Translated by Sandhya Raju
2016-ம் ஆண்டு வரையப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளின் ஒரு அம்சமாக சென்னையை குப்பைத்தொட்டி இல்லா நகரமாக மாற்ற சென்னை மாநகராட்சி முற்பட்டது. இந்த திட்ட யோசனை அதிகாரிகள் மற்றும் சென்னைவாசிகளின் மனதில் கற்பனை வடிவம் பெற்றது. ஆனால், தொட்டிகளை அகற்றுவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கலால், மாநகராட்சி இந்த திட்டத்தை அமலாக்க நேரம் எடுத்துக் கொண்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சங்கச் செயல்பாடுகள் காரணமாக சில சுற்றுப்புறங்களில் குப்பைத் தொட்டியை குறைக்க முடிந்தது. குப்பைத் தொட்டி இல்லாதது சில சுற்றுப்புற பகுதிவாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. குப்பைத்தொட்டி இல்லா நகரமாக சென்னையை மாற்ற என்ன தேவை, கடந்த ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு என்ன ஆனது.
நகரத்தின் கழிவுப் பயணம் சீராக இல்லை
சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 5400 MT (மாநகராட்சி தரவு படி)கழிவு உற்பத்தியாகிறது. இதில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலிருந்து 50% மேல் கழிவு வருகிறது. கழிவு வகைபடுத்தப்படாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி கூறியிருப்பினும், இது சரியாக பின்பற்றப்படுவதில்லை.
கழிவுப் பயணம் பகுதிக்கேற்ப வேறுபடுகிறது. சில பகுதிகளில், சுகாதாரப் பணியாளர்கள் வீட்டிலிருந்து கழிவுகளைப் பெறுகிறார்கள். சில பகுதிகளில் தெருவோரம் உள்ள பெரிய தொட்டிகளில் குப்பையை வகைப்படுத்தாமலேயே வீசுகின்றனர். பின்னர் இவை குப்பை வண்டிகளில் ஏற்றப்படுகிறது. பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைக் கிடங்கில் போடப்படுகிறது.
Read more: Where does the waste generated in your home go?
வகைப்படுத்தப்பட்ட குப்பைகளில், ஈரக் கழிவுகள் பதப்படுத்துவதற்கும் உரமாக மாற்றுவதற்கும் மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களுக்கு (எம்சிசி) கொண்டு செல்லப்படுகிறது. இந்த உரம் இயற்கை பண்ணைகளுக்கும் குடியிருப்புகளுக்கும் ₹20-க்கு விற்கப்படுகிறது. தற்போது 141 எம்சிசி-க்கள் உள்ளன.
மக்காத குப்பைகள் மெட்டீரியல்ஸ் மீட்பு வசதி மையத்திற்கு (எம்ஆர்எஃப்) எடுத்துச் செல்லப்படுகின்றன, அங்கு அவை பொருளின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன அல்லது மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மணலியில் சுமார் 10 டன் உலர் கழிவுகள் எரிக்கப்படுகின்றன
கட்டுமான குப்பைகள் ரிசோர்ஸ் மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவை தனியார் நிறுவனங்களால் மறுசுழற்சிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இது தவிர கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு அபாயகரமான கழிவுகள் கொண்டு செல்லப்படுகிறது.
அனைத்து கலப்பு கழிவுகளும் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. லாரிகள் எடையை மதிப்பிடுவதற்காக குப்பை தொட்டிகளில் இருந்து கழிவுகளை மாற்ற நிலையத்திற்கு ஏற்றுகின்றன. அதன்பின், குப்பை கிடங்குகளில் அகற்றப்படுகிறது.
தடைகள்
2016 ஆம் ஆண்டில், SWM விதிகளின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி புதிதாக சேர்க்கப்பட்ட மண்டலங்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாத சுற்றுப்புறங்களைச் செயல்படுத்த ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. இதன் மூலம் வீட்டுக் கழிவுகள் வகைப்படுத்தப்படுவதை அதிகரிக்கும் நோக்கத்தோடும், கழிவுகள் இல்லாத நகரமாக மாற்றும் குறிக்கோளோடும் மேற்கொள்ளப்பட்டது. சோதனை முயற்சிக்கு பின்னர் 15 மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டது.
மூலப் பிரிப்பு, கழிவு செயலாக்கத்தின் பரவலாக்கம் மற்றும் அரசாங்க அமைப்புகளால் இந்த மாற்றங்களைக் கண்காணிப்பது ஆகியவற்றில் SWM விதிகள் கவனம் செலுத்துகின்றன. மூலப் பிரிப்பு என்பது அனைத்து வீடுகள், வணிக மற்றும் குடியிருப்பு அல்லாத பகுதிகள் மற்றும் நிறுவனப் பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்ட கழிவுகளை வீடு வீடாகச் சேகரிப்பதை உள்ளடக்கியது. விதிகளின்படி தெருத் தொட்டிகளை அகற்றுவது, மூலப் பிரிவினையை ஊக்குவிக்கும் மற்றும் குப்பை கிடங்கில் இவற்றின் வழக்கமான பயணத்தைத் தடுக்கும்.
ஆனால், மாற்று திட்டம் இல்லாதது,மூலப்பிரிப்பை முழுவதும் அமல்படுத்த முடியாமல் போனது போன்ற பல தடைகளால், இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இது மட்டுமில்லாமல், குடியிருப்புகள், பூங்காக்கள், அலுவலங்கள், திறந்த வெளி நிலங்கள் ஆகியவற்றில் உர குழிகள் அமைக்க தேவையான அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொள்ளாமல், இன்றும் எந்தவொரு முன் அறிவிப்பின்றி தெருக்களில் உள்ள குப்பைத்தொட்டிகளை மாநகராட்சி அகற்றி வருகிறது.
இருப்பினும், சில மண்டலங்களில், குப்பைத்தொட்டிகள் மற்றும் டிரக்குகளை ரிமோட் டாகிங் மூலம் கண்காணிப்பதற்கான டெண்டர்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குப்பைத் தொட்டி இல்லாத திட்டத்திற்கு முற்றிம் வேறுபடுவதாக உள்ளது.
பொது தொட்டிகளில் உள்ள பிரச்சனைகள்
குடியிருப்பு சங்கங்களுடன் நடைபெற்ற பல உரையாடல்களின் விளைவாக, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு சங்கம் தனது குடியிருப்பு பகுதியை குப்பைத் தொட்டி அல்லா பகுதியாக மாற்ற நினைத்தது. அப்பகுதியில் குப்பைகள் தொட்டிகளில் மலையளவு குவிவதை தடுக்க ‘குப்பைத் தொட்டியற்ற கோடம்பாக்கம்’ எனும் திட்டத்தை வகுத்தது.
மலையளவு குவியும் தொட்டிகளால் கொசுத் தொல்லை, சிலர் மூத்திரம் கழிப்பதால் ஏற்படும் சுகாதர குறைவு என பல சுகாதார பிரச்சனைகள் எழுகின்றன, என கூறுகிறார் கோடம்பாக்கம் குடியிருப்பு நல சங்கத்தின் உறுப்பினர் வெற்றிவேல்.
பலர் குடித்து விட்டு பிளாஸ்டிக் டம்பளர்களை வீசி எறிகின்றனர். செத்த பூனைகாள் மற்றும் சில பிராணிகளும் அங்கு கஆண முடிகிறது. புது தொட்டிகள் மாற்றப்பட்டு, ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு தொட்டி வைக்கப்பட்ட பின்னரும், குப்பைகள் கலந்து இங்கு கொட்டப்படுகின்றன. மழைக் காலத்தில் குப்பைகள் தெருக்களிலும் வருகின்றன.
சுகாதார பணியாளர்கள் சந்திக்கும் சவால்கள்
“குப்பைகளில் உடைந்த கண்ணாடிகள் இருப்பதால் எங்களில் பலருக்கு இங்கு குவியும் குப்பைகளை அகற்ற பயமாக உள்ளது. எங்களுக்கு கையுறை கூட வழங்கப்படுவதில்லை. சில நேரங்களில் ஷாக் கூட அடிக்கும். சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் ஆகியவற்றையும் எடுத்துப் போட வேண்டும்.” என்கிறார் அடையாறில் பணி புரியும் சுகாதார பணியாளர்.
பெசன்ட் நகரில் பணிபுரிவர்களிடம் பேசிய போது, சில சுகாதார பணியாளர்கள் அங்கு பிளாஸ்டிக் பைகளில் மனித எலும்புகள் கூட இருந்தன என கூறினர். முதல் மெயின் ரோடு மற்றும் 6-வது குறுக்கு தெருவின் சந்திப்பில் இவை இருந்ததாக கூறினர்.
பல்வேறு மாற்று கருத்துகள்
இந்த திட்டத்தை பலர் வரவேற்றாலும், அறிவிப்பின்றி தொட்டிகாள் அகற்றப்படுவதால், பல சிக்கல்கள் எழுகின்றன. இதனால், தெருக்களிலும், காலி இடங்களிலும் குப்பைகள் குவிவதோடு, ஏற்கனவே உள்ள சுகாதார பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது.
மாநகராட்சியின் தரவுப்படி, ஜனவரி 2021 நிலவரப்படி சென்னையில் 12,301 குப்பைத் தொட்டிகள் உள்ளன. இதில், நவபர் 2021 படி, 790 தொட்டிகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் 259 தொட்டிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு, உள்ளகரம் மற்றும் புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால், தெருக்களிலும், காலி இடங்களிலும் குப்பைகள் குவியத் தொடங்கின. இதே போல் இதற்கு ஆறு மாதம் முன்பு மடிப்பாக்கத்தில் உள்ள கார்த்திகேயபுரத்தில் அறிவிப்பின்றி குப்பைத் தொட்டி அகற்றப்பட்டது.
ஆழ்வார்பேட்டையில், பாவா ரோடு, ஆனந்தா ரோடு மற்றும் ஆழ்வார்பேட்டை ரோடு ஆகியவற்றில் தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் பீமனா கார்டன் தெருவில் உள்ள தொட்டியில் குப்பைகள் குவியத்தொடங்கின. இந்த தெருவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டி மாநகராட்சி பள்ளி எதிரே உள்ளது. இதில், கண்ணாடி பேனல், இரும்பு கம்பிகாள் ஆகியவை வீசப்படுகின்றன. கொளத்தூரில் தொட்டி அகற்றப்பட்டதால், ப்ரதான சாலையில் குப்பைகள் காணப்படுகின்றன. காலி இடங்களில் போடப்படும் குப்பைகளை அள்ள, சுகாதார பணியாளர்கள் 4-5 சுற்று சென்று சுத்தப்படுத்த வேண்டியுள்ளது.
இருப்பினும், திருவீதி அம்மன் கோவில் தெரு போன்ற சில இடங்களில் இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு காரணம் அங்குள்ள குடியிருப்பு நலச் சங்கம். முதல் படியாக, ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை வகைபடுத்த தொடங்கினார்கள். இது 2013 -ம் ஆண்டு முதலே செயலில் இருந்தது. ஈரக் கழிவுகாளை பதப்படுத்த, பொதுவான உரத் தொட்டி அமைக்கப்பட்டது. இவை, தெருக்களில் உள்ள பூங்காவில் உபயோகப்படுத்திய பின் மீதம், அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவின் உர நிலையத்திற்கு அளிக்கப்பட்டது
பெரும் விழிப்புணர்வு தேவை
குப்பைகளை வகைப்பிரிப்பதில், இந்த திட்டம் பெரிதும் உதவும், ஆனால் இதற்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
மூல பிரிக்கப்படாத குப்பைகள் எங்கு செல்கின்றன, அதாவது, நிலத்தில், இது பிரிக்கப்படுவதால் என்ன நன்மை என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனுடன், வகை பிரித்தலுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஒரு நாள் குப்பைக்கு 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை வாங்குவது பெரிய செலவாகும். ஒரு தொட்டி சுமார் ₹2000 ஆகும். இதனால் பலர் வகை பிரித்தலை மேற்கொள்ளவில்லை.
Read more: Waste segregation: The challenge Chennai must overcome
மூலப் பிரிப்பு மற்றும் ஜீரோ கழிவு: சென்னையின் நிலை என்ன?
சில வருடங்களாக மூலப் பிரிப்பில் முன்னேற்றம் பெற்றிருந்தாலும், 50% கூட இது இல்லை. குப்பைத்தொட்டி இல்லத நகரமாக சென்னை மாற இது மிக முக்கியமாகும்.
ஜீரோ கழிவு இலக்கை எட்ட சுகாதார பணியாளர்களுக்கு அழுத்தம் உள்ளது. இதை அடைய, மூலப் பிரிப்பில் உள்ள சவால்களை சமாளித்தாக வேண்டும்.
வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் போதும் பிரிக்கப்படாத குப்பைகளே தரப்படுவதாக அண்ணா நகரில் உள்ள ஒரு சுகாதார பணியாளர் கூறுகிறார். ஜீரோ கழிவு இலக்கை எட்ட, இதை பிரிக்கும் நிர்பந்தம் ஏற்படுவதாக கூறுகிறார்.
வணிக நிறுவனங்கள், காய்கறி விற்பனையாளர்கள் ஆகிய தங்களின் வரம்பில் வராத இடத்தில் கூட தங்கள் இலக்கை அடைய, இவர்காள் குப்பை சேகரிக்கின்றனர். பாதுகாப்பு கையுறை இன்றி, கலவையான குப்பைகளை இவர்கள் பிரித்தெடுப்பதை பார்க்க முடிகிறது.
எந்தொவொரு திட்டமிடல் இன்றி, இவை மேற்கொள்ளப்படுவதை காண முடிகிறது. இதற்கான மாற்று முறை, கழிவு மேலாண்மை ஆகியவற்றுடன் வெளிப்படைத்தன்மையும் இந்த திட்ட அமலாக்கத்திற்கு தேவை.
இது தவிர, சுகாதார பணியாளர்களின் பணி குறித்தும், அவர்களின் கண்ணியம் குறித்தும், குப்பைத்தொட்டிகளில் வீசி எறியப்படும் குப்பைகளின் தன்மை குறித்தும், அவ்வப்போது மக்களுக்கு தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
இவையின்றி, குப்பைத் தொட்டி இல்லாத நகரமாக சென்னை மாற வேண்டும் என நினைப்பது கனவாகவே நீடிக்கும்.
[Read the original article in English here.]