உலக வரலாற்றிலேயே கொரோனாவுக்கு முன் (கொ.மு) கொரானாவுக்குப் பின் (கொ.பி) என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமைகளைப் புரட்டிப் போட்ட இந்த வைரஸ் தாக்கம், சென்னையிலும் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய நிலைமாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதன் விளைவாக அதன் அடையாளமான ’வந்தோரை வாழவைக்கும் சென்னை’ என்பதை அது இழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு கேள்வி இன்று நம் முன்னே நிற்கிறது.
’புதிய இயல்பு நிலை’ கொஞ்சம் கொஞ்சமாக உருபெறத் துவங்குகையில் சென்னை இனி முன்பு போல் இருக்கப் போவதில்லை என்ற சமிக்ஞை கிடைக்கிறது. ஆம், அதன் மக்கள் தொகை, பரபரப்பு, ஏதோ ஒன்று செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று இங்கு வந்து சேரும் மக்களின் வரத்து என எல்லாமே மாறிவிட்டிருக்கப் போகிறது.
சென்னை என்றாலே அனைத்து வித மக்களையும் பாரபட்சமின்றி அரவணைக்கும் அதன் தன்மைக்குப் பெயர் போனது. அதனால் அதன் ஜனத்திரள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்புக்காகவும் பல்வேறு துறைகளிலும் ஒரு உச்சத்திற்கு செல்லும் வாய்ப்பு இங்கு உள்ளதென்று படையெடுத்தவர்களும் தான்.
இதில் சமீபத்திய வரவுகளாக வடகிழக்கு மற்றும் சில வட மாநிலங்களிலிருந்து குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களும் அடங்குவர்.
இப்படி குடியேறியவர்களில் பெரும்பான்மையானோர் குறைந்த வருவாய் கொண்டு வாடகை வீட்டில் குடியிருந்து பெரிய சேமிப்பு ஏதுமின்றி கஷ்டஜீவனம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் தான். இதில் பலருக்கு நாட்கூலி அல்லது சிறிய வியாபாரங்களின் மூலம் தினவருவாய் தான் வாழ்வாதாரத்திற்கான ஆதாரமாக இருந்தது.
ஒரு தற்காலிக தீர்வை நோக்கிய நகர்வு
ஒரு நீண்டகால திட்டத்துடன் பயணித்தவர்களின் வாழ்க்கை திடீரென திசை மாறியதால் ஏற்பட்ட விளைவாக நிகழ்ந்து கொண்டிருப்பது தான் இன்று நாம் காணும் பெரிய அளவிலான இடப்பெயர்ச்சி.
அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில், மாதம் பிறந்து விட்டால் செலுத்த வேண்டிய வீட்டு வாடகை என்பது ஒரு பூதாகரமான பிரச்சினையாகத்தானே உருவெடுக்கும்? நிச்சயமாகவே, இடம் பெயர்ந்து செல்ல இது ஒரு பிரதான காரணியாகியது.
மிகச்சில வீட்டு உரிமையாளர்கள் மட்டும் மூன்று மாத காலம் வரை வாடகையில் தள்ளுபடி செய்திருக்கும் நிலையில் பெரும்பான்மையானோர் ஒரு மாதம் மட்டும் பாதி வாடகை என சலுகை காட்டியிருப்பதையும் அறிய முடிந்தது.
வீட்டு உரிமையாளரிடம் செலுத்தியிருந்த முன் பணம், வாடகைக்காக கரைந்து கொண்டே வர ஊரடங்கு மென்மேலும் நீடிக்க, எதிர்காலம் ஒளியிழந்த ஒரு தோற்றத்தினைத் தர, அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற முடிவுடன் சொந்த ஊரை நோக்கிப் பயணப்பட்டோர் எண்ணிக்கை மிகப் பெரியது.
வேதனையுடன் சென்னையை விட்டு வெளியேறும் ஒரு முடிவை எடுக்கத் தள்ளப்பட்ட இன்னொரு கூட்டம் சிறிய அல்லது பெரிய நிறுவனங்களில் வேலையிலிருந்த இளைஞர்கள். எத்தனையோ கனவுகளுடன் இவர்கள் தமிழகத்தின் கிராமப் புறங்களிலிருந்து சென்னை நோக்கி வந்து உச்சம் நோக்கி உயர முயன்று கொண்டிருந்தவர்களில் பலர் விவசாயம் பொய்த்துப் போன குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.
இவர்கள் 4-5 பேர் வரை இணைந்து வாடகை வீடமர்த்தி பல்வேறு தளங்களில் நம்பிக்கையோடு உழைத்து போராடிக் கொண்டிருந்தவர்கள், முதல் முடக்கமான 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட போது ஊருக்கு சென்று சமாளித்து விட்டு வந்துவிடலாம் என்று ஊருக்கு சென்றவர்கள் தான். தொடர்ந்து மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் திரும்பி வர முடியாது அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் பணிபுரிந்த இடங்களுக்கு தொடர்பு கொண்டு தங்கள் வேலை குறித்து விசாரிக்கும் போது “சொல்கிறோம்” என்ற நிச்சயமற்ற பதில் ஒன்றே சென்னையிலிருந்து அவர்களுக்கு செல்கிறது.
மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்து சென்னையை விட்டு வெளியாகியுள்ளவர்கள் திரைப்படவுலகில் இருந்த சிறிய அளவில் வாய்ப்பு கொண்ட நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், வாய்ப்பு தேடி வந்தவர்கள் மற்றும் அதன் தொடர்புடைய மற்றவர்கள் என சொல்லலாம்.
இதில் சில துணை நடிகர்கள் தாங்கள் கிராமங்களுக்கு சென்று விவசாயம் செய்ய முயற்சிக்கப் போவதாகக் கூற, ஒரு இயக்குநர் பலசரக்கு கடை வைத்து அமர்ந்து விட, இன்னொரு நடிகர் காய்கறி வண்டி வைத்து வியாபாரம் செய்வதாக செய்திகளில் வருகிறது.
எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என காலக்கெடு எதையும் இப்போது சொல்ல முடியாத ஒரு நிலையில் அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் கடுமையானதால் அவர்களும் சென்னையை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு வெறும் கையுடன் திரும்பிக் கொண்டுள்ளனர்.
இப்படி கட்டிடத் தொழிலாளர்கள், சிறிய அளவில் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலதரப்பினரும் சென்னையை விட்டு நகர ஆரம்பித்துள்ளனர்.
வீடுகளின் முன்பும் கடைகளின் முன்பும் ’டூலெட்’ அறிவிப்புகள் அதிகமாகக் காணத் துவங்கியுள்ளது. பிரமாண்ட வணிக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து கொண்டிருக்கின்றது.
மாநகரை ஆக்கிரமித்திருக்கும் ‘டூலெட்’ பதாகைகள்
சென்னை முகப்பேர் பகுதியிலுள்ள ஒரு சிறிய தேநீர்க்கடை அது. நாளொன்றுக்கு பல நூறு வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் வாழைப்பூ வடை மற்றும் கருப்பட்டி காபிக்காக படையெடுப்பார்கள். பிற்பகல் 3 மணிக்குத் திறந்தால் இரவு 8 மணி வரை கூட்டம் களைகட்டும் அந்தக் கடை தற்போது டூலெட் பதாகையுடன் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது.
இது போன்று பரபரப்பான வியாபாரத் தலங்களாக விளங்கிய பல சிறு வணிகக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. வீதிக்குவீதி வியாபித்திருந்த அழகு நிலையங்களுக்கும் அதே நிலைதான். அத்துடன் சென்னையின் முக்கியமான குடிசைத் தொழில் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதிகரித்திருந்த இட்லி மாவுக் கடைகளில் பல காணாமல் போய் விட்டன.
முன்பெல்லாம் சென்னையில் வீடு தேடுவது மிகக் கடினமான காரியமாக இருந்த நிலைமை மாறி தற்போது பார்க்கும் இடங்களிலெல்லாம் தென்படும் டூலெட் அறிவிப்புப் பதாகைகள் சென்னையின் தற்போதைய நிலைமையைப் பறை சாற்றுகின்றன.
ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனங்களின் வரவினால் கணிசமாக உயர்ந்த வீட்டு வாடகை மற்றும் முன்தொகைப்பணம் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. அப்படியும் அவற்றில் குடியேற ஆட்களில்லை என்பதுதான் நிதர்சனம்.
இது ஒரு புறமிருக்க, வீடுகள் மற்றும் வணிகத்தலங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வாடகைப் பணத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் தற்போது செய்வதறியாது தவிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளதால் தற்போது மாதாந்திரம் கட்ட வேண்டிய கடன் தொகை, வீட்டு வரி மற்றம் தண்ணீர் வரி எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய தொகையாக வந்து நிற்கிறது. வாடகையில் கிடைக்கும் வருமானம் இல்லாமல் இதை எப்படி செலுத்துவது எனத் தெரியவில்லை என்கின்றனர்.
மீண்டுமொரு துவக்கம் சாத்தியமா?
கடந்த சில மாதங்களாக சென்னையைப் புரட்டிப் போட்ட பெருந்தொற்று தற்போது நமது மாநில சுகாதாரத் துறையின் திறமையான செயல்பாட்டினால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2000 லிருந்து தற்போது 1500, 1200 என்று குறைந்து கொண்டே வருவது சென்னையின் மீட்சிக்கான ஒரு அறிகுறியாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
அத்துடன் பல சர்வதேச நிறுவனங்கள் பெருமளவில் தொழில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. அப்படியொரு சூழ்நிலை மலர்ந்தால் சென்னை மீண்டும் செழிப்புற்று எல்லா தரப்பினரும் இணைந்து இன்புற்று வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாகத் தென்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மீண்டும் வரப்போகிறவர்களை வாழவைக்கும் வகையில் நிமிர்ந்து நிற்க தான் போகிறது எல்லோருக்கும் அபயம் தரும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டு வரவேற்கத்தான் போகிறது இந்த விஷயம் இந்த கட்டுரையில் இறுதியாக இருப்பது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது