நாம் பெருந்தொற்றோடு வாழப்பழகி ஆண்டுகள் இரண்டு ஓடி விட்டன. நம்மில் பலரும் பல இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம். எனினும், மீண்டெழுந்து இன்னும் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
மானுடம் இத்தகைய பெருந்தொற்றுகளையும் பேரிடர்களையும் தொன்றுதொட்டே சந்தித்து வந்திருக்கிறது. அந்த அனுபவங்கள் தந்த ஆற்றலைக் கொண்டு அடுத்த நிலைக்குத் தன்னைக் கொண்டு சென்றிருக்கிறது.
பெருந்தொற்றின் பாதிப்புகள் குறித்த பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த அந்த பரபரப்பான நேரத்தில்தான் நம்மையும் தொற்றியது, கொரோனா. சற்றே அசட்டையாக இருந்ததின் விளைவே அது. அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும், எச்சரிக்கையானோம்.
ஆனால், அடுத்த ஓரிரு நாளில் தொற்று தன்னிருப்பைத் தெளிவாக உணர்த்த ஆரம்பித்ததும், பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு அதன் முடிவு வருவதற்கு முன்னரே, மருத்துவரிடம் கலந்தாலோசித்து வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு நம்மை உட்படுத்திக்கொண்டோம்.
அந்த நேரடி அனுபவத்தையும் அதைக் கடக்க உதவிய நல் உள்ளங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதன் மூலம் நாம் கற்றுக்கொண்டவற்றையும் பிறர் கவனத்திற்குக் கொண்டு வரலாம் என்பதுவும் அடக்கம்.
எதிர்கொண்டது எப்படி?
தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மனதில் எழுந்த முதல் கவலை, சமையல் செய்வது குறித்துத்தான். கணவரும் ஊரில் இல்லாத சூழ்நிலையில் மகன்கள் 2பேர் மற்றும் வயதான அப்பாவுக்கும் உணவளிப்பது குறித்தே கவலையெல்லாம் குவிந்திருந்தது. அத்துடன் வீட்டுத்தனிமையில் இருப்பதால் நமக்குத் தேவையான பொருட்களை வாங்குவது குறித்தும் கேள்வி எழுந்தது.
இந்தப் பிரச்சினைகள் தொற்றை விட நம்முன் பூதாகரமாக நின்று பயமுறுத்தியது. சில நண்பர்களைத் தொலைபேசி மூலம் அணுகி சில நாட்களுக்கு உணவு சமைத்துத் தருவதற்கு யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டதற்கு எதிர்மறையாகவே பதில் கிடைத்தது.
Read more: COVID second wave in Chennai: What to do if you test positive
பல்வேறு சிந்தனைப் போராட்டத்திற்குப் பிறகு, எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளுவோம் என மனதில் உறுதியை ஏற்படுத்திக் கொண்ட பிறகே சற்று நிம்மதியாக உறங்க முடிந்தது.
அடுத்த நாள் காலை வீட்டிற்கு விஜயம் செய்த சுகாதார நலப் பணியாரிடம் பிரச்சினை குறித்து பேசிய போது தன்னார்வ சேவையாளர்கள் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்து தருவார்கள் எனத் தெரிவித்தார்.
அந்தத் தகவல் சற்று ஆறுதலைத் தந்த போதும் சமையல் பணியானது பெரும் மலையெனவே உயர்ந்து நின்றது. நேரம் கரையக் கரைய வேறு வழியில்லை என்பதும் தெளிவாகப் புரிந்தது. ஒரு வழியாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு முகக்கவசத்துடன் களத்தில் இறங்க வேண்டியதாயிற்று.
உணவளித்த நல் உள்ளங்கள்
ஓரிரு நாட்கள் கழித்து, ஒரு நண்பரின் மூலம் மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது. அது “குக் ஃபார் கோவிட்“ என்கிற அமைப்பு பற்றியும் அவர்கள் ஆற்றிவரும் சேவையைப் பற்றியும் தெரிவித்ததோடு அவர்களைத் தொடர்பு கொள்ளவும் உதவினார்.
தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் தனிநபர்களுக்காக சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை மேலும் பல நல்ல உள்ளங்களின் இணைப்பால் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கும் ஒரு சமூகமாக மாறியிருக்கிறது.
இச்சேவையில் இணைந்துள்ள பலர், இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டவர்களாக இருந்தது கூடுதல் சிறப்பம்சம். பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே உணவை சமைத்து அனுப்பினர் என்றாலும் அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்து அனுப்பி ஆச்சரியப்படுத்தினார்கள்.
இதில் மேலும் நம்மை ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், கடமைக்கென்று ஏதோ சமைத்து அனுப்பாமல், நல்ல சத்தான உணவாக பார்த்து அக்கறையுடன் சமைத்து உரித்த நேரத்திற்குக் கிடைக்கச் செய்தது இன்னும் வியப்பாக இருந்தது.
ஒரு சில நாட்கள் வேளைக்கு வீடு தேடி வந்த உணவு உடலுக்குத் தேவையான ஊட்டத்துடன் ஓய்வையும் தந்தது. உணவின் தரத்திலும் சுவையிலும் எவ்வித சமரசமும் இன்றி இலவசமாக நம் இல்லம் தேடி கிடைக்கச் செய்தவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகுமா என்று தெரியாது.
ஒவ்வொரு இயற்கை சீற்றம் அல்லது பேரிடரின் போதும் தன் மனிதாபிமானக் கரங்களை நீட்டி மானுடத்தை அரவணைத்துக் கொள்வது சென்னைக்கு ஒன்றும் புதிதல்ல. அவ்வகையில், இப்பெருந்தொற்றுக் காலத்தில் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு அடிப்படைத் தேவையான உணவை வழங்க முன் வந்திருக்கும் இவ்வுயரிய செயல் சென்னையின் சேவைப்பாதையில் மற்றொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது.
சுறுசுறுப்பான சுகாதாரத்துறை
அன்றாடம் நம் வீட்டிற்கு வந்து நமது உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்லும் சுகாதாரத்துறைப் பணியாளர்களும் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நோயாளிகளின் வீட்டிற்கு அயராது படியேறி வந்து இன்முகத்துடன் உதவிகள் செய்த தன்னார்வ சேவையாளர்களும் இல்லையென்றால் இப்பெருந்தொற்றை எதிர்கொள்வது எத்துனை சிரமமானதாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.
இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் ஒப்பந்த அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே, அது தற்காலிகமான பணிதான். ஆயினும், மலர்ந்த முகத்துடன் அவர்கள் நம்மை வந்து விசாரித்துச் செல்வதும், ஏதாவது வாங்கி வரவேண்டுமா என அக்கறையுடன் கேட்பதும் அன்றாட வாடிக்கையாக விட்ட அதே சமயத்தில் நாமும் அதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம் என்பதை மறுக்க முடியாது.
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள் என்பதை அறியும்போது மனதை ஏதோ செய்தது.
தொற்றின் மூலம் கற்றது என்ன?
பாடம் 1 : அலட்சியம் அணுவளவும் கூடாது.
பாடம் 2 : முறையான மருத்துவ உதவியை நாடுதல்.
பாடம் 3: சரியான உணவு வகைகளை உண்ணுதல்.
பாடம் 4 : பதட்டப்படாமல் தொற்றை எதிர்கொள்ளுதல்.
பாடம் 5 : மூடி வைக்க வேண்டிய ரகசியமல்ல, பிறரிடம் தெரிவிப்பதன் மூலம் அவர்களும் எச்சரிக்கையாக இருக்க உதவலாம்.
நம்மால் ஓரளவு இலகுவாக எதிர்கொள்ள முடிந்ததன் காரணம் நாம் ஆரம்பத்திலிருந்தே சற்று எச்சரிக்கையுடன் இருந்து வந்ததும், இது குறித்த சரியான தகவல்களை நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து பெற்றுக்கொண்டதும் பெரும் உதவியாக இருந்தது. அத்துடன்மருத்துவ ஆலோசனைப்படி உணவு, மருந்து, சுவாசப்பயிற்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றைக் கிரமமாகக் கடைபிடிப்பதுடன், நல்ல புத்தகங்கள் வாசிப்பது, இசையைக் கேட்பது போன்றவையும் உதவின.
Read more: From Grade 9 student to retired senior, how citizen volunteers created life saving resources
பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு அவ்வப்போது ஆக்ஸிஜனின் அளவு மற்றும் நாடித்துடிப்பினை சரிபார்த்துக் கொண்டதினால் நம் உடல்நிலை குறித்த அச்சம் இல்லாமல் இருக்க முடிந்தது. அத்துடன், வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் ‘பிரேக்கிங் நியூஸ்‘ தரும் பரபரப்பான செய்திகளால் நம் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது.
பெரும்பான்மையான பாதிப்புகள் அலட்சியத்தினாலும், தம்மைச் சுற்றியுள்ளவர்களின் மீதான அக்கறையின்மையினாலும் ஏற்படுகிறது என்பதை நம்மாலும் அவதானிக்க முடிந்தது. அப்படியே தொற்று ஏற்பட்டாலும் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற சரியான படிப்பினை இல்லாததால் ஒரு வித பீதிக்கும் பதற்றத்திற்கும் உள்ளாகி சோர்ந்து விடுவதையும் பார்க்க முடிகிறது.
இது குறித்த தேவையற்ற அச்சமும் தேவையில்லை அதே சமயம் ஒரேயடியான அலட்சியமும் தேவையில்லை. உலகை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டு வருவதற்காகவும் மனிதர்களிடையே ஒரு படிப்பினையை ஏற்படுத்துவதற்காகவும் இயற்கை அவ்வப்போது சில வழிமுறைகளைக் கையாள்கிறது.
நாமும் அதைப் புரிந்து ஏற்றுக்கொண்டு அது கோரும் விதிமுறைகளின் படி நடந்து கொண்டால் பரிணாமத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி பூமி நகர்வதைக் கண்கூடாகக் காண்பதோடு மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு நம்மாலான பங்களிப்பினையும் வழங்கலாம்.