இனி, இந்த பரபரப்பான சென்னை வாழ்விலும் குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பரம் முகம் பார்த்து பேச நேரம் ஒதுக்கப் போகிறார்கள்.
இனி, படோபட வெளியுணவை இயன்றவரைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவையே குடும்பங்களில் சமைத்து உண்ணப் போகிறார்கள்.
இனி, குடும்பம் மற்றும் சமூக விழாக்கள் அளவுக்கதிக ஆடம்பரமின்றி பொருள்வளம் வீணாக்கப்படாமல் நடைபெறப்போகிறது.
இனி, தனிநபர் ஒவ்வொருவரும் ஓர் ஒழுங்கு மற்றும் புறசுத்தத்தை தன்னளவிலும் சமூகத்தொடர்பிலும் கடைபிடிப்பார்.
இனி, கூட்டம் கூடும் இடங்களில் மக்கள் முண்டியடிக்காமல் தன் முறைக்காக பொறுமையாக வரிசையில் காத்திருக்கப் போகிறார்கள்.
இனி, எல்லோரும் உள்ளுணர்வுடன் வாய் மூடி தான் இருமவோ தும்மவோ போகிறார்கள்.
இனி, சென்னை வீதிகளில், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் யாரும் எச்சில், சளி உமிழ மாட்டார்கள்
இனி, ரூபாய் நோட்டுகளும் பேருந்து பயணச்சீட்டுகளும் எச்சில் தொட்டு தரப்படாது
இனி, பொதுக்கழிவறைகளை அசூசையோ அச்சமோ இல்லாது நாம் பயன்படுத்தும் அளவிற்கு சுத்தமாக இருக்கப் போகிறது
இனி, ஒவ்வொருவரும் தனது நல்வாழ்வு மற்றவரின் நல்வாழ்வில் தங்கியுள்ளதென்ற எண்ணம் கொண்டிருப்பார்கள்
இனி, வழிபாடு கூட எளிய முறையில் இதயசுத்தியை பிரதானமாக வைத்து நடைபெறப் போகிறது.
இனி, யாவரும் மற்றவரின் வலி, வறுமை, உடல்நலன் குறித்து புரிந்து கொண்டிருப்பார்கள்
இனி, நல்வாழ்விற்கே பொதுவிதிகள் என்றுணர்ந்து பொறுப்புடன் கடைபிடிக்கப் போகிறார்கள்
இனி, மது அருந்துவோர் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருக்கும்.
இதுமட்டுமல்ல இன்னும் பல நம்பமுடியாத அதிசய மாற்றங்கள் சமூகத்தில் நிகழ சாதகமான வாய்ப்புள்ளது. இதனையே ஊரடங்கின் போது ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றங்கள் ஊர்ஜிதமாக்குகிறது.
ஆனால் இந்நிலை தொடர்வது, ஒருவர் விதிகளைக் கடைபிடிப்பதும், நுகர்வுப் பொறியில் சிக்காது எளிமையைக் கடைபிடிப்பதும் ஆரோக்கியமான சமூக வாழ்விற்கான ஆதாரம் என உணர்ந்து செயல்பட்டால்தான் சாத்தியமாகும்.
மாறாக இவ்வளவு நாள் அடைக்கப்பட்டிருந்தோம் இனி இழந்ததற்கும் சேர்த்து ஈடுகட்டலாம் என்று இறங்கினால் அது மிகப்பெரிய அவலத்தையும் பாதிப்புகளையுமே ஏற்படுத்தும். ஏனெனில், தொற்றுடன் வாழ்ந்தாக வேண்டிய சுகாதார நெருக்கடியுடன் பொருளாதார நெருக்கடியும் இதுவரை காணாத அளவு இருக்கப் போகிறது
ஊரடங்கு நம்மை எவ்வாறு உருபெறச் செய்துள்ளது
கடந்த இரண்டு மாத காலத்தில் நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சமாக விளங்கிய பல விஷயங்கள் தற்போது நம்மை விட்டு விலகி வெகுதூரம் சென்றிருப்பதும் அதனால் பெரிதாக எந்தவித பாதிப்பும் நமக்கு இல்லையென்பதும் நமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லையா?
முழுமையாகக் கடைபிடிக்க முடியாது என்று நினைத்திருந்த விதிமுறைகள் பல முயன்று பின்பற்றப்பட்டு இருக்கின்றன என்பதும் பெரும் வியப்புக்குரியதே.
சில விஷயங்கள் இல்லாமல் நம்மால் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது என்றிருந்த ஒரு அனுமானம் தற்போது தவிடுபொடியாகி விட்டதை நாம் உணர்கிறோம்.
அப்படியானால், நம் வாழ்வோடு ஒன்றிப் போய்விட்ட சில பொருள்நுகர்வு அல்லாது நாம் மகிழ்ச்சியாக வாழ வேறு பல மதிப்பார்ந்த விஷயங்கள் உள்ளன என்ற உண்மைக்கு அது நமது கண்களைத் திறந்துள்ளது எனலாமல்லவா ?
வாரம் ஒரு நாள் குடும்பத்தோடு வெளியில் செல்வது என்பது ஒரு தவிர்க்க முடியாத விஷயமாக இருந்த நிலை மாறி தற்போது வீட்டிற்குள்ளேயே நாம் உபயோகமாகப் பொழுதைக் கழிக்க ஆரம்பித்துள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.
ஆரம்பத்தில் பொழுதைப் போக்க பெரும் உதவியாய் இருந்த கைபேசியும், கணினியும் ஒரு கட்டத்தில் சலிப்பைத் தர, குடும்பத்தினரின் முகம் பார்த்துப் பழங்கதைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறதாகவும், குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து படம் பார்க்கவும், விளையாடவும் ஒரு வாய்ப்பாக இந்த ஊரடங்குக் காலம் இருக்கிறதென்பதையும் சமூகம் உணர்வதைக் காண முடிகிறது.
குழந்தைகளை சலிப்படையாமல் பார்த்துக் கொள்வதே அரும்பணியாக ஆகிப்போனதாகக் கூறுகிறார்கள், அம்மாக்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் அத்தோடு கற்றலுக்கு உகந்ததான விளையாட்டு மற்றும் வேறு சில நடவடிக்கைகளை யோசித்து அவற்றை அட்டவணையிட்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடிந்தால் அதுவே ஆகப்பெரிய சாதனை என்கிறார்கள்.
வாராந்திர வெளிப்பயணங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்வது, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்வது போன்ற நடவடிக்கைகளன்றி வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்.
இந்நிலை அயர்வை ஏற்படுத்துவதாக இருந்தாலும் நம்மை அதைப் பயன்பாட்டைக் கொண்டதாக மாற்றுவதைப் பற்றி சிந்திக்க வைக்கும் பரிணாமத்தின் அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்த்தியிருப்பதும் உண்மை.
வழிபாட்டிற்கு தேவை மனமென்னும் கோயில் தானே என்ற அத்தியாவசியம் விளங்கும் வகையில் வழிபாட்டில்லங்கள் மூடப்பட்டுள்ளதால் இல்லங்களில் இதயங்களில் இறைவனை வழிபடும் மாற்று சிந்தனையும் ஏற்பட்டுள்ளது
மொத்தத்தில், அத்தியாவசியம் என்பதன் ஆழ்ந்த அர்த்தத்தை நமக்கு இந்த ஊரடங்கு உணர்த்தியது என்றால் அது எவ்விதத்திலும் மறுக்கப்படக் கூடியதில்லை.
அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் விஷயங்களே அத்தியாவசியம் என்றும் அவற்றின் இருப்பை உறுதி செய்ய முனைந்ததும் நம்மால் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்நிலை இன்றும் தொடர்கிறது.
உணவு மற்றும் மருந்துகள் அத்தியாவசியப் பட்டியலில் முதலிடம் பிடிக்க, மற்ற அனைத்தும் பின்தள்ளப்பட்டன. அதுவரையில் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே இயலாது என்றிருந்த சில பொருட்கள் அல்லது விஷயங்களை மக்களால் வெகு இலகுவாகத் தவிர்க்க முடிந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகை பானங்களும், பழங்களும் காய்கறியும் இப்போது குடும்பத்தின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. நாக்குக்குப் பிடிக்கவில்லையென்றிருந்த நல்லவைகளின் சுவையும் பயனும் கண்டுபிடிக்கப்பட்டு இளையவர்களும் ஏற்றுக் கொண்டவையாயிற்று
சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். மகிழ்ச்சிக்கும் மன ஆறுதலுக்குமான அத்தியாவசியத் தேவை மதுவல்ல குடும்பத்தில் பரஸ்பர உறவும் அன்பு பாராட்டுவதில் அநுபவிக்கும் மகிழ்ச்சியும் ஆகும் என்பதை இந்த நாட்களில் இவர்கள் உணர்ந்ததன் அடையாளமே இது.
அத்துடன் ஊரடங்கு என்பது ஒரு நாளில் முடிவடையாமல் நாள்கணக்கில், வாரக்கணக்கில் நீடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தேவைகள் குறித்து ஒரு திட்டமிடலையும் மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அத்துடன் பொருட்களை சிக்கனமாகக் கையாளவும் கற்றுக் கொண்டதாகவும் சில இல்லத்தரசிகள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு சிலரோ இந்த உள்ளிருப்புக் காலத்தை வேலைப் பளு காரணமாக நீண்ட நாட்களாகத் தொடர்பு கொள்ளாமல் விடுபட்டிருந்த நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் உரையாடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகின்றனர். இதன் மூலம் நட்பும் பந்தமும் வாழ்வின் அத்தியாவசியத்தில் அடங்குவதை மனங்கள் ஒப்புக் கொள்வதாகிறது.
தற்போது குடும்பம் மற்றும் சமூக விழாக்கள் மிக மிக எளிமையாக குறைந்த நபர்களைக் கொண்டு ஆனால், மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடைபெறுகிறது. தனது அந்தஸ்த்தை காட்ட வேண்டுமென்று பலர் பணத்தை அள்ளி இரைத்து வீணாக்கிய முந்தையக் காட்சி இல்லாது கணிசமானோர் கருணையுடன் சகமனிதர்களின் தேவைகளுக்கு வழங்குவதைக் காணமுடிகிறது. இங்கும் அத்தியாவசியம் எதுவென அறியப்படுகிறது
சர்வதேச பரவல் நமக்குக் கற்றுத் தந்தது என்ன?
மனித வரலாற்றில் எந்தவொரு பேரிடர் நிகழும்போதும் அதனை எதிர்கொண்டு, அதிலிருந்து மேலும் கூடுதல் பலத்துடனும் முதிர்ச்சியுடனும் மனிதகுலம் மீண்டு வந்திருக்கிறது என்பதற்கு அது குறித்த பதிவுகளே சாட்சி.
அதுபோல, இந்த நோய்த்தொற்று மனித சமூகத்தை கற்றலின் அடுத்தத் தளத்தை நோக்கி நகர்த்தி வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அதை மனித முதிர்ச்சி நிலையின் அடுத்த கட்டமாகக் கருதி அதன் தேவைகளுக்கேற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டோமானால் நமது பரிணாமத்தின் அடுத்த நிலையை அடைவோம் என்பதும் திண்ணமாகத் தெரிகிறது.
மாறாக, இதைப் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமல் இந்த சூழ்நிலையின் தேவையை அலட்சியத்துடன் அணுகினால், இயற்கையானது உலகை மறுசீரமைக்க எடுத்திருக்கும் முயற்சியில் மனிதகுலம் பேரழிவினை சந்திக்க நேரும் என்பதும் திண்ணமே.
இல்லையேல் உலகம் அதன் பூரணத்துவத்தை அடைய மனிதனுக்கு இதைவிட பெரிய நெருக்கடிகளைக் கொடுத்து அதனை எய்திவிடுமென நம்பத் தோன்றுகிறது. ஏனெனில் நாம் அத்தனை வலிய ஒரு வடிவமைப்பிற்குள் சிறிய துகள்களாக இருக்கிறோம். இதனில் இல்லையெனில் இன்னும் பல பிரளயங்களை வரவேற்கப் போகிறதா மனித சமூகம்?