Translated by Sandhya Raju
சில தினங்களுக்கு முன், சென்னையில் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதி குறித்து எழுதியிருந்தோம். 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் பகுதிகள் என இவற்றை அடையாளப்படுத்தியிருந்தது. வெள்ளத்தை தடுக்க மாநகராட்சி என்ன செய்துள்ளது?
வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் (SWD) நெட்வொர்க்கை வட சென்னையில் கொசஸ்தாலாறு பகுதியிலும், தென் சென்னையில் கோவளத்திலும் கட்டுமான பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
ஆசிய வங்கியின் நிதியுதவி பெற்றுள்ள இந்த திட்டத்தின் கீழ் மழை வெள்ளத்தை தடுக்க சாலையோரம் வடிகால் அமைத்தல், நீர்நிலைகளை புத்துயிர் செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உள்கட்டமைப்பு திட்டங்களை தவறாக நிர்வகிக்கிறது என்பதற்கு பல நிகழ்வுகள் உள்ளன, இதுவே வெள்ள அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. உதாரணமாக, 440 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மழை நீர் வடிகால் திட்டத்தில் நெட்வொர்க் வரைபடம் கூட இல்லை. பணி நிறைவேறும் தருணத்தில் தற்பொழுது திட்டத்தை மதிப்பீடு செய்யவும், வரைபடம் தயாரிக்கவும் வல்லுனரை பணியமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றும் இந்த திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. “கோவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டது.” என மாநகராட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனிடையே, தற்போதைய சூழலில் போர்க்கால அடிப்படையில் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஏரி மறுசீரமைப்பு பணிகளை முடித்தல்
பல ஏரிகளில் பல்வேறு காரணங்களுக்காக, பணி தொடங்கப்படாமல் அல்லத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அம்பத்தூர் மண்டல அலுவலகம் அருகே உள்ள கண்ணாத்தம்மன் கோவில் குளம், பட்டரவாக்கம் ஏரி (அரக்குளம்) மற்றும் அம்பத்தூரில் உள்ள வண்ணான் குளம் ஆகியவை இதில் அடங்கும்.
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான உபரி நீருக்கான கால்வாய், தோபி காட் கட்டுமானம், வடிகால் சேகரிப்பு குழி, மற்றும் தக்கவைக்கும் சுவருடன் கூடிய மழை நீர் வடிகால் போன்றவை நிறைபெறாத சில பணிகளாகும்.
இது தவிர தவறான கட்டுமானமும் உள்ளது. உதாரணமாக சமீபத்தில் சீரமைக்கப்பட்ட ராமாபுரம் ஏரியில் மீண்டும் புதிய தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆக்கரமிப்புகளை அகற்றாமல் கரையோரத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்காமல் புதிய தடுப்புகள் போடப்பட்டுள்ளன. முதலதவதாக மேற்கொள்ள வேண்டிய பணியான எல்லைகளை வரையுறுக்கும் பணி கூட மேற்கொள்ளப்படவில்லை.
“ஆக்கிரமிப்பை அகற்றாமல் ஏரியை புதிப்பிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன்,
நீர்வழிகளின் சீரான ஓட்டத்தை உறுதி செய்தல்
நீர்நிலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்கள் அடைப்பின்றி இருத்தல் வேண்டும். அம்பத்தூர், ஆதம்பாக்கம், பல்லாவரம் ஆகிய நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக நீர் தடையின்றி செல்ல முடியவில்லை.
“கடும் மழை இல்லாத போதும் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பால் பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன.ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டால், உபரி நீர் பல்லாவரம் பெரிய ஏரிக்கு செல்லும்,” என்கிறார் குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேவிட் மனோகர்.
ஜுலை 2020 ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பிறகு, செங்கல்பட்டு மாவட்ட ஆணையர், பொது பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் என பலரும் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை அகலப்படுத்த வேண்டும் என்றனர். இதன் பிறகு பல முறை முறையிடப்பட்டும், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் பார்வையிட்டு மட்டும் செல்கின்றனர்.
பல தடவை முறையிட்டும், அதிகாரிகள் பார்வையிட்டும், பல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், புறநகர் பகுதியில் உள்ள இந்நிலையை சீர் செய்ய இது வரை எதுவும் நடக்கவில்லை.
எண்ணூர் கடற்கழியில் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வழி எண்ணூர் கடற்கழியில் நீரின் ஓட்டத்தை சீர்படுத்த “நேரான பயிற்சி சுவர்கள்” அமைக்க ஐஐடி சென்னையின் ஆராய்சியாளர்கள் கே முரளி, ச சன்னிசிராஜ் மற்றும் வி சுந்தர் பரிந்துரைக்கிறார்காள். இது கழியின் வாயிலை காப்பதோடு, சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் வெள்ளத்தைத் தடுக்க வண்டல் குவியலைக் குறைக்கிறது. “முறையற்ற வடிகால் அமைப்பு மற்றும் கூவம் பயிற்சி சுவர்களின் தற்போதைய வடிவமைப்பு ஆகியவை, வண்டல் மண் குவிந்து கூவம் பகுதியை சுற்றி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது,” என மேலும் ஆராய்சி குழு தெரிவித்துள்ளது. |
சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் பரவலான ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் ஆகியவற்றால், பெரும்பாலான ஈர நிலத்தை நகரம் இழந்துள்ளது என்கிறார் காலநிலை பின்னடைவு பயிற்சி மற்றும் உலக வள நிறுவன (Climate Resilience Practice and World Resource Institute (WRI) India) இந்தியா வியூகம் தலைவர் டாக்டர். அறிவுடை நம்பி. வருங்காலத்தில் நீர்வழிகளை தடுக்காத மற்றும் நீர்நிலைகளின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
மழை நீர் வடிகால் அமைத்தல், பராமரித்தல்
நகர திட்டமிடல் மற்றும் வெள்ள தடுப்பு நடவடிக்கையில் முறையான மழை நீர் வடிகால் அமைப்பது இன்றியமையாதது. 2,058 கி.மீ தூரமுள்ள வடிகால்களை மாநகராட்சி பராமரிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலும் 141 இடங்களில் 48.28 கி.மீ தூரம் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரி ஒருவரின் தகவலின்படி, 123 இடங்களில் (42.90 கி.மீ) பணிகள் நிறைவடைந்து, 19 இடங்களில் பணி நிறைவேறும் நிலையில் உள்ளது.
அம்பத்தூரில் பல பகுதிகள் ஒவ்வொரு மழை காலத்தின் போதும் வெள்ள பாதிப்பை சந்திக்கின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல தெருக்களில் இது வரை நிலத்தடி கழிவு நீர் அமைப்பு இல்லை.
“வடிகால் அமைப்பு இடங்களில் பல கட்டிட விதிமீறல்கள் உள்ளன. செக்ரடேரியட் காலனியில் உள்ள விதிமீறல்கள் குறித்து பல முறை முறையிட்டுள்ளோம், ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை.,” என்கிறார் அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் குடியிருப்பு சங்கத்தின் ர ராமலிங்கம்.
வடிகால் பராமரிப்பு யாருடைய பொறுப்பு என்பதிலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. மேற்கு பாலஜி நகரிலிருந்து வரும் கழிவு நீர், வடிகால் வழியாக புழல் ஏரிக்கு செல்கிறது, ” சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், இரண்டு வருடம் முன் மேற்கொண்ட ஆய்வின் பின் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது மாநகராட்சி அல்லது வாரியம் கீழ் வருமா என்று கூட எங்களுக்கு தெரியாது,” என்கிறார் ராமலிங்கம்.
கழிவுநீர் மேலாண்மை
கழிவு நீர் வடிகால் மூலமாக ஏரிக்கு செல்வது என்பது நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை. கொரட்டூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், சேலையூர் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்த பிரச்சனை உள்ளது.
சென்னை பெரு நகராட்சியின் கீழ் பல பகுதிகள் சில வருடங்களுக்கு முன் இணைக்கப்பட்டது. ஆனால், இன்று வரை சோளிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, கொரட்டூர் போன்ற பகுதிகளில் பல இடங்களில் நிலத்தடி கழிவு நீர் திட்டம் முறைபடுத்தப்படவில்லை.
இதனால் அங்கு நிலவும் சூழ்நிலை என்ன? ஒவ்வொரு மழை காலத்தின் போதும் அம்பத்தூர் டிடிபி காலனியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. “நிலத்தடி கழிவு நீர் திட்டம் இங்கு பொய்த்து போயுள்ளது. இதனால் வீட்டிலிருந்து கழிவுகள் மழை நீர் வடிகாலில் வருகிறது. கடந்த 15 வருடங்களாக இதே நிலை தான்,” என்கிறார் பிரித்விபாக்கம் குடுயிருப்பு சங்கத்தின் தலைவர் பானு விஸ்வநாதன்.
திடக்கழிவு நிர்வாகத்தை நெறிப்படுத்துதல்
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், ஏழு மண்டலங்களில் கழிவுகளை சேகரித்து கொண்டு செல்ல, அர்பேசர் சுமித் என்ற புதிய கழிவு ஒப்பந்தக்காரரை சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. போதிய வசதியின்மை காரணமாக, 95 சதவிகித கழிவுகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையே வந்தடையும் என ஜெயராம் ஆணித்தரமாக கூறுகிறார்.
“35 சதவிகித கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும், ஆனால் இதற்கு பெரிய பொருள் மீட்பு வசதிகள்தேவைப்படுகிறது. தற்போது, வெறும் 1 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதற்கான கட்டுமானத்தை அதிகரிக்க மாநகராட்சி குறைந்தது ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்த பின்னர் அர்பேசர் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க வேண்டும்,” என்கிறார் ஜெயராம்.
[This post has been translated from English. Read the original here.]