ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் நமது கவனத்தை அவ்வளவாக கவராமல் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக அவை மூடப்பட்டிருக்கும் வேளையில் தான் அவற்றின் இருப்பும் சேவையும் எவ்வளவு மகத்தானது என்பதை நம்மால் உணர முடிகிறது.
இம்மையங்கள் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆரம்பக்கல்விக்கான ஒரு அஸ்திவாரத்தை இடுவது மட்டுமின்றி அவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உணவளிப்பதோடு மற்றும் அடிப்படை மருத்துவ தேவைகளையும் அளிக்கும் மையங்களாக செயல்பட்டு வந்துள்ளன.‘
அத்துடன் ஒரு குழந்தைகள் காப்பகமாகவும் அப்பகுதி வாழ் மக்களுக்கு அளப்பரிய சேவை செய்து வந்துள்ளன என்பது கூடுதல் அம்சமாகும். இப்பகுதியில் வாழும் குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்திற்கான முகாம்களும் இந்த மையங்களில் நடைபெறும்.
இவ்வாறாக, அதன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களுக்கு அவர்தம் வாழ்க்கையின் ஒரு ஒன்றிணைந்த அங்கமாகவே மாறிவிட்ட அங்கன்வாடிகள் அடைக்கப்பட்டிருந்த காலகட்டம் எத்தகைய ஒரு விளைவினை ஏற்படுத்தியது என்பது குறித்து சற்று ஆராய்ந்து பார்த்ததில் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
குழந்தைகளின் புகலிடமாகிய அங்கன்வாடி மையங்கள்
பூட்டப்பட்டுக்கிடந்ததால் உண்டான பாதிப்பு என்று பார்த்தால் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே கிடக்கவேண்டிய நிலை. அது எந்தளவுக்கு சாத்தியம் என்று நாமறிவோம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு பெரும் ஆறுதலாக விளங்கிய அங்கன்வாடிகள் பூட்டப்பட்டிருந்ததால் தம் குழந்தைகளை எங்கே விட்டுச் செல்வது என்கிற பரிதவிப்புக்கு ஆளானார்கள்.
வீட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்த சிலர் குழந்தைகளையும் கூட அழைத்துச் செல்ல வேண்டிய சூழல். ஆயினும் கொரோனா தொற்று காரணமாக இந்த ஏற்பாடு வேலைக்கு அமர்த்துபவர்களால் சில இடங்களில் அனுமதித்தாலும் பெரிதும் வரவேற்கப்படவில்லை. அதனால், சிலர் வேலைக்கு செல்லவே முடியாத சூழ்நிலையையும் சந்திக்க வேண்டியிருந்தது.
மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் தாய்மார்களின் நிலை இன்னும் கவலைக்குரியது. அவர்கள் தங்கள் குழந்தைகளையும் தம்முடன் அழைத்துச் சென்று வெட்டவெளியில் உட்கார வைத்து விட்டு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்துக்குத் தம் குழந்தைகளை ஆளாக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை எண்ணி நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு.
குழந்தைகளின் இயல்பே ‘துறுதுறு‘ வென்று இருப்பதுதான். அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பார்த்துக் கொள்வதைக் காட்டிலும் ஒரு கடினமான செயல் இல்லையென்கிறார்கள் அம்மாக்கள். இதனால், பெரும் அளவிலான உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு இவர்களும் குழந்தைகளும் ஆளானதாக அவர்கள் கூறுகிறார்கள்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அம்சாவுக்கு தங்கள் தெருவிலேயே உறவினர்கள் வீடுகள் இருப்பதால் சிறிது நேரம் அங்கே சென்று தம் குழந்தைகளால் விளையாட முடிகிறது. ஆனால், அப்படியொரு வாய்ப்பு இல்லாத குழந்தைகள் வெளியே வரவும் முடியாமல் உள்ளே இருக்கவும் முடியாமல் பட்ட அவஸ்தையை சொல்லி மாளாது என்கிறார் அவர்.
ஆவடியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் ஒருவர், தாய்மார்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு படும் பாட்டினை அலைபேசி வாயிலாகத் தெரிவிப்பதோடு அங்கன்வாடி திறப்பது குறித்து எப்போதும் விசாரிப்பதாகக் கூறினார்.
நோய்த்தொற்றின் அபாயம் குறித்த பயம், வருமானமின்றி வறுமையில் வாடும் நிலை, எதிர்காலம் குறித்த பெரும் கேள்வி இவையெல்லாவற்றையும் தாண்டி குழந்தைகள் படும் துன்பமே மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குழந்தைகள் வெளியே போவதைத் தடுக்க அவர்களை அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் அலைபேசியில் மூழ்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறித்தும் அவர் மிகுந்த வருத்தம் தெரிவித்தார்.
அங்கன்வாடியிலும் ஆன்லைன் சேவைகள்
குறிப்பாக சமூகத்தில் அடித்தட்டில் உள்ள மக்களுக்கு ஒரு பயனுள்ள பல சேவைகளை வழங்கி வந்திருந்த இந்த அங்கன்வாடிகளின் இயக்கம் முழுவதுமாக முடங்கி விட்டதா என்றால், அதுதான் இல்லை. சென்னை மாநகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி பணியாளரான திருமதி. ஷகிலா அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் சற்று ஆறுதல் தருவதாகவும் இருந்தன.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் ஒரு குறைந்த நேர அளவிலானக் கற்றல் நடப்பதாகவும், அதன் மூலம் அவர்கள் கதை மற்றும் பாடல்களைக் கற்றுக்கொள்வதுடன் வண்ணம் தீட்டுதல் போன்ற நடவடிக்கைகளை தாய்மார்களின் உதவியுடன் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறுகிறார். மேலும், அலைபேசி மூலம் குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் காலக்கிரம முறையில் உரையாடுவதாகவும் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்குவதாகவும் சொல்கிறார்.
அத்துடன், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் உணவுப்பொருட்களை உதவியாளருடன் சேர்ந்து பிள்ளைகளின் வீட்டிற்கே சென்று விநியோகித்து வருவதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
அதோடு மட்டுமின்றி, கர்ப்பிணி பெண்களுக்காக கிரமமான முறையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களையும் அலைபேசி வாயிலாகவே நடத்துவதோடு, குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையைக் கண்காணித்து, அவர்களுக்கான தவணை வரும்பொழுது, ஒவ்வொருவரையும் அழைத்து தகவல் தெரிவிப்பது போன்ற சேவைகளும் எந்தவித பாதிப்புமின்றி தொடர்ச்சியாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவையணைத்தும் செயல்பட்டு வந்தாலும் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப முடியாமல் போவது குறித்தான கவலைதான் பெரியதாக இருக்கிறது பெற்றோர்களுக்கு.
இந்த அடைப்புக்காலத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியமானது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உளவியலாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். தொலைக்காட்சியில் அதிக நேரம் ஒலிபரப்பப்படும் கொரோனா தொற்று மற்றும் மரணம் குறித்த செய்திகளால் குழந்தைகள் ஒருவித இனம் புரியாத அச்சத்திற்கு ஆளாவதோடு பல்வேறு உளரீதியான பாதிப்புகளும் உண்டாகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும், வேலைக்குப் போக முடியாமல் வருமானத்தை இழந்து வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெரியவர்களின் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் இவர்கள் மேலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. உளவியல் ரீதியான தாக்கங்கள் ஒரு நீண்ட கால பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதும் அது ஒரு மனிதனின் குணவியல்புகளையே பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இவற்றையெல்லாம் அவதானிக்கும்போது அங்கன்வாடிகளின் சேவை அதன் தேவையைக் கொண்டவர்களுக்கு எவ்வளவு இன்றியமையாத ஒரு ஏற்பாடாக இருக்கின்றது என்பதை நம்மால் உணர முடிகிறது.
அங்கன்வாடி மையங்களின் மதிப்புமிக்க செயல்பாடுகள்
கடந்த சில வருடங்களாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்பட்டு வருவதுடன், அங்கிருந்து வெளியேறும் குழந்தைகளுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களில் சில:
- ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்துதல்.
- உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி சமுதாய உணர்வு இவற்றை சிறு வயதில் இருந்தே நல்லமுறையில் பேணிக்காத்தல்.
- குழந்தை இறப்பு விகிதம், நோய்வாய்படுதல், சத்துணவு பற்றாக்குறை ஆகியவற்றைக் குறைத்தல்.
- தாய்மார்களிடையே இயற்கையிலேயே உள்ள குழந்தை வளர்ப்புத் திறமையை சத்துணவு மற்றும் நலவாழ்வு கல்வி மூலம் அதிகரித்தல்.
- மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
இந்த ஊரடங்கு காலத்தில் தம்முடைய இன்றியமையா தன்மையை உணர்த்திய அங்கன்வாடி மையங்களுக்கு அந்தந்த பகுதிவாழ் மக்கள் தம் ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் தம் பிள்ளைகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனையும் பேணும் ஒரு வாய்ப்பினைப் பெறுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.