Translated by Sandhya Raju
பட்ஜட் என்பது வரவு செலவு கணக்கின் அறிக்கை ஆகும்; அரசு அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட காலத்திற்கான திட்டமிட்ட வரவு செலவு இதில் அடங்கும். இதே போல், ஒவ்வொரு நிதி ஆண்டில் திட்டமிட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் வருவாய், எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மாநகராட்சியின் பட்ஜட் அறிக்கை மூலம் குடிமக்கள் அறிந்து கொள்ளலாம்.
மாநகராட்சி, எவ்வாறு வருவாய் திரட்டுகிறது, எந்த பணிகளுக்கு நிதி செலவழிக்கப்படுகிறது?
உதராணமாக, 2020-21 நிதி ஆண்டிற்கு சென்னை மாநகராட்சி சமர்பித்துள்ள பட்ஜட் அறிக்கையில், பேருந்துக்கிற்கென பாதை சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பூங்காக்கள் சீரமைப்பு போன்ற திட்டங்கள் உள்பட திட்ட செலவாக ₹3815 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் உள்ள 18000 நிரந்தர பணியாளர்களுக்கு ₹63 கோடி சம்பளமாக வழங்கப்படுவதை, மக்கள் பெரும்பாலும் கவனத்தில் கொள்வதில்லை.
மாநகராட்சியின் நிதியை புரிந்து கொள்ள, அதன் வரவு மற்றும் செலவு மூலாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
ஐந்து வருவாய் ஆதாரங்கள்
வரி வருவாய்
சொத்து வரி, தொழில்முறை வரி, வர்த்தக உரிமம், நிறுவன வரி, பொழுதுபோக்கு வரி மற்றும் விளம்பர வரி போன்ற பல வகைகளில் மாநகராட்சி வருவாய் ஈட்டுகிறது. மாநகராட்சியின் 45% நிதி வரி வருவாய் மூலமாக வருகிறது.
உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி தொழில்முறை வரியாகவும், நீங்கள் வாங்கும் சினிமா டிக்கட்டில் ஒரு பகுதி பொழுதுபோக்கு வரியாகவும் மாநகராட்சிக்கு செல்கிறது என உங்களுக்கு தெரியுமா?
- சொத்து வரி: வர்த்தக கட்டிடம் அல்லது வீடு சொந்தமாக வைத்திருப்பவர்கள், ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொத்து வரி செலுத்த வேண்டும்.
- தொழில்முறை வரி: உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி தொழில்முறை வரியாக, ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாநகராட்சிக்கு செலுத்தப்படுகிறது.
சம்பளம் | அரையாண்டு தொழில்முறை வரி (ஏப்ரல் 2018 முதல் அமலில் உள்ளது) |
Up to 21,000 | இல்லை |
Rs 21,000 to Rs 30,000 | ₹ 135 |
Rs 30,001 to RS 45,000 | ₹ 315 |
Rs 45,001 to Rs 60,000 | ₹ 690 |
Rs 60,001 to Rs 75,000 | ₹ 1025 |
Rs 75,001 and above | ₹ 1250 |
- வர்த்தக உரிமம்: தொழில் புரியும் அனைவரும் வர்த்தக உரிமம் கட்டணத்தை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். 500 சதுர அடிக்கு மேல் உள்ள உணவகங்கள் ₹12500 என அதிக வரியையும், 500 சதுர அடிக்கு குறைவாக உள்ள உணவகங்கள் ₹6250 வரியை செலுத்துகிறது. 500 சதுர அடிக்கு மேல் ₹250, அதற்கு கீழ் எனில் ₹200 என முடி திருத்தகங்களுக்கு குறைவான வரி வசூலிக்கப்படுகிறது, என மண்டலம் 9-ன் துணை வருவாய் அலுவலர் டி ஏ நிதிபதி தெரிவித்தார்.
- நிறுவன வரி: அனைத்து பொது நிறுவனங்களும் வருடந்தோறும் ₹1000 வரியாக மாநகராட்சிக்கு செலுத்துகிறது.
- விளம்பர வரி: பொது இடங்களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், விளம்பர தொகையில் ஒரு பகுதியை வரியாக செலுத்துகிறது. ஆனால், தற்போது விளம்பர பதாகைகளுக்கு தடை உள்ளதால், விளம்பர வரி வருமானம் மாநகராட்சிக்கு இல்லை.
வரி அல்லாத வருவாய்
பயன்பாட்டு கட்டணம், உரிமம் கட்டணம் மற்றும் சமூக கூடங்கள், மீன் சந்தைகள், அரங்கங்கள் மற்றும் பிற வணிக இடங்கள் ஆகியவற்றிலிருந்து வாடகை மூலமாக மாநகராட்சி வருவாய் ஈட்டுகிறது. மாநகராட்சி வருவாயின் 15%, வரி அல்லாத வருவாய் மூலம் ஈட்டப்படுகிறது. உதாரணமாக, பாண்டி பஜாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கடை உரிமையாளரும் மாத வாடகை செலுத்துகின்றனர்.
சில நிறுவனங்களிலிருந்து வசூலிக்கப்படும் இயந்திர பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் உரிமங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஆகியன வரி அல்லாத வருவாயாகும்.
ஒதுக்கப்பட்ட வருவாய்
இது உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக பல்வேறு மாநில அரசு துறைகளால் சேகரிக்கப்படும் நிதி. முத்திரை வரி மற்றும் நில வருவாய் கட்டணம் ஆகியவை இதற்கு உதாரணம். நீங்கள் சொத்து பதிவு செய்கையில் செலுத்தும் கட்டணத்தில் ஒரு பகுதி மாநகராட்சிக்கு வருவாயாக செல்கிறது. மாநகராட்சியின் வருவாயில் 5% ஒதுக்கப்பட்ட வருவாய் மூலம் வருகிறது.
மானியங்கள்
73வது அரசியலமைப்பு திருத்தம் படி, உள்ளாட்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணையம் வழங்கும் நிதி, மாநகராட்சியின் மொத்த வருவாயில் 30% ஆகும். ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் அமைத்தல் ஆகியவை இந்த நிதி மூலம் அமைக்கப்படுகிறது.
மூலதன வருவாய்
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி), வெளி உதவி திட்டங்கள் மற்றும் பிற மாநில அரசு நிறுவனங்கள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து மூலதன வருவாய் நிதி வருகிறது. இது மாநகராட்சி வருவாயில் 5% ஆகும். உதாரணமாக, 110 கி.மீ தூரம் மெகா சாலைகள் அமைக்க, ₹2000 கோடி நிதியை உலக வங்கி மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது.
2017-18 நிதியாண்டிற்கான மாநகராட்சி வரவு செலவு கணக்கை இங்கு காணலாம்.
மாநகராட்சியின் செலவுகள்
நகராட்சியின் கீழ் வரும் 18 வகை செயல்கள் 74வது 1992 இன் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் 12-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நில பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நில கட்டிடங்களின் கட்டுமானம், நகர்ப்புற திட்டமிடல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, உள்நாட்டு, தொழில்துறை மற்றும் வணிக நோக்கங்களுக்கான நீர் வழங்கல், தீயணைப்பு சேவைகள், பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்றவை இதில் அடங்கும். இந்த பட்டியலை முழுவதுமாக இங்கு காணலாம்.
உள்கட்டமைப்பு, நிர்வாக செலவுகள், ஓய்வூதியம் மற்றும் ஊழியர்களின் சம்பளம் (நிர்வாக) மற்றும் எடுக்கப்பட்ட திட்டங்களுக்கான கடன்கள் போன்றவற்றிற்கு நிதியை மாநகராட்சி செலவிடுகிறது.”பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி கட்டணமாக மாதத்திற்கு ரூ .20 கோடி செலவிடுகிறோம், ”என்கிறார் துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) மேகநாத் ரெட்டி.
2020-21 ஆம் ஆண்டு பட்ஜட் அறிக்கையில், மதிப்பிடப்பட்ட மூலதன வருவாய் மற்றும் செலவு முறையே ரூ .1,796 கோடி மற்றும் ரூ .1,900 கோடி ஆகும்.
தலைமை (திட்டமிடப்பட்ட) நிதி ஒதுக்கீடு:
- பேருந்து பாதை வழிகள் – ₹384 கோடி
- புதிய மேம்பாலங்கள் – ₹512 கோடி
- புதிய எல்ஈடி ரக தெரு விளக்குகள் – ₹120 கோடி
- பூங்காக்கள் சீரமைப்பு – ₹70 கோடி
மாநகராட்சியின் பட்ஜட் அறிக்கையை இங்கு காண்க.
மாநகராட்சிக்கு பிற பொறுப்புகளும் உள்ளன. மாநில அரசு தன் வருவாயிலிருந்து ஒரு பகுதியை மாநகராட்சிக்கு அளிப்பது போன்று, ஒரு பகுதி வருவாயை மாநகராட்சி பிற துறைகளுக்கு அளிக்க வேண்டும். “வரி வருவாயின் ஒரு பகுதி நூலகங்கள் மற்றும் மாநில கல்வித் துறைக்கு செல்கிறது,” என்கிறார் மாநகராட்சியில் பணி புரியும் வரி வசூலிக்கும் அதிகாரி.
அவசர காலத்தில் எவ்வாறு நிதி சமாளிக்கப்படுகிறது?
“இது போன்ற தருணத்தில் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதியை மாநகராட்சி நம்பியுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படை (எஸ்.டி.ஆர்.எஃப்) அளித்த நிதி COVID-19 தொற்றை சமாளிக்க எங்களுக்கு பெரிதும் உதவியது. செலவினங்களை இணைத்து பட்ஜெட் திட்டங்களை அவர்களுக்கு அனுப்புகிறோம்.”
மேகநாத் ரெட்டி, துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி).
மேகநாத் ரெட்டி, துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி; டி ஏ நிதிபதி, துணை வருவாய் அலுவலர், மண்டலம் 9; மாநகராட்சியில் பணி புரியும் வரி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியின் பட்ஜட் அறிக்கையிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
[Read the original article in English here.]