மாநகரின் ஒரு பரபரப்பான சாலையில் நீங்கள் பயணித்துக் கொண்டோ அல்லது பேருந்திற்காக காத்திருக்கும் போதோ மின்னல் வேகத்தில் அச்சுறுத்தும் அலறல் சத்தத்துடன் உங்களை பயமுறுத்திக் கடந்து செல்லும் வித்தியாசமான தோற்றம் கொண்ட இரு சக்கர வாகனங்களைப் பார்த்ததும் உங்களுக்குள் என்ன உணர்வு உண்டாகிறது?
எதற்கு இத்தனை அவசரம் என்கிற எரிச்சலும் அதே சமயம் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்கிற பதைபதைப்பும் ஒரு சேர தோன்றி ஒரு உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றால் அதுதான் அந்த நிகழ்வை காணும் எல்லோருக்குமானதாக இருக்கிறது.
இந்த அசுரவேக ஓட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் யார் ? எந்த நோக்கத்திற்காக இவ்வாறு ஓட்டுகிறார்கள் ? இதனால் இவர்களுக்கோ எதிர்ப்படுபவருக்கோ எதுவும் ஆபத்து ஏற்படுகிறதா ? இது ஏதாவது ஒருங்கிணைப்பிற்கு கீழ் நடக்கும் பந்தயமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடக் கிளம்பினால் அங்கு பல பூதாகரமான உண்மைகள் புலனாகி நம்மை பயம் அப்பிக் கொள்கிறது.
பதைபதைக்க வைக்கும் பைக் மற்றும் ஆட்டோ ரேஸ்
ஐந்து பேரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத் தலைவர் ஒருவர், ஒவ்வொரு காலையிலும் நிகழ்வது போல் அன்றும் வழமை போல டிபன் பாக்ஸ் தாங்கிய பையை முதுகில் தவழவிட்டுக் கொண்டு, ஒரு சாதாரண பைக்கில் சர்வஜாக்கிரதையாக அலுவலகம் சென்று கொண்டு இருக்கிறார். திடீரென அவரின் பின்புறமாக ஒரு பயங்கர வேகமெடுக்கும் பைக் சத்தம். அது எழுப்பும் ஒலி சாதாரணமாதாக இல்லையே என அவர் சிந்தித்த நொடியே அவர் மீது அந்த பைக் மோதித் தூக்கியெறியப்பட, உயரே இருந்த ட்ரான்ஸ்பார்மரில் தலை அடிபட்டு மூளை வெளியே வந்துவிழுந்து அதே இடத்தில் அவர் மரணித்து விட அவரை நம்பியிருந்த ஐந்து உயிர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.
இந்த கொடூர நிகழ்வுகள் எல்லாம் சாதாரணமாக ஆங்காங்கே நடக்கும் விபத்துக்கள் அல்ல, சாதனை வீரர்களாக தங்களைக் கருதிக் கொண்டு பல அப்பாவி உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் பந்தய வெறி கொண்ட அந்த பாதகர்களின் செயல்கள் தான் இவை.
இதில், அவர்களும் பலியாகவே செய்கிறார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தை சார்ந்தவர்கள் அவர்களைத் தம்முயிர் தந்து ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட ஒரு வீரராக உருவகப்படுத்தி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்தால் வாரத்திற்கு ஒன்றென புதிய பதாகை ஒன்று “நண்பா மண்ணைவிட்டு மறைந்தாலும் மனதைவிட்டு மறையவில்லை” என்ற வாசகத்துடன் ரேசர் குமாருக்கோ அல்லது ரேசர் ரவிக்கோ இல்லை இன்னொரு நபருக்கோ பெயர் மட்டும் மாற்றப்பட்டு காட்சிக்கு உயர்த்தப்பட்டிருக்கும். ஆனால், இழப்பை எதிர்கொண்ட அவர்களின் வீட்டிலோ ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்துடன் துக்கம் கப்பியிருக்கும்.
ஆபத்தான இப்படிப்பட்ட பந்தயங்களில் இருசக்கர வண்டிகள் மட்டும் ஈடுபடவில்லை. மூவுருளை ஆட்டோக்களும் அவ்வாறே ஈடுபடுத்தப்படுகின்றன. “இது ஒன்றும் புதுசு இல்ல 30 வருடத்துக்கும் மேல் சென்னையில நடக்குது. ஜல்லிக்கட்டு மாதிரி இதுவும் ஒரு வீரவிளையாட்டு தான்” என்று ஒரு போட்டியாளர் கூறியிருப்பதை நாம் காணமுடிகிறது. இங்கும் இதற்காக ஆட்டோக்களில் பிரத்தியேக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன் விளைவாக ஆபத்தான பந்தயங்களும் அகால மரணங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அடிப்படை வசதிக்கே அல்லல்படும் அம்மாதிரியான குடும்பங்களிலிருந்து வரும் பெரும்பாலான ரேசர்கள் தான் இதில் வெறித்தனமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். இதில் ஈடுபாடும் திறமையும் கொண்ட இளைஞர்களுக்கு கடன் வசதி ஏற்பாடு செய்தோ இல்லை ரேஸுக்கு பைக்கை தந்தோ உதவுவதற்கு பலர் உள்ளனர்.
இத்தகைய உதவிகளை செய்பவர்கள் பெரும்பாலும் மெக்கானிக்குகள் என்பதை அறிந்து கொண்ட நமக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் குறிப்பிட்ட பைக்கை மாற்றியமைப்பதில் அந்த வட்டாரத்திலேயே தான் தனிப்பெயரை சம்பாதிக்க வேண்டும், அதனால் தன்னை நோக்கி வாடிக்கையாளர் கூட்டம் வரவேண்டும் என்கிற இவர்களின் வியாபார யுக்தியும் கெத்து சம்பாதிக்கும் தீவிரமும் நம்மைத் திகைப்படைய வைக்கிறது.
அத்துடன், எல்லா ஏற்பாடுகளையும் இவர்களே செய்வதால் பரிசோ பயனோ இவர்களுக்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்நிலையை மெல்ல உணரும் இளைஞர்கள் அந்த பிடியிலிருந்து சிறிது சிறிதாக வெளியில் வந்து சுயமாக இயங்கும் பல அணிகளாக விரவி வரும் தகவல்களையும் அறிய முடிகிறது.
நிறுவப்பட்ட அமைப்பாக ‘ரோட் ரேஸ்’
’கெத்து’ என்ற பெயரில் போட்டி கலாச்சாரத்தால் வெறியூட்டப்பட்டும் “ஓடாது பறக்கும்” என்ற மாயை நிறைந்த வணிக வலையின் ஈர்ப்புக்கும் உள்ளாகி தங்கள் விலைமதிக்கவியலா அரிய வாழ்வை இப்படி இழப்பவர்கள் அதிகமாக பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களாகவே உள்ளனர். ஆனால், இவர்களைச் சுற்றி பார்வையாளர்களும் பந்தயம் கட்டுபவர்களும் வாகனத்தை அதற்கேற்ப மறுசீரமைப்பு செய்து தரும் மெக்கானிக்குகளும், போட்டியைத் துவங்கி வைக்கும் தலைவருமென பெரிய பட்டாளமே சூழ, முற்றிலும் சட்டவிரோதமானதும் துளியும் சகமனிதர் மீது அக்கறை இல்லாததுமான இந்த செயல், ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழில் போல் இருக்கிறது.
வாட்ஸப் குழு, பேஸ்புக் குழு என்று ஒரு வலைப்பின்னலை வைத்துக் கொண்டு நிகழும் இடம், நேரம், பந்தய வகை என்பன பகிரப்பட்டு குறித்த நேரத்தில் போட்டியாளர்களும் ரசிகர்களும் குழும சிலநேரம் காவல்துறையே கட்டுப்படுத்த முடியாத நிலையில் திடுமென நிகழ்த்தப்படுகிறது. போட்டியில் 10,20, என்று ஆரம்பித்து 50 வரையிலான எண்ணிக்கைக் கொண்ட பைக்குகள் பங்கேற்கின்றன.
பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களிலும் சிலவேளைகளில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும் கூட இந்த ஆபத்தை அரங்கேற்றுகிறார்கள். அதிகமாக மெரினாவில் உள்ள காமராஜர் சாலை, பெரம்பூர் மேம்பாலம் போன்று நள்ளிரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்த இடங்களை இவர்கள் தேர்வு செய்கின்றனர்.
பந்தய சவால்களையும், அவற்றிற்கான பரிசுகளையும் குறித்து கிடைத்த தகவல் நம்மை சற்று மிரளச் செய்கிறது. சிலநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்த ஒரு சிக்னலை இரண்டு நிமிடத்தில் கடந்தால் உடனே இருபதாயிரம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும். மற்றவைகளில் பல ஆயிரங்கள். அதைவிட அவர்கள் பெரிதாக நினைப்பது ‘கெத்து‘ என்பதைத் தான்.
அதனடிப்படையில் வெற்றி அடைந்தவர் தோல்வியடைந்தவரின், அவர் உயிராக நேசிக்கும் லட்சத்துக்கும் மேல் மதிப்பு கொண்ட பைக்கை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றுகூட ஒரு விதி இருக்கிறதாம். இன்னுமொரு போட்டி ரகம் சாலையில் எதிர்திசையில் ஓட்டுவதாகவும் இருக்கிறது. மேலும் வீலிங் செய்தல், சர்க்கஸ் போன்று சாகசம் செய்து கொண்டே வேகம் பிடிப்பது, இப்படி பல போட்டி ரகங்கள் உள்ளன.
மேலும் இதில் ஒரு தனிநபர் மட்டும் ஈடுபடுவதில்லை பைக்கில் பின்னால் ஒருவர் ஜாக்கி என்று அழைக்கப்படும் ஒருவர் உயிருக்கு உத்திரவாதமில்லாத ஒரு நிலையாயினும் வீரத்துடன் அமர்ந்திருப்பார். இவரது வேலை தம்மை எத்தனை பேர் விரட்டி வருகிறார்கள் அல்லது இன்னும் வேகமெடுக்க வேண்டும் என்றோ அல்லது தேவையான வேறு தகவல்களையோ கைவிரல்களால் ஓட்டுபவரின் மேல் அதற்கேற்ப சைகையுடன் தொட்டுணர்த்துவது தான். அதேவேளை விபத்து ஏற்பட்டால் முதல் உயிர்பலி இந்த ஜாக்கி தான். இப்படி அர்த்தமில்லாத கெத்துக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் இளைஞர்கள்.
இதில் ஈடுபடுபவர்களை எவ்வாறு பாதிக்கிறது?
பொதுவாகவே, மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களில் வாழும் சிறுவர்களும் இளைஞர்களும் தான் இதில் ஈடுபட்டு வேறு இலக்கின்றி திரிந்து விபத்தில் சிக்கும் போது உயிர்பலியாவதும், நிரந்தர ஊனமாவதும் அல்லது அப்பாவிகள் மீது மோதி அவர்கள் பலியாக காரணமாகி சட்டநடவடிக்கைகளுக்கு உள்ளாவதுமென்பதால் அவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையே சிதைந்து போய் விடுகிறது.
மட்டுமின்றி எதிர்கால வாழ்வில் பொறுப்பாக வேலை செய்து குடும்பத்துடன் வாழலாம் என்றால் சமூகத்தில் நல்லபெயரில்லாது அது இயலாது போய்விடுகின்றது. இப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் வேலை தேடிசென்ற இடத்தில் அடையாளம் காணப்பட்டு [சமூக ஊடகம், சேனல்களில் அந்த நபரின் வீடியோ வெளி வந்ததால்] அவமானத்திற்குள்ளாகி அவர் தற்கொலை வரை சென்று திரும்பியுள்ளார். அவரே ஒரு சேனலில் தனது அனுபவத்தை வேதனையுடன் விவரித்துள்ளார். ஒருமுறை ஜாக்கியாக சென்ற ஒருவர் கண்முன்னே நிகழ்ந்த ஒரு கொடூரமான விபத்தைக் கண்டு அந்தப் பக்கமே இப்போது செல்வதில்லை என்றார்.
தடுக்கும் வழிகள்
காவல்துறை அவ்வப்போது இவர்களை பிடித்து வழக்கு பதிவதோ அபராதம் விதிப்பதோ நிகழ்ந்தாலும் பெரும்பாலும் சிறுவர்கள் கல்லூரி மாணவர்கள் என இருப்பதால் கடுமையான தண்டனை கொடுக்காது விடப்படுவதும் இது தொடர்வதற்கு காரணமென கூறப்படுகிறது. சிலநேரங்களில் உரிய வயதை எட்டாதவர்களிடம் வாகனங்களைத் தரும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இன்னும் இது கடுமையாக்கப்பட வேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.
இன்னொரு தீர்வாக இதுபோன்ற பந்தயங்களின் மீது ஆர்வம் கொண்டவர்களை அதற்கெனவே பயிற்சி தரும் இடங்களுக்கு வழிநடத்துவது மிகச்சிறந்த ஒன்றாக உள்ளது. இது குறித்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கூட அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு தாமே உதவுவதாகவும் கூறுகின்றனர். போக்குவரத்து சாலைகளில் ஆபத்தான பந்தயங்கள் நடத்துவது முற்றிலும் பொறுப்பற்றத்தனம் அதற்கான ட்ராக்குகள் பிரத்தியேகமாக இருக்கின்றன என அறிவித்து விடுக்கும் இந்த அழைப்புக்கு இவர்களை செவிமடுக்கச் செய்வதே சரியான தீர்வாகத் தெரிகிறது.