தூய்மை இந்தியாவின் முதல் படி கழிப்பறை. இன்று இந்தியாவில், படித்தவர்களும் பொது இடங்களில் மலம் கழிக்கிறார்கள். அது எத்தனை அருவருக்கத் தக்க செயல்!, அதனால் இடம் அசிங்கமாகின்றது, துர்நாற்றம் வீசுகின்றது, அதில் உட்க்காரும் ஈக்கள் பின்னர் நாம் உண்ணும் உணவுகளிலும் உட்கார்ந்து நோய்களை பரப்பு கின்றன. சுவரைப் பார்த்து மலம் கழித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டு போகுமா? அவர்களைப் பார்த்து எத்தனை பேர் அருவருப்பில் முகம் சுளிக்கிறார்கள் என்று யோசித்துக் கூட பார்ப்பதில்லை. இது தவறென்று தெரிந்து செய்கின்றார்களோ தெரியாமல் செய்கின்றார்களோ என்றுபுரியவில்லை. அவர்கள் ஈட்டும் பணம் எல்லாம் அவர்களது இச் செயகைகளால் மருந்துக்கும், மருத்துவருக்கும் தான் போகப் போகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளாது இருக்கிறார்கள். சுத்தமே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம் என்பதை தெரிந்தும், அதை நடைமுறைக்கு கொண்டு வர மறுக்கிறார்கள்.
அரசாங்கம் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்ட உதவுகின்றது . பொது கழிப்பிடங்களும் கட்டி வருகிறார்கள். ஆனால் மக்கள் இன்னும் அதன் முக்கியதுவத்தை உணரவில்லை. அல்லது உணர்ந்தும் அவர்களால் தங்களது நெடு நாளைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்ல . பத்து அடிகளில் ஒரு பொது கழிப்பிடம் இருந்தாலும், அதனை உபயோகிக்காது பொது இடங்களில் மலம் கழிப்பது – நான் இன்னும் மனிதனாகவில்லை, சுற்றுப்புற தூய்மையையும், நோய் எனக்கும் இதனால் வரும் என்று புரிந்து கொள்ளும் அறிவும் எனக்கு இல்லை என்று மக்களுக்கு அறிவிக்கும் செயலாகும் .
அன்று ஒரு நாள், படித்த மனிதரைப் போன்று தோற்றம் அளித்த ஒரு நடுத்தர வயதானவர், அவரது பைக்கை நிறுத்தி விட்டு, எங்கள் தெருவின் (நான் கோட்டூர்புரத்தில் வசிக்கின்றேன் ) முனையில் உள்ள எலெக்ட்ரி பெட்டியின் அருகில், அவரது முதுகினை போவோர், வருபவர் அனைவரும் முகம் சுளித்துக் கொண்டு கடந்து செல்ல, இந்த உலகத்தில் ஏதோ அவர் ஒருவர் மட்டும் தான் இருப்பது போல் மலம் கழித்துக் கொண்டு இருந்தார். அதனை எங்கள் சுற்றுப்புறச் சூழலைச் சேர்ந்த ஒருவர் வீடியோ படம் பிடித்து, அவருக்கு அதனைக் காட்டி, எத்தனை பேர் அவரைப் பார்த்து முகம் சுளித்தார்கள் என்பதை காண்பித்து, அதனால் நோய்கள் பரவும் என்பதையும் பொறுமையாக எடுத்துச் சொன்னார். அவரும் வெட்க்கி, தலை குனிந்து தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இத்தகைய வீடியோக்கள், க்ராமாலாயாவின் கழிப்பறை பற்றிய பாடல்கள் ரேடியோ, தொலை காட்சி மூலமாக அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும். பள்ளிகளிலும் தினமும் இதன் முக்கியதுவத்தை எடுத்து சொல்ல வேண்டும் . நாளைய சமுதாயத்தினராவது ஏனைய நாடுகளைப் போல் நமது நாடும் சுகாதாரமான நாடாக மாற ஆவண செய்திட இது உதவிடும் .
தூய்மை இந்தியாவில் ,சென்னை இன்று (மொத்தம் 434 இடங்கள்) , 235வது இடத்தில் இருக்கின்றது. இதை விட வருத்தம் அளிப்பது சென்ற வருடம் 2000 க்கு , 1194 மதிப்பெண்கள் கிடைத்தது. இந்த வருடம் அது 916ஆக குறைந்துவிட்டது. மற்ற மாகாணங்கள் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் நாம் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது உள்ளங்கனி நெல்லி போல் தெரிகிறது .
ஏன் இப்படி மாறிவிட்டோம் என்று யோசனை செய்யும் பொழுது:
1.திட கழிவு மேலாண்மை (solid waste Management ), வீட்டுக்கு வீடு குப்பைகளை சேகரிப்பது சரிவர செய்யப்படவில்லை
2. கரிம கழிவு (organic ) ,பிளாஸ்டிக் இவற்றை பாகுபாடு செய்யாதலால் கழிவுப் பொருட்களை உபயோகம் உள்ளதாக மாற்ற இயலாமை
3.தனியார் வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கு உதவி செய்வதற்கு அரசாங்கத்தில் பணம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் , இவ்வுதவி தனியாருக்கு போய் சேர்வதில் பிரிச்சனைகள்
4.பொது கழிப்பிடங்கள் மிகக் குறைவாக உள்ளது
5.இருக்கும் கழிப்பிடங்களும் சரிவர பராமரிக்க படவில்லை ,என்பது நன்றாக தெரிகிறது
இதற்கு அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்த்து இருக்காது , நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்.ஒவ்வொரு புறநகர் பகுதியிலும் நாம் சிறு சிறு குழுக்களை அமைத்து , அரசாங்கத்திடம் முறை யிடுவது , தனி மனிதரைகளை தூய்மை இந்தியாவிற்காக பாடுபடச் செய்வது, கழிப்பிடத்தின் முக்கியத்துவத்தை எடுத்து உரைப்பது போன்றவற்றை செய்திட வேண்டும்.
நாம் ஏனைய நாடுகளைப் போல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள இது வரை தவறி விட்டோம் . இனியும் விடாது இப்படி இருந்தால் நம்மை உலகம் ஏளனம் செய்யும். இனியாவது விழித்துக் கொள்வோம் . நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம். நாமும் நாகரிகமானவர்கள், படித்த பண்புள்ள மனிதர்கள் என்று உலகுக்கு காட்டுவோம். தூய்மையான நாட்டில், தலை நிமிர்ந்து வாழுவோம்.