KP பார்க்கில் உள்ள 13 மாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் தனது வீட்டிலிருந்து வெளியே செல்ல புறப்பட்டார் ச. கணேசன் (வயது 52). எப்போதும் போல மின் தூக்கியில் ஏறியவரை, உயிர் இல்லாத சடலமாகத்தான் மீட்கமுடிந்தது.
ஆறாவது மற்றும் ஏழாவது மாடியினிடையில் மின்தூக்கி செயலிழந்துவிட்ட நிலையில், அவரை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, கால் தவறி ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் கணேசன்.
இம்மரணம் சம்பவித்து ஒரு மாதமான நிலையில், அங்கிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் TT பிளாக் குடியிருப்புவாசிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “போன மாசம் KP பார்க் ல நடந்த சம்பவம் எங்களுக்கும் நடக்கணுமா? 13 மாடி கட்டடம் எங்களுக்கு எதுக்கு?” என்று கேட்கிறார்கள் அம்மக்கள்.
Read more: Chennai’s decades-long policy failure to address housing issues of the urban poor
லிப்ட் இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்
TT பிளாக் கட்டிடத்தில் 6 மின்தூக்கிகள் இருந்தாலும், அவற்றில் 1 அல்லது 2 தான் அரிதாக வேலை செய்கின்றன. 13 மாடி கட்டிடத்தில் லிப்ட் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
திடீர் இயந்திர கோளாறு, வேகமாக கீழே சென்று நிற்பது, மின்சாரம் நின்று போனால் உள்ளே மாட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. லிப்ட் பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள், power backup போன்றவை கிடையாது.
“TT பிளாக் ல 600 வீடுகள் இருக்கின்றன. அதில் 1000 பிரச்சனைகள். 100க்கும் மேற்பட்ட வயதானவர்கள், ஆபரேஷன் செய்தவர்கள், குழந்தை பெற்றவர்கள் லிப்ட் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். Liftஇல் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் போகவேண்டும், படியில் ஏறி வருவதே மேல் என்று எண்ணும் நிலையில் தான் TT பிளாக் மக்களின் நிலை உள்ளது.
இதற்கு நாங்கள் மாதாமாதம் ரூ. 750 வேறு கொடுக்கிறோம்,” என்கின்றனர்.
லிப்ட் வேலை செய்யவில்லை என்று புகார் செய்தால் generator பழுது, petrol போட வேண்டும், diesel போட வேண்டும் என்று லிப்ட் operator கூறும் பதில் எப்பொழுதாவது மாறும் என்று ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
சமூகவிரோத செயல்கள்: குற்றங்களின் கூடாரமான அடுக்குமாடி குடியிருப்பு
இது மட்டுமல்லாமல், TT பிளாக் குடியிருப்பிலுள்ள காலி வீடுகளில் பல சமூகவிரோத செயல்கள் நடைபெறுகின்றன என்றும், அது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
13 அடுக்கு மாடியில் 11 மாடி வரைக்கும் தான் ஆட்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள காலியான வீடுகளில் பல சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன.
வெளியில் இருந்து வரும் வாலிபர்கள் குடியிருப்புக்குள் வந்து மது மற்றும் போதை பொருள்கள், போன்ற பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். அவர்கள் இவ்வாறு இருப்பதால் அவர்களுடைய வாழ்க்கை வீணாக போவது மட்டுமல்லாமல் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் சேர்த்து பாதிப்படைய செய்கிறது.
“எங்க இருந்து வராங்கனு தெறியல. காலியா இருக்கிற 13 வது மாடியில ரொம்ப அட்டூழியம் பண்றாங்க,” என்று கூறிய 45 வயது கொண்ட குடியிருப்பு வாசி.
அது மட்டுமல்லாமல் மேலே இருக்கும் தண்ணி டேங்க் உள்ளே குதித்து குளித்து ஆட்டம் போடுகிறார்கள். அந்த தண்ணீரை எப்படி உபயோகிப்பது என்று கேட்கிறார்கள் மக்கள்.
மேலும், பல திருட்டு சம்பவமும் நடப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தனர். வெளியே நிற்கும் வண்டி, ஆட்டோகளில் பெட்ரோல், டீசல் திருடுவது, சீட்களை கிழிப்பது, காய போட்டிருக்கும் துணிகள், செருப்புகளை திருடுவது என்று மக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் போய்க்கொண்டே இருக்கிறது.
இதைப்பற்றி ஒருவரிடம் கேட்டப்போது அங்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கூறினார். கரண்ட் இல்லை என்று வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் படுத்திருந்தனர். அப்போது யாரோ 2 பேர் வீட்டை திறந்து உள்ளே சென்று அவர்களுடைய செல்போன்னை திருவிட்டு சென்றிருக்கிறார்கள்.
“நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவோம்? அப்படி சொன்னாலும் எங்களால் நிம்மதியாக இருக்க முடியாது,” என்ற பயத்தோடும் பரிதவிப்போடும் மக்கள் கூறுகிறார்கள்.
அங்கு வாழும் மக்களுக்கு 3 மாடி வீடு தான் வாழ்வதற்கு ஏதுவாக இருந்ததாகவும் அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள், யார் வந்து போகிறார்கள், ஏதாவது பிரச்சினை என்றால் உடனே அக்கம் பக்கத்தார் வருவார்கள் என்று ஒரு விதமான பாதுகாப்போடு வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்பொழுது வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயப்படும் நிலை தான் அவர்களுக்கு.
Read more: Nam Kudiyiruppu Nam Poruppu: Is the scheme doing more harm than good in Chennai?
தண்ணீர் பிரச்சனை எப்போது ஓயும்
“மின்சாரம் இல்லையென்றால் எங்களுக்கு வாழ்க்கையே நின்று போனது போல் ஆகிவிடும். நாங்கள் தான் கீழே சென்று தண்ணீர் கொண்டு வரவேண்டும். 2 மாடி இருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் 10 மாடி என்பது எப்படி எங்களால் ஏறி வர முடியும்?” போன்ற நியாயமான கேள்விகளை முன்வைக்கின்றனர் அம்மக்கள்.
இதனால் குறிப்பாக வயதானவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
“ஒரு நாள் காலையில் இருந்து தண்ணீர் வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு மோட்டார் ஒயர் எலி கடிச்சிருக்கு என்று அலட்சியமாக பதில் கூறுகிறார் அதிகாரிகள்,” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் மக்கள்.
குடிநீர் மட்டுமல்லாது கழிவுநீர் வசதியும் முறையாக இல்லை. கிட்சன் சிங்க், கழிவறைகளில் தண்ணீர் சரியாக வெளியேறாமல், வீட்டிற்குள்ளேயே தான் வருகின்றன.
“இப்படி எல்லாருக்கும் சிரமமாக இருக்கும் 13 கட்டிடம் தேவையா? 3 மாடி வீட்டை இடித்துவிட்டு மக்களின் வாழக்கையை அடுக்குமாடியில் அடக்கிவைப்பது நியாயமா?” போன்ற கேள்விகளை அரசுக்கு முன் வைக்கிறார்கள் மக்கள்.