பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டுருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99 கோடி செலவில் பல்லுயிர்ப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தில் பூங்கா அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 05.02.2024 அன்று சென்னையில் நடந்தபோது இத்திட்டம் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
சென்னையின் மிக அதிகமாக மாசுபட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட ஈரநிலங்களில் ஒன்றான பள்ளிக்கரணையில் 65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 –க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Read more: Reclaiming Perungudi dump yard is going to take more than biomining
மிக அதிகமாக மாசுபட்ட ஈரநிலமாக இருந்தபோதிலும் சென்னையின் வேறு எந்த நீர்நிலைகளிலும் காணக்கிடைக்காத உயிர்ப்பன்மையம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் காணப்படுவதற்கு அதன் தனித்தன்மை வாய்ந்த நுட்பமான சூழலமைவே காரணம். இத்தகைய சிறப்புமிக்க பள்ளிக்கரணையின் மேற்குப் பகுதியில் வேளச்சேரி தாம்பரம் சாலையில் 2.5 ஹெக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணை சூழல் பூங்காவானது பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்கா அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் எத்தனை பாதிப்பைத் தருபவை என்பதை உணர்ந்துகொள்ளப் போதுமானது.
வாகனங்கள் விரைவாகக் கடந்து செல்லும் எந்தவித வணிக நிறுவனங்களும் இல்லாத இயற்கையிலேயே புதர்களடைந்து இருள் சூழ்ந்த அந்தப் பகுதியில் இந்த சூழல் பூங்காவின் வரவிற்குப் பிறகு சுமார் 2 கிலோ மீட்டருக்கும் மேல் தூரத்திற்கு எப்போதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு ஏராளாமான கடைகள் புதிதாய் முளைத்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களுக்கு சூழல் பூங்காவின் வாசலின் இருபுறமும் சந்தைபோன்ற நெரிசல்மிக்க வியாபாரத் தலமாக மாறியிருக்கிறது. பின்னிரவு வரையிலும்கூட வாகன இரைச்சலும் மிகையொளியும் நிரம்பியதாய் அப்பகுதியின் இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 2 கி.மீ. நீள சுற்றுச்சுவர் எழுப்ப்பட்டு பூங்காவினுள்ளே மிக நீண்ட நடைபாதையும் அமைக்கப்பட்டு அது நடைபயிற்சி செய்பவர்களுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஏற்கனவே ஆக்கிரமிப்பில் சுருங்கிப் போயிருக்கும் பள்ளிக்கரணை வனப்பகுதியின் குறிப்பித்தக்கப் பரப்பு நடைபாதைக் கற்களாலும் கட்டுமானங்களாலும் சிதைக்கப்பட்டிருக்கிறது.
Read more: Pallikaranai is struggling to survive, and so is life around it
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அரசாணை ஒன்றின் வாயிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிக்காக வனத்துறைக்கு 20.30 கோடியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. உயிர்ப்பன்மையம் நிறைந்த சதுப்பு நிலத்தை தூர்வாரினால் அதன் இயற்கையான சூழல் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக இந்த அரசாணையை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்த தமிழ் நாடு அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் காரணத்தைத் தவிர வேறெந்த காரணங்களுக்காகவும் பள்ளிக்கரணையைத் தோண்ட மாட்டோம் எனக் கூறியது.
நிர்வாகரீதியில் பெருங்குடி குப்பைக் கிடங்கு என்று சொல்லப்பட்டாலும் அது முழுக்க முழுக்க பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதி என்பது மிக வெளிப்படையானது. வளர்ச்சித் திட்டங்கள், ஆக்கிரமிப்புகள், குப்பைக் கிடங்கு, சாலைகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளால் பள்ளிக்கரணையின் எஞ்சிய மிகச்சிறிய பகுதி அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் பள்ளிக்கரணையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட பகுதிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
இந்தச் சூழலில் பல ஆண்டுகளாக முறையின்றி கையாளப்பட்டக் குப்பைகள் பயோ மைனிங் மூலமாக அகற்றப்பட்டு அந்த நிலப்பகுதி மீட்டெடுக்கப்படும்போது அதனை மீண்டும் பல்லுயிரினங்களுக்கான இயற்கையான வனப்பகுதியாகவோ, நீர்நிலையாகவோ முழுமையாக மாற்றுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். உயிர்ப்பன்மையப் பாதுகாப்பு என்கிற பார்வையில் மட்டுமின்றி தென்சென்னையின் வெள்ள அபாயத்தைத் தணிக்கவும், நிலத்தடிநீர் வளத்தைப் பெருக்கவும்கூட இத்தகைய பெரும் பரப்பளவில் கட்டுமானங்களையும் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகளையும் தவிர்ப்பது அவசியமானது.
ஆகவே, மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு இந்த பெருங்குடி பல்லுயிர்ப் பூங்கா அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ் நாடு அரசைப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
[This article first appeared in the www.poovulagu.org website and has been republished with permission. The original article may be read here.]