ஆம். இனி கொரோனாத் தடுப்பு என்பது ஒவ்வொரு தனிநபர் கைக்கும் வருகிறது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டியுள்ளது. அதுவும் நோய்த் தொற்று குறிப்பாக சென்னையில் அச்சமூட்டும் வகையில் உச்சநிலையைத் தொட்டு வரும் இந்த சூழலில் இக்கூற்று நம் மூளையை உசுப்புகிறது.
மே 25 இல் தொற்று எண்ணிக்கை 11,131 (இது தமிழகத்தின் எண்ணிக்கையான 17,082 இல் பாதிக்கும் மேல்). சென்னையில் மட்டும் தினமும் இப்போது 400, 500 என உயர்ந்து வருவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஊரடங்கு 4.0 இல் சென்னை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலத்துக்கான சில தளர்வுகளுடன் இயங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், நமது உயிரின் பாதுகாப்பு இதோ இப்போது நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன முடிவுகளிலும் தான் என்ற நிதர்சனம் நமக்கு மேலும் ஒரு புதிய விழிப்பைத் தருகிறது.
வைரஸின் பரவல் வேகமெடுக்கும் ஒரு அபாய தருணத்தில் வருகின்ற இந்தத் தளர்வின் பின்னணியிலிருக்கும் காரணம் என்னவாக இருக்கும்?
“வைரஸானது நம்முடன் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறது” என்ற உண்மையை தற்போதைய பிரதமரின் உரையிலும் நாம் அவதானித்தோம். சுகாதாரத் துறையும் இதை உறுதி செய்கிறது. ஏனெனில், இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை
அப்படியிருந்தும் தளர்த்துவதற்கான காரணம், தொடர்ந்து முடக்கினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி இதுவரை அனுபவித்திராத ஒரு பேரவலத்தைக் கொண்டுவரும் என்பது தான்.
கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் கொண்ட அறிவிப்புகள்
கடந்த ஏப்ரல் 7ம் தேதி பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஒவ்வொரு தனிநபரும் மற்றும் சமூகமும் தனது பழக்கவழக்கத்தில் ஏற்படுத்தும் தன்னியல்பான மாற்றத்தினால் மட்டுமே உலகையை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கொடுமையான கொரோனா நோய்த்தொற்றினை எதிர்கொள்ள முடியும் என கருத்துரைத்திருந்தார்.
அத்துடன் சமீபத்தில் வெளியான நம் மாநில சுகாதாரத்துறையின் அறிக்கையும் கூட மேற்கண்ட கருத்தினையே வலியுறுத்தியிருந்தது.
அதைத் தொடர்ந்த, மத்திய சுகாதார அமைச்சகத்தின் அழைப்பும் ஒவ்வொரு தனிநபரையும் நோக்கியதாய் இருக்கிறது. “நாம் வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லா விதிமுறைகளும் பழக்கவழக்கத்தில் மாற்றமாக அமுல்படுத்த வேண்டும். சவால் மிகப் பெரியது, எங்களுக்கு ஒவ்வொருவரது ஒத்துழைப்பும் தேவையானது” என்பதே அது.
இவைகள் வெறும் சம்பிரதாய அறிக்கையல்ல எப்போதும் போல் அலட்சியமாய் கடந்து செல்ல. ஒரு நாட்டினுடைய மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து அதனை சந்தித்தே ஆகவேண்டிய நிலையில் பல துறைகளின் நிபுணர்களும் அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டு அதன் படி அவர்கள் அளித்துள்ள ஆய்வுகளின் நிதர்சனமே இதனை சொல்ல உந்தியுள்ளதெனத் தெளிவாகத் தெரிகிறது.
தமிழக அரசானது தடுப்பு நடவடிக்கைகளின் விளைவுகளுக்கான அறிவியல் ஆதாரங்கள் பெற வேண்டி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திடம் கோரி பெற்ற ஆய்வு முடிவுகளின் படி, ஊரடங்கானது தொற்றுப் பரவலை மூன்று மடங்கு குறைத்துள்ளதாகவும், அதேவேளை, மே 17 க்கு அப்புறம் ஓரளவு இயங்க அனுமதித்து கூட்டம் கூடுவதில் உள்ள கட்டுப்பாடு, சுகாதார முன்னெச்சரிக்கை பழக்கங்கள் கடுமையா கடைபிடிக்கப்பட்டாலும் ஜூன் இறுதியில் கிட்டத்தட்ட 6 லட்சம் தொற்றாளர்கள் இருப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அலட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் தொற்று வரும் காலத்தில் கோடியைக் கடந்துவிடும் என்ற அச்சமூட்டும் உண்மையும் அந்த அறிக்கையில் காணப்படுகிறது.
இதிலிருந்து தெரிவதெல்லாம் நாமாகவே தன்னியல்பாக அலட்சியமின்றி உண்மை புரிந்து எடுக்கும் முயற்சிகளில் தான் வாழ்வு இருக்கிறது. தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படுமோ அதுவரை. ஆனாலும், நமது கடந்தகால அனுபவமானது , இன்னும் தன்னியல்பான சுயஒழுக்கத்தோடு இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
தனிநபர் என்பதை அரசு அதிகாரிகள், பொறுப்பாளர்கள், காவல்துறை,
மருத்துவத்துறை என்பதைத் தவிர்த்து பொதுமக்களுக்கு மட்டும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் ஊட்டுவது தோல்வியையே தருகிறது.
மாறாக யார் எந்த நிலையில் இருந்தாலும் தான் ஒரு தனிநபரே என ஒவ்வொருவரும் உணர வேண்டும். அவரும் தனது மற்றும் உறவுகள் மேலும் சுற்றத்தின் மீதான பாதுகாப்பை மனதில் கொண்டு இயங்க வேண்டும்.
அவ்வாறே, பயிற்றுவிப்போர் எவராயினும் அவர்கள் எல்லோரையும் தனிநபராகக் கையாண்டு அந்த தனிநபரின் மாற்றத்தில் தான் அனைவரது நலனும் அடங்கியுள்ளது என உணர்ந்து பயிற்றுவிப்புக்கு முயல வேண்டுமென்பதையே சூழல் தெளிவிக்கிறது.
காவல்துறையை வைத்து முழுமையான தனிமனித ஒழுக்கத்தை நிலைநாட்ட இயலவே இயலாது. ஏனெனில் காவல் துறையின் கண்கள் படாத இடத்திலும் தனிநபர் தனது ஒவ்வொரு செயலிலும் உலகத்தின். நலனுக்காகவும் தனது நலனுக்காகவும் மனசாட்சியுடனான ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தியே ஆகவேண்டிய நிலை வந்து விட்டது.
அதுவுமன்றி காவல்துறையோ, மருத்துவத்துறையோ, தூய்மைப்
பணித்துறையோ, வியாபாரிகளோ எல்லாமே தனிநபர்களைக் கொண்டதே. துரதிஷ்டவசமாக, அதிலுள்ள சில தனிநபர்கள் பொறுப்புணர்வும் பொதுநலனும் கொண்டிருக்காததால் ஏதோ ஓரிடத்தில் உள்நுழையும் வாசல் திறக்கப்பட்டு வைரஸ் உள்ளே புக வாய்ப்பு தரப்படுகிறது.
இதற்கு பல உதாரணங்கள் காணகிடைக்கிறது
-காவல்துறையில் சிலர் வெளியில் திரிவோரிடம், கடைக்காரர்களிடம் கையூட்டு பெற்று விதிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவது
-வியாபாரிகளில் சிலர் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடவடிக்கைகளுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக மட்டும் பெயருக்கு ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தது. – -மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கணக்கானோர் நெருக்கியடித்துக் கொண்டு தொற்று சம்பந்தமான பயம் சிறிதுமின்றியிருந்தது
சமூக விலகல் முறையாகப் பேணப்படுகிறதா?
அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் கூடும் இடங்களில் சமூக விலகல் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என்று பார்த்தால் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதை அறிய முடிகிறது.
முகப்பேர் பகுதியிலுள்ள ஒரு மளிகைக் கடையின் உரிமையாளர், தன் கடை வாடிக்கையாளர்களை வட்டத்திற்குள் நிற்கச் சொல்லியே ஓய்ந்து போவதாக அலுத்துக் கொள்கிறார்.
காய்கறி சந்தை இடமாற்றம் பலன் தருமா?
தொற்று பரப்பும் மையமாய் ஆன கோயம்பேடு மார்க்கெட் தற்போது திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. வியாபாரிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் தனி வாகனத்துக்கான செலவை தாங்க இயலாது பலர் சேர்ந்து செல்வதிலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லையெனில் அதுவும் ஆபத்து தான்.
தற்போது கடைகளின் வியாபார நேரம் அதிகரித்திருப்பதால் மக்கள் ஒரே சமயத்தில் கடையை முற்றுகையிட வேண்டிய அவசியமில்லாது கடையில் முன்பு போல் கூட்ட நெரிசலைக் காண முடிவதில்லை. இந்த ஏற்பாடு சமூக விலகலைக் கடைபிடிக்க ஏதுவாக இருந்தாலும் சில கடை உரிமையாளர்கள் தாங்கள் முழு நேரமும் கடையில் அமர்ந்திருக்க வேண்டியதால் சிரமம் காண்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், ஒவ்வொருவரும் தனக்கு சிரமங்கள் இருந்தாலும் இந்த உயிர்க்கொல்லித் தொற்றைத் தடுக்க ஒரு வாய்ப்பாக அமைகிறதே என்று நினைப்பதே இன்று ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பான மாற்றத்திற்கான அடையாளமாகும.
பட்டியலிடப்பட்டக் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிபந்தனையின் அடிப்படையில் இயங்கத் துவங்கியுள்ளன. ஒருவேளை இன்னும் சிறிதுகாலத்தில் பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்கவும் கூட செய்யலாம். எதுவாயினும், ஒவ்வொரு தனிநபரும் சூழ்நிலையின் தீவிரம உணர்ந்து பாதுகாப்பு விதிகளை மீறாமல் நடந்து கொள்வதில் தான் வாழ்க்கையின் சீரான ஓட்டம் இனி இருக்கப் போகிறது.
விதிமுறைக்குட்பட்டதே வாழ்க்கை
ஊரடங்கின் ஆரம்பத்தின் போது விதிகளுக்கடங்காது வெளியில் சுற்றியவர்களை, கண்காணிப்புப் பணியில் இருந்த ஒரு போக்குவரத்து காவலர் கைகூப்பி வேண்டிக்கொண்ட காணொலிக் காட்சி இன்றும் நம் கண் முன் நிற்கிறது.
ஒரு விதிமுறை என்பது மீறுவதற்கே எனும் மனப்பாங்கு ஆழ வேரூன்றியுள்ள ஒரு சமூகத்தில் அவரவர் கடமைகளைச் செய்வதற்கே பிறர் கைகூப்பி மன்றாடும் அவல நிலையைக் காண முடிந்தது.
மீண்டும் 12. 05. 2020 அன்று உரையாற்றிய பிரதமரும் வைரஸ் என்பது நம்முடன் நீண்டகாலம் இருக்கப் போவதால் முகக்கவசம் அணிவதும், கைகளைக் கழுவதும், சமூக இடைவெளியைப் பேணுவதும் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிட்டார். நமது வாழ்க்கை முறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே வந்ததோ இந்த வைரஸ் என்பது இன்று உலகின் கேள்வியாக மாறிவருகிறது. மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் பராமரிக்கத் தவறிய ஒழுங்கை இயற்கை தன் கையில் எடுத்திருக்கும் சாட்டையால் உலகின் ஒவ்வொரு மனிதனையும் கட்டுக்குள் கொண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. இறப்பின் பயம் உணர்த்தி இணங்க வைக்கிறதோ இயற்கை?
ஆம்! தனிநபரின் அக்கறைமிகுந்த தன்னியல்பான செயல்களால் தான்
இருக்கிறது உலகின் மீட்சி.