Translated by Vadivu Mahendran
ஏப்ரல் 15 என்பது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மீன்பிடிப்புக்கு விதிக்கப்படும் 60 நாள் இழுவைத்தடையின் தொடக்கத்தைக் குறிக்கும் நாளாகும். இத்தடையானது இயந்திரவிசை கொண்ட படகுகளை வைத்துள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது. இத்தடையானது சென்னைக் கடற்கரையோரம் குறைந்த பட்ச படகுகளே கடலுக்குள் செல்வதை அனுமதிக்கும். ஆனால் இவ்வருடம் அப்படியல்ல!
15 ஆம் தேதி வங்காள விரிகுடா செயல்பாடுகளால் பரபரப்பாக இருந்தது. நாடு தழுவிய ஊரடங்கின் முதல் கட்டமான 21 நாள் அடைப்பிற்குப் பிறகு ஏராளமான மீனவர்கள் (விசைப்படகுகள் இன்னும் தடைசெய்யப்பட்ட நிலையில்தான் உள்ளன) கடலுக்குள் பயணம் செய்தனர். ஊரடங்கு மேலும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தபோதிலும் மீன்பிடித்தல் மற்றும் பிறகடல்சார் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கை இந்த மூன்று வார உள்ளிருப்பில் திவாலான ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொண்டு வந்தது.
“ஊரடங்கு சுனாமியை விட மோசமானது”
எஸ். எத்திராஜ் என்கிற 32 வயதான மீனவர், புதன் கிழமையன்று (ஏப்ரல் 15), கடுமையான நெறிமுறைகளைப் பேணியவாறு கடலில் இறங்கிய சில நபர்களில் ஒருவர். மீன்வளத்துறை, ராயபுரத்தில் உள்ள சென்னை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 140 மீனவர்களுக்கு டோக்கன் வழங்கியது. “மீன்பிடிப்பு மோசமாக இருந்தது”, என்று கூறும் எத்திராஜ், அது ஏழு பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால், குறைந்த பட்சம் தாம் கடலுக்குள் செல்ல முடிகிறது என்பதில் அவர் மகிழ்ச்சியடைவதுடன் அத்தியாவசியமானவற்றில் மீன் பிடித்தலை சேர்க்காததற்காக அரசின் மேல் அடக்கிவைத்திருந்த ஆத்திரம் பெருமளவு குறைந்திருக்கிறது.
“நாம் வாழ்ந்ததிலேயே இவைதான் மிகவும் கடினமான காலங்கள். நம் கைகள் கட்டப்பட்டிருப்பதைப் போல ஒரு உணர்விருக்கிறது. இந்த ஊரடங்கு சுனாமியை விட மோசமானது“, என்று எத்திராஜ் கூறுகிறார். “எல்லா கடைகளும் மூடப்பட்டிருப்பதால் எங்கள் நகைகளை அடகு வைக்கக்கூட முடியாது. குடும்பத்தை நடத்துவதற்குப் பணம் கடன் வாங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.“ இவர், 21 நாள் ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருட்களுக்காக மட்டும் ரூ.8000/- க்கும் அதிகமாக செலவழித்திருக்கிறார்.
ஏப்ரல் 14 வரையிலான 21 நாட்களில் நகரம் முழுவதும் உள்ள அனைத்து மீனவர்களிடமிருந்தும் எழும் ஒரு பொதுவான கேள்வி இதுதான்: பழங்கள் மற்றும் காய்கறிகள் அத்தியாவசியப் பொருட்கள் என்றால், ஏன் மீனும் இருக்கக்கூடாது? மத்திய அரசு மீன்பிடித்தல் மற்றும் கடல் மீன் வளர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காகத் தளர்வு அறிவித்தபோது இறுதியாக அவர்கள் கவலைகள் தீர்க்கப்பட்டன. சென்னை மாநகராட்சி, மீன்வளத்துறை மற்றும் நகர காவல்துறை ஆகிய மூன்று துறைகளும் இப்போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படகுகளை வாரத்திற்கு இரண்டு முறை கடலுக்குள் அனுமதிப்பதற்கு ஒரு முடிவை எடுத்துள்ளன.
“சென்னையில் உள்ள மீனவர்கள் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடலுக்குள் செல்லலாம். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கீழ் உள்ள மீன்வள கிராமங்களில் உள்ள 50% படகுகள் மாற்று நாட்களில் மீன் பிடிக்கலாம். அவர்கள் எப்போது செல்லலாம் என்பது குறித்து கிராமக் குழு ஒரு முடிவை எடுக்கிறது,“ என்று தென்னிந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் கே.பாரதி விளக்கினார்.
ஆனால் வாங்குபவர்கள் எங்கே?
மீன்வளத் துறையின் செய்திக்குறிப்பின் படி மீன் இறங்கும் மையங்கள் மற்றும் தளங்களில் இந்த ஊரடங்கின் போது மீன் ஏலம் விடுதல் அனுமதிக்கப்படாது. “கிராமக்குழு பல்வேறு மீன் வாங்குபவர்கள் அல்லது முகவர்களிடமிருந்து வெவ்வேறு வகையான மீன்களுக்கான விலைகூறலை பெறுமென்றும் மேலும் மீன்பிடிப்பை நேரடியாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்“, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனைத் தளங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜி.வேலன் கூறுகிறார். “சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதால், மீன்சந்தைகளை பொதுமக்களுக்குத் திறக்கும் ஆபத்தான முடிவை நாங்கள் எடுக்க முடியாது. “புதிதாக மீன்கள் கிடைக்கும் ஒரே இடம் என்பதால் வலையிலிருந்து மீன்
வாங்குவதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்“, என்கிறார் வேலன்.
ஆனால் அரசாங்கத்தின் திட்டமிடல் சரியாக சிந்தித்து உருவாக்கப்படவில்லை. மீனவர்கள் தங்களிடம் வாங்குபவர்கள் மற்றும் அவர்கள் வாங்க விரும்பும் மீன் வகைகளின் விவரங்களோ இல்லையென கூறுகிறார்கள். “மொத்த விற்பனை சந்தையில் விற்பது எங்களுக்கு ஒரு இழப்பைக் குறிப்பதாக இருந்தாலும் நாங்கள் விதிமுறைக்கு ஒப்புக்கொண்டோம். ஆனால் அன்றிலிருந்து மீன் வாங்குபவர்களைப் பற்றி மீன்வளத்துறையிடமிருந்து தகவல் எதுவும் இல்லை“, என்று சென்னை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த மீனவர் மணிகண்டன் எஸ், கூறினார்.
மிக மோசமான பாதிப்பு பெண்களுக்கே!
இந்த மீன்பிடி கிராமங்களில் உள்ள பெண்கள் குறிப்பாக மோசமாக பாதிக்கப்பட்டும் அத்துடன் சரிசெய்ய முடியாத நிதி இழப்பையும் எதிர்கொண்டுள்ளனர். மீனவர்கள் மீன்பிடிப்புடன் கரைக்கு வந்து சேர்ந்தவுடன், மீன்களை சுத்தம் செய்து விற்கும் பொறுப்பினை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் காலம் காலமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வியாபாரம் தற்காலிகமாக சில்லறை விற்பனையிலிருந்து மொத்த விற்பனைக்கு மாறியுள்ளதால் இந்தப் பெண்களுக்கு இந்த வியாபாரத்தில் இடமில்லை.
இந்த சொற்ப வருமானத்தைத் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்காக பயன்படுத்தும் விதவைப் பெண்கள் மற்றும் சிக்கலான சூழல் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் பிறரும் உள்ளனர். அத்தகைய ஒரு பெண்தான் 46 வயதான பார்வதி யேசுதாஸ். இந்த வேலையின் மூலம் மாதம் சுமார் ரூ.10,000 சம்பாதிக்கும் இவர், தன் குடும்பத்தின் ஒரே பொருளீட்டுநர் ஆவார். ஆனால் இனி முடியாது.
“ஒரு பெண் சம்பாதிக்கும்போது, அந்தப்பணம் விவேகத்துடன் செலவழிக்கப்படுகிறது. என் கணவர் ஒரு குடிகாரர், அவர் தனது மதுபான செலவுக்காக மட்டுமே சம்பாதிக்கிறார். எனக்கென்று ஒரு சொந்த வருமானம் இல்லாமல் , இக்காலகட்டத்தை எவ்வாறு கடப்பது என்று தெரியவில்லை“, என்றார் பார்வதி. அவரைப் போன்ற பலருக்கு மாநில அரசிடமிருந்து கிடைக்கும் ரேஷன் பொருட்கள் மட்டுமே அன்றாட உணவுக்கான ஆதாரமாகும்.
சில மீனவப் பெண்கள் தற்போது தங்கள் வீடுகளிலிருந்தவாறு கருவாடு விற்று அதிலிருந்து தங்களால் முடிந்த அளவு சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறார்கள். அவர்கள் அனைத்து சாத்தியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அத்துடன் சமூக விலகல் விதிமுறைகளையும் பேணுவதாகக் கூறுகிறார்கள்.
ஊரடங்கு, வருடாந்திர மீன்பிடித்தடை மற்றும் அரசாங்கத்தின் உதவி இல்லை – இந்த காரணிகள் எல்லாம் சேர்ந்து சமூகத்தை ஒரு கஷ்டமான சூழ்நிலையில் வைத்திருக்கின்றன. அரசாங்கம் வழக்கத்தை விட முன்னதாக இத்தடையை திரும்பப் பெறவேண்டும் அல்லது தங்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உதவியை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோருகின்றனர்.
இருப்பினும், இது பல வகையான மீன்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் தடையை நீக்குவது என்பது சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நடவடிக்கையாக இருக்காது. அதற்கு பதிலாக, மாநில அரசு உடனடி நடவடிக்கையாக மொத்த விற்பனைக்கான வாங்குபவர்கள் பற்றிய முறையான மற்றும் தொடர்ச்சியான தகவல்களை வழங்குவதன் மூலம் மீனவ சமூகத்திற்கு உதவி புரிந்து இந்த ஊரடங்குக் காலத்தை அவர்கள் எளிதில் கடக்க ஆதரவு நல்க வேண்டும்.
[Read the original article in English here.]