Translated by Sandhya Raju
பொய்த்து போன மழையினாலும் வெகுவாக குறைந்து வரும் நிலத்தடி நீராலும் கோடை காலம் வரும் முன்னரே தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். சென்னை குடிநீர் வாரியமமும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் தண்ணீர் விநியோகம் செய்யும் நிலையில் உள்ளது. சென்னையின் மேற்கு மற்றும் வடக்கு பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் ஏற்கனவே அவதி படுகின்றனர்.
இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க புது யுக்தியை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 2000-ம் ஆண்டின் மத்தியில் மழை நீர் சேகரிப்பு திட்டம் சென்னையில் செயல் படுத்தப்பட்டாலும், பொய்த்து போன பருவ மழையால் இந்த திட்டத்தின் பலனை உணர முடியாமல் போனது. உபயோகித்த தண்ணீரை மறுசுழற்சி செய்யும் முறை சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இந்த முறையால் நீரின் தேவையும் குறைகிறது. அதிக முதலீடு இல்லாமல் இந்த மறுசுழற்சி முறையை எளிதாக செயலாக்க முடியும் என்பதால், பெரும்பாலான மக்களால் இதை செயல்படுத்த முடியும்.
எத்தகைய தண்ணீரை மறுசுழற்சி செய்யலாம்?
குளித்ததும் வெளியேறும் தண்ணீர், பாத்திரம் கழுவிய தண்ணீர் மற்றும் துணி துவைத்த தண்ணீர் ஆகியவை பொதுவாக இதில் சேரும். கழிவறை தண்ணீர் இதில் சேராது.
சராசரியாக ஒரு வீட்டில் ஒரு நாளைக்கு நூற்றியிருபது லிட்டர் தண்ணீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் எழுபது சதவிகிதம் மறுசுழற்சி செய்ய முடியும். இதை முறையாக செய்தாலே தண்ணீர் தேவையை எளிதாக சமாளிக்கலாம்.
எங்கு உபயோகிக்கலாம்?
தோட்டதிற்கு தண்ணீர் பாய்ச்சவும், கழிவறை தண்ணீராகவோ அல்லது வண்டிகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை சமைக்கவோ குடிக்கவோ பயன்படுத்தக்கூடாது.
ஏன் மறுசுழற்சி செய்ய வேண்டும்?
மறுசுழற்சி செய்து தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவதால் நகரின் கழிவுநீர் அமைப்புக்கு செல்லும் கழிவுநீர் அளவு வெகுவாக குறையும். அடுத்து உங்களின் தண்ணீர் தேவையை குறைப்பதுடன் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையயையும் மாற்றும். தண்ணீர் பஞ்சத்தின் போது, குறைந்த அளவு தண்ணீர் மூலம் வீட்டின் தேவையை எளிதாக சமாளிக்கலாம். இதற்கெல்லாம் மேலாக மிக முக்கியமாக, நிலத்தடி நீரின் அளவை உயர்த்தும்.
“எங்கள் வீட்டில் மறுசுழற்சி தொடங்கியது முதல் நிறைய தண்ணீரை சேமித்து உள்ளோம். தோட்டத்தில் இந்த தண்ணீரை பயன்படுத்திகிறோம். தண்ணீருக்கான செலவு வெகுவாக குறைந்ததுடன் தண்ணீர் வீணாவதையும் தடுத்துள்ளோம். ” என்கிறார் நங்கநல்லூரில் வசிக்கும் சாந்தா. இவர் கடந்த இரண்டு வருடமாக தண்ணீரை மறுசுழற்சி செய்து வருகிறார்.
எப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும்?
மறுசுழற்சி முறையை பல்வேறு வகைகளில் மேற்கொள்ளலாம். சமையலறையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் கரிம பொருட்களும், குளியலறை மற்றும் துணி துவைப்பதிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து சோப்பின் மீதம் இருப்பதாலும், இந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தும் முன் வடிகட்டி செயல்முறை செய்வது அவசியம்.
வீட்டின் அளவிற்கு ஏற்றவாறு மறுசுழற்சி முறையை தேர்ந்தெடுக்கலாம். சமையலறை மற்றும் குளியலறையில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் டைவேர்ஷன் வால்வ் பொருத்துவது ஒரு வகை. நேனோ சொலுஷன் அல்லது ப்லீச் கலந்த் தண்ணீரை வடிகட்டி பின்னர் தண்ணீர் தொட்டிக்கு ஏற்றலாம். தொட்டியிலிருந்து இந்த தண்ணீரை கழிவறைக்கும் தோட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.
அடுக்கி மாடி குடியிருப்பு அல்லது தனி வீட்டில் நிறைய காலி இடம் இருந்தால், ப்லான்ட் வகை மூலம் மறுசுழற்சி செய்யலாம். நிலத்தில் குழி தோண்டி, வடிகட்டுதலுக்காக நுண்ணிய பிளாஸ்டிக் தாள்களை அடுக்காக அமைக்க வேண்டும். இதன் மேல் மண் மற்றும் சரளை கற்களை போட வேண்டும். தேவையான சூரிய ஒளியில் கல் வாழை போன்ற செடியை இந்த மண் மீது வளர்க்கலாம். பத்து முதல் பனிரெண்டு குடியிருப்புகளை கொண்ட அடுக்கு மாடி கட்டிடதிற்கு, இந்த ப்லான்ட் குழி பதினைந்து அடி நீளம் இருத்தல் வேண்டும்.
வெளியேறும் கழிவு நீர் இந்த ப்லான்ட் குழிக்கு அனுப்பப்படுகிறது. கரிம பொருட்களை செடிகள் எடுத்துக்கொள்கின்றன. மண் மற்றும் சரளை கற்களில் தண்ணீர் ஊடுருவி அடியில் சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை தொட்டியில் அல்லது கிணற்றுக்கு ஊற்றாக செலுத்தலாம்.
An illustration of the plant-based treatment facility in which filtered water is routed to a collection chamber. Source: The manual ‘Self-Reliance in Water‘ by Indukanth Ragade
ஆர்கானிக் சோப் உபயோகிப்பதன் மூலம் குறைவான மீதம் இருப்பதுடன் வடிகட்டிக்கும் உதவுகிறது.
எவ்வளவு செலவாகும்?
எந்த வகையான முறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொருத்து செலவு அமையும். “பத்தாயிரம் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றும் பத்து முதல் பன்னிரெண்டு குடியிருப்பு கொண்ட கட்டிடத்திற்கு மறுசுழற்சி முறையை அமைக்க மூன்று முதல் நான்கு லட்சம் வரை முதலீடு ஆகும்.” என்கிறார் இத்தகைய அலகுகளை அமைக்க உதவும் ரெய்ன்ஸ்டாக் நிறுவனத்தின் சக்திவேல்.
இதற்கு மாற்றாக, கழிவு நீரை ப்லீச் மூலம் நேராக சம்ப் தொட்டிக்கு செலுத்தும் வகையை அமைப்பதற்கு குறைவாகவே செலவாகும். ஆயிரம் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றும் வீட்டிற்கு ஒரே ஒரு முறை முதலீடாக இருபதாயிரம் ரூபாய் ஆகும். தினத்தேவைக்காக ப்லீச் மற்றும் நேனோ சொலுஷனுக்கு மட்டும் தேவைகேற்ப செலவாகும்.
பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவை வளங்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டம் போல் கழிவு நீர் மறுசுழற்சியையும் அரசாங்கம் கட்டாய செயல்முறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள முடியும்.
Read the original article in English here.