வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீது போட்டிருக்கும் தடை விதிகளை அமல்படுத்தும். இது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மாநிலத்தில் முன்னொருபோதும் எடுக்கப்படாத நடவடிக்கை. பிளாஸ்டிக் தடை பற்றி பல குடிமக்கள் மத்தியில் இன்னும் குழப்பம் மற்றும் கவலை உள்ளது. அதனை போக்க செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் மாநில அரசாங்கம் தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டிருக்கிறது, ஆனால் தடையை அமல்படுத்த அல்லது ஒரு மாற்று வழிமுறைகளை பின்பற்றுவதில் ஒரு உறுதியான வரைபடத்தை இதுவரை வழங்க தவறிவிட்டது.
பல நிறுவனங்கள், குறிப்பாக தொண்டு நிறுவனங்கள், இந்த பிரச்சினையைப் பற்றி பொது மக்களின் உணர்தலை மேம்படுத்த பணியாற்றி வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை மற்றும் பல சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள நம்ம ஊரு பவுண்டேஷனின் நிறுவனர் பி. நடராஜனிடம் வரவிருக்கும் பிளாஸ்டிக் தடையைச் சந்திக்க வேண்டிய யுக்திகள் மற்றும் நம்ம ஊரு பவுண்டேஷனின் ஈடுபாட்டினை பற்றி நாங்கள் பேசினோம்.
ஒவ்வொரு நாளும் சென்னையில் தயாரிக்கப்படும் 5000 டன் குப்பையில் எவ்வளவு பிளாஸ்டிக் இருக்கும்?
ஒவ்வொரு நாளும் சென்னையில் உருவாக்கப்படும் மொத்த கழிவுப் பொருட்களில் 1,250 டன் (25 சதவீதத்திற்கும்) ஒற்றை பயனீடு மற்றும் மறுபயனீட்டிற்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும். நமது தினசரி கழிவுகளில் 60 சதவிகிதம் கரிமமாகவும், 10 சதவிகிதம் மருத்துவ கழிவுப்பொருளாகவும், 5 சதவிகிதம் மின்னணு கழிவுகளும் ஆகும்.
வரவிருக்கும் தடை சுற்றுச்சூழலின் சுமையை குறைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இந்த தடை வரவேற்க்கப் பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகும். இத்தடை பிளாஸ்டிக்கினால் வரும் தீங்கை குடிமக்கள் மத்தியில் விவாதிக்க எளிதாக்குகிறது. பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், பிளாஸ்டிக் பற்றிய தீங்கை மக்கள் உணரவும் மாநில அரசு பல்நோக்கு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தொடக்கத்தில், அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் மீது 100% தடை விதிக்கப்பட வேண்டும்; இது மீதமுள்ள மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும். எந்தவொரு திட்டத்திலும், அமுலாக்கம் முக்கியமானது, அது நன்றாக இருந்தால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நமது பிளாஸ்டிக் மாசுபடுத்திய நீர் அமைப்புகளுக்கு இது ஒரு ஆசீர்வாதம்.
தமிழக அரசாங்கத்திற்கு பிளாஸ்டிக் தடை விதிக்கப்படுவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்க ஆறு மாதங்கள் இருந்தது. போதுமான அளவு செய்யப்பட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இந்த தடை அமுல்படுத்துவதற்கான பொதுவான சவால் மக்களின் கருத்தை மாற்றுவதாகும். மக்கள் பிளாஸ்டிக்கின் தீய விளைவுகள் பற்றி படித்தவர்களாக இருக்க வேண்டும், மேலும் எளிதாக கிடைக்கக்கூடிய மாற்று வழிகளை அறிந்துகொள்ள முற்படவேண்டும். பனை மற்றும் கரும்பு மூலம் தயாரிக்கப்படும் தட்டு மற்றும் குவளைகளை பயன்படுத்துதலை வேண்டும். உதாரணமாக, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை வாங்குவதை விட, ஒரு உலோக அல்லது கண்ணாடி பாட்டிலை தங்கள் பையில் எங்கும் எடுத்து செல்லலாம்.
முறையான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல மாநில அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தடையைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. உதாரணமாக, குடிமக்கள் ஏற்கனவே வைத்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை என்ன செய்ய வேண்டும்? வார்டு மட்டத்தில் ஒரு சேகரிப்பு இடம் இதற்கு இருக்குமா? சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுமா? அல்லது ஒரு குப்பை மேட்டில் வீசப்படுமா?
நீங்கள் குறிப்பிட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களை அகற்றும் முறை என்ன?
பனை மற்றும் கரும்பு பொருட்கள் பிளாஸ்டிக்கை விட அதிக விலை, ஆனால் அவை மாசு ஏற்படுத்தாத மற்றும் வெப்பம் தாங்கக்கூடிய பொருட்கள். அவை குப்பைத் மேட்டிற்கு அனுப்புவதில் பிரயோஜனமில்லை என்பதால், குடிமக்கள் தங்கள் வீட்டின் பின்புறத்தில் அவற்றை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். கிழித்து நனைத்த ஒரு வருடத்திற்குள் அவை மக்கி, உரமாக மாறும். பிளாஸ்டிக் நமது வாழ்நாள் முழுவதும் மக்காமலே இருக்கும், சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.
உடனடி பிளாஸ்டிக் தடையின் வெற்றியை உறுதி செய்வதில் நம்ம ஊரு பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களின் பங்கு என்ன?
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதே நம்ம ஊரு பவுண்டேஷன் போன்ற நிறுவனங்களின் முதல் பொறுப்பு. பிளாஸ்டிக் நீடித்து உழைக்கும், ஆனால் அதை அளவாக பயன்படுத்த வேண்டும் – இந்த விஷயம் குடிமக்களின் மனதில் பதிய வேண்டும். வாளிகள் மற்றும் குவளைகள் போன்ற மறுசுழற்சி செய்யும் பொருள்களைப் பயன்படுத்தலாம், ஆனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்க சந்தைக்கு ஏன் ஒரு துணி பையை எடுத்துச் செல்லக்கூடாது?
விழிப்புணர்வு முயற்சிகள், குப்பையினை பிரித்தல் மற்றும் பிளாஸ்டிக் மறுபயன்பாடு சம்பந்தமாக, குடிமக்களின் மனநிலையை மாற்றுவதற்கு உண்மையில் உதவுகின்றனவா?
ஆம். மாற்றமானது குடிமக்களுக்கு பிளாஸ்டிகிற்கு சரியான மாற்று பொருட்கள் மற்றும் வழிகளை எடுத்துரைத்தால்தான் ஏற்படும். குறைந்தபட்சம் 60 சதவீத மக்களின் மனநிலை உடனடியாக மாறினால், அவர்கள் நடைமுறை மாறும், பிறகு நாம் ஆறு மாதங்களில் 90% மக்களின் ஈடுபாட்டை எதிர்பார்க்கலாம்.
இந்த தடை ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை பாதிக்கும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்றுகள் என்ன?
சில இழப்புக்கள் இருக்கும், ஆனால் எதிர்கால தலைமுறையினருக்கு பூமியை காப்பாற்ற வேண்டுமெனில் இத்தகைய தடை தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களுக்கு தேவை தற்பொழுது அதிகரிக்கும். இதற்கு ஒரு பெரிய சந்தை உள்ளது. மத்திய அரசு சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முத்ரா போன்ற திட்டங்கள் மூலம் பிளாஸ்டிக்கிற்கான மாற்றுகளை உற்பத்தி செய்ய விரும்பு நபர்களுக்கு கடன் வழங்கியுள்ளது.
இப்போது பிளாஸ்டிக் தடை அமுலுக்கு வரவுள்ளதால் த நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்படைந்துவிட்டது என் கூரலாமா?
இல்லை, நாம் செல்ல ஒரு நீண்ட வழி உள்ளது. பாலிப்ரொப்பிலீன் (polypropylene) மற்றும் பல் அடுக்கு (multi-layer) பிளாஸ்டிக் ஆகியவற்றிற்கான மாற்று வழிமுறைகளை அரசாங்கம் வழங்கவில்லை, இது சிப்ஸ் மற்றும் பிற ஒத்த உணவுப் பொருட்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு கழிவுகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது. இத்தடை மட்டுமே போதியதல்ல. மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தல் மற்றும் குப்பை மேலாண்மை சீர்திருத்தம் ஆகியவை செய்யப்பட வேண்டும்.
சென்னையை ஒரு சுத்தமான நகரமாக்க மக்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
பிளாஸ்டிக் பொருத்தவரை – மறுத்தல், குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி – ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை மறுக்க வேண்டும், தேவையான பிளாஸ்டிக் பொருட்களை அளவாக பயன்படுத்த வேண்டும். மறு பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. மறுசுழற்சி இதன் இறுதியில் வரும். நகரின் மக்கள் பிளாஸ்டிக் நுகர்வில் பங்குதாரர்கள். நகரம் தூய்மையாக அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
மறுசுழ்ற்சி பற்றி பேசுகிறீர்கள், சென்னை மக்கள் இதனை எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?
சென்னையிலுள்ள ஒவ்வொரு தெரு மூலையிலும் இருக்கும் பழைய பொருட்கள் சேகரிக்கும் காயலாங்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் கொண்டு சேர்க்கலாம். அங்கு அவை மறுசுழற்சி செய்யப்படும். மாநகராட்சி ஊழியர்கள் சில இடங்களில் இப்பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பல இடங்களில் இச்சேவை கிடைக்கப் பெறவில்லை.
எனவே, நீங்கள் நகரத்தில் பார்க்கின்ற குப்பை மேலாண்மை நெருக்கடிக்கு மக்களை குற்றம் சொல்வீர்களா? அல்லது மாநகராட்சியை குற்றம் சொல்வீர்களா? அல்லது இருவரும் காரணமா?
சென்னை மாநகராட்சி ஒரு வருடத்திற்கு முன்னர் செயல்படுத்தப்பட்வேண்டிய குப்பை பிரித்தல் திட்டத்தை சீராக அமுல்படுத்தியிருந்தால் இத்தகைய சூழல் உருவாகியிருக்காது.
நிச்சயமாக, குடிமக்கள் குற்றவாளிகளாக உள்ளனர், ஏனெனில் அவர்களும் மாநகராட்சியின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது வேறு ஒருவருடைய பிரச்சனை அல்ல என்பதை உணர வேண்டும், அது இப்போது எல்லோருடைய பிரச்சனையாகும்.
[Translated by Aruna Natarajan]