For our English readers: Mandram is a global platform for like-minded people with interests in Tamil language and literature. It marks the coming together of people from different backgrounds to share their perspectives, journey and success stories for everyone to be inspired. Despite the Internet binding us all together, we still stay polarised. Mandram looks forward to be a TED in Tamil. The first ever Mandram was organised in Chennai which had speakers from varied backgrounds like science, art and culture sharing their perspectives. |
தமிழ் மரபை பறைசாற்றும் பொங்கல் திருநாள் ஒரு புறம் நகரத்தில் களைகட்ட, தமிழ் இலக்கியம், எழுத்து மேல் உண்டான ஆர்வம் காரணமாக ஒத்த கருத்துடைய சென்னைவாசிகள் மட்டுமின்றி பிற இடங்களிலிருந்தும் இணைந்த அழகான நிகழ்வு “மன்றம்”.
சமூக அக்கறை, சிந்தனையாளர்கள், சாதித்தவர்கள் என அறிவியல், கலை என பல்வேறு துறைகளிலிருந்தும் நற்சிந்தனைகளை விதைப்பதே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.
தாய்மை, அறிவியல், கலை, வரலாறு, சமூகம் என அரசியல் அல்லாத இலாப நோக்கில்லாத கருத்து பகிர்தல் முதல் “மன்றம்” நிகழ்வில் நடந்தேறியது.
முதலாவதாக தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார் திரைப்பட நடிகை ரேவதி . நல்ல எண்ணங்களும் நல்ல மனிதர்களும் இந்த உலகை நம்பிக்கையான பாதையில் செல்ல உத்வேகமளிக்கின்றனர் என்று தொடங்கிய அவர் ஒரு தாயாக தன் சிந்தனையில் பெரும் மாற்றத்தை உணர்வதாக கூறினார். நம்மைச் சுற்றி நடப்பதை பற்றி வேறுபட்ட ஆழமான சிந்தனைகள் வருவதோடு குழந்தைகளுக்காக சரியானதை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லுலகை விட்டுச் செல்லும் சிந்தனை மேலோங்குவதாகவும் பகிர்ந்து கொண்டார். ஒரு தாயாக நச்சில்லாத உணவை தன் குழந்தைக்கு தரும் பொருட்டு இயற்கையை ஒத்து வாழ ஆரம்பித்துள்ளதாகவும், அதே முக்கியத்துவத்தை நாம் அனைவரும் நல்லெண்ணங்களையும் இளம் தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும் என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து அன்றாட வாழ்வில் அறிவியல் பற்றி மிக சுவாரஸ்யமாக விளக்கினார் பாலாஜி சம்பத். குழந்தைகளுக்கு அறிவியலை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை கொண்டு விளக்கியது அனைவரின் கவனத்தையும் பெற்றது. அவர் கூறுகையில் “தேடல் என்பதே அறிவியல், பிறக்கும் பொழுது நாம் அனைவரும் விஞ்ஞானிகளே, சிறு வயதில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு பழகும் நாம் பள்ளி சென்றதும் கேள்வி ஞானத்தை தொலைத்து விடுகிறோம் என இன்றைய கல்வி முறையில் மாற்றத்தின் அவசியத்தை பற்றி பேசினார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்படுகின்ற ஆவணங்கள், நூல்களினின்றும் திரட்டப்படுகின்ற அறிவே வரலாறு.
தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் மட்டுமின்றி உலகளாவிய தமிழ் ஆர்வலர்களும் பயன்படுத்தி வருகின்ற ரோஜா சர் முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 1994இலிருந்து ஆவணப் பாதுகாப்பில் ஈடுபட்டுப் பணியாற்றி வருபவர் திரு. சுந்தர் கணேசன். ஆவணப்படுத்துதல் பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். நம் அரசாங்கத்தின் முக்கியத்துவ பட்டியலில் கடைசி நிலையில் தான் ஆவணப்படுத்துதல் உள்ளது. ஒரு புத்தகமோ, ஆவணமோ தொலைந்து போனால் அதை தேசிய அவமானமாக கருத வேண்டும் என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். வெறும் 12000 வெளியீடு மட்டுமே தமிழில் உள்ளதாக அவர் பகிர்ந்த போது அரங்கில் இருந்த அனைவரும் அதிர்ச்சியே மேலோங்கியது. ஒவ்வொரு ஆவணமும் புத்தகமும் நம் வரலாறு பேசும் என்பதால் இதன் முக்கியதுவத்தை அனைவருமே ஆமோதித்தனர்.
அரங்கிலேயே வயதில் மூத்தவரனாலும் தன் செயலால் சக்தியால் பல்மடங்கு இளைமயானவராக அனைவரின் அன்பையும் பெற்றார் காமாக்ஷி பாட்டி. சமூகத்தில் நமக்கான பங்கை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலுயுறுத்தி பேசினார். எந்த பிரச்சனையானாலும் அரசாங்கத்தை குறை மட்டுமே கூறாமல், அதிகாரிகள் குடிமக்களுக்கான வேலையை செய்யாதிருந்தால் தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுப் பெறுவதை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட சம்பவங்கள் அரங்கையே அதிரவைத்தன. இவருடன் இணைந்து பணியாற்றி வரும் திவாகர் பாபு பேசுகையில் “இருக்குமிடத்திலிருந்து நகர்ந்து போனேயோமானால் நகரம் நரகமாகி விடும்” என்றவர் மேலும் ஆக்கபூர்வமாக செயல்பட நமக்கெல்லாம் ஒரு பேரிடர் தேவைப்படுகிறது என்ற ஆதங்கத்தையும் முன்வைத்தார். நீர் தட்டுப்பாடு, மாசு, நெரிசல், சரியான கட்டமைப்பு இல்லாதது என பல சவால்களை சரிசெய்ய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இயங்கினோமேயானால் மாற்றம் நிச்சயம் நிகழும் என்றார்.
அடுத்ததாக பயணமும் பாடமும் என்ற தலைப்பில் தன் வாழ்கையின் திருப்புமுனையை பற்றி பகிர்ந்து கொண்டார் பரத நாட்டிய கலைஞர் காயத்ரி. சிறு வயது முதலே பரதம் பயின்று பல சர்வதேச மேடைகளை கண்ட காயத்ரிக்கு திருமணம் பின் மேடையேறக்கூடாது என்ற கட்டுப்பாடு பேரடியாக விழுந்தது. ஆனாலும் கனவுகளை சுமந்து வந்த அவர் தனது நாற்பதாவது வயதில் மீண்டும் மேடையேறியது மட்டுமல்லாமல் பலருக்கு இக்கலையையும் பயிற்றுவிக்கிறார். கனவுகளை விட்டுக்கொடுக்காமல் வாய்ப்புக்காக காத்திருந்து சரியான தருணத்தை கண்டு கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அழுத்தமான சூழலையும் நம் மன அழுத்ததையும் போக்கவல்லது இசை. டாக்ட்ர். சௌம்யா ஸனக் கர்நாடக இசையின் மூலம் உடல் மற்றும் மனது சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கான தீர்வுகள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். இசையே குணமாய் இந்த கலை மூலம் மாற்றுத் திறானிகளுக்கு சிகிச்சை முறைகள் குறித்து பகிர்ந்து கொண்ட சம்பவங்கள் நெகிழ்சியாக இருந்தது.
வலைபின்னல் நம் உலகத்தை குறுகியதாக்கினாலும் நாம் மனதளவில் அந்நியமாகவே வாழ்ந்து வருகிறோம். விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை நம் தாய்மொழியிலும் பகிரும் நோக்கோடு ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று கூடி தங்கள் சிந்தனைகளை பகிரும் தளமாக உருவெடுப்பதே மன்றம்.
டெட் (TED) போன்று தமிழில் ஒரு தளமாக இருக்க வேண்டும் என்றும் உலகளாவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பகிர்கிறார்கள் மன்றத்தின் முதல் பகிர்வை செயலாக்கிய குழுவினர்.
[Full Disclosure: மன்றத்தின் முதல் பகிர்வில் ஊடக பார்ட்னராக சிட்டிசன் மாட்டர்ஸ் பங்கேற்றது.]