சென்னையில் கொரோனா தோற்றால் மாய்ந்த மருத்துவர்களின் உடல்களை புதைக்க மற்றும் எரிக்க விடாது செய்த மக்களின் மூர்க்கத்தனம் தொடர்ந்து இருமுறை நடந்தேறியதானது சமீபத்தில் எல்லோரின் மனதிலும் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியதும், அது பரபரப்பான செய்தியாகி அரசு நேரடியாக தலையிட்டு அதற்காக அவசர சட்டமியற்றும் அளவிற்கு சென்றதும் அனைவரும் அறிந்ததே.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும் தற்போதைய சூழ்நிலையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் சேவைச் செயல்பாட்டின் முன்னணியிலிருந்து தம் உயிரைப் பணயம் வைத்து தம் சக மனித உயிர்களைக் காக்கும் அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிமக்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளின் ஊரடங்கு விதிகளுக்குட்பட்டு வீட்டுக்குள்ளேயே இருக்க, உயிர்காக்கும் உன்னத களத்தில் உணவு, உறக்கமின்றி, காலநேரம் குறித்த கவலையின்றி, தங்கள் குடும்பத்தினர் குறிப்பாக குழந்தைகளிடம் பேசக்கூட வாய்ப்பின்றி, கடமையே கண்ணாகக் களமிறங்கி இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மகத்தானப் பணியில் ஈடுபட்டு உலக அளவில் 200 க்கும் அதிகமானோர் தங்கள் உயிரையே தந்துள்ளனர். இப்படிப்பட்ட இவர்களுக்கு பொதுமக்களின் பிரதியுபகாரம் இது தானா என்ற வேதனையே இந்த சம்பவங்களையொட்டி எங்கும் எதிரொலித்தது.
மனதை வலிக்கச் செய்த சம்பவங்களின் பின்னணி
இத்தனைக்கும் கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை உலக சுகாதார மையம் கூறியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை அரசின் சுகாதாரத்துறை அப்படியே கடைபிடித்து பாதுகாப்பை உறுதி செய்திருந்தும், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் முன்னிலையில் தான் இந்த மிகவும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நடந்த இரண்டாவது சம்பவத்தில் அவர்களே கொடூரமாகத் தாக்கப்பட்டும் உள்ளனர்.
ஏப்ரல் 14ம் தேதி, பணியிலிருக்கும்போது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரழந்த, ஆந்திரப்பிரதேச நெல்லூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடன் உடலை அம்பத்தூர் புறநகரில் உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டு வந்தபோது அப்பகுதி மக்கள் அதற்கு அனுமதிக்க மறுத்தது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது என்றால் அதையும் மிஞ்சியதாக இருந்தது ஏப்ரல் 20ம் தேதி நடந்த கொடும் நிகழ்வு.
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக கீழ்பாக்கம் இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற போது எப்படியோ தகவலறிந்த 50 க்கும் மேற்பட்ட கூட்டத்தினர் கல் கம்பு கொண்டு சுகாதாரப் பணியாளர்கள் உட்பட எல்லோரையும் கொலைவெறி தாக்குதல் நடத்தி விரட்ட இன்னொரு இடுகாட்டில் அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் கையாலேயே குழிதோண்டி மண் தள்ளி புதைக்க வேண்டியதாயிற்று.
இதற்கெல்லாம் காரணம் மக்களின் அறியாமையே என்றாலும் போதிய அளவில் இது குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்காதது மிகப்பெரும் குறையாகத் தெரியவே செய்கிறது. ஏனெனில், இவர்களது பயம் புதைக்கப்பட்ட உடல்களிலிருந்து வைரஸ் கசிந்து குடிநீரில் கலந்து ஊரெங்கும் கொரோனா பரவும் என்பதே. உலகெங்கும் தலைவித்தாடும் கோவிட்-19ன் கோர உருவை தொலைக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் பார்த்து பார்த்து ஏற்பட்ட பீதியின் விளைவாகவும் இது நிகழ்ந்திருக்கலாம்.
இதற்கு முன்பு மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை மரியாதை செய்யும் விதமாக கைகளைத் தட்டி நன்றி கூறியவர்களே இவ்வாறு மாறியது உயிர்பயத்திலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
ஏனென்றால், வேறுநாடுகளில் கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாது அச்சத்தில் ஆங்காங்கே வீசி செல்வதான காட்சிகளை ஊடகங்களில் காண முடிந்தது. இந்த சூழலில் அதைக் கண்ட நம் மக்களிடம் நிச்சயம் தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதை கணித்து முன்கூட்டியே அதைப் போக்க சரியான தகவல்களை கொண்டு சேர்த்திருந்தால் இத்தகைய சோக சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது.
எனவே, தற்போதைய அவசரத் தேவை கொரோனா சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ள எடுத்துச் செல்ல வேண்டியதே.
உலக சுகாதார மையத்தின் வழிகாட்டு நெறிகள்
தற்போது, உலக சுகாதார மையம் கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைக்கும் முன் மேற்கொள்ள வேண்டி கூறிய வழிகாட்டு நெறிப்படி முறையாக கிருமிநாசினி தெளித்து, இரண்டு அடுக்கு பிளாஸ்டிக் சுற்றுக்குப் பின் காற்றே புகாத விசேஷ பிளாஸ்டிக் உறையில் மூடி நேரடியாக கைகளில் அல்லாது கையாண்டு புதைக்கவோ எரிக்கவோ செய்யலாமென்பதை தமிழக அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அவ்வாறே கவனத்துடன் பரவலுக்கான வாய்ப்பில்லாததை உறுதி செய்வதை அரசு தரப்பில் சம்பவங்களுக்கு அப்புறம் விளக்கியுள்ளார்கள்.
அத்துடன் புதைப்பதெனில் குறைந்தது எட்டு அடி ஆழமுள்ள குழி தோண்டி சுண்ணாம்புப் பொடி தூவி புதைக்கப்படுகிறது என்றும் எரிப்பதென்றால் 1000 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் எரியூட்டப்படுகிறது என்றும், இதனால் ஒரு சதவீதவீதம் கூட காற்றிலோ தரையிலோ வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு 200 சதவீதம் இல்லையென்றும் மாநகராட்சி ஆணையர் உறுதி கூறுகிறார்.
தமிழக அரசின் பாதுகாப்பு மற்றும் சலுகைக்கான அறிவிப்புகளும் அவசரச் சட்டமும்
அத்துடன் தமிழக முதல்வர் பொதுமக்களுக்காக எழுதியுள்ள செய்திக் குறிப்பில் மனிதர்களின் வாழ்வுக்கே சவால் விட்டிருக்கும் நோய்த் தொற்றுடன் நமக்காக தன்னலம் மறந்து போராடும் மருத்துவர்கள் என்றும் மரியாதை செய்யப்பட வேண்டியவர்கள், இறைவனுக்கு நிகரானவர்கள் அவர்களின் இறுதி சடங்கின் போது நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவங்கள் தமக்கு மிகுந்த வேதனையும் வருத்தமும் தருவதாகவும் தன்னலம் கருதாது மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் துறக்கும் இவர்களை தகுந்த மரியாதை தந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே போல், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள உள்ளதென்றும் மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அரசானது அவர்களின் பக்கம் நிற்கும் என்றும் அவர் உறுதி கூறினார்.
அதன்படியே கொரோனா நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து இடையூறு செய்தார்களேயானால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.
அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது “ இந்த அவசரச் சட்டத்தின் படி அரசால் அறிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் / தகனம் செய்வதைத் தடுப்பதும் தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் , 1939, பிரிவு- 74ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்”
அதேபோன்று சென்னை பெருநகர காவல் ஆணையரும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறியுள்ளார்.
என்ன தான் கடுமையான சட்டங்களைப் போட்டு பயத்தின் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்தாலும் மக்கள் புரிந்துணர்வின் அடிப்படையில் தாமாகவே முதிர்ச்சியுடன் நடந்து கொள்வதே இயல்பான சமுதாய மேம்பாடு ஆகும். அதற்காக ஊடகங்கள் உட்பட்டு அனைவரும் சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முயல வேண்டியது தார்மீகக் கடமையாகிறது.
சமூக ஊடகங்களில் மருத்துவர்களின் தியாகபூர்வமான வலிநிறைந்த பணிகளை உணரவைக்கும் காணொளிகளும் கருத்துரைகளும் தற்போது நிறைந்து காணப்படுவது மகிழ்ச்சிக்குறியதாகும். அதுபோன்றே தமிழக அரசு களத்தில் நின்று பணியாற்றுவோரின் பாதுகாப்புக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதும் ஆறுதலைத் தருகிறது.
அரசு அறிவிப்பின் படி கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ துறை மற்றும் பல்வேறு பணியாளர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகினால் அரசே சிகிச்சைக்கான முழுசெலவையும் ஏற்கும் எனவும் உயிரிழப்பு ஏற்பட்டால் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவியோடு அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவோர்களில் எவருக்கேனும் தொற்று ஏற்பட்டால் மருத்துவத் துறையின் நெறிமுறைகளுக்கேற்ப அந்தக் குறிப்பிட்ட பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் முழுமையாக நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் பின் மீண்டும் அப்பணியில் தொடர ஏற்பாடு செய்யப்படுமென கூறியுள்ளது.
அரசானது உயிர் காக்கும் உன்னதப் பணியில் உள்ளோரை உரிய மரியாதை தந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. நாமும் தனிநபராக ஊடகமாக தேவையான விழிப்புணர்வை பொறுப்புடன் கொண்டு சேர்ப்போம்.