Translated by Sandhya Raju
பிளாஸ்டிக் பைகள், உபயோகப்பட்ட டயப்பர்கள், வீணாக்கப்பட்ட உணவுகள், சில சமயம் உபயோகப்பட்ட மருத்துவ ஊசிகள். இது போன்ற பொருட்களை தினந்தோறும் தன் பணியின் போது பிரிக்கிறார் தூய்மை பணியாளர் ரமேஷ்*.
“கைகள் வெயர்த்து போகும் என்பதால் எப்பொழுதும் நாங்கள் கையுறையை உபயோகிப்பதில்லை,” என்கிறார் ரமேஷ்.
இது போன்ற கடுமையான சூழலில் சொற்ப சம்பளத்திற்கு தான் நகரத்தில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.
பெரும் சவாலாக உள்ள போக்குவரத்து
பெரும்பாலான தூய்மை பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெகு தூரம் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது.
“காலையில் 3 மணிக்கு எழுந்து, சமைத்து, வீட்டை சுத்தம் செய்து, இரண்டு பேருந்து மாறி பணியிடத்திற்கு செல்ல வேண்டும். காலை 6-6.30 மணிக்குள் பயோமெட்ரிக்கில் வருகையை பதிவு செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் தாமதானாலும், எங்கள் மேற்பார்வையாளர் வீட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார் அல்லது அந்த நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து விடுவார். வயதாவதால், உடம்பும் வலுவிழக்கிறது,” என்கிறார் மஞ்சுளா. இவர் தனியார் திடக்கழிவு மேலாண்மை ஏஜன்சியில் வேலை செய்கிறார்.
பிடித்தம் எதுவும் இல்லையென்றார், மாதச் சம்பளமாக 9300 பெறுகிறார் மஞ்சுளா.
மீள்குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் இதே போன்ற நிலையை தான் தெரிவிக்கின்றனர்.
“சில சமயம் மகளிருக்கான இலவச பேருந்து கிடைப்பதில்லை, எனவே நாங்கள் கட்டணம் செலுத்தி தான் பயணிக்கிறோம். அதிகாலையில் வார்ட் அலுவலகத்திற்கு செல்வதால், சாலைகள் இருளோடி இருப்பதால், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது,” என்கிறார் ஒரு பணியாளர்.
பாதுகாப்பான, மின் விளக்குள்ள சாலைகள் மற்றும் காலையில் பணி நேரத்தில் கொஞ்சம் அனுசரணை ஆகியவை இவர்களின் கோரிக்கைளின் முக்கியமானது.
Read more: Councillor Talk: M Renuka aims to improve quality of life in Ward 42 – Tondiarpet
கடுமையான பணிச்சூழல்
அதிகாலை பணியை துவங்கும் இவர்களுக்கு 10 மணிக்கு காலை உணவு உண்ண 30 நிமிடம் கிடைக்கும். வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனைவருக்கும் நேரம் இருப்பதில்லை.
“கையில் காசு இருந்தால், சாப்பிடுவேன், இல்லையென்றால், வெறும் பன், ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டும் தான், தனியார் ஏஜன்சியோ, மாநகராட்சியோ இவர்களுக்கு உணவு அளிப்பதில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
வார்ட் 12-ன் கவுன்சிலர் வி கவிகணேசன், தனது வார்ட் பகுதியில் வேலை செய்பவர்களுக்கு காலை உணவை தன் செலவில் அளிக்கிறார். “நம் நகரம் தூய்மையுடன் இருக்க இவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல சூழலை உருவாக்கினால் நகரம் மேலும் தூமையாக இருக்கும்,” என்கிறார் இவர்.
சரியான கழிவறை இல்லாதது மற்றொரு சவால்.
“காலையில் கிளம்புவதற்கு முன் 4 – 4.15 மணிக்கு கழிவறை உபோயகிப்பேன், பின்னர் சுத்தமான பொது கழிப்பறை இருந்தால் உபயோகிப்பேன், ஆனால் அவ்வாறு அமைவது கடினம்,” என்கிறார் மஞ்சுளா.
போதுமான பொது கழிப்பறை வசதி இல்லாதது இவர்கள் சந்திக்கும் பெரும் சவால்.
பொது கழிப்பறை இல்லாத பகுதிகளில், அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள பொது கழிப்பறைகளை உபயோகிப்பதாக நம்மிடம் பேசிய சில பணியாளர்கள் பகிர்ந்தனர்.
இரவுப் பணியில் உள்ளவர்களுக்கு இது மேலும் பெரிய சவால், இரவு நேரத்தில் பொது கழிப்பறைகள் திறந்திருப்பதில்லை.
ஆபத்தான கழிவுகள், பிரிக்கப்படாத கழிவுகள் ஆகியவற்றை நீக்கும் அனைத்து பணியாயர்களுக்கும் பாதுகாப்பு உறைகள் கிடைப்பதில்லை.
“பாதுகாப்பு குறித்து எங்களுக்கு போதிக்கப்பட்டது, ஆனால் எங்களுக்கு அது புரிந்து செயல்படுத்துவதில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.” எனக் கூறும் மஞ்சுளா, “முக்கியமாக மழைக்காலத்தில் எங்களின் பாதுகாப்பு குறித்து யாரும் பொருட்படுத்துவதில்லை” என்கிறார்.
தனியார் நிறுவனங்களான அர்பேசர் சுமீத், ராம்கி என்விரோ ஆகியவை தங்கள் பணியாளர்களுக்கு பிரதிபலிக்கும் சீருடைகள், கையுறைகள், மாஸ்க் மற்றும் காலணி கொடுக்கிறது. சென்னை மாநகராட்சியில் நேரடியாக உள்ள பணியாளர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை.
கழிவுகளை கையாண்டதால் சரும பிரச்சனை ஏற்பட்டதாக முன்னாள் பணியாளர் இருவர் நம்மிடம் பகிர்ந்தார்.
சாதி ரீதியான பாகுபாடு
பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள் தாங்கள் சாதி அடிப்படையில் நடத்தப்படுவதாக கூறுகிறார்கள்.
“95% பணியார்கள் இந்த வகுப்பினை சேர்ந்தவர்கள்,” என்கிறார் டாக்டர் அம்பேத்கர் SC/ST தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர் ஆர் அன்பு வாசுதேவன். பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு சட்டம்), 1989 குறித்த விழிப்புணர்வு இவர்களிடம் இல்லை. பெரும்பாலான மேலாளர்கள் இந்த வகுப்பை சார்ந்தவர்கள் இல்லை என்பதால் பணியாளர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
அவர்களின் உரிமை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் மேலாளர்கள் இவர்களை நடத்தும் விதத்தை அனுமதிக்கின்றனர்.
பொதுவெளியில் இவர்கள் அவமதிக்கப்படுவதாக நம்மிடம் பேசிய சில பணியாளர்கள் பகிர்ந்தனர்.
“இவர்களை எதிர்த்து எங்களால் பேச முடியாது. அப்படி செய்தால், அசுத்தமான சாலையில் பணி செய்ய அனுப்புவர் அல்லது கொஞ்சம் கூட ஓய்வு எடுக்க முடியாத படி வேலை கொடுப்பர். ஆனால், அவர்கள் கூறும் அனைத்தையும் ஒத்துக் கொண்டால், கூடுதல் பணிச்சுமையை கொடுக்க மாட்டார்கள்,” என்கிறார் தூய்மை பணியாளரான விமலா.
“ ₹1000 கையூட்டு தொகையாக எங்கள் மேலாளர் எங்களிடம் கேட்பார். கொடுக்கவில்லை என்றால், வேலை பார்க்கும் வார்ட்டை மாற்றுவேன் என பயமுறுத்துகிறார்.,” என மேலும் கூறுகிறார் விமலா.
Read more: Photos tell the story of public toilets in Chennai
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை அபாயம் குறித்தும் விமலா நம்மிடம் பகிர்ந்தார். “பேட்டரி வண்டியில் சென்று குப்பைகளை சேமிக்க எனக்கு ஆசை. ஆனால் என் மேற்பார்வையாளரிடம் இது குறித்து கேட்க பயம். வண்டியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்றுக்கொடுக்கும் சாக்கில் மிகவும் அருகில் உரசி சொல்லிக்கொடுப்பதை நான் பார்த்துள்ளேன்.”
“இது குறித்து யாரிடம் புகார் அளிப்பது என தெரியவில்லை. என் வேலை போகும் ஆபத்து உள்ளது,” என்கிறார் விமலா சாரா. இவர் முன்னாள் பணியாளர் ஆவார், பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர். .
அவர் புகார் அளித்ததும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, அந்த நேரத்தில் என்னை வேலைக்கு வர வேண்டாம் என கூறப்பட்டது. ஒரு மாதம் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது பின்னர் எதுவும் வழங்கப்படவில்லை.
“இரண்டு வாரத்திற்கு ஒரு முறை விசாரணைக்காக என்னை அழைத்தனர். ஆனால் இது வரை, தீர்வு காணப்படவில்லை,” எனல் கூறும் சாரா, தற்போது வேறு வேலை பார்த்து வருகிறார்.
பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், 2013 படி அர்பேசர் சுமீத் நிறுவனத்தில் குழு உள்ளது. இவர்கள் பராமரிக்கும் வார்டு அலுவலகத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் எண் பகிரப்பட்டுள்ளது.
“புகார் பெறப்பட்டால், அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்,” “ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில், இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது.”
ஆனால் நாம் பேசிய பணியாளர்களில் சிலர் மட்டுமே புகார் எண் குறித்து அறிந்திருந்தனர்.
சென்னை மாநகராட்சியிலும் இதற்கென குழு உள்ளது.ஆனால் இவர்களை எப்படி அணுகுவது, யார் இதில் உறுப்பினர்கள் போன்ற தகவல்கள் பொது வெளியில் இல்லை.”
“பாதிக்கப்பட்டவர் மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளிக்கலாம், இது எங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். புகாரின் பேரில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும்.” என மாநகராட்சி அதிகாரி மற்றும் குழு உறுப்பினர் விஜுலா கூறினார். “தனியார் பணியாளர்களும் மாநகராட்சியின் குழுவை அணுகலாம். தனியார் நிறுவனத்தையே இது போன்ற புகார்களை தீர்க்க சொல்லுவோம்.”
நகர மருத்துவ அதிகாரி, துணை மருத்துவ அதிகாரி, வட்டார மருத்துவ அதிகாரி, சட்ட அலுவலர், துணை சட்ட அலுவலர் மற்றும் துணை கல்வி அதிகாரி ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்கள் ஆவர்.
ஆனால், குழு உறுப்பினராக பெண்கள் நலன் சார்ந்து பணியாற்றும் என்.ஜி.ஓ இதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி குழு புகாரை பரிசீலிக்காவிட்டால், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் கமிட்டியில், புகார் அளிக்கலாம். இங்கும் புகார் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், பாதிக்கப்பட்டவர் மனுதாக்கல் செய்யலாம்.
வேலை இழக்கும் அபாயம்
ராயபுரம், திரு வி கா பகுதிகளில் கழிவு மேலாண்மை தனியார் வசம் ஒப்படைக்க மா நகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் நிரந்தர பணியாளர்கள் நகராட்சி நிர்வகிக்கும் பிற மாண்டலங்களுக்கு மாற்றம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
“எங்கள் மண்டலத்திற்கு நிரந்தர பணியாளர்கள் வரும் வாய்ப்புள்ளது,” என்கிறார் கவுன்சிலர் ரேணுகா.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணி (NULM) கீழ் பணியமர்தப்பட்டவர்கள் தாங்கள் பணி இழக்க நேரிடும் எனஅச்சத்தில் உள்ளனர். பழைய NULM வேலையாட்கள் நீக்கப்படுவார்கள் என அவர்கள் நம்புகின்றனர்.
“எந்த வித பலனோ, நிரந்தர பணி உத்திரவாதமோ இன்றி கடந்த 10 ஆண்டுகளாக NULM தூய்மை பணியாளராக உள்ளேன். வேலையிழந்த பின் எவ்வாறு சமாளிப்பேன் என தெரியவில்லை,” என பகிர்ந்தார் ஒரு தற்காலிக பணியாளர்.
தொழிற்சங்கங்களின் கவலைகள்
பணியாளர்கள் தங்கள் குறைகளை மேலதிகாரிகாளுக்கு அனுப்பவும், மாநகராட்சி, அரசு மற்றும் நீதிமன்றங்களில் அவர்களின் பிரச்சனையை எடுத்துரைக்க உதவுவதாகவும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர் எஸ் புருஷோத்தமன் கூறினார்.
சங்க உறுப்பினர்களுக்கு இது சுலபமானதாக இல்லை.
பாலியல் தொல்லை குறித்து சாரா தன் புகாரை பதிவு செய்ய சங்கம் உதவியது, சங்க உறுப்பினர் இதற்கான விளைவுகளை சந்திக்க நேரிட்டது,
“தூய்மை பணியாளர்கள் சங்கத்துடன் தொடர்பில் இருந்தால், பணியில் இவர்களுக்கு சவால்கள் ஏற்படுகின்றது. “உதாரணத்திற்கு, இவர்களை பிற வார்டுகளுக்கு மாற்றம் செய்வது அல்லது பணியின் போது சரியாக நடத்தப்படாதது போன்றவற்றிற்கு உள்ளாகிறார்கள்.”
சென்னை மாநகராட்சியில் பணியார்கள் புகார் அளித்துள்ளார் என தெரிய வந்தால், இவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள், என்கிறார் புருஷோத்தமன்,
கடுமையான பணிச்சூழல், பாலியல் தொல்லை அல்லது மேலாளார் கேட்கும் கையூட்டு என புகார் அளித்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியிட மாற்றம் அல்லது பணி இழப்பை சந்தித்துள்ளனர்.
கழிவு மேலாண்மை குறித்து சென்னை பல இலக்குகளை நிர்யணித்தாலும், அன்றாட பணியில் தூய்மை பணியாளர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். மேம்படுத்தப்பட்ட பணிச்சூழல் மற்றும் அவர்களின் புகார்களை பரிசீலித்தல் ஆகியவை தற்போதைய அவசர தேவை ஆகும்.
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
[Read the original article in English here.]