Translated by Sandhya Raju
கடந்த 6 வருடங்களாக காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள வைகுண்ட் சுந்தரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். தண்ணீர் லாரியை நம்பி தான் நாங்கள் உள்ளோம், அதுவும் கோடை காலத்தில் தண்ணீருக்காக நிறைய செலவிழப்போம். அதனால், தண்ணீர் உபயோகத்தை கண்காணிக்கவும், அதை பொறுத்து செலவை பகிரவும், வீணாக்கலை தடுக்கவும் எண்ணினோம். இதற்கான நல்ல நிலையான தீர்வாக நீர் மீட்டர் வழியை கண்டறிந்தோம்.
நீர் துயரங்கள்
நகரம் விரிவாகும் போது, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இது ஓ.எம்.ஆர் சாலையில் வசிப்பவர்களுக்கு வெகுவாக பொருந்தும். பெரு நகர எல்லைக்கு உட்பட்டிருந்தாலும் குழாய் வழி தண்ணீர் இன்னும் இல்லாத நிலையில், நாங்கள் இன்றும் தண்ணீர் லாரியை நம்பியே உள்ளோம்.
Read more: Why more Chennaiites should have water meters in their home
பருவ காலம் பொறுத்து நீர் வினியோகம் வேறுபடும், மேலும் லாரி மூலம் தண்ணீர் பெறுவது அதிக செலவும் ஆகும். பல குடியிருப்பு வாசிகள் தண்ணீர் உபயோக அளவை தனியாக கண்காணிக்காததே இதற்கு காரணம். ஆனால், தாங்கள் உபயோகிக்கும் அளவுக்கு மட்டுமே பணம் தர வேண்டும் என பல பேரின் எண்ண ஓட்டமாக உள்ளது.
இந்த காரணத்திற்காகவே நீர் மீட்டர் உபயோக்கிப்பை கொண்டு வந்தோம். தண்ணீர் தேவை மற்றும் உபயோகிப்பை கணிக்க இந்த நீர் மீட்டர் நிறுவல் பெரிதும் உதவியுள்ளது.
ஏன் நீர் மீட்டர்?
எட்டு ஏக்கர் பரப்பளவில், வைகுண்ட் சுந்தரம் குடியிருப்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள், இரட்டை வீடுகள் மற்றும் தனிப்பட்ட வில்லாக்கள் என 40 பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்கு மாடி பிளாக்கிலும், 12 வீடுகள் உள்ளன. இவர்களுக்கு தனித்தனி தண்ணீர் சேகரிப்பு பம்பு, மற்றும் மேல்நிலை தொட்டி உள்ளது.
நிலத்தடி நீர் மிகவும் குறைவாகவே உள்ளதால், தின உபயோகத்திற்க்கு மெட்ரோ தண்ணீர் மற்றும் தனியார் லாரி தண்ணீரை நம்பியே உள்ளோம். ஒவ்வொரு பிளாக்கில் உள்ள குடியிருப்புகள் தங்களின் தேவைக்கேற்ப்ப தண்ணீர் லாரியை பெற்று செலவை பகிர்ந்து கொள்வர். முதலில், ஒவ்வொரு பிளாக்கிலும் வாழும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நீர் செலவைப் பகிர்ந்து கொண்டோம். ஆனால், இதற்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. பக்கத்து வீட்டில் விருந்தினர்கள் வருகை, அல்லது சில நாட்கள் தாங்கள் ஊரில் இல்லாதது போன்ற சூழல்களை காரணம் காட்டி செலவு பகிர்தல் குறித்து சில குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தனர்.
இது போன்ற பல பிரச்சனைகள் எழுந்ததால், இதற்கு ஒரு தீர்வை தேட தொடங்கினோம். அப்பொழுது தான், நீர் மீட்டர் குறித்து தெரிந்து கொண்டோம். மின்சார மீட்டர் போல், அவரவர் வீட்டில் நிறுவப்படும் நீர் மீட்டரை கொண்டு உபயோகிப்பை அறியலாம். அதை பொறுத்து செலவு பகிர்தலையும் நிர்யணிக்கலாம்.
Read more: Chennai will be a water abundant city in five years: Metro Water official
மீட்டர் வகைகளை தேர்ந்தெடுக்கையில், தொழிற்சாலையில் உபயோகிக்கப்படும் விலை கூடுதலான மீட்டரை தேர்ந்தெடுத்தோம். இவை நீண்ட காலம் பழுதின்றி வேலை செய்யும் என்பதால் இதை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். மேலும் பொறுத்துவதில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. ஒவ்வொரு வீட்டின் மேல் நிலை தொட்டியிலும் ஃபில்டருடன் சேர்த்து இது இணைக்கப்பட்டது.
நீர் மீட்டர் எவ்வாறு பயனளித்தது?
மீட்டர் பொறுத்தப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக்கிலும் நீர் பயன்பாட்டு அளவை அறிந்து கொள்ள முடிந்தது. மாதா மாதம் ஒவ்வொரு வீட்டின் மீட்டர் ரீடிங்கை நான் பதிவு செய்தேன். பின்னர் இது கூகிள் விரிதாளில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாத கணக்கீடு கண்காணிக்கப்படுகிறது. ஸ்ப்லிட்வைஸ் என்ற செயலி மூலம் ஒவ்வொரு வீட்டிற்கான தொகை கணக்கெடுக்கப்படும். வாட்ஸப் மூலம் தரவுகளை அனைவரிடமும் பகிர்கிறோம். பெரும்பாலனவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவர், இந்த தகவலையும் செயலியில் நான் பதிவேற்றம் செய்கிறேன், அதற்கேற்ப நிலுவைகளும் பராமரிக்கப்படுகிறது.
தாங்கள் எவ்வளவு நீர் உபயோகிக்கிறோம் என குடியிருப்பு வாசிகள் அறியும் போது, அதற்கேற்ப பயன்பாட்டை சீராக்கி, செலவையும் குறைக்க முடிகிறது. தண்ணீர் சேமிப்பையும் இது அதிகரித்துள்ளது. அதே போல் உபயோகத்திற்கேற்ப செலவையும் பகிர இந்த மீட்டர் உதவுவதோடு, வீண் விவாதத்தையும் தவிர்க்க உதவுகிறது.
எங்கள் குடியிருப்பில் சிறந்த, நிலையான வாழ்க்கைக்காக நாங்கள் மேற்கொண்ட சில முயற்சிகள் இவை. எங்களால் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்றும், மேலும் பலரையும் எங்களின் இந்த முயற்சி ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
[Read the original article in English here.]