சமீப காலமாக நாம் அதிகம் எதிர்கொள்ளும் காதல் நிராகரிப்பு கொலைகள் ஆண் சமுதாயத்தின் மீதான நம்பிக்கையையே புரட்டிப் போடுவதாக உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடக்க என்ன காரணம் என்று உங்களின் பலரைப் போலவே எங்களுக்குள்ளும் ஆதங்கம் மேலோங்கியது. இது போன்ற நிலைமை அமைவதை பற்றியும், எதிர்கொள்வது பற்றியும் பிரபல மனநல நிபுணரிடமும், முண்ணணி திரைப்பட இயக்குனரிடமும் அறிந்து கொள்ள முற்பட்டோம்.
நம் உடலில் ஏற்படும் வலிக்கு எவ்வாறு நம் மூளை செயல்படுகிறதோ அதே போன்று தான் நிராகரிப்பு ஏற்படும் பொழுது செயல்படுகிறது எனக் கூறுகிறார் பிரபல மனநல வல்லுநர் மினி ராவ். ஆனால் உடல் வலியை மறப்பது போல் எளிதில் நிராகரிப்பு ஏற்படுத்தும் வலியை மறக்க இயலாது. அந்த உணர்ச்சி வடுக்கள் நீண்ட நேரம் ஆழப் பதிந்திருக்கும். இதுவே சுய மரியாதை, தன்னம்பிக்கை ஆகியவற்றை கேள்விக்குறியாக்கும்.
எதிர்கொள்வது எப்படி?
சாதுவான பெண் முதல் நம்மிடம் மிகவும் நட்பாக பழகும் ஆண் நண்பர் வரை யார் வேண்டுமானலும் ஸ்டாக்கர்ஸ்ஸாக (பின் தொடர்பவர்கள்) இருக்க வாய்ப்புண்டு. ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் நபர்களிடம் கொஞ்சம் எச்கரிக்கையாகவே இருக்க வேண்டும் என்று ஸ்டாக்கர்ஸ்ஸை எவ்வாறு அறிந்து கொள்வது பற்றியும் எதிர்கொள்வதைப் பற்றியும் விவரித்தார். உங்களைப் புரிந்து கொள்வதற்க்கு முன்னரே உங்காளைப்பற்றி அதிகமாக அறிந்திருப்பது, சமூக வலைத்தலங்களில் உங்களின் செயல்பாடுகளை கவனிப்பது, யாரும் வீட்டில் இல்லை என்பதை அறிந்தால் தற்செயலாக வருவது போல் காட்டிக் கொள்வது, உங்களை தொட்டு நெருங்கி பேசாவிட்டாலும் எப்பொழுதும் உங்கள் அருகிலேயே இருக்கும் உணர்வு என்று இது போன்ற எந்த ஒரு சிறு அச்சம் ஏற்பட்டாலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று நீங்கள் விலக நினைக்கும் பொழுது, அதுவே அவர்கள் மூர்கதனமாக ஆக காரணமாகவும் அமையலாம். உங்கள் வெறுப்பையோ கோபத்தையோ உடனே வெளிப்படுத்தாமல் அந்த சூழலிலிருந்து பத்திரமாக வெளிவருவது பற்றி சிந்திக்க வேண்டும். உங்களின் நண்பரிடமோ, நம்பிக்கைக்கிற்கு பாத்திரமானவரிடமோ அல்லது உங்கள் வீட்டிலோ பகிர்வது நல்லது என்று அறிவுறுத்துகிறார் மினி ராவ்.
சினிமாவின் தாக்கம்?
திரைப்படங்கள் பெண்களை சித்தரிக்கும் விதமும், இளைஞர்களிடம் உண்டாக்கும் தாக்கம் பற்றியும் அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வணிக ரீதியான சினிமா இலக்கணங்கள் இல்லாது தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்ட இயக்குனர் ராம் அவர்களிடம் சினிமாவின் தாக்கம் பற்றி கேட்டோம்.
ஆணோ பெண்ணோ யார் செய்தாலும் ஸ்டாக்கிங் என்பது குற்றமே. முன்பெல்லாம் காதல் மறுக்கப்பட்டால், அந்த தோல்வி பெரும்பாலும் தற்கொலையில் முடியும். பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் அவர்களால் துணிச்சலாக முடியாது என்று சொல்ல முடிகிறது. அவர்களின் சுய மரியாதை, சுய விருப்பம் ஆகியவற்றின் மதிப்பறிந்து தங்களுக்கான பாதையை வகுத்துக்கொள்கிறார்கள். காலம் காலமாக பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த ஆண்களின் பார்வையோ இன்னும் மாறவில்லை என்பதே அடிப்படை பிரச்சனை. தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி குறைந்துள்ள நிலையில், இது போன்ற சூழல்கள் குறைந்திருக்க வேண்டும், மாறாக இது போன்ற கொடூர வன்முறை அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
மாற்றம் நம் கல்வி முறையில் தொடங்க வேண்டும். பாலியல் கல்வி என்பது உடல் ரீதியான போதனை என்பதில்லாமல் மனித உறவு, குடும்ப உறவு, பாலின மதிப்பு என்று எடுத்துச் செல்லுதல் வேண்டும்.
கலை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாகவே பெரும்பாலும் உள்ளது. அந்தந்த காலத்திற்கேற்றார் போல், கதைக் களம் பொறுத்து சில காட்சிகள் அமைவது தவறில்லை என்றாலும் அதனை உயர்த்திக் காட்டி தூண்டுதலாக அமையும் படி காட்சிகள் எடுப்பது குற்றமே. ஸ்டாக்கர்ஸ் அனைவரும் உக்கிரமானவர்கள் என்ற கண்ணோட்டமும் கூடாது என்று தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இப்படித் தான் பெண்கள் இருக்க வேண்டும், இதை தான் பேச வேண்டும், ஆண்களின் ஆசைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்ற போக்கு காலம் காலமாக புரையோடிக்கொண்டு தான் இருக்கிறது. கல்வி, வளர்ச்சி என்று பெண்கள் தனக்கான இலக்கை நோக்கி பயணிக்கும் இந்த காலக் கட்டத்தில், சில ஆண்களின் இது போன்ற செயல் கேள்விக்குறியதாகவே அமைகின்றது. இதை சரி செய்வது ஆண்களின் கைகளில் தான் உள்ளது.