செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களில், இயற்கையாக அமைந்துள்ள கழுவேலி, உப்பங்கழி நீர்நிலையில், புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்க CRZ அனுமதி வழங்கியுள்ளது மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம்.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் நெம்மேலி, கிருஷ்ணகாரனை, தண்டலம், பட்டிபுலம், திருப்போரூர், மாமல்லபுரம், சலுவான்குப்பம், பையனூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 4375 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த்துறை, நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1.655TMC கொள்ளளவு கொண்ட இந்நீர்த்தேக்கம் மேற்கூறிய கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும் அருகாமை கிராமங்களின் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் எனவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை 17.11.2025 அன்று தொழில் நுட்ப வல்லுநர் குழு பரிசீலித்தது. 20.11.2025 அன்று மாநில கடற்கரை மண்டல ஆணையம் விண்ணப்பத்தைை பரிசீலித்து CRZ அனுமதிக்கு பரிந்துரைக்கிறது. 03.12.2025 அன்று திட்டத்திற்கான CRZ அனுமதி வழங்கப்படுகிறது. 16 நாட்களில் இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த உப்பங்கழியை நம்பி மட்டும் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் உள்ளது. புதிய நீர்த்தேக்கத் திட்டத்தால் அவர்களது மீன்பிடித் தொழில் பாதிப்படையும். மீனவ சமுதாய மக்கள் மட்டுமின்றி தலித் சமூக மக்கள், இஸ்லாமிய மக்களும் இந்த உப்பங்கழியை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கருத்துகளைக் கேட்காமல் அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துப் புதிய நீர்த்தேக்கம் உருவாக்குவது ஏற்புடையதல்ல. இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாதென ஏற்கெனவே நெய்தல் மக்கள் கட்சி மற்றும் சில மீனவப் பிரதிநிதிகள் தமிழ்நாடு மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையத்துக்குக் கடிதம் வாயிலாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் இத்திட்டத்திற்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான விண்னப்பத்தை மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்ததின் தொழில்நுட்ப வல்லுநர் குழு 17.11.2025 அன்று பரிசீலித்தபோது மொத்தம் 25 ஆய்வுகள் மற்றும் தரவுகளைக் நீர்வளத்துறையிடம் கோரியது. அதில் சில ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இத்திட்டத்தின் அமைவிடம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் தன்மையை அறிந்துகொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், இத்திட்டத்தின் நீண்டகால நிலைத்தன்மை குறித்து அறிவதற்கான புவிப்புறவியல் ஆய்வுகள், உப்புத்தன்மை குறித்த ஆய்வுகள், திட்ட அமைவிடத்தின் தாவர, விலங்கின உயிர்ப்பன்மையம் குறித்த ஆய்வுகள், நிலத்தடி நீரின் போக்குகுறித்த ஆய்வுகள், குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுகள் உள்ளிட்டவையும் இதில் அடக்கம். திட்டத்தைத் தொடங்கும் முன்னரும், CRZ அனுமதி வழங்க்கப்படும் முன்னரும் இவ்வாய்வுகளைச் செய்து முடிப்பது மிகவும் அவசியம். ஆனால், ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலே CRZ அனுமதி வழங்க்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
அத்தனைக்கும் மேலாக இத்திட்டம் குறித்து ஐ.ஐ.டி. மெட்ராஸ், அண்ணா பல்கலை, அரசின் பிற துறைகள், பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஆகியோருடன் கலந்தாலோசிப்பது அவசியம் எனத் தொழில்நுட்ப வல்லுனர் குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால், இப்படியொரு கலந்தாய்வுக் கூட்டமே நடத்தாமல் CRZ அனுமதி வழங்கியிருப்பது சனநாயக நடைமுறைகளுக்கு எதிரானதாகும்.
Read more: Chennai’s water woes worsen as reservoirs dry up and groundwater levels decline
மேலும் இது சென்னையின் புறநகர்ப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நீர் ஈரநிலமாகும். மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ப்பன்மயமிக்க அலையாத்திக் காடுகளைக்கொண்ட இப்பகுதி கடலோடு முட்டுக்காடு வழியே பிணைக்கப்பட்டிருப்பதால் கடலோடு நுண்ணூட்டச் சத்துக்களையும் உயிரினங்களையும் பரிமாறிக்கொள்ளும் ‘Bio corridor’ ஆகச் செயல்படுகிறது. பள்ளிக்கரணை போன்ற சிறப்புமிக்க நன்னீர் சதுப்புநிலங்களில் பார்க்க முடியாத ஏராளமான முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. வடக்கிலிருந்து இமைய மலையைத் தாண்டிப் பயணிக்கும் பட்டைத் தலை வாத்து (Bar headed goose) முதலாகச் சிறிய ஆலா (Small Pratincole), Short toed snake eagle, திபத்திய மணல் புளோவர் (Tibetan Sand Plover), Chestnut winged cuckoo, Peregrine Falcon, கடல் ஆலா (White bellies sea eagle) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பறவைகளையும் ஈர்க்கும் இச்சூழல் மண்டலத்தில் இதுவரையில் 195 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதனை ஆழப்படுத்திக் கடலிலிலிருந்து துண்டித்து நீர்த்தேக்கமாக மாற்றுவது அப்பகுதியின் சூழலியல் தனித்தன்மையை சிதைத்து அதனை உயிரற்றதாக மாற்றிவிடும்.
காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் இயற்கைக் கவசமாகத் திகழக்கூடிய உப்பங்கழிப் பகுதியின் சூழல் தன்மையை முற்றிலும் மாற்றிக் குடிநீர்த் தேவைக்காக ஒரு நீர்த்தேக்கத்தை அமைப்பது, சூழலியல் சமநிலைக்கும், உள்ளூர் சமூகங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
புவி வெப்பமயமாதலின் தீவிர விளைவுகளில் ஒன்றான வறட்சி அபாயம் சென்னைக்கு உள்ளது. தொலைநோக்குப் பார்வையில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்குவதோ, ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகலைப் பராமரிப்பதோ மிகவும் அவசியமான ஒன்றுதான். ஆனால், ஏற்கெனவே இயற்கையாக அமைந்துள்ள தனித்த சூழல் தன்மைகளைக் கொண்ட ஒரு உப்பங்கழி, கழுவேலி நீர்நிலையை அழித்துப் புதிதாக நீர்த்தேக்கம் உருவாக்குவது சரியான, அறிவியல்பூர்வமான தீர்வு கிடையாது.
கோவளம் பகுதி கிராம மக்கள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனரை 06.12.2025 அன்று நேரில் சந்தித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர், விரைவில் அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவற்றைக் கருத்திக் கொண்டு இத்திட்டத்திற்கான CRZ அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.
[This article first appeared on the www.poovulagu.org website of the environmental organisation, Poovulagin Nanbargal and has been republished with permission. The original article may be read here.]