ஒருபுறம் உயிர்களை பலி கொள்ள வந்த அரக்கன் எனக்கூறி, ஒரு போர்க்கால அறிவிப்புப் பிரகடனத்தப்பட்டிருக்கும் அதேவேளை, அது உலகையே புதுப்பிக்க வந்த ஒன்றெனவும் கொரோனா குறித்து இருவிதமான குரல்கள் ஒலிக்கின்றது. எவ்வாறாயினும் அசுரவேகத்தில் பரவி மரணங்களை நிகழ்த்தி வரும் இந்த பேரபாயத்தை நாம் ஒருசேர நின்று சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதை யாருமிங்கு மறுக்கவே முடியாது.
இந்த சூழலானது, உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மையாக வைக்கும் அவசியத்தையும், தனது நலமென்பது கூட அடுத்தவர் நலனை சார்ந்ததே என்பதையும் உணர்த்துவதாக பலரும் கூறுகிறார்கள். ’உலகை ஒரே உடலுக்கு ஒப்பிட்டால் அதன் எந்த பகுதி பாதித்தாலும் முழு உடலுக்குமே பாதிப்பு’ என்னும் உயர் கருத்து தற்போது உயிர்பெறுவதையும் இங்கு காணமுடிகிறது.
கொரோனாவைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், முன்னெச்சரிக்கைகள், அறிகுறிகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் குறித்த உண்மையான தகவல்களுடன் பல கட்டுக்கதைகளும் உலகில் உலா வருவதை நாம் ஒதுக்க இயலாது. இந்நிலையில் தனிநபரே தனது வழமையான ஓட்டத்தை சற்று நிறுத்தி, நிதானித்து அதிகாரப்பூர்வமான தகவல்களைப் பெற்று அதற்கேற்ப இயங்கி தன்னையும் சுற்றத்தையும் காத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
சென்னையும் கொரோனாவும்
சென்னைக்கு, சமீபத்திய வருடங்களில் ஏற்பட்ட வெள்ளம், புயல் போன்ற இயல்பு வாழ்க்கையை முடக்கும் இடர்பாடுகளைக் கண்ட அனுபவம் ஓரளவு உதவினாலும் கொரொனாவை எதிர்த்து வெற்றி பெறுவதென்பது முற்றிலும் சுயஒழுங்கு சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் தற்போது விதிக்கப்பட்ட 21 நாட்கள் தனிமையென்பதும் ஒரு புதியதொரு கற்றலாகவே உள்ளது.
மக்கள் சமூகத் தொடர்பு இல்லாதிருந்து அந்த நோய்க்கிருமி பரவும் சங்கிலியைத் துண்டிப்பது என்பதை சென்னையின் தனித்தன்மைகளுக்குப் பொருந்த அமலாக்கம் செய்வதில் பல விதமான கேள்விகளும் சவால்களும், கற்றலின் தேவைகளும் உள்ளது.
எனவே, சென்னைக்கான சவாலறிந்து செயல்படுவதே இந்த போரின் வெற்றியை உறுதியாக்கும். ஆனால், கடந்த சில நாட்களின் அனுபவங்கள் மக்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளதைக் காட்டுகிறது என்கின்றனர் அவதானிப்பாளர்கள்.
சென்னை பெருநகரின் தனித்தன்மைகள்
- அடர்த்தியான அதன் மக்கள் தொகை
- வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து உள்நுழைந்த மக்கள்
- குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வாசிகளின் கூட்டமாக இயங்கும் வாழ்வமைப்பும், தண்ணீர் மற்றும் ஏனைய சுகாதார அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள நிலையில் பெருவாரியான மக்களுடன் அது குறித்து ஏற்படும் அவர்களின் இன்றியமையாதத் தொடர்பும்
- சாலையோரம் வாழும் வீடற்றோரின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை
- நுகர்வுப் பொருட்களின் அதிகபட்சத் தேவை
- மக்கள் தொகை அதிகமுள்ள சென்னையில் கொரோனா சோதனை மையங்களின் பற்றாக்குறை
சவால்கள் எவ்வாறு சந்திக்கப்படலாம்
மக்கள் தொகையின் அடர்த்தியானது தனிமைப்படுத்தும் முயற்சிக்கு மற்றெல்லா சவால்களை விடவும் பெரிய சவாலாகும். எனினும், தற்போது வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சார்ந்த லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றது இந்த சவாலை சற்று குறைக்கிறது.
என்றாலும், இருப்பவர்கள் அவர்களின் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருத்துவத் தேவைகளைப் பெற வெளியில் வரும்போது எவ்வாறு நெரிசலைத் தவிர்த்தும், பொருள்களை வாங்கிக் குவிக்காதிருந்தும் பொறுப்புடன் நடக்கிறார்களோ அதற்கேற்பவே சவால் வெற்றி கொள்ளப்படும்.
குப்பங்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் நிலைமை
ஒவ்வொரு தனிநபரும் கொரோனா நோய்க்கிருமியைக் கடத்தும் பாலமாக தான் ஆகி விடாமல் இருக்க அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வது, வெளித்தொடர்புகளைத் முற்றிலும் தவிர்ப்பது என்ற சமூகத் துண்டிப்பு மிகப்பெரும் சவாலாக இருப்பது இத்தகைய இடங்களில் தான்.
ஏனெனில், அடிப்படைத் தேவையான தண்ணீருக்கே இவர்கள் வெளியில் வந்து கூட்டமாக நின்றே லாரிகளிலிருந்து பிடித்துச் செல்ல வேண்டும். அத்துடன் சானிட்டைசர் போன்றவைகளை வாங்கி பயன்படுத்தும் அவசியம் குறித்து புரிந்துணரும் நிலையிலும் இவர்கள் இல்லை.
எனவே, அரசோ அல்லது சேவை நிறுவனங்களோ களத்தில் இறங்கி இதற்கான விழிப்புணர்வையும், ஏனைய தேவைகளின் இருப்பையும் உறுதி செய்வது மிக அவசியமாகிறது. காரணம் சென்னையின் இயக்கத்தில் இவர்கள் தவிர்க்க இயலாத அளவுக்கு எல்லோருடனும் ஏதாவதொரு வகையில் இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் நலனை உறுதி செய்வது அனைவரின் நலனையும் உறுதி செய்வதாகும்.
அதேபோல, தற்போது சென்னையில் பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்து கொண்டே பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள், அதனால் அவர்களது வாழ்வாதாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால், தினசரி வருவாய் ஈட்டுபவர்களது வாழ்க்கையோ பெரும் கேள்விக்குறியாய் உள்ளது.
உதாரணத்திற்கு காசிமேடு, சத்யா நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் இந்தத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை தங்களுக்கு சாத்தியமே இல்லை என கூறுகின்றனர். அவர்களது வாழ்வாதாரமே மக்களுடன் இணங்கிப் பணிபுரிவதாகத்தான் உள்ளது. ஆகவே, தனிநபராகவும், சேவை நிறுவனங்களாகவும், அரசாகவும் இவர்களது இந்த காலத்தின் அடிப்படைத் தேவைகளை உறுதி செய்ய வேண்டியுள்ள கட்டாயமும், அதை விரைந்து செய்யவேண்டிய அவசரமும் உள்ளது.
அவ்வாறே சாலையோரம் வாழும் வீடற்றோர் சென்னையில் கணிசமாக உள்ளனர். மக்கள் ஊரடங்கு நடந்த அந்த ஒரு நாளில் அவர்கள் உணவு கிடைக்காது பாதிக்கப்பட்டதும் இதனை ஈடுகட்ட சில சேவை அமைப்புகள் உணவு வழங்கியதும் அறிய முடிந்தது. தற்போது இவர்களை அரசு முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு நடைபெறுவதாக வந்த செய்தி மகிழ்ச்சிக்குரியதாகும். ஏனெனில் இவர்களும் தொற்றுக்குப் பாலமாகிட வாய்ப்பு கொண்டவர்களே.
கொரோனா வைரஸ் சோதனை ஏற்பாடுகள்
அதிகமானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு சோதனை செய்து கொள்ளும் நிலை ஏற்படின் கிண்டியிலுள்ள கிங்’ஸ் இன்ஸ்டிடியூட் மட்டுமே அதற்கென இருந்தது. அதற்குப் பின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் தற்போது அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி சில தனியார் மருத்துவமனைகளிலும் சோதனை செய்து கொள்ளலாமென்பது சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.
தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 150 பேருக்கும் அதிகமானோருக்கு சோதனை செய்யப்படுகிறது. அத்துடன் அறிகுறிகள் தென்படுவோரை அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மகிழ்ச்சி தரும் ஒரு விசயம் என்னவெனில் காஞ்சிபுரத்தை சார்ந்த தமிழ்நாட்டின் முதல் நோயாளி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து இல்லம் சென்றுள்ளார். மற்றவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு இருந்தாலும் வைரஸ் அதிதீவிரமாக பரவும் கட்டத்துக்குள் நாம் சென்றோமானால் தேவைப்படும் அனைவருக்கும் செயற்கை சுவாசம் தந்து காப்பாற்ற இயலாது, பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டிய ஒரு மிகவும் துரதிஷ்டவசமான நிலையை சந்திக்க நேருமென உலகின் அனுபவம் காட்டுகிறது.
ஆகவே தான் அந்தக் கட்டத்திற்குள் செல்லாமல் சங்கிலித் தொடரை ஒரு இடத்தில் உடைக்கும் ஒரு உயிர்காப்புப் போரில் நாம் ஈடுபட வேண்டியுள்ளது. இதை சாத்தியமாக்க இயன்ற எல்லா வழிமுறைகளையும் இழந்து விடாது நிச்சயப்படுத்த வேண்டியுமுள்ளது.
தீர்வை நோக்கி..
இக்கொடூரமான உயிர்க்கொல்லி நம்மை நெருங்கவிடாமல் தடுப்பதற்கான ஒரே வழி நாம் தனித்திருப்பதுதான் என்பது தெளிவாக புலனாகிறது. அதற்கு முன்னோட்டமாக இம்மாதம் 22ம் தேதி நாடு முழுவதும் “மக்கள் ஊரடங்கு“ கடைபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்நிலை இன்னும் சில நாட்கள் அதாவது மாத இறுதி வரை தொடரலாம் என எதிர்பார்ப்புகள் நிலவின. ஆனால், உலகின் பல நாடுகளில் தொடரும் அவலம் நம்மை இச்சூழ்நிலையின் கொடுமையை உணரவைத்ததுடன், சமூக தனிமைப்படுத்துதலின் அவசியத்தையும் உணர்த்தியது என்றால் அது மிகையாகாது.
அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்த நமது பிரதமரின் சமீபத்திய உரையானது நம்மை நிதர்சனத்தை மேலும் ஆழமாக உணர வைத்ததுடன், “ஊரடங்கு“சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான நமது ஒத்துழைப்பை அவர் வேண்டிய போது அதனை முழுமனதோடு நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு ஏற்பட்டிருப்பதை நாம் மறுக்க முடியாது.
“ஊரடங்கு“ அமுலாக்கத்தினால் நம்மில் பலருக்கு பல விதங்களில் தனிப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம், ஏன் சிலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கலாம். ஆனால், கொத்து கொத்தாக மனித உயிர்கள் பலியாவதை நினைத்துப்பார்க்கும் பொழுது இச்சூழ்நிலை எதிர்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறதா என நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்.
மேலும், நமக்காக உயிரைப் பணயம் வைத்து காலநேரம் பாராமல் தியாகபூர்வமாக உழைக்கும் உன்னத மனிதர்களுக்காகவும் உலகம் எனும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்காகவும் அதனின் சிறுசிறு அணுக்களான நாம் இந்தக் கசப்பான மருந்தினை மகிழ்ச்சியுடன் உட்கொள்ளலாமே?
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு இருக்கும் எல்லா வாய்ப்புகளையும் சரியாக, பொறுப்புடன், அக்கறையுடன் எந்த அளவுக்கு நாம் பயன்படுத்தப் போகிறோமோ அந்த அளவுக்கு இந்த பேரபாயத்திலிருந்து நாம் தப்பிக்கலாம். ஒன்று கூடாமலிருப்பதில் ஒன்றுபடுவோம்!