணர்வை அளிக்கிறது.”
எம் டில்லி, கெளரவத் தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் விநியோகஸ்தர்கள் சங்கம்
சிலருக்கு மட்டும் வாசகர்களிடமிருந்தும், தன்னார்வ மக்களிடமிருந்தும் நன்கொடை கிடைத்தது, பெரும்பாலும் அவர்களை தாங்களாகவே காத்துக் கொள்ளும் நிலை தான் இருந்தது. “எங்களை விட கூலி வேலையாட்களுக்கு நன்மைகள் அதிகம்.” எனக் கூறும் சைதாப்பேட்டையில் உள்ள துணை முகவர் கே ஏ தாண்டவமூர்த்தி, அரசிடமிருந்து சிறு உதவி கிடைத்திருந்தாலும் கடின சூழலை சமாளிக்க உதவியிருக்கும்.
செய்தித்தாள் விநியோகிஸ்தர்களுக்கு ஏன் நல வாரியம் இல்லை?
தமிழக அரசின் தொழிலாளர் துறை பல்வேறு வகை தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட நல வாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. விவசாயத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு என 17 நல வாரியங்கள் உள்ளன. அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கும் நல வாரியம் உள்ளது. இந்த வாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு திருமணம் மற்றும் இறுதி உதவி, இறப்பு சலுகைகள் மற்றும் பிற சலுகைகள், சூழ்நிலை பொறுத்து அளிக்கப்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டில், வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை அளித்துள்ளது.
இருப்பினும், இவர்களுக்கென முறைப்படுத்தப்பட்ட வாரியம் ஏதுமில்லை. “இதில் நிறைய சவால்கள் உள்ளன. பல டெலிவரி ஆட்கள் சிறுவர்கள் என்பதால், இது குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986 படி விதிமுறை மீறலாகும். இது தவிர, வேறு பணியிலிருப்பவர்களும் பகுதி நேரமாக இந்த வேலையில் ஈடுபடுகின்றனர்.” என்கிறார் தொழிலாளர் துறையின் அதிகாரி ஒருவர்.
இதற்கு வேறு வழிகள் உள்ளன என்கிறார்கள் வல்லுனர்கள். “அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வாரியத்தின் எல்லைக்குள், செய்தித்தாள் முகவர்கள், துணை நிறுவனங்கள், விநியோக பணியாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் இணைய சேவை வழங்குநர்களின் விநியோகச் சங்கிலிக்குள் அரசு கொண்டு வர வேண்டும். அரசு நலத்திட்டங்கள், உதவிகள் பெற இது பெரு உதவியாக இருக்கும். கடன் மற்றும் காப்பீடு பெறவும் இது உதவும்,” என்கிறார் ஹிந்து தமிழ் திசையில் விநியோக துறையின் தலைவர் டி ராஜ்குமார்.
“இந்த துறையில் உள்ள அனைவரின் தரவுகளையும் மாநில அரசு சேகரிக்க வேண்டும். செய்தித்தாள் விநியோகஸ்தர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது, இந்த காலகட்டத்தில் அவர்களின் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவும்,” என்கிறார் செய்தித்தாள் சங்கத்தின் உறுப்பினர் விபின்.
இந்தியா முழுவதும் விநியோகிஸ்தர்களுக்கு இதே நிலை தான், ஆனால் தமிழக அரசு இதற்கு முன்னோடியாக இருந்து இத்துறையில் உள்ளவர்களை முறைப்படுத்தலாம், எனக் கூறுகிறார் ராஜ்குமார். இந்த சங்கிலித் தொடரின் கடைசி நிலையில் உள்ள இவர்களின் பங்கு ஒட்டுமொத்த ஊடகத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பெருந்தொற்றால் இந்த துறை முழுவதும் பெரும் நஷ்டத்தை சந்தித்தாலும், அவர்களின் நலன் மற்றும் இந்த துறையில் இவர்கள் நீடிப்பதை உறுதி செய்வது முக்கியம்.
[Read the original article in English here.]