Translated by Sandhya Raju
ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டிலேயே இருக்கும் ஊரடங்கு சூழலை, வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று உருவாக்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து பிற சேவைகளும் இந்த ஊரடங்கு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்றவை பலரை பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் சந்திக்கும் துயரங்களை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள், கடன் தொகை, சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் மின் கட்டணங்கள் செலுத்துவதில் சில தளர்வுகளை அறிவித்தது.
இதன் காரணமாகவும், செயல்பாட்டு தடைகள் காரணமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) கடந்த சுழற்சியின் மீட்டர் அளவிலான தொகையையே இந்த சுழற்சியிலும் கட்டணமாக செலுத்தலாம், என அறிவித்தது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்திருந்தால், அதற்கான காரணம் இது தான். கூடவே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் உண்டு.
முந்தைய சுழற்சி கட்டணமே தற்பொழுது தொடர்வது ஏன்?
ஊரடங்கு நேரத்தில், மின் கட்டணம் செலுத்தும் தேதி வந்தால், முந்தைய சுழற்சியில் செலுத்திய கட்டணமே இப்பொழுதும் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்தது. ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மின் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மீட்டர் ரீடிங்க் எடுக்க முடியாது என்பதால், இந்த முடிவை மின் வாரியம் எடுத்துள்ளது.
அப்படியென்றால் மீதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதா?
இல்லை. ஊரடங்கு காலத்தில் மட்டும் தான் இந்த சலுகை. ஊரடங்கு நிறைவு பெற்றதும், இந்த சுழற்சிக்கான மீட்டர் ரீடிங்க் எடுக்கப்பட்டு அதன்படி கட்டணம் கணக்கிடப்பட்டு சரி செய்யப்படும். ஒவ்வொரு சுழற்சிக்கும் தரப்படும் 100 யூனிட் மானியம் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை அடுத்த சுழற்சியில் சேர்க்கப்படும்.
ஊரடங்கின் போது கட்டணம் செலுத்துவது எப்படி?
மின்சார அலுவலகம் வருவதை தவிர்க்கவும், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தவும் மின்சார வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆன்லைனில் செலுத்த முடியாதவர்கள் மட்டும், கடைசி முயற்சியாக அலுவலகம் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆன்லைனில் செலுத்த தற்பொழுது பதிவு செய்ய முடியுமா?
முடியும். தமிழ்நாடு மின்வாரியத்தின் வலைத்தளத்தில் சென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றி, ஆன்லைன் மூலம் பணம் செலுத்த பதிவு செய்து கொள்ளலாம்.
அதிக தொகையை பின்னர் செலுத்துவதை தவிர்க்க இப்பொழுதே முன்பணத்தை செலுத்த முடியுமா?
முடியும். நிலுவையுள்ள தொகையை செலுத்தியவுடன், அடுத்த சுழற்சிக்கான முன்பணத்தை வலைத்தளத்தில் செலுத்த விருப்பமா என கேட்கப்படும். இந்த முன்பணம் அடுத்த சுழற்சிக்கான கட்டணத்தில் சரி செய்யப்படும்.
வீடு மற்றும் வணிக இணைப்புக்கும் இது பொருந்துமா?
இந்த முறை வீட்டு இணைப்புக்கு மட்டுமே பொருந்தும். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் முந்தைய சுழற்சியை விட குறைவானதாகவே இருக்கும்.
வர்த்தகம் இல்லாததால், பல நிறுவனங்கள் பணத்தட்டுப்பாட்டில் உள்ளது. பல தொழில் நிறுவனங்கள் கூட்டாக மின் வாரியத்திடம் வைத்த கோரிக்கையை அடுத்து, நிறுவனங்கள் அவர்களாகவே மீட்டெர் ரீடிங்கை புகைப்படம் எடுத்து அந்தந்த பகுதியில் உள்ள துணை பொறியாளருக்கு அனுப்பலாம் என மின் வாரியம் அனுமதித்துள்ளது. இதன் படி கட்டணம் கணக்கிடப்படும்.
மீட்டர் ரீடிங்கை கணக்கிட இதோ ஒரு விரைவு வழிகாட்டுதல்:
கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமா?
இந்த கடினமான சூழலில், ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் மின் கட்டணம் குறித்த தேதியில் கட்ட தவறினாலும் கூட இணைப்பு துண்டிக்கப்படவில்லை; இந்த சலுகை ஊரடங்கு நீடிக்கும் வரை தொடரும்.
கட்டுப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் எவ்வாறு கட்டணத்தை செலுத்தலாம்?
சென்னையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் (மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி) ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆனைலைன் மூலம் செலுத்த முடியாதவர்கள், அந்த பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலர்களை உதவிக்கு அணுகலாம்.
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறைக்கு மாறுங்கள்
மக்களின் சுமையையும் பணியாளர்களின் சுமையையும் குறைக்கவே இந்த முயற்சியை மின் வாரியம் மேற்கொண்டுள்ளதாக அதன் கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார். “நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பல சோதனைகட்டங்களை கடந்து எங்கள் பணியாளர்கள் வருகிறார்கள். அவர்களது உடல் நலம் மற்றும் மக்களின் நலன் கருதி இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.”
மீட்டர் ரீடிங்கை தானாக எடுக்க உதவும் ஸ்மார்ட் மீட்டரிங்க் முறை இந்த சவாலான் நேரத்தில் உதவியிருக்கக்கூடும். தி நகரில் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பைலட், கோவிட்-19 தொற்று காரணமாக முடங்கியது. “இந்த திட்டத்தை இப்பொழுது தான் தொடங்கினோம், ஊரடங்கு முடிவு பெற்ற பின்னரே இதனை மீண்டும் தொடங்க முடியும்,” என்றார் பழனிவேல்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மக்கள் மாற வேண்டும் என மேலும் அவர் கூறினார். “மொத்தம் 40% வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆன்லைனில் கட்டணம் செலுத்துகிறார்கள். ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் இந்த எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது, மேலும் பலர் இந்த முறைக்கு மாறுவார்காள் என நம்புகிறோம்.”
இது குறித்த சந்தேகங்கள் மற்றும் மேலும் தகவல் அறிய, உங்கள் பகுதியில் உள்ள துணை பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
*மின் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மே மாதம் ஐந்தாம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மின்கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா என தமிழக அரசு மற்றும் மின் வசதி வாரியம் மே மாதம் 18ஆம் நாளுக்கு முன் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பில் கணக்கிடும் முறை
[Read the original article in English here.]