சமீப காலமாக சென்னையில், “மாடித்தோட்டம்“என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு கலையாக இருக்கிறது. ஆகவே, அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் தூண்டப்படுவதும் இயல்பே. ஏனெனில், அடுக்குமாடிக் கட்டிடங்களின் செறிவும், தண்ணீர்ப் பற்றாக்குறையும், வீசும் அனலும் இங்கு அவ்வாறிருப்பதாகும். அதற்கிடையிலும் குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் குறைந்த இடத்தில் எப்படி ஒரு பசுமை முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது நம் மூளையைக் குடையும் ஒன்று தானே.
உள்ளவாறே இந்த விஷயத்துக்குள் நாம் நுழைந்து அறிய முற்படும் போது ஒரு புதிய உலகிற்குள் புகுந்தது போல் ஓர் ஈரவுணர்வும் புத்துணர்ச்சியும் நம்மையும் தொற்றிக் கொண்டு விடமாட்டேனென்கிறது. இதைப் பற்றி அறிந்து கொள்வோர் அனைவரையும் நாமும் இப்படி ஒரு தோட்டம் அமைக்க வேண்டுமென தூண்டும் வண்ணம் அந்த அனுபவங்கள் நெகிழ்ச்சியாக உள்ளது.
அதுபோன்றே அதற்கான கட்டமைப்புகளும் பெரிய அளவில் விரிவடைந்து பிரமிப்பையூட்டுகிறது. மாடித்தோட்டத்திற்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும், அதற்கான பயிற்சியும் மட்டுமல்லாது அரசின் மானியமும் கிடைக்கும் அளவு இந்த விஷயம் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
வேலை வாய்ப்புத் தேடி நகரத்தை நோக்கி நகர்ந்து வரும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதன் காரணமாக அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அதிகரித்துள்ள சென்னையில் வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்க ஆர்வம் இருந்தும் அதற்கான இட வசதி இல்லாத காரணத்தால் மொட்டை மாடித் தோட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவைகளாக உள்ளன.
தோட்டம் அமைக்க இடம் இல்லையென புலம்புவதை விட்டு விட்டு கிடைக்கும் இடத்தில் தோட்டத்தை அமைத்துக் கொள்ளும் மனநிலையை சென்னைவாசிகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியதே. அத்துடன் சொட்டுநீர் அமைப்பிலும் தண்ணீரை ஆவியாக விடாது குறிப்பிட்ட பொருட்களைக் கையாண்டு எப்படி சிக்கனமாக இதனை நடைமுறைப்படுத்துவது என்றும் மரபு விதைகள் மூலம் விளைவிப்பது எவ்வாறு என்றும் முயற்சிகள் விரிவது ஆரோக்கியமான நகர்வாக உள்ளது.
மாடித்தோட்டம் உருவாகிய விதம்
ஆரம்பத்தில் வெறும் பூச்செடிகள் மற்றும் மூலிகைகளை மட்டும் கொண்டிருந்த இத் தோட்டங்கள் தற்போது காய்கனிகளை விளைவிக்கும் விவசாய நிலங்களாகவும் மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காய்கறிகளின் விலையேற்றம் மட்டுமல்லாது பூச்சிக்கொல்லியின் அதீத பயன்பாட்டினால் அவற்றின் நச்சுத்தன்மையும் இயற்கையான முறையில் விளையும் காய்கறிகளை நோக்கித் தள்ளியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
இம்மாதிரி உருவாக்கப்படும் மாடித்தோட்டங்கள் பொழுதுபோக்கு அம்சமாக கருதப்பட்டதைத் தாண்டி அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. நகர வளர்ச்சித் திட்டங்களால் மட்டுமல்லாது இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் மரங்கள் பெரிதளவும் குறைந்துள்ள இக்காலகட்டத்தில் நமது வீடுகளில் வெய்யிலின் தாக்கத்தை பெரிதளவு குறைக்க உதவுவது மொட்டை மாடித் தோட்டங்கள் உருவாக மற்றொரு காரணமாகும். அதுமட்டுமன்றி, இத்தோட்டங்களைப் பயிரிட்டு வளர்த்து பராமரிப்பவர்களின் மன அழுத்தம் குறைவதாகவும் தங்கள் கையால் விதைக்கப்பட்டு அது வளர்ந்து பலனளிப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுவதன் அடிப்படையில் மற்றவர்களும் அதில் தூண்டுதல் பெற்று இம்முயற்சி பெருகுகிறதெனலாம்.
இம்மாதிரியான மாடித்தோட்டங்களை அமைத்து அதன் மூலம் பயனடைந்து வரும் பல துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் மற்றவர்களும் கூறும் போது இது தமக்கு பெரும் ஆத்மதிருப்தியைத் தருவதாகவும் தங்கள் குடும்பத்திற்கு இயற்கையான காய்கனிகள் இதனால் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். சிலர் தனிநபர்களாகவும் இன்னும் சிலர் குடும்பமாக இணைந்தும் இதில் ஈடுபடுகின்றனர்.
மாடித்தோட்டத்தின் விளைச்சல்கள்
இங்கு என்னவெல்லாம் விளைகிறது என ஒருவர் முதன்முதலில் அறியும் போது அவருக்கு அது நம்பமுடியாததாகவே இருக்கும். ஆனால், அறுவடை செய்து காட்டும் போது நிதர்சனமான ஆச்சர்யமாகும்.
ஆம். பூக்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் என்று அத்தனையிலும், எவ்வளவு ரகங்கள், இவையெல்லாம் சென்னையிலும் விளையுமா என்று அதிசயத்தைக் கண்ட உணர்வே எல்லோரிடமும் எழுகிறது.
பொதுவாக வீட்டுத் தோட்டங்களில் விளைவிக்கப்படும் கத்தரி, வெண்டை, அவரை, பீன்ஸ். சுரைக்காய் , சுண்டைக்காய் போன்ற காய்கறிகளோடு குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் என்று நம்பப்படும் பீட்ரூட், கேரட், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, முட்டைகோஸ் போன்றவைகளும் விளைவிக்கப்படுகின்றன.
பழங்களும் அவ்வாறே, மா, வாழை, திராட்சை என்று மாடியிலும் இவை விளைகிறதே என்று மீண்டுமொரு ஆச்சர்யம் தருவதோடு கூடவே மாதுளை, சப்போட்டா, சீத்தா, கொய்யா, மினி ஆரஞ்சு, நெல்லி, நார்த்தங்காய் என அதன் பட்டியலும் நீள்கிறது.
கிழங்கு வகைகளில் சக்கரைவள்ளிக் கிழங்கு, சேப்பு, உருளை என விளைவித்து நம்மை மேலும் ஆச்சர்யப்படுத்துகின்றனர் இந்த மாடித்தோட்டக்காரர்கள்.
மேலும், மூலிகைகள் என்றால், கற்றாழை, கற்பூரவள்ளி, துளசி, குப்பைமேனி, இஞ்சி, பூண்டு, லெமன் கிராஸ், மஞ்சள் கிழங்கு, வெற்றிலை என்றும் இன்னும் காய்களில் சிறகு அவரை, புடலங்காய் என பல ரகங்கள் வரிசை கட்டுகின்றன.
அவ்வாறே விளையும் பூக்களின் வகைகள் அயல்நாட்டுப் பூக்கள் முதல் உள்நாட்டு பூக்கள் வரை பூத்துக் குலுங்கின்றன. இவைகள் அழகுக்காகவும் பூஜைக்காகவும் மருந்துக்காகவும் பயன்படுத்த விளைவிக்கப்படுவதோடு காய்கனிகள் விளைய முக்கியக் காரணியான தேனீக்கள் மற்றும் இதர பூச்சிகளை வரவேற்க வைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர் மாடித்தோட்டக்காரர்கள்.
தகவல், பயிற்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்
இதனை நடத்தி நன்கு அனுபவம் பெற்றவர்கள் ஒரு நிறுவனமாக அமைத்து அவ்வப்போது பயிற்சி நடத்துவதோடு தேவைப்படும் பொருட்களை விற்பனையும் செய்து வருகின்றனர். அத்துடன் அரசு வேளாண்மைத் துறையும் பயிற்சி வழங்கி வருகிறது.
இவ்வாறு, எந்தப் பருவத்தில் என்ன பயிரிடலாமெனவும், எது மரபு விதை, அது எங்கு கிடைக்கும், நாற்றுக்களாக வாங்குவதென்றால் எவ்வாறு பார்த்து வாங்க வேண்டுமெனவும், வளர்ப்புப் பை, மண் போன்றவை எப்படிப் பார்த்து வாங்க வேண்டுமென்றும் அதன் விலை எங்கு மலிவாக உள்ளது என்றும் வழிகாட்டுகின்றனர். இம்மாதிரியான பயனுள்ள தகவல்களை ‘தோட்டம் சிவா’ அனுபவரீதியாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இங்கு நாம் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒரு இடம் பல்லாவரம் சந்தை ஆகும். ஏனெனில் மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பதற்கான அனைத்து பொருட்களும் இங்கு தாராளமாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. இங்கு மண், உரம், விதை, நாற்று, வளர்ப்புப்பை, தண்ணீர் தெளிக்கும் வாளி, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் தெளிப்பான் என அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கிறது.
மாடித்தோட்டத்தின் பயன்கள்
முழுக்க முழுக்க இங்கு இயற்கையான வளர்ப்பு ஊக்கிகளும் பூச்சி விரட்டும் கரைசல்களும் தெளிக்கப்படுவதால் நச்சுத்தன்மையற்ற, ஆரோக்கியமாக விளையும், காய்கனிகள் கிடைக்கிறது. அத்துடன், பலவிதமான நோய்களுக்கும் வரும் முன் காக்கும் வகையில் மூலிகைகள் வீட்டின் மாடியிலேயே கிடைப்பதால் எங்கெங்கோ தேடி அலைய வேண்டிய அலைச்சல் குறைகிறது. தினமும் இவர்கள் இதனை சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியத்தை உணர்வதாகக் கூறுகின்றனர்
மாடித்தோட்டம் அமைக்கும் குடும்பத்தினர் அந்த வேலைகளில் பங்கேற்கும் போதும் விளைச்சலை அறுவடை செய்யும் போதும் மனநிறைவையும் இயற்கை சார்ந்த உணர்வினையும் பெறுகின்றனர். பிரபலம் ஒருவர் அளித்த ஒரு பேட்டியில் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் முன்பெல்லாம் காய்கறிகள் சாப்பிடுவது இல்லையென்றும் ஆனால், தற்போது தம் கண்முன்பாக விதையிட்டு வளர்த்து விளைவிக்கும் போது நாட்டத்துடன் சாப்பிடுகின்றனர் என்று கூறினார். இதனையே பலரும் பகிர்கின்றனர். பல காணொளிகளில் குழந்தைகள் இந்த வேலைகளில் மகிழ்ந்து ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. அதுவும் அறுவடை செய்யும் போது குழந்தைகள் அடையும் மகிழ்வுக்கு அளவில்லை.
சென்னையில் ஒரு பிரபல பள்ளி ஒன்றில் அழகானதொரு மாடித்தோட்டம் அரசு வேளாண் துறை உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கருத்துரைக்கும் போது, மாணவர்கள் தோட்டத்தைப் பார்வையிடவும் விரும்புவோர் வேலைகளில் பங்கெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்கள் தமக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை உணர வழிவகுப்பதாகவும் கூறுகின்றனர்.
மாடித்தோட்டம் அமைக்கும் முறை
பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும் பலதரப்பட்ட பயன்பாட்டாளர்களின் அனுபவங்களின் மூலமாகவும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த சில உபயோகமான தகவல்கள்:
- மாடித்தோட்டம் அமைப்பதற்கான முதல் தேவை ஆர்வம் அதற்கடுத்த படியாக பொறுமை. முதலில் ஒரு சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யலாம்.
- எளிய மண்தொட்டி, பானை அல்லது வீட்டிலுள்ள பழைய கொள்கலன்களைக் கூட பயிர் செய்ய நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது அதற்கான வளர்ப்புப் பைகளும் கிடைக்கின்றன.
- செம்மண், மண்புழு உரத்துடன் தேங்காய் நார் பொடி கலந்து விதைநிலத்தைத் தயார் செய்யலாம்.
- தரமான விதைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- விதைக்கப்படும் மண்ணில் போதிய அளவு சத்துகள் உள்ளதாக இருக்க வேண்டும்.
- ரசாயன உரத்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
- தழைக்கூளம் மற்றும் மண்புழு உரம் ஆகிய இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும்.
- சொட்டு நீர் பாசன முறை நீரை வீணாக்காது பயன்படுத்த உதவுகிறது.
சென்னை போன்ற தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள நகரங்களில் இத்தகைய மாடித் தோட்டங்கள் சாத்தியமா?
சென்னைக்கு மாடித்தோட்டங்கள் சாத்தியம் மட்டுமல்ல அவசியமும் கூட. குறைந்தளவு தண்ணீர் பயன்படுத்தி இத்தோட்டங்களை சிறப்பாகப் பராமரிக்க முடியும் என்கிறார்கள், மாடித் தோட்டக்காரர்கள். மாடித்தோட்டக்காரரும் பெருங்களத்தூர் மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் அனுஷியா அக்ரி புரொடக்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவருமான திருமதி. பாமா கணேசனைத் தொடர்பு கொண்ட போது, கடந்த சில வருடங்களில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக பணி ஓய்வு பெற்றவர்கள் இதில் அதிக அளவில் ஈடுபட்டு வருவதாகவும் அது மட்டுமின்றி, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களும் தோட்டம் அமைப்பதில் பெரும் ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
மக்களிடம் குறிப்பாக அடுத்த தலைமுறையினரிடம் இந்த ஆர்வம் ஏற்பட்டிருப்பது நிச்சயமாக ஒரு நல்ல மாற்றம் எனவும் இந்த உணர்வே சுற்றுச்சூழலை மேலும் மாசுபடாமல் பாதுகாக்கும் என நம்பிக்கை ஏற்படுவதாகவும் கூறினார்.
மேலும் சென்னை போன்ற நகரங்கள் எதிர்கொள்ளும் தண்ணீர்த் தட்டுப்பாடான சூழ்நிலையிலும் தோட்டம் வளர்க்கும் சாத்தியக் கூறுகளை அவர் கீழ்வருமாறு பகிர்ந்து கொண்டார்
சில எளிதாகப் பின்பற்றக் கூடிய வழிமுறைகள்:
- தேங்காய் நார் பொடியை மண்ணில் கலப்பது ஒரு சிறந்த வழிமுறையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது தண்ணீரைத் தக்கவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
- ஜூலை மாதம் தான் எல்லா விதமான காய்கறிகளையும் விதைப்பதற்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.
- தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை விதைக்க நவம்பர் மாதம் ஏற்றது.
- அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளைக் கழுவும் நீர், கைகழுவும் நீர் போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் சேமித்து தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம்.
- மேற்சொன்ன முறைகளில் ஒரு நாளைக்குக் குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் வரைக்கும் சேமிக்க இயலும்.
- செடிகளுக்கு நீர் ஊற்ற பூவாளி மற்றும் தெளிப்பான் போத்தல்களைப் பயன்படுத்துதல் நல்லது.
நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நகர அமைப்பில் நாம் முதலில் இழப்பது இயற்கையின் கொடையான மரங்களைத்தான். அதனால், வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க நமது வீடுகளைப் பசுமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்த மொட்டை மாடித் தோட்டம்.
அது மட்டுமின்றி, காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதற்கும், சிறிய நடைபயிற்சி மற்றும் இளைப்பாறுவதற்கு ஏதுவான ஒரு இயற்கை சூழலை நமது வீட்டு மாடியில் நாமே உருவாக்குகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்சிக்கு அளவே இல்லை, அல்லவா? கூடவே, இயற்கையான மூலிகைகள் மற்றும் காய்கனிகளும் கிடைக்கிறதென்றால் அது பன்முனைப் பயனன்றோ?