குடும்பத்தார்கள் வீட்டில் இருக்க வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவதுதான் பெண்களின் பொதுவான மனநிலையென உலகத்தால் பார்க்கப்படுகிறது.
அவ்வாறிருக்க, தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையான இந்த ஊரடங்கினால் முழுநாளும், முழுக்குடும்பமும் ஒரு வீட்டுக்குள் முடங்கிய நிலையில், தேநீர், சிற்றுண்டி, உணவு, மருந்து, இத்யாதி என ஒவ்வொருவருக்கும் வேளா வேளைக்கு தேவைப்படுகின்ற சூழ்நிலையிலும், அவர்களின் மனநிலை அப்படியே தானிருக்குமா அல்லது சலிப்பு மேலிட்டிருக்குமா? அல்லது இந்த யதார்த்தமானது இது சார்பான வேறொரு கண்ணோட்டத்தைத் தந்திருக்குமா?
கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத ஒரு நிலைமாற்றத்திற்குள் உட்பட்டிருப்பது நாம் மட்டுமல்ல முழு உலகும் தான் என அறிந்து மனங்கள் அதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாலும், உண்மைகளானது ஒவ்வொருவரின் முன்னால் நின்று முகத்தில் அறைவதால் முதிர்ச்சியும் முரண்பாடும் சேர்ந்தே பிரசவமாகின்றதென பெண்கள் பலரது அனுபவங்களைக் கேட்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த வழக்கத்துக்கு மாறான சூழல் வாழ்க்கையில் இதுவரை படிக்காமல் விட்ட பக்கங்களை நமக்கு பாடம் எடுக்கின்றதோ என்கிற குரலையும் ஆங்காங்கே கேட்க முடிகின்றது
பொதுவாகவே குடும்பங்களை நிர்வகிப்பதில் பெரும்பங்கு வகிப்பது பெண்கள்தான். அனைவருக்கும் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து செய்வது, அது குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வது, வீட்டினை உகந்த முறையில் பராமரிப்பது, அதற்கான அத்தியாவசியத் தேவைகளை வாங்கி வைப்பது போன்ற அனைத்துப் பணிகளும் பெண்களைச் சார்ந்தே நடைபெறுகின்றன. சாதாரணமாக, இத்தகைய பணிகளில் மனமொன்றி ஈடுபட்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியே தனது பிரதான குறிக்கோளாய் இயங்குவதே பெண்களின் இயல்பு.
அப்படிப்பட்ட பெண்களே, இந்த தொடர்ச்சியான ஊரடங்கினால் தமது வேலைப்பளு மிகவும் அதிகரித்திருப்பதாக உணர்வதை நம்மால் காண முடிகிறது.
பலதரப்பட்ட பெண்களின் பல்வேறு மனநிலைகள்
வேலைக்கு செல்லாமல் இல்லத்தைப் பராமரிக்கும் பெண்களுக்கு ஏனைய சாதாரண நாட்களில், ஆண்கள் பணிக்காகவும் குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விடுவதால் கிடைக்கும் சில மணி நேர தனிமை மற்றும் அவகாசம் அவர்களுக்குப் புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். அது மாலையில் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும்போது மீண்டும் அவர்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிட ஏதுவாக இருக்கும்.
ஆனால், இப்பொழுதோ 24 மணிநேரமும் குழந்தைகளை சமாளிப்பதும், அவர்களுக்குப் பிடித்தமானவற்றை சமைப்பதிலும் பெருமளவு நேரத்தை செலவிடவேண்டியிருப்பதாகக் கூறுகிறார்கள். அதே சமயம், வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு மற்றும் மருந்துகளைக் கொடுத்துக் கவனிப்பதும் ஒரு கூடுதல் கடமையாகிறது.
அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் வீடு முழுவதும் உள்ள பொருட்களை வழக்கத்துக்கு மாறாக சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியதும் அவர்களது உடல் மற்றும் மனச்சோர்வுக்கு ஒரு பெரும் காரணமாகிறது என்பதை அறிய முடிகிறது.
அதேவேளை சில பெண்கள் ’நாம் சேவை செய்வதற்காகவே வரிக்கப்பட்டவர்கள் தானே’ என்று நினைத்துக் கொண்டு அளவுக்கு மீறி உழைத்து அதற்குள் தன்னை ஆழ்த்திக் கொண்டு சிரமப்படுவதையும் காணமுடிகின்றது.
இன்னொரு புறம் வீட்டில் உள்ளவர்கள் எல்லா வேலைகளையும் தம்மீது சுமத்தாது வேலைகளைப் பகிர்ந்து செய்வதால் பொழுது மகிழ்ச்சியாக கழிவதாக சிலர் கூறுகின்றனர்.
ஆக, ஆணோ பெண்ணோ அவர்களை குடும்பத்தின் சுமூகமானதொரு வாழ்வோட்டத்திற்கு தேவையானதொரு மனப்பான்மையும் கடமையாற்றலும் எதுவென்ற கேள்வியை இந்த சூழல் மனதுக்குள் கிளறி விட்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது
இது குறித்து சில இல்லத்தரசிகள் பகிர்ந்த விஷயங்களும் மேற்கண்ட நிலைகளையே வெளிப்படுத்துகின்றன. அவ்வாறே அமைகிறது ஏனைய சமூக ஊடக, இணையத் தளங்களின் பிரதிபலிப்புகளும்.
பங்குச்சந்தை அலுவலகத்தில் பணிபுரியும் திருமதி. ஸ்ரீதேவி ரமேஷ், (அயனாவரம்) கூறுகையில், ”அலுவலக வேலையுடன் வீட்டு வேலயையும் சேர்த்து செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வழக்கமாகக் காலையில் சமையலை முடித்து, அலுவலகம் சென்று சாயங்காலம் வீடு திரும்பும் நிலைமை மாறி இப்போது மூன்று வேளையும் சமைத்துக்கொண்டு வீட்டில் எல்லோருடைய தேவைகளயும் கவனிச்சுக்கிட்டு, அலுவலக வேலயையும் செய்ய முடியாமல் எழுந்து எழுந்து ஓட வேண்டியிருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களின் உதவி தேவைப்பட்டால் ஒன்றுக்கு பல முறை கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது”, என்றார்.
மேலும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களோட தேவயெல்லாம் கவனித்துவிட்டு அலுவலக வேலையைப் பாக்கலாமென்றால் மிகவும் களைப்பாகி ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. இந்த நிலைமை எப்போது மாறி இயல்பாகுமோ?” என்கிறார்.
முகப்பேரைச் சேர்ந்த யோகா மற்றும் நேச்சுரோபதி ஆலோசகரான டாக்டர் நிஷா (BYNS), இந்த ஊரடங்குக் காலத்தை வரவேற்பதாகக் கூறினார். வழக்கமாக காலை நேரம் என்பது மிகவும் பரபரப்பான ஒன்றாக இருக்குமென்றும் அதனால் அவரது யோகா பயிற்சிக்கு நேரம் கிடைக்காமல் போகுமென்றும் ஆனால் இப்பொழுது, அதற்கான நேரம் கிடைக்கிறதென்றும், தனது நாளை மனதை ஆசுவாசப்படுத்தித் தயார் நிலையில் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கிறதென்றும் தெரிவிக்கிறார். மேலும், குடும்பத்தினருக்குத் தேவையான ஆரோக்கிய பானங்களைத் தயாரித்துத் தர முடிகிறதென்றும் கூறுகிறார். அதேசமயம், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடிகிறதென்றும் கூறுகிறார்.
ஆனாலும், நீண்டுகொண்டே போகும் குடும்பத்தினரின் தேவைகள் அத்துடன் சமையலறை சிங்க்கில் எப்போதும் நிரம்பி வழியும் பாத்திரங்கள் என நீண்ட நேரம் சமையலறையிலேயே நிற்க வேண்டியிருப்பது மிகக்கடினமாகத்தான் இருக்கிறது என்கிறார்.
அதேவேளையில், சில பெண்கள் இத்தகைய வேலைப்பளுவை அவை சக்திக்கு மீறி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பதையும் காணமுடிகிறது. வீட்டில் உள்ள வேலைகள் எல்லாம் பெண்களுக்காகவே விதிக்கப்பட்டவை என்பது போன்ற ஒரு மனநிலையில் அவர்கள் இருப்பதையும் , இதை அவர்கள் முழுமனதான விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கின்றனரா அல்லது அவ்வாறு ஒரு நிலையை நோக்கித் தள்ளப்பட்டு சரணாகதி அடைந்த நிலையில் உள்ளார்களா என எண்ணத்தோன்றுகிறது.
பெண்கள் தியாகத்தின் திருவுருவங்களாகத் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு வருவதால் அவர்களும் அந்த முள்கிரீடத்தை அணிந்து கொள்வதைப் பெருமையாகக் கருதும் மனநிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்கிற சிந்தனையும் எழுகிறது.
இன்னும் சில பெண்கள், இந்நிலையிலிருந்து மாறுபட்டு, வீட்டு வேலை என்பது பொதுவானது என்கிற உயரிய சிந்தனையைத் தமது பிள்ளைகளுக்குக் கற்பித்தும் மேலும் தமது வாழ்க்கைத்துணையுடன் இந்த வாழ்வியல் யதார்த்தத்தை ஏற்கனவே கலந்துரையாடியும் இருந்ததால் தற்போது அவர்கள் இயல்பாக வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதன் காரணமாக இந்த சமூக விலகலை அவர்கள் சந்தோஷமாகக் கடக்க முடிகிறது.
வாழ்க்கைப் பறவையின் இரு சிறகுகளாய்..
தி. நகரில், தமது 1/2 வயது மகனுடன் வசிக்கும் இளம் தம்பதியர் இவர்கள். மார்த்தா தன் குழந்தையை கவனித்துக்கொண்டு வீட்டிலிருந்தவாறே பணிபுரிகிறார், அனிஸ் ஒரு மருத்துவர். ஆனால், வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் இருந்து, சமையலறையில் பாத்திரங்களைக் கழுவுவது வரை அனைத்து வேலைகளிலும் அவரின் பங்களிப்பு இருக்குமெனவும் அதனால் தன்னால் அந்த நேரத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் எஞ்சியிருக்கும் அலுவலகப்பணிகளை முடிக்கவும் ஏதுவாயிருக்கிறதென மார்த்தா கூறுகிறார்.
இந்த சூழலில், தாய்மைக்கே உரிய அன்பும் அக்கறையும் கொண்ட நடவடிக்கைகளில் பெண்களின் பெரும் பங்கு இருந்தாலும், ’இல்லம் சார்ந்த எல்லா வேலைகளும் உன் பொறுப்பு’ என்று சுமத்தி விடும் நியாயமற்ற மனப்பாங்கு இல்லாது வாழ்க்கையின் உண்மை பரிமாணத்தை அறிந்துணர்ந்த முதிர்ச்சி நிலவுகிறது.
முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர், தமது வீட்டில் உள்ள அனைவருமே ஆண் பெண் பாகுபாடின்றி, அனைத்து வேலைகளையும் பகிர்ந்து செய்து வருவதாகவும், இதனால் வீட்டிலுள்ள பெண்களின் வேலைப்பளு வெகுவாகக் குறைவதால் சமூகத்தில் மற்றவர்களுக்கு இந்த சமூகவிலகலில் ஏற்படும் மனசோர்வுகளிலிருந்து வெளிவர உத்வேகமூட்டி உதவ முடிகிறதெனவும் கூறுகின்றனர். குடும்பமாக பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சியாய் பொழுதைக் கழிக்கின்றனர்.
மேலும், குழந்தைகள் தாங்கள் வளரும்போதே வாழ்வின் உயர்ந்த பரிமாணங்களை அறிந்து வளருவதால் எதிர்காலத்தில் ஆண் பெண் சமத்துவம் கண்ட அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்வின் வெற்றியும், தொடர்ந்து ஆரோக்கியமானதொரு தலைமுறையே உருவாகவும் இது காரணமாகிறதெனவும் கூறினர்.
சமூக வாழ்க்கையை சீர் செய்கிறதா கொரோனா?
சலிப்பு, சந்தோஷம், முரண்பாடு, முதிர்ச்சி என ஒரு கலவையான உணர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த அசாதாரண சூழலானது, குடும்ப வாழ்வினுடைய உண்மைப் பரிமாணத்தைக் கற்றுத் தர நன்றாகவே தன் பங்கை ஆற்றி வருகிறதென்பதற்கு அறிந்து கொண்ட பலரது அனுபவங்களே ஆதாரமாகிறது
மட்டுமின்றி, முழுமை பெற்ற ஒரு மனித சமூகம் அமைவதற்கு பெண்களின் இன்றியமையா பெரும்பங்கே முதலும் கடைசியுமான காரணமாயுள்ளது என்பதையும் அது கற்பித்து வருகிறதெனில் மிகையாகாது.
ஆம்! உலகத்தின் முதல் ஆசிரியர் உண்மையாகவே ஒரு தாய் தானே. அவளது கைகளில் குழந்தையாக தவழ்கின்ற எதிர்கால உலகை அழகுற வடிவமைக்கும் அக்கறைமிகு செயலால்தான் பெண் உட்பட்டு ஒட்டுமொத்த மனிதகுலமே மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்பதற்கு மேற்கண்ட உதாரணம் ஒரு சான்றாகும்.