அன்புள்ள பெற்றோர்களுக்கு,
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பதினோரு வயது சிறுமி பற்றிய செய்தியை படித்ததும் என்னைப் போலவே நீங்களும் அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள். இருபத்தி இரண்டு ஆண்கள், சிலர் தாத்தா வயதுடையவர்கள், தொடர்ந்து ஏழு மாதங்களாக இந்த கொடுமையை செய்திருக்கிறார்கள். இதை பற்றி அணுளவும் தெரியாமல் பெற்றோர்கள் இருந்துள்ளனர் என்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதலில் பெற்றோரிடம் தான் உள்ளது – பிறகு தான் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோறின் சிறிய பங்கு. இன்றைய சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை பற்றி முதலில் பெற்றோர்கள் அறிந்து வைத்திருந்தால் மட்டுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்களா என்று அறிந்து கொள்ள முடியும்.
வருமுன் காப்பது என்றுமே சிறந்தது, ஆகவே, நான் பெற்றோர்களுக்கு சொல்வதெல்லாம் உங்களால் இயன்ற அளவு குழந்தைகள் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதே போல் அத்தகைய சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
புரிதல்
முதலாவதாக: எந்த குழந்தையும் பாதுகாப்பான சூழலில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வித ஆபத்தை எதிர்கொள்ளும் சூழலே உள்ளது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆகவே உங்கள் குழந்தையை காப்பதுடன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
இத்தகைய சூழலுக்கு குழந்தைகள் ஆளானால் என்ன செய்ய வேண்டும், பாலியல் வன்கொடுமை என்பது என்ன என்பதை சொல்லிக் கொடுப்பதால் இது போன்ற கொடுமைகள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் மட்டுமின்றி எந்த விதமான தொடுதல் நல்லதல்ல என்ற சந்தேகத்தையும் எடுத்து சொல்வதால் இது போன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
பாலியல் வன்கொடுமையை சந்தித்த எழுபது முதல் எண்பது சதவிகித குழந்தைகள் அதைப் பற்றி வெளியே சொல்வதில்லை. ஆனால் தொடுதலைப் பற்றி விழிப்புணர்வு உள்ள ஒரு குழந்தைக்கு இது நேரிட்டால், பெரும்பாலும் அவள் தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவரிடம் இதை பற்றி பகிரும் வாய்ப்பு அதிகம். இது மேலும் தொடராமல் இருக்க பெரிதும் உதவும்.
புரிதலை தாண்டி!
தொடுதலைப் பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா, படிப்பில் வழக்கத்தை விட குறைந்த மதிப்பெண்கள், சாப்பாட்டில் தூக்கத்தில் மாற்றம் உள்ளதா என்று அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஒரு குழந்தை தன்னை பாதுகாத்து கொள்ள முடியவில்லை என்றால், அதன் பொறுப்பு முழுவதும் பெற்றோரிடம் தான் உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, உங்கள் குழந்தைக்கு நேர்ந்தால்…
… நிதர்சனத்தை எதிர்கொள்ளுங்கள், சரியான முறையை கடைபிடியுங்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு குழந்தை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், அந்த வடு நீண்ட கால வளர்சிக்கும் தடையாக அமையும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். குணப்படுத்த முடியாத அளவுக்கு மூளை செயலற்றதாக ஆவதுடன், இது மூளை சேதத்துக்கு நிகராக ஆகும் என்பதால் பெற்றோர்கள் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
இந்த குழந்தைகளுக்கு நீண்ட கால ஆலோசனை அவசியம். இத்தகைய கொடுமையிலிருந்து மீண்டு வர சில சமயம் மூன்று முதல் ஐந்து வருடங்கள் கூட ஆகலாம். ஆதலால் குழந்தைக்கு தகுந்த ஆலோசனை அமைத்துக் கொடுத்தல் மிக அவசியம் என்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், வாழ்கையிலும் பிற்காலத்தில் வேலையிலும் சரியாக பணியாற்ற முடியாமல் போக நேரிடுவதோடு தீய பழக்கங்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் மற்ற இளம் பருவத்தினரை விட இந்த குழந்தைகள் 13.7 முறை மேலும் இது போன்ற சூழலுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம்.
உதவி பெறும் வரை மீண்டும் மீண்டும்
என் மாமாவால் நீண்டகால பாலியல் கொடுமைக்கு ஆளான நான், பெற்றோர்களுக்கு சொல்ல விரும்புவது இரண்டே விஷயம்.
முதலில், பாலியல் வன்கொடுமை என்றால் என்ன என்பதையும் யாரேனும் அத்தகைய செயலில் ஈடுபட முயற்சித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் உங்கள் குழந்தை அறிந்திருக்க உறுதி செய்து கொள்ளுங்கள். இராண்டாவதாக, அப்படி நேரிட்டால் உடனே உங்களிடம் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
பொதுவாக குழந்தைகள் இது போன்று சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, இத்தகைய கொடுமை நேர்ந்ததாக அவர்கள் சொல்வதை நம்பும் வரை தொடர்ந்து சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.
குற்றம் புரிபவர் யாராகவும் இருக்கலாம்!
பொதுவாக பெற்றோர்காள், தாத்தா மற்றும் ஆசிரியர்களை குழந்தைகள் நம்புவர். சில சமயம் இவர்களே குற்றம் புரிபவர்களாக இருக்கும் பொழுது யாரை நம்புவது என்பதில் குழந்தைக்கு குழப்பம் நேரிடும்.
பல சமயங்களில் வீட்டிலுள்ள ஆண்களை எதிர்த்து பேச இயலாத சூழலில் தான் அம்மாக்கள் உள்ளனர் ஆனால் இது போன்ற சூழலில் தாயால் மட்டுமே அவளின் குழந்தையை காப்பாற்றவும் துணையாகவும் இருக்க முடியும்; எந்த சூழலிலும் அவளின் குழந்தையை விட்டு குடுக்க கூடாது. POCSO Act 2012 படி, வன்கொடுமையை கட்டாயம் பதிவிட முடியும் என்பதால், சட்டத்தின் உதவியையும் நாட முடியும்.
மாற்று திறனாளி குழந்தைகளை பாதுகாத்தல்
மாற்று செயல் திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம் அதுவும் அந்த குழந்தையால் சரியாக பேச முடியாது என்றால், இன்னும் சற்று அதிக ஆபத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருப்பதுடன் எவரையும் எளிதில் நம்பாமல் இருத்தல் வேண்டும்.
ஐம்பது சதவிகித குழந்தைகள் அவர்களின் சொந்தங்களையாலேயே வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே ஆண் சொந்தங்களிடம் அடிக்கடி உங்கள் குழந்தைகளை விட்டு செல்லாதீர்.
மேலும், பெண் குழந்தைகளை போலவே ஆண் குழந்தைகளும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது பல முறை சொல்லப்பட்டாலும் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை . அதனால் ஆண் குழந்தைகளையும் கண்காணிப்பது அவசியம்.
தைரியமாக சொல்லுங்கள்!
இறுதியாக, உங்கள் குடும்பத்தில் ஒருவராலேயே உங்கள் குழந்தை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டால், அதை மறைக்க நினைக்காதீர்கள். என்னுடைய அனுபவத்தில் சொல்வதெல்லாம், அப்படி இருக்கும் பொழுது பெற்றோர்கள் பேசாமல் இருப்பதுடன் குற்றத்தை தெரியப்படுத்துவதும் இல்லை. வீட்டின் ஆண் நபர்கள் ஜெயிலுக்கு செல்வதை அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இப்படி செய்வது மூலம் நீங்கள் உங்கள் குழந்தையை தான் தாழ்த்தி விடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உங்களை தவிர வேறு யாரும் துணையாக இருக்க போவதில்லை.
எந்த சூழலிலும் குழந்தையை விட்டுக் கொடுக்காமல் இருப்பதோடு, தகுந்த ஆலோசனையும் கிடைக்க செய்ய வேண்டும். இல்லையேல், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை மிகுந்த உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
இந்தியாவில், பாலியல் கொடுமை என்பது முன்பு எப்போதும் இல்லாத அளவை விட அதிகமாக உள்ளதாகவே செய்திகள் கூறுகின்றன. குழந்தைகளுக்கு போதிய புரிதலை உண்டாக்குவதோடு பெற்றோர்களும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இத்தகைய சம்பவங்களை தவிர்க்க முடியும்.
(Translated by Sandhya Raju. You can read the original English article here.)