Translated by Sandhya Raju
கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் மண்டலம் 9-ல் குமரன் எஸ் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், மாநகராட்சியின் சுகாதார பணியாளர்கள் அல்லது தனியார் நிறுவனமான அர்பேசர் சமித் தற்போது இந்த வேலையை மேற்கொள்வதால், குமரன் போன்ற கழிவுகள் சேகரிப்பாளர்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.
“பத்து ஆண்டுகளாக இந்த வேலை பார்க்கிறேன். இது போன்ற ஒரு நிலையை இது வரை சந்தித்ததில்லை. பெருந்தொற்று காலத்தில், நல்ல மனம் படைத்த சிலரின் உதவியால் சமாளிக்க முடிந்தது. இப்போது வேலைக்கு திரும்பினாலும், முன்பை விட கால் பங்கு தான் சம்பாதிக்க முடிகிறது”, என்கிறார் குமரன்.
சராசரியாக ஒரு நாளுக்கு ₹600 முன்னர் ஈட்டிய நிலையில், இன்று வெறும் ₹150-200 மட்டுமே கிடைக்கிறது. “முக்கால்வாசி கழிவுகள் மாநகராட்சி பணியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுவதால், எங்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை” என்கிறார்.
கழிவு சேகரிப்பில், அதிலும் ஈரமற்ற கழிவுகளை சேகரிப்பதில், மாநகராட்சி பணியாளர்காளுக்கும் முறைசாரா பணியாளர்களுக்குமிடையே மோதல் முரண்பாடுகள் இருந்தன. தற்போது வீட்டிலேயே கழிவுகளை பிரித்தல் அதிகரித்து வருவதன் மூலம், இந்த முறைசாரா பணியாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
ஏன் இந்த நிலைமை?
நிலப்பரப்பில் குப்பைகள் சேர்வதை தடுக்க, மக்கும் குப்பை (காய்கறித் தோல், மீதமான உணவு போன்றவை), மக்காத குப்பை (பிளாஸ்டிக் கவர், பேனா போன்றவை) என வீட்டிலேயே மூலப்பிரிப்பை சென்னை மாநகராட்சி ஊக்குவித்து வருகிறது.
இது திடக்கழிவு மேலாண்மை விதி 2016 உடன் சீரமைக்கும் படியும் உள்ளது. இதன் படி ” கழிவு உற்பத்தியாளர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் வீட்டு அபாயகரமான கழிவுகள் என கழிவுகளை பிரித்து தனியாக சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பாளர்களிடம் தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு அனைத்து பகுதிகளிலும் இல்லை. சென்னையின் பல பகுதிகளில், அனைத்து குப்பைகாளையும் ஒரே தொட்டியில் கொட்டப்படுவதால், பணியாளர்களால் எளிதாக பிரிக்க முடிவதில்லை.
நகரத்தின் உட்புறங்களில், வீடு வீடாக பணியாளர்கள் சென்று குப்பையை சேகரித்தாலும், அனைத்தும் குப்பைத்தொட்டியில் ஒன்றாக கொட்டப்படுவதால், வகைப்படுத்தப்படாமலேயே நிலப்பரப்பிற்கு செல்கிறது. இங்கு தான் முறைசாரா கழிவு சேகரிப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கழிவு மேலாண்மை பொறுப்பை அர்பேசர் சமித் எடுத்தக் கொண்ட பின், பணியாளர்கள் ஈ-வாகனம் மூலம் வீடு வீடாக சென்று கழிவுகளை பிரித்து சேகரிக்கின்றனர். ஈரக் கழிவுகள் நுண் உரம் தயாரிக்கும் மையங்களுக்கும், உலர் கழிவுகள் மறுசுழ₹இ அல்லது நிலப்பரப்பிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
Read more: Chennai is missing the most important piece in the waste segregation puzzle
பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற உலர் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு, வாரம் ஒரு முறை விற்பதாகவும், அல்லது சுகாதார அலுவலரின் ஆணைப்படி சுழற்சி செய்யப்படுவதாகவும், 12 வருடங்களாக மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக உள்ள கே வெங்கடெஸ்வர் கூறுகிறார்.
“வாகன பராமரிப்பு, துடைப்பம் போன்றவற்றை வாங்கும் செலவு திரும்ப வருவதில்லை. எங்களின் சம்பளமோ ₹8000 முதல் அதிகபட்சமாக ₹16000 வரை தான். இது கொண்டு நாங்கள் எப்படி சமாளிப்பது? அதனால், பிளாஸ்டிக் கழிவுகளை நாங்கள் விற்கிறோம். ” எனக்கூறும் அவர், நீண்ட காலமாக இந்த முறை தான் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சூழல் தான் முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் மோசமான நிலைமைக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
குப்பைத்தொட்டி இல்லா நகரமாக சென்னையை மாற்றும் ஒரு முயற்சியாக பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி அகற்றியுள்ளது. மூலப்ப்ரீப்பின் காரணமாக வருமானம் குறைந்துள்ளது” என கொடுங்கையூரை சேர்ந்த கழிவு சேகரிப்பாளர் எஸ் கணேசன் கூறுகிறார். குடிப்பழக்கம் உள்ளதால், வேறு வேலைக்கும் செல்ல முடிவத்தில்லை எனவும், இந்த வேலையை நம்பி மட்டுமே உள்ளதாகவும், மேலும் அவர் கூறுகிறார்.
குப்பைத்தொட்டி இல்லா நகரம் எனும் திட்டம் தோல்வியை கண்டுள்ளதாக சில சேகரிப்பாளர்கள் கூறுகின்றனர். தொட்டிகள் முன்பு இருந்த இடத்திலேயே குப்பைகள் கொட்டப்படுவதாக கூறுகின்றனர். இதுவே இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
“வேறு வேலைக்கு முயற்சித்து வருகிறேன். ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து சைதாப்பேட்டைவரை குப்பையை சேகரிக்க நடக்கிறேன். முன்பு ஒரே பகுதியில் நிறைய கழிவுகள் கிடைக்கும், ஆனால் குறைவான கழிவுகளை சேகரிக்கவே நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. மாநகராட்சி பணியாளர்களிடம் மோதல் போக்கு கொள்ள மாட்டோம்” என்கிறர் மண்டலம் 10-ல் உள்ள டி அன்பு.
சுகாதார பணியாளர்கள் நிறைய கழிவுகளை கொண்டு வருவதாக சைதாபேட்டையில் கழிவுப்பொருட்கள் சேகரிக்கும் கடை நடத்துபவர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என மூலக்கடையில் பழைய பொருட்களை விற்கும் கே தாமோதரன் கூறுகிறார்.
கழிவு சேகரிப்பாளர்களின் பின்னணி
சென்னையில் குப்பை சேகரிப்பவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்தும் பல்வேறு சூழல்களிலும் செயல்படுகின்றனர். சிலர் ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து அல்லது வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்கிறார் சிஐடியுவுடன் இணைந்த சென்னை கார்ப்பரேஷன் செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு.
“கழிவு சேகரிப்பவர்கள் சிலர் கழிவுகளை எடுக்கும் இடம் வரை நன்றாக ஆடை உடுத்தி, பின் பழைய ஆடைகளை மாற்றி, பின்னர் வீடு திரும்பும் போது கண்ணியமான ஆடைகளை அணிவார்கள். அவர்கள் எவ்வாறு சம்பாதிக்கிறார்கள் என்பதைத் தங்கள் குடும்பங்களுக்குச் சொல்ல முடியவில்லை, ”என மேலும் அவர் கூறினார்.
பிற மாநிலங்களிலிருந்து குடும்பத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் உண்டு. “இவர்கள் பணம் கேட்பதில்லை, குடும்பத்திற்கு தங்க இடம், உண்ண உணவு மட்டுமே இவர்களிந் கோரிக்கை. கர்நாடகா, ஒரிசா ஆகிய மா நிலங்களில் இருந்து வந்தவர்களை அம்பத்தூர், ஆலந்தூர் தோப்பு போன்ற இடங்களில் காணலாம். குடும்பத்துடன் கழிவுகளை சேகரிக்கும் இவர்கள், இதற்கான வருமானத்தை எதிர்ப்பார்ப்பதில்லை.”
சிலரின் குடிப்பழக்கம் மற்றும் போதை பழக்கத்தை, பழைய பொருட்கள் வாங்கும் கடைக்காரர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை பெற்று, இலாபம் பார்க்கின்றனர். ஆனால், பெறும் பொருட்களை பொருத்து ₹100-₹200 மட்டுமே கொடுக்கின்றனர்.
இவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் சங்கம் ஈடுபட்டது. “ஆனால் பல காரணங்களினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. முதலில் இவர்களை அடையாளம் காண்பது சவாலாக இருந்தது. குடும்பத்துடன் இந்த வேலையில் ஈடுபடுவர்களுக்கு ஆவணம் இல்லாததும், அல்லது இவர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாததும் மற்றொரு காரணம்.” எனக் கூறும் சீனிவாசலு, மாநகராட்சியால் மட்டுமே இந்த முயற்சியை முன்னெடுக்க முடியும் என்கிறார்.
Read more: Can Chennai ever become a bin-less city?
ஒருங்கிணைப்பது எப்படி?
“கழிவு எடுப்பவர்கள் அல்லது முறைசாரா கழிவு சேகரிப்பாளர்களின் அமைப்புகளை அங்கீகரித்து, வீடு வீடாக கழிவு சேகரிப்பு உட்பட திடக்கழிவு மேலாண்மையில் பங்கேற்பதற்கு வசதியாக, இந்த அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பாளர்கள் மற்றும் பிற கழிவு சேகரிப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பை மேம்படுத்தி நிறுவ வேண்டும்” என திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019 கூறுகிறது.
இது போன்ற முயற்சி பூனே மற்றும் பெங்களூருவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பூனேவில் ககட் கச் பத்ரா கஷ்டகாரி பஞ்சாயத்து (கேகேபிகேபி) – புனே முனிசிபல் கார்ப்பரேஷனுடன் (பிஎம்சி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மறுசுழற்சி பிரிப்பு வசதிகள் மற்றும் கரிம உரம் தயாரிக்கும் மையங்களில் சேகரிப்பு மற்றும் வரிசைப்படுத்தும் பணியில் அங்குள்ள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கழிவு சேகரிப்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்கிய முதல் இந்திய நகரம் என்ற பெருமையை பெங்களூரு பெற்றது. 7,500க்கும் மேற்பட்ட சேகரிப்பாளர்களை இணைத்து, இவர்களுக்கு கழிவு பிரிக்கும் மையங்களில் வேலைக்கான பயிற்சியையும் அளித்துள்ளது.
இது போன்ற ஒரு முயற்சியை குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவுடன் (CAG) இணைந்து சென்னை மாநகராட்சி இரண்டு முகாம்களை ஏற்பாடு செய்தது. 2014-15-ம் ஆண்டு கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் நடத்தப்பட்ட இந்த முகாமில் இவர்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 950-க்கும் மேற்பட்ட கழிவு சேகரிப்பாளர்கள் பதிவு செய்தனர்.
ஆனால் இவர்களை ஏன் ஒருங்கிணைக்க முடியவில்லை என தெரியவில்லை என்கிறார் சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் (SWM) என் மகேசன். கொடுங்கையூர், பெருங்குடியில் மீண்டும் கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக கூறினார். “ஒரு மாதத்தில் இந்த கணக்கெடுப்பு முடிந்துதும், இவர்களை ஒருங்கிணைக்கும் திட்டம் வகுக்கப்படும்” என மேலும் அவர் தெரிவித்தார்.
16,500 மெட்ரிக் டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை எரியூட்டிகளில் அப்புறப்படுத்தி, நிலப்பரப்பில் கொட்டப்படும் குப்பைகளை குறைக்கவும், கழிவுகளை பதப்படுத்துவதன் மூலம் பெறப்படும் வருமானத்தை சுகாதார பணியாளர்கிளைடையே பிரித்துக் கொடுக்கவும், இந்த பட்ஜட்டில் வரையப்பட்ட திட்டத்தை செயல்படுத்தவும், இவர்களை ஒருங்கிணைப்பது முக்கியமானதாகும். மேலும், இது இவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், பயனுள்ள கழிவுப் பிரிக்கும் செயல்முறையை அமல்படுத்தவும் உதவும்.
[Read the original article in English here.]