Translated by Aruna Natarajan
“ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கழிவுகளை மாற்றுவது கார்பன் படிவத்தை உள்ளடக்கியது மற்றும் ஒரு இடத்தில் இருந்து குப்பைகளை மற்றொரு இடத்தில் கொட்டுவது சுற்றுச்சூழல் அநீதியாகும், இதன் விளைவாக மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமற்ற சூழல் ஏற்படுகிறது” என்கிறார் பூவுலகின் நண்பர்களின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜியோ டாமின்.
சமீபத்திய ஆண்டுகளில், சென்னை தனது கழிவு மேலாண்மை அமைப்பை மறுசீரமைக்க முயற்சித்து, குப்பைக் கிடங்கில் அடையும் கழிவுகளின் அளவைக் குறைக்க முற்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை அமைப்பின் கீழ், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மொத்தக் கழிவு உருவாக்கிகள்(Bulk Waste Generators – BWGs) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. விற்பனையாளர்களின் உதவியுடன் அவர்கள் உருவாக்கும் கழிவுகளை கையாளும் பொறுப்பு அவர்களுடையதே.
சென்னையில் மொத்த கழிவு உருவாக்குபவர்கள்
2016 ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள் மற்றும் 2019 ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை துணைச் சட்டங்கள் நகரத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கான விதிகளை வகுத்துள்ளன. ஒரு நாளைக்கு 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட கழிவுகளை உருவாக்கும் அல்லது 5000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தக் கழிவு உருவாக்கிகள் (BWGs).
BWG-கள், தங்களால் உருவாக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அங்கீகரிக்கப்பட்ட கழிவு சேகரிப்பவர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், நகரின் பல பகுதிகளில், தெருக்களில் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கொட்டும் பணியில், BWG-கள் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மண்டலம் 1 முதல் 15 வரை நகரம் முழுவதும் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் என 1411 மொத்த கழிவு உருவாக்கிகள் உள்ளன. BWG-களால் ஒரு நாளைக்கு 2,67,932 கிலோ கழிவுகள் உருவாகின்றன. 263 BWG-கள் மூலம் சுமார் 58,675 கிலோகிராம் குப்பைகள் அந்த இடத்திலேயே கையாளப்படுகின்றது.
சென்னையில் 619 BWG மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கழிவு பொறுக்குபவர் மற்றும் மறுசுழற்சியாளர்கள் மூலம் சுமார் 1,36,614 கிலோகிராம் கழிவுகளை அகற்றுகிறது என்பதைக் காட்டுகிறது.
“திடக்கழிவு மேலாண்மை விதிகளில் முடிந்தவரை, அடுக்குமாடி குடியிருப்புகளால் உருவாக்கப்படும் கழிவுகள் அவற்றின் வளாகத்திற்குள் உயிரி சிதைக்கக்கூடிய முறைகள் அல்லது பயோ-மெத்தனேஷன் (biomethanation) மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று ஜியோ கூறுகிறார்.
ஆயினும்கூட, நகரத்தில் உள்ள பல பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், சீராக கழிவுகளை பிரிக்க மற்றும் அதனை அகற்ற அங்கீகரிக்கப்பட்ட கழிவு பொறுக்குபவர் மற்றும் மறுசுழற்சியாளர்களை ஈடுபடுத்தத் தவறிவிட்டன.
கழிவுகளை அகற்றுவதில் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் குடியிருப்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கழிவு பொறுக்குபவர் மற்றும் மறுசுழற்சியாளர்களால் பிரெச்சனைகள் சந்திக்கின்றனர்.
திருவான்மியூரில் உள்ள ஷிவானி அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கலவையுடன், 105 குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.
குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், “நாங்கள் எங்கள் கழிவுகளை ஈரமான, உலர் மற்றும் அபாயகரமானவை என்று பிரித்து, ஒரு சதுர அடிக்கு ரூ. 2.7 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கிறோம் மற்றும் குப்பை கட்டணம் உட்பட எங்கள் செலவுகளை கவனித்துக்கொள்கிறோம். முந்தைய மறுசுழற்சியாளர் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளவும், மற்றொரு மறுசுழற்சியாளரைத் தேடவும் எங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்தார், அதிர்ஷ்டவசமாக, நாங்கள் மற்றொரு மறுசுழற்சியாளருடன் பதிவுசெய்து, சேகரிப்பு சீரானது. மற்ற பல அடுக்குமாடி குடியிருப்புகள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களால் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.”
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஷியானா அடுக்குமாடி குடியிருப்புகளில் 175 குடியிருப்புகள் உள்ளன. அடுக்குமாடி வளாகம் குடியிருப்போர் நலச்சங்கமானது அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளருடன் கையெழுத்திடவில்லை, ஆனால் பிரிக்கப்பட்ட கழிவுகளை அகற்றுவதற்கான அமைப்பைக் கொண்டுள்ளது.
“நாங்கள் ஒரு உள்ளூர் கழிவுப் பொருள் வியாபாரியுடன் பணிபுரிகிறோம், மேலும் அவர் வீடுகளில் இருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சேகரிக்கப்படுவதை உறுதிசெய்கிறார். பொறுப்புடன் அவற்றை அப்புறப்படுத்த வெவ்வேறு மறுசுழற்சியாளர்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு இவை மேலும் தரம் பிரிக்கப்படுகின்றன. மற்ற உலர்ந்த கழிவுகள் (மறுசுழற்சி செய்ய முடியாதவை) முடி, வீட்டுத் தூசி, டயப்பர்கள் போன்றவை வீடு வீடாகச் சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி ஒப்பந்த நிறுவனத்தால் சேகரிக்கப்படும் சங்கத் தொட்டிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன என்கிறார் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மனோ விஜயகுமார்.
“அபாயகரமான கழிவுகள் மாநகராட்சியிடம் அளிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் சேகரிப்பதற்காக சிவப்புத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது . சமையலறை மற்றும் சில தோட்டக் கழிவுகள் குடியிருப்பு வளாகத்திலேயே உரமாக்கப்படுகின்றன. எங்களிடம் தோட்டக்காரர் ஒருவர் உரம் தயாரிப்பதில் பயிற்சி பெற்ற ஊழியராக இருக்கிறார்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ரேடியன்ஸ் மாண்டரின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சி அனந்தகுமார் கூறுகையில், “அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களுக்கு மாநகராட்சி ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பல மறுசுழற்சியாளர்கள் வெவ்வேறு விகிதங்களை மேற்கோள் காட்டுகின்றனர், அதனால்தான் பல அடுக்குமாடி குடியிருப்புகள் முறையான கழிவு அகற்றலுக்காக அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களுடன் பதிவு செய்யத் தயங்குகின்றன.”
மறுசுழற்சியாளர்களால் குப்பை சேகரிக்கப்படுவதும் ஒரு பிரச்சினையாக உள்ளது. கழிவுகளை அகற்றுவதற்கு வெவ்வேறு காலக்கெடுவில் அவர்கள் செயல்படுவதால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கழிவுகள் குவிந்து கிடக்கும்.
“தோட்டக் கழிவுகளுக்கு வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாவது அகற்ற வேண்டும். மறுசுழற்சியாளர்கள் உரிய நேரத்தில் கழிவை சேகரிக்காததால், குடியிருப்புவாசிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தோட்டக் கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்கிறார் அனந்தகுமார்.
அண்ணாநகர் நியூரி பார்க் டவர்ஸின் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வினு நாயர் கூறும்போது, “எங்களுக்கு மறுசுழற்சியாளருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எங்கள் கழிவுகளை உலர், ஈரமான மற்றும் அபாயகரமானவை என 3 வகைகளாகப் பிரித்து, அவற்றை அறிவியல் ரீதியாக சேகரித்து அகற்றும் எங்கள் மறுசுழற்சியாளரிடம் ஒப்படைக்கிறோம். எங்கள் குப்பைகள் குப்பை கிடங்குக்குச் செல்லாது என்பதுதான் எங்கள் இலக்கு . நாங்கள் சரியான திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றுகிறோம், ஆனால் எங்கள் வளாகத்திற்கு அடுத்ததாக சாலையோரத் குப்பைத்தொட்டிகளின் வடிவத்தில் ஒரு இடையூறு உள்ளது, இது எங்களுக்கு ஒரு தொந்தரவை உருவாக்குகிறது.”
Read more: Where does the waste generated in your home go?
அடுக்குமாடி குடியிருப்புகளைக் கையாள்வதில் மறுசுழற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
அடுக்குமாடி குடியிருப்புகளுடன் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் மறுசுழற்சியாளர்கள். சில சமயங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுடனான ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் டி.வெங்கடேஷ் கூறுகையில், “கலப்புக் கழிவுகளை சேகரிக்க நாங்கள் மறுப்பது, தொழிலாளர் பிரச்னைகளால் சேகரிப்பதில் தாமதம், அல்லது குறைந்த விலையை வழங்கும் மற்றொரு விற்பனையாளரை ஈடுபடுத்தும் வாய்ப்பு ஆகியவற்றினால் அடுக்குமாடி குடியிருப்புகளுடன் சிக்கல்கள் ஏற்படுகின்றன.”
“கலப்புக் கழிவுகளைக் கூட சேகரிக்க ஒப்புக்கொள்ளும் பிற மறுசுழற்சியாளர்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்புகள் குறைந்த விலையைப் பெறும்போது, மக்கள் தங்கள் கலப்புக் கழிவுகளை ஒப்படைப்பது எளிது என்பதால் அந்த மறுசுழற்சியாளரிடம் மாறுகிறார்கள். புதிய மறுசுழற்சியாளரிடம் கழிவுகளைக் கையாள சரியான உள்கட்டமைப்பு உள்ளதா என்பது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் வளாகத்தில் இருந்து கழிவுகள் அகற்றப்படும் வரை, சில குடியிருப்புகள் முறையான அறிவியல் ரீதியான அகற்றலின் அவசியத்தை கருத்தில் கொள்வதில்லை,” என்கிறார் வெங்கடேஷ்.
மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வேஸ்ட் வின் அறக்கட்டளையின் ஐ பிரியதர்ஷினி கூறுகிறார், “பெரும்பாலான குடியிருப்பு வளாகங்கள் திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளை பின்பற்றுவதில்லை.”
“அவர்கள் தங்கள் கழிவுகளை உலர், ஈரமான மற்றும் அபாயகரமானதாகப் பிரிக்க வேண்டும், ஆனால் அவர்கள் மறுசுழற்சியாளர்களாகிய எங்களிடம், குப்பையை பிரித்தெடுக்க தொழிலாளர்களை ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்கள், மேலும் வேலைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த மறுக்கிறார்கள். கலப்புக் கழிவுகளைச் சேகரிப்பதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை, குப்பைகளைப் பிரித்தெடுக்க வலியுறுத்துகிறோம்,” என்கிறார் பிரியதர்ஷினி.
“சில குடியிருப்புகள் மிகக் குறைந்த விலையில் தீர்வுகளைத் தேடுகின்றன அல்லது குப்பைகளை இலவசமாக சேகரிக்கச் சொல்கின்றன. அவர்கள் பிரிக்கத் தயாராக இல்லை மற்றும் தங்கள் வளாகத்தில் இருந்து குப்பைகளை அறிவியல் பூர்வமாக அகற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாநகராட்சியும் அவர்களிடம் கண்டிப்பாக இல்லை. மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் அவர்களின் கலவையான குப்பைகளை அகற்றுகின்றனர், மேலும் குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பை கண்டறிந்து எங்களிடம் பதிவு செய்வதில்லை, ” என்று மற்றொரு மறுசுழற்சியாளரான எர்த் ரிசைக்கிளர் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் முகமது தாவூத் கூறுகிறார்.
“அடுக்குமாடி குடியிருப்புகள் குப்பையை தரம் பிரிக்க தவறினால் அல்லது பணம் செலுத்தத் தவறினால் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கான அறிவிப்பை நாங்கள் வழங்குகிறோம . ஆனால் சில நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் எங்களுக்கு அறிவிப்பை வழங்காமல், திடீரென்று ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது,” என்கிறார் பிரியதர்ஷினி.
“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் குடியிருப்பாளர்களின் மனநிலை மாற வேண்டும். தங்கள் வளாகத்தில் உள்ள கழிவுகளை அகற்றினால் போதும் என நினைக்கின்றனர். குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து மின்வெட்டு அல்லது தண்ணீர் அல்லது கழிவுநீர் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள், ஆனால் குப்பையை பொறுத்தவரை படித்தவர்கள் கூட கவலைப்படுவதில்லை. கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றுவதில் அசாத்திய ஆர்வம் காட்டும் குடியிருப்பாளர்கள் மிகக் குறைவு,” என்கிறார் முகமது.
குடியிருப்பு வளாகங்களில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மாற்றம் ஏற்படும்போதெல்லாம், பொறுப்பேற்கும் மற்றவர்கள் மறுசுழர்ச்சையாளர்களுடன் ஒத்துழைப்பதில்லை. நிர்வாகிகள் மாறினாலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு அமைப்பு இருக்க வேண்டும்” என்கிறார் பிரியதர்ஷினி.
Read more: Lessons from residents’ efforts to remove bins in Valmiki Nagar in Chennai
சென்னையில் மொத்த கழிவு மேலாண்மையை முறைப்படுத்துதல்
திருவான்மியூரைச் சேர்ந்த திடக்கழிவு மேலாண்மை ஆர்வலரான ஜெயந்தி பிரேம்சந்தர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள சிக்கல்களை மாநகராட்சியால் எளிதாகத் தீர்க்க முடியும்.
“முதலில், அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டிட அனுமதி வழங்கும் தருணத்தில் அங்கு திடக்கழிவினை அந்த வளாகத்திலேயே மேலாண்மை செய்யும் வகையில் வசதிகள் கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மற்றும் பிற உலர்ந்த பொருட்களை சேமித்து வைப்பதற்கான இடத்தையும் உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
“பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் இரவு நேரங்களில் இந்த சாலையோரத் தொட்டிகளில் தங்கள் கலப்புக் கழிவுகளை கொட்டுகிறார்கள், இது சட்டத்திற்கு எதிரானது. சாலையோரத் தொட்டிகளில் சட்டவிரோதமாக கொட்டுவதையும், குப்பைகளை அந்தந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரிப்பதையும் ஊக்குவிக்காமல் இருக்க மாநகராட்சி அவர்களின் களப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்கிறார் ஜெயந்தி.
சூர்ய பிரபா, அர்பேசர் சுமீத் ஃபெசிலிட்டீஸ் லிமிடெட் கூறுகையில், “அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் தங்கள் வளாகத்தின் முன் வீடுகளின் எண்ணிக்கை, மறுசுழற்சியாளர் பெயர் மற்றும் உரம் தயாரிக்கும் வசதி மற்றும் குப்பைகளை அகற்றும் முறை ஆகியவற்றை விவரிக்கும் அறிவிப்பு பலகையை வைத்திருக்க வேண்டும்.”
“முறையான கழிவு மேலாண்மைக்கு குப்பையை தரம் பிரிப்பு மிக முக்கியமானது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்பவர்களுக்கு அதிகாரிகள் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். குப்பைகளைக் கையாள்வதற்கான கட்டணம் முந்தைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் பொதுமக்கள் மற்றும் பிறரின் எதிர்ப்பின் காரணமாக அது திரும்பப் பெறப்பட்டது. முறையான கழிவு மேலாண்மைக்காக கட்டணம் செலுத்தாதவர்களிடமிருந்து கட்டணம் அல்லது அபராதம் விதிக்க அரசியல் மற்றும் அதிகாரத்துவ விருப்பம் இருக்க வேண்டும்,” என்று ஜியோ கூறுகிறார்.
மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை தலைமைப் பொறியாளர் N மகேசன் கூறுகிறார், “அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் கழிவுகளை மறுசுழற்சியாளருடன் தரம் பிரித்து அளிக்க. ஆனால் அவர்கள் அதை விதிகளின்படி செய்யவில்லை. இதில் தவறியவர்களைக் மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து அபராதம் விதிக்கும்.”
மறுசுழற்சியாளர்களின் முறையான செயல்களை பொறுத்தவரை, மகேசன் கூறுகிறார், “மாநகராட்சியில் பதிவுசெய்யப்பட்ட மறுசுழற்சியாளர்களின் முழு பட்டியல் கண்காணிக்கப்படும் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்பு அவ்வப்போது சரிபார்க்கப்படும். விதிமுறைகளிலிருந்து ஏதேனும் மீறல்கள்இருந்தால் அவர்கள் தடை செய்யப்படுவர். மறுசுழற்சியாளகள் சாலையோர குப்பைத்தொட்டிகளில் கொட்டினால், அவர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.”
[Read the original article in English here.]