சென்னையைப் பொருத்த வரை சாதாரண நாட்களில் ஆன்லைன் பயன்பாடு பெரிய அளவில் இருந்திருந்தாலும் இன்றைய அடைப்புக் காலத்தில் கல்வியோ, கலைகளோ வேலையோ, கலந்துரையாடலோ ஏன் குடும்ப, சமூக, வழிபாட்டு வைபவங்கள் கூட ஆன்லைனில் தான் என்ற நிலையில், அது மனமலர்ச்சிக்கு, மகிழ்ச்சிக்கு ஏதேனும் பங்காற்றுகிறதா என்று பார்த்தால் ’ஆம்’ எனும் பதில் நமக்கு ஆறுதலாகிறது.
சென்னையில் குறிப்பாக நாளுக்கு நாள் அதிதீவிரமடைந்து அச்சமூட்டி வரும் தொற்று எண்ணிக்கையும் மட்டுமின்றி மரண எண்ணிக்கையும் ஒருபுறம் பீதியைக் கிளறிக் கொண்டிருக்க வேறுபல அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன.
அது இருப்பிடமும், உணவும், கல்வியும் கேள்விக்குரியதாகி வருவதாலும் தனித்து முடங்கிக் கிடப்பதாலுமென தொற்றைப் போலவே தொடர்ந்து அபாயகரமாக பரவி வருகிறது.
இப்படியொரு கற்பனை செய்து பார்க்க முடியாத மனவிரக்தியும் அதன் விளைவும் குறித்து ஏற்கெனவே நமக்கு எச்சரிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டத்துக்குள் நாம் மெல்ல மெல்ல நுழைகிறோமோ என்ற கருத்துகளும் தற்போது பதிவாகத் துவங்கியுள்ளது.
எனவே, இவைகளைக் கடந்து செல்ல மனதின் ஆரோக்கியம் மற்றெல்லாவற்றையும் விட மிகவும் இன்றியமையாதது என நாம் அறிவோம். அதுவும் மத்திய மாநில அரசுகளே மக்கள் கையில் தான் எல்லாம் என பொறுப்பளித்து விட்ட நிலையில் இவ்விஷயம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா?
இதுவரை இந்த சந்ததி அநுபவிக்காத சூழலின் உக்கிரம் தாங்காது பல்லாயிரம் குடும்பங்கள் சென்னையை விட்டு நிரந்தரமாகவும் வெளியேறியது போக போராடத் தயார் நிலையில் உள்ள இன்றைய சென்னைக்கு இது எத்துணை முக்கியமானது என்று சற்று அவதானிக்கலாம்.
அத்தகைய மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் அந்த மகத்தான பங்களிப்புக்கு சில தளங்கள் இன்று காணக் கிடைக்கின்றன. அவை குறிப்பாக கலைகளை மையப் படுத்தியவைகளாக இருக்கின்றன. இதில், கலைகளை ஆன்லைனில் கற்பிக்கும் மையங்கள் மட்டுமல்லாது தனிநபர்களாக பல கலைஞர்களும் ஏன் பல மேதைகளும் கூட இறங்கி வந்து இதற்கான வாய்ப்பிடங்களை வழங்குகின்றனர்.
இணையவழி இசை மற்றும் கலை பயிற்சிகள்
கொரொனாவுக்கு முன் கல்விமுறையின் கடுமையான போக்கினால் கலைப் பயிற்று நிறுவனங்கள் மூடும் நிலைக்கு வந்தது நமக்கு நினைவிருக்கலாம். இப்போதோ இந்த நெருக்கடி நேரத்தில் ஆச்சர்யமுறும் வகையில் அவை மெல்ல துளிர்க்க ஆரம்பித்திருக்கின்றன. அதுவும் இணையவழியில். அதுவே கலைகள் மனித ஆன்மாவை மலர்ச்சி பெற செய்யக் கூடியவை என்ற தொன்மைக் கூற்றினை உறுதி செய்வதாகிறது.
மனமலர்ச்சிக்கு இணைய பயன்பாடு வழிவகுப்பது குறித்த சிலரின் நேரடிக் கூற்றுக்கள்
அண்ணாநகர் பகுதியில் கலைப்பயிற்று நிறுவனம் நடத்தும் ஒருவர் கருத்து பகிரும் போது
“பயிற்சி மையத்திற்கு நேரடியாக வந்து கொண்டிருந்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊரடங்கு கால நெருக்கடியால் வர முடியாமல் போனாலும், மற்றவர்கள் ஆன்லைன் பயிற்சி முறையில் கற்றலைத் தொடர்கிறார்கள். மேலும், புதிதாகவும் சிலர் சேரவிருக்கிறார்கள். இந்த கலைப்பயிற்சி வகுப்புகள் தமக்கு பெரிய அளவில் புத்துணர்ச்சி அளிப்பதாக மாணவர்கள் கூறுகிறார்கள்“, என்று கூறிய அவர், “மேலும் இதை பெற்றோர்களும் பெரிதும் வரவேற்கிறார்கள்“, என்றார்.
இதுகுறித்து, முகப்பேரைச் சேர்ந்த பெற்றோர் ஒருவரிடம் கருத்து கேட்ட போது, அவர் மேற்கண்ட கருத்தினை ஆமோதித்தார். அவரது இரண்டு மகன்களும் பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்புகளால் பெரிதும் அயர்ச்சியடைவதாகவும், அதனால் பல சமயங்களில் வகுப்புகளைத் தவிர்ப்பதாகவும் கூறினார்.
மேலும் வேறு என்ன செய்வதென்று தெரியாமல் இன்டர்நெட் கேம்ஸ்களில் மூழ்கியிருப்பதைப் பார்த்துக் கவலையுற்ற அவர், தனது மகன்கள் இசைப்பயிற்சி பெறும் ஆசிரியரிடம், இசைவகுப்பின் நேரத்தை அதிகரிக்க முடியுமா என்று கேட்டதாகவும் அத்துடன் அவர்களுக்கு வீட்டில் அதிகநேரம் பயிற்சி செய்வதற்கும் பாடங்கள் தரக் கூறியதாகவும் பகிர்ந்து கொண்டார்.
அதற்கான காரணத்தைக் கேட்ட போது ஆன்லைனில் தொடர்ந்து பலமணி நேரம் பள்ளிப்பாடங்களைக் கவனிப்பதில் ஏற்படும் அயர்ச்சி அவர்கள் இசை வகுப்புகளில் தெரிவதில்லை, மாறாக, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
இது போன்றதொரு கருத்துப் பகிர்வினை அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கும் ஒரு பெற்றோர் மூலமாகவும் உறுதி செய்ய முடிந்தது. அவர், தனது மகனை பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுப்புவது குறித்து மறுபரிசீலனை செய்யப் போவதாகவும், அதற்கு பதிலாக பாட்டு மற்றும் இசைப் பயிற்சி வகுப்புகளை மட்டும் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.
மதுரவாயலைச் சேர்ந்த திருமதி. திவ்யா இதை மேலும் உறுதிபடுத்தினார். பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்புகளில் நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்திருப்பதால் அவற்றை முடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் என்றும் ஆனால், கலைசார் வகுப்புகளுக்கு மிகுந்த ஆர்வத்துடன் குறித்த நேரத்திற்கு முன்னரே வந்து அமருவதைக் காணும்போது தன் குழந்தைகளுக்கு இது எந்தளவிற்கு அவசியம் என தான் உணர்வதாகக் கூறினார்.
பெற்றோர்களின் இந்த நேர்மறையான கருத்துக்கள், தங்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் அதனால் இவ்வகுப்புகளை மேலும் மெருகூட்டும் விதமாக படைப்பாற்றலுடன் கூடிய புதிய பயிற்று முறைகளை வடிவமைத்து இருப்பதாகவும் அதில் ஒரு அம்சமாக கெரோனா விழிப்புணர்வுக்காக மாணவர்களின் சொந்த இசையமைப்பில் பாடல் உருவாக்கம் போன்ற சுவாரஸ்யமான விஷயமும் உண்டு எனக் கூறுகிறார், முகப்பேரைச் சார்ந்த இசையாசிரியர் ஒருவர்.
அதே போன்று வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்யும் இளைஞர்கள் தங்களது வேலைநேர அழுத்தத்தைக் குறைக்க இத்தகைய ஆன்லைன் கலைப்பயிற்சி மற்றும் பங்கேற்பு நடவடிக்கைகள் தமக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் ஒரு தளமாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தனர்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாம் மற்றும் அஸ்வின் இருவரும் கூறியதாவது: “அதிக நேரம் அலுவலகப் பணி நிமித்தம் ஆன்லைனில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினால் உண்டாகும் மன அழுத்தம் ஊரடங்கினால் இன்னும் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த ஆன்லைன் கலைப்பயிற்சி வகுப்புகள் மற்றும் கலைசார்ந்த நடவடிக்கைகள் மனச்சோர்வினைக் குறைப்பதோடு ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. “
இணையம் மூலம் இணைந்த இமயங்கள்
சாமான்யர்களால் நேரடியாக உரையாடுவதை நினைத்தே பார்க்க முடியாத பல பிரபலங்கள் இன்று முகநூல் லைவ் மூலம் அவர்களுடன் சகஜமாக பேசுவதும், அவர்களுக்காக இவர்கள் ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்கள் கூட விருப்பப்பாடல்கள் பாடுவதும் என கற்பனை செய்திராததெல்லாம் இன்று இணைய வழியாய் நிஜமாகியுள்ளன.
இவ்வாறு பாடும் போது வாழ்வு கேள்வியாகிப் போன பல குடும்பங்களுக்கு உதவ அங்குள்ள ரசிகர்களால் நன்கொடை அனுப்பப்படுகிறது. இவ்வாறு இந்நிகழ்வு மக்களுக்கு மனமலர்ச்சியைக் கொண்டு வருவதோடு சக மனிதர்களுக்கு உதவும் ஒரு சிறந்த நிகழ்வாகவும் ஆகி விடுகிறது.
அத்துடன் பிரபலக் கவிஞர் ஒருவர் பாடல் எழுத அதற்கு இசையமைத்து ஒரு மிகப் பிரபல பாடகர் பாடுகிறார், இன்னொரு உச்ச இசையமைப்பாளர் பல பிரபல பாடகர்களை பாட வைத்து ஒரு பாடலை மக்களுக்கு ஊக்கம் தருவதற்காக பரிசளிக்கிறார். இவையாவும் தன்னார்வத்தின் அடிப்படையில் அரங்கேறுகின்றன.
இன்னும் தங்களது திறமைகளை அரங்கேற்ற பல தளங்கள் அமைக்கப்பட்டு பலரும் அவைகளில் பங்கேற்க மும்முரமாக அதற்காகத் தம்மைத் தயார்படுத்துவதில் மூழ்குகின்றனர்.
இவ்வாறு பூதாகரமான சவால்கள் தம் முன் நின்றபோதிலும் மக்களில் கணிசமானோர் இதுபோன்ற உற்சாகமானத் தளங்களில் பங்கேற்றுக் கொண்டு தனது மற்றும் சுற்றத்தின் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்று அடுத்து வரவிருக்கும் ஒரு முதிர்ச்சியான கால கட்டத்திற்குள் நுழைய முயன்று கொண்டிருக்கின்றனர்.
எதிர்காலம் இனியதே. என்றென்றும் முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வுலக நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் மானிடம் நுழைந்து முதிர்ந்து புதிய மனித இனமாய் ஜொலித்தே தீரும்