Translated by Sandhya Raju
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வெல்ல தடுப்பூசி மிக அவசியம் என தற்போது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மந்த நிலையே காணப்படுகிறது. எட்டப்பட வேண்டிய இலக்கை விட தினந்தோறும் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மற்ற நகரங்களைப் போன்று சென்னையிலும் கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், பின்னர் மூத்த குடிமக்கள், பின் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு கட்டங்களில் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மே மாதம் முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நோக்கம் சரியாக இருந்தாலும், கள நிலவரம் வேறாக உள்ளது.
தடுப்பூசி இருப்பு மற்றும் நிலை
கோவிஷீல்ட், கோவேக்சின் என இரு பிரதான தடுப்பூசிகள் தற்போது போடப்படுகின்றன. மூன்றாவதாக, ரஷ்ய தயாரிப்பான ஸ்பட்னிக் சில தனியார் மருத்துவமனைகளில், ஒரு டோஸ் ₹995-க்கு போடப்படுகிறது. Dr. ரெட்டி லேபாரட்டிரிஸ் இதனை சந்தைப்படுத்துகிறது. இன்னும் சில தடுப்பூசிகள் தற்போது சோதனை ஒட்டத்தில் உள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் முன் களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டது. 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பு அரசிடம் உள்ளது. மே 14-ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசு 76,43,010 தடுப்பூசிகளை மாநிலத்திற்கு வழங்கியுள்ளது, இதில் 68,53,391 தடுப்பூசிகள் உயோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தான் அதிக அளவிலான தடுப்பூசிகள் வீணாகி உள்ளது. மே 4-ம் தேதி தரவு படி 4.13% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன, இதற்கு முன் 8% என்ற அளவில் இருந்தது. இது வரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள அளவின் அடிப்படையில், தமிழகம் பத்தாம் இடத்தில் உள்ளது. ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பீடும் போது, பீகார், உத்தர பிரதேசத்தை விட ஒரு இடம் முன்னால், அதாவது கடைசி வரிசையிலிருந்து 3 படி மேல் உள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு 100 தகுதியானவர்களில் 8 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவின் வலைதள தரவு படி, மே 11-ம் தேதி வரை, சென்னையில் மொத்தம் 17,33,153 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். 60 வயது மேற்பட்டவர்கள் 4,56,406 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 45 – 60 வயதுள்ள 5,12,262 பேரும், முன்களப்பணியாளர்கள் உட்பட, 18-44 வயதுடைய 2,31,355 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி 45 வயது மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தாலும், 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சவால்கள் உள்ளன. தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கை காரணமாக, மாநில அரசுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் இவர்களுக்கு இலவசமாக அளிக்கிறது. தனியார் மருத்துவமனைகள் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ₹850 மற்றும் கோவேக்சின் தடுப்பூசிக்கு ₹1250 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது..
சில தனியார் மருத்துவமனைகள் இந்த வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட இருப்பு பெறப்பட்டாலும், அரசுக்கு இன்னும் போதிய தடுப்பூசி வரவில்லை. கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தயாரிக்கும் நிறுவனங்கள் மேலும் தடுப்பூசிகளை வினியோகிக்க சில வாரங்கள் ஆகும் என தெரிவித்துள்ளதால், மாநில அரசு சர்வதேச டெண்டர் கோரியது. இத்தகைய சூழலில், அரசு மையங்களில் 18-44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள 13 லட்சம் தடுப்பூசிகளில் 6 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்பதால் தற்போதைக்கு 18-44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட இயலாது என தமிழக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார், இந்நிலையில், தடுப்பூசி பெறும் மாற்று வழிகளை அரசு தற்போது பரிசீலித்து வருகிறது.
Read more: COVID vaccines: Citizens need better communication and information
குறைவான இருப்பு மற்றும் தயக்கம்
மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள அதிகாரபூர்வ தடுப்பூசி கொள்கையின்படி, 45 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மத்திய அரசால் வாங்கப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
ஏப்ரல் மாதம் இறுதியில் கோவேக்சின் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. இரண்டாம் முறை தடுப்பூசி போடுபவர்களுக்கு போதிய இருப்பு இல்லாத நிலையில், அரசு மையங்களும் தனியார் மருத்துவமனைகளும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு, முன்னுரிமை அளித்தது.
“மார்ச் மாத இறுதியில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டோம். ஏப்ரல் மாத இறுதியில் அடுத்த தவணை போட மிகவும் சிரமப்பட்டோம். இரண்டாம் அலை தொடங்கிய நிலையில், தாமதிக்காமல் போட வேண்டும் என நான்கு அல்லது ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்டோம். மூன்று நாள் தேடலுக்கு பின் அடையாறில் உள்ள மையத்தில், தடுப்பூசி போட்டுக் கொண்டோம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்பதால் போதிய இருப்பு இருக்கும் என்று நினைத்தோம்.” என்கிறார் தேனாம்பேட்டையில் வசிக்கும் 61 வயது எல்.ஐ.சி முகவர் ஒருவர்.
பல தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் இருப்பு குறைவாகவே உள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் நிலைமை சற்று சரியானது.
இதே போல் கோவிஷீல்ட் இருப்பும் குறைவாகவே காணப்பட்டது. வீட்டு பணியாளரான பிரசன்னா, தன் இரண்டாவது தவணைக்காக எழும்பூரில் உள்ள ரெட் கிராஸ் சென்டருக்கு மே 13-ஆம் தேதி சென்ற போது, ஸ்டாக் இல்லாததால் ஒரு வாரம் கழித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டார்.
இது ஒரு புறமிருக்க, தடுப்பூசி போடுவதில் தயக்கமும் மந்த நிலைக்கு ஒரு காரணமாக உள்ளது. பல முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். “நான் தெம்பாக உள்ளேன், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பயனை விட தொல்லையாக கூடும், நடிகர் வீவேக் அவர்களுக்கு தடுப்பூசியால் நேர்ந்ததை கண்டோம். என் வீட்டில் வற்புறுத்தினாலும், நான் மறுத்து வருகிறேன்.நோய் பரவல் குறையும் வரை நான் வீட்டினுள்ளே இருப்பேன்” என்கிறார் தி.நகரில் வசிக்கும் 55 வயது மெக்கானிக் ஆர்.புஷ்பராஜ். வேறு சிலர் சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி இன்னும் போட்டவில்லை. “என் பையன் அமெரிக்காவில் உள்ளான். இது வரை, என்னை தடுப்பூசி மையத்திற்கு கூட்டிச் செல்ல தகுந்த ஏற்பாடு இல்லை. இரண்டு மாதம் முன்பே தடுப்பூசி போட தகுதி பெற்றிருந்தும், கடந்த வாரம் தான் என் பையனின் நண்பன் மையத்திற்கு கூட்டிச்செல்ல ஏற்பாடு செய்தான். வீட்டிற்கே வந்து தடுப்பூசி போட்டால், என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.” என்கிறார் புளியந்தோப்பில் வசிக்கும் 72 வயது சகுந்தலா.
மருத்துவரின் கோணம்
கள நிலவரம் குறித்தும், சவால்கள் குறித்தும் பொது சுகாதார மையத்தில் பணி புரியும் Dr. எம். பாலகிருஷ்னன் நம்மிடம் விவரித்தார். தேவையை பொறுத்து, மாவட்ட தடுப்பூசி மையத்திலிருந்து தினமும் தடுப்பூசிகள் பெறப்படுகின்றன. “நாள்தோறும் 100 தடுப்பூசிகள் பெறப்படுகின்றன. ஆனால், சுமார் 200-க்கும் அதிகமானோர் தடுப்பூசி போட வருகிறார்கள். கூடுதல் தேவையை கூறி, அதிக தடுப்பூசிகளை பெற முயற்சிக்கிறோம், ஆனால் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. இது போன்ற நேரத்தில், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிக்கிறோம்.
இட வசதியின்மை, தனி நபர் இடைவெளி, ஆள் பற்றாக்குறை என பல சவால்கள் உள்ளன. மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி பணி என மருத்துவர்களும், செவிலியர்களும் வேலையை பகிர்ந்து கொள்கின்றனர். இது தவிர, தடுப்பூசி தரவுகளை வலைதளத்தில் ஏற்றுதல் போன்ற பணிகளுக்கும் அதிக நேரம் செலவாகிறது.
கோவின் செயலி குறித்த சவால்களையும் Dr. பாலகிருஷ்னன் பகிர்ந்தார். ” பதிவு செய்தவர்களும் நேரடியாக வருபவர்களும் உள்ளார்கள். விடுமுறை நாளான ஞாயிறு அன்று கூட தடுப்பூசி பதிவு ஏற்றுக்கொள்ளவ்ப்படுகிறது. ஆதலால், திங்களன்று கூடுதலாக மக்கள் வருகின்றனர், அந்தளவுக்கு தடுப்பூசி இருப்பு இருப்பதில்லை. சில நேரங்களில், பதிவு செய்தவர்கள், கடைசி நேரத்தில் வருவதால், அவர்களுக்கு தடுப்பூசி இருப்பதில்லை.
இந்த பிரச்சைனயை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை காலை 9 மணிக்கு முதலில் வருபவர்களுக்கு உரிமை என்ற அடிப்படையில் போடலாம் என கூறுகிறார், காலையில் வருபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, கூடுதலாக வருபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேவையை பரீசலித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.
ஆனால், தொடக்கத்தில் நிலைமை இவ்வாறு இல்லை. “60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, பலர் முன் வராததால் அதிக அளவில் தடுப்பூசி வீணானது. நாளொன்றுக்கு சுமார் 6-7 தடுப்பூசிகள் விரயம் ஆனது. ஆனால், தற்போது இருப்பு அளவு அதே எண்ணிக்கையில் இருக்க, தேவை அதிகரித்துள்ளது.”
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் இன்னும் போகவில்லை என்கிறார் Dr. பாலகிருஷ்னன். “பலர் இன்னும் தயக்கத்தில் தான் உள்ளனர். 45 வ்யதுக்கு மேற்பட்ட பலர் இன்னும் தடுப்பூசி போட வில்லை. தற்போது 18 வயது மேற்பட்டவர்களும் தடுப்பூசி போடலாம் என்ற நிலையில், சில மாதங்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும்” என்கிறார்.
மையங்களில் பாதுகாப்பு
சென்னையில் மொத்தம் 637 மையங்கள் உள்ளன, ஆனால் சில நெரிசலான தடுப்பூசி மையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததால் சென்னை மக்களுக்கு சிக்கல் உள்ளது. “எங்கள் வீட்டருகே உள்ள ஆழ்வார்பேட்டை மையத்தில் முதல் தவணையும், இரண்டாவது தவணை தடுப்பூசியை அடையாறு மையத்திலும் எடுத்தோம். முதல் தவணையின் போது, அவ்வளவாக கூட்ட நெரிசல் இல்லை. ஆனால் அடையாறு மையத்தில் போதிய ஏற்பாடுகள் இல்லாதது கவலை அளித்தது. தடுப்பூசி எடுத்தவர்களும், ஸ்வாப் பரிசோதனைக்கு வந்தவர்களும் ஒரே சிறிய அறையில் தான் காத்திருந்தனர். பரிசோதனை கவுன்டர்களை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கலாம்.” என்கிறார் ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த 45 வயது டி. நிவின்.
பொது சுகாதார மையங்கள் கோவிட் தொற்று பரிசோதனை மையங்களாகவும் இருப்பதால், பெரும்பாலான இடங்களில் இது சவாலாக உள்ளது. சென்னை நீதிமன்றமும் இந்த பிரச்சனையை அடிக்கோள் காட்டி, தொற்று பரவுவதை தடுக்க, தடுப்பூசி மையங்களை தனியாக அமைக்க அரசிடம் பரிந்துரைத்துள்ளது.
சவால்கள் மற்றும் டிஜிடல் வேற்றுமை
18 முதல் 45 வயது உடையவர்களுக்கான தடுப்பூசிகளை, மாநில அரசு தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில், இவர்களுக்கான தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மே 1 முதல் இந்த வயது உடையவர்கள் தடுப்பூசி போடலாம் என்ற அறிவிப்பு வெளியானாலும், போதிய இருப்பு இல்லாததால், மிக சிலரே தடுப்பூசி போட முடிந்தது, அதுவும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இது சாத்தியப்பட்டது. கோவின் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு, சில முன்னணி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே, தடுப்பூசி போட முடிகிறது.
“கோவின் செயலியில் தேடிய போது, ஒரு மருத்துவமனையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு இருப்பு உள்ளதை பார்த்தேன், ₹850 செலுத்தி மே 2-ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டேன். சில மருத்துவ ரீதியான பிரச்சனை எனக்கு இருந்ததால், தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஆர்வமாக காத்திருந்தேன், இது முற்றிலும் அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்,” என்கிறார் ஓ எம் ஆர் பகுதியில் வசிக்கும் 27 வயது சினேகா.
அருகிலுள்ள பொது சுகாதார மையத்திற்கு சென்றேன், என் வயது உள்ளவர்களுக்கு இல்லை என்றும் பின்னர் அணுகும்படி கூறினர். தனியார் மருத்துவமனையில் காசு கொடுத்து போடும் நிலையில் இல்லை என்பதால் அரசு வழங்கும் வரை காத்திருப்பேன்,” என்கிறார் எழும்பூரில் வசிக்கும் 34 வயது தினத் தொழிலாளி கே. செந்தில்.
தொழில்நுட்பம் அறிந்த சிலர், கோவின் செயலியில் ஸ்லாட் எழும் போது, அலெர்ட் மூலம் அறிந்து கொண்டு, பதிவு செய்கின்றனர். “ஸ்லாட் உள்ள போது அறிந்து கொள்ள கணினி ஸ்க்ரிப்ட் தயாரித்தேன், அதன் மூலம் என்னால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடிந்தது. இது அனைவராலும் செய்ய முடியுமா என பெரிதாக யோசிக்கவில்லை, அனவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன்,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்.
கோவின் ஏபிஐ வழிகாட்டுதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால், அத்தகைய பயன்பாடுகள், கருவிகள் மற்றும் டெலிகிராம் குழுக்களை உருவாக்கி நிகழ்நேர தரவுகளை பெற்றிருக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
18 முதல் 44 வயதானவர்களுக்கு கோவின் செயலி மூலம் பதிவு அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மற்ற வயது பயனாளிகளுக்கு, செயலி மூலம் பதிவு குறித்து சில குழப்பங்கள் உள்ளன. “என் பக்கத்து வீட்டாரிடம் பதிவு செய்ய உதவி கோர வேண்டியிருந்தது. வெளியில் வராமல் கட்டுப்பாடுடன் இருந்த நிலையில், பிறரிடம் பேச கூட தயங்கினோம் ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் உதவியை நோடினோம். ஆனால் தடுப்பூசி மையத்திற்கு சென்ற போது பலர் செயலியில் பதிவு செய்யவில்லை என அறிந்தோம். பதிவு செய்யாமல் நேரடியாக வரலாம் என அறிந்திருக்கவில்லை,” என்கிறார் சூளைமேடு பகுதியில் வசிக்கும் 69 வயது எபினசர் ஜேம்ஸ்.
மேலும் அறிய: கோவிட் தடுப்பூசி: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
மேலும் பலர் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும் நிலையில், சென்னையில் தொற்று எண்ணிக்கை கடந்த வாரங்களில் அதிகரித்தன. கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தவும் அதிலிருந்து பலரை மீட்கவும் திறனான தடுப்பூசி திட்டம் ஒன்றே தீர்வாக அமையும்.
[Read the original article in English here.]