முதல் பாகத்திலே, எனக்கு Bala Vidyalaya பள்ளியை நடத்திடும் அந்த மூன்று பெண்மணிகளைக் காண வேண்டும் என்று சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கிறதா? நான் கேட்டவுடனேயே பள்ளியை நடத்திடும் ஒருவரான திருமதி டாக்டர் வள்ளி அண்ணாமலை அவர்கள், என்னை அவர்கள் இல்லத்திற்க்கே அன்புடன் அழைத்து, திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி உடன் இருக்க , மிக பொறுமையாக, செவித் திறன் குறைபாடு உடையவர்களுக்காக அவர்கள் செய்து வரும் தொண்டினை பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி, அவர்களுக்கு தெரிந்த மூன்று குழந்தைகளுக்கு இந்த குறை பாடு உள்ளதை பார்த்து , இவர்களுக்கும், இவர்களைப் போன்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று 48 வருடங்களுக்கு முன் நினைத்தார். USIS நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், இவற்றில் இது பற்றி வெளி வந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்து, இவர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றார்கள் . அவர்கள் நம்பிக்கை வீணாகவில்லை. அந்த முயற்சி இன்று ஆல மரமாக வளர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பேசும் திறன் பெற வாய்ப்பு அளித்து உள்ளது, இன்னும் தொடர்ந்து அளித்து வரும் என்பதில் சந்தேகமே இல்லை .
அவர்கள் படித்ததில் முக்கியமாக அவர்கள் கருதுவது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell ) என்பவரின் வாழ்க்கை சரித்திரம். பெல் மணந்து கொண்ட மேபெல், பெல்லின் சிறு வயது முதல், தோழியாய் இருந்தவர்கள் . அவர்கள் சிறு வயதில் செவித் திறன் குறை பாடு உள்ளவர்களாய் இருந்தார்கள் . தனது தோழியினை பேச வைப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகள் தான் திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி அவர்களுக்கு தானும் அந்த முயற்சிகளை செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தைக் கொடுத்தது .பெல் அவரது தோழியை எப்படியும் பேச வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் ஒலி பெருக்கி கருவியினை (amplifier) கண்டு பிடித்தார் . அதனை கண்டுபிடிக்கும் முயற்சியின் போது தான் தொலை பேசியினை கண்டு பிடித்தார்!!
December 1969ல், இந்த பள்ளியை திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி, தன் தோழி ஒருவருடன் சேர்ந்து துவங்கினார்கள். 1980ல் திருமதி டாக்டர் வள்ளி அண்ணாமலை அவர்கள் திருமதி சரஸ்வதி நாராயணஸ்வாமி அவர்களுடன் சேர்ந்து செயல்பட துவங்கினார்கள். திருமதி டாக்டர் வ ள்ளி அண்ணாமலை, இப்பள்ளியில் சேர்ந்து பணி செய்ய தொடங்கிய பின்னர், செவித் திறன் குறைபாடு பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் . இவரைப் போலவே 1990ல் திருமதி டாக்டர் மீரா சுரேஷ் அவர்களும் பள்ளியில் சேர்ந்து நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பித்து இவரும் செவித் திறன் குறைபாடு பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் . இம் மூவரும், பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து இப்பள்ளியினை திறம்பட நடத்தி வருகிறார்கள்.
அவர்களுடன் பேசிய பொழுதுதான் செவித் திறன் குறைபாடு உடைய பிள்ளைகளுக்கும் , சிறிது அளவேனும் கேட்க்கும் திறன் பிறக்கும் பொழுது இருக்கும் என்று தெரிந்து கொண்டேன் . எட்டு மாதத்திற்குள் இப் பள்ளிக்கு இப்படிப்பட்ட குழந்தைகள் வந்தால் , நன்கு பயன் பெற முடியும் என்று சொல்லியபோது, எனக்கு எப்படியாவது இந்த செய்தியினை செவித் திறன் குறைபாடு உடைய பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று ஆதங்கம் எழுந்தது . இப்பொழுது பொதுவாக பெற்றோர்கள் 4-5 வயது வரைக்கும் குழந்தைகள் பேசா விட்டால் தான் மருத்துவர்களிடம் அழைத்து செல்கிறார்கள். 8 மாதத்திலேயே குழந்தைகள் ஒலிக்கு செவி சாய்க்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
“இந்த சேவையில் , உங்கள் பெரும் மகிழ்ச்சியை தந்த தருணங்கள்,அனுபவங்கள், பற்பல இருக்கும் . அதில் குறிப்பாக சிலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?” என்று நான் கேட்ட பொழுது, “எங்கள் பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் முதன் முதலில் “அம்மா” என்று வாய் திறந்து அழைக்கும் பொழுது, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் விடும் ஆனந்த கண்ணீரினை பார்க்கும் பொழுது, இதை விட பெரும் மகிழ்ச்சியை தரும் தருணங்களும் இருக்க முடியுமா?” என்று எங்களுக்கு தோன்றும் என்று கூறினார்கள்.
அனுபவங்களைப் பொறுத்தவரை, 3 வயதிற்குள் குழந்தைகள் எங்களிடம் வந்தால் நாங்கள் சிறப்புற பணி புரிய முடியும் என்று தெரிந்து கொண்டோம். எத்தனைக்கு எத்தனை சீக்கிரம் கூட்டிக்கொண்டு வருகிறார்களோ அத்தனைக்கு அத்தனை சீக்கிரம் குழந்தைகளால் பேச முடியும். பள்ளியில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 5-6 வயதாகும் போது, அவர்கள் சரளமாக பேசும் திறன் பெற்று சாதாரண குழந்தைகளைப் போல் பள்ளிக்கு செல்ல முடியும். அதனுடன் ருபெல்லா தடுப்பு ஊசி பருவமடைந்த பெண்கள் திருமணத்திற்கு ஆறு மாதம் முன்பே போட்டுக் கொள்ள வேண்டும். பருவமடைந்த பெண்கள் திருமணத்திற்கு ஆறு மாதம் முன்பே போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி போட்டால் பெரும்பாலும் இந்த குறை வராது தடுக்க முடியும் என்றும் தெரிந்து கொண்டோம். இன்று இந்த பள்ளியில் பேச கற்று கொண்ட பலர், பின் கல்வி கற்று ஆசிரியர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் , விஞ்ஞானிகளாகவும், இன்னும் அநேக துறைகளிலும் நம் நாட்டில் மட்டும் இன்றி அயல் நாடுகளிலும் சிறப்புற பணியாற்றி வருகிறார்கள் . அவர்களை பற்றியும், இப் பள்ளியினைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களது இணையதளம் balavidyalayaschool.org சென்றால், அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம.
அவர்கள் கற்றுக் கொண்டதையும் , அனுபவத்தில் தெரிந்து கொண்டதையும் த்வனி கிட்ஸ் (DHVANI kits) என்ற ஆவணங்கள் மூலம் பெற்றோர்கள் பயனடையும் பொருட்டு வெளியிட்டுள்ளார்கள் .
த்வனி கிட்ஸ் I – பிறந்தது முதல் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்காகவும் ,
த்வனி கிட்ஸ் II – 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்காகவும் வெளியிட்டுள்ளார்கள் .
அவர்கள் பள்ளியிலேயே, ஆசிரியர் பயிற்சியும் அளித்து வருகிறார்கள். இவர்களால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இன்று அரசாங்கத்தின் 32 ஆரம்ப பயிற்சி மையங்களிலும் பணி ஆற்றி வருகிறார்கள். பெங்களூரூ, கொல்கத்தா, நாக்பூர், திருப்பதி, கேரளா, இலங்கை ஆகிய ஊர்களில் NGO க்கள் மூலம் இயங்கிடும் செவித் திறன் குறைபாடு உடையவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகளில் இவர்களால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் வேலை பார்க்கின்றார்கள் .
Khan Academy, Karadi Path என்று பல வலைத்தளங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி பாடங்களை கற்றுத் தருகிறது, அது போல் கிராமங்கள், தொலை தூரம் உள்ள இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்களின் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வலைத் தளம் மூலம்முறையான பயிற்சி அளித்தால் நன்றாய் இருக்குமே என்று நான் கேட்ட போது, அதற்கான யோசனைகள் இருக்கிறது, இந்த ‘த்வணி கிட்ஸ்’ஆவணங்கள் இப்பொழுது CD வடிவில் உள்ளத . இதனை வலைத் தளம் மூலம்முறையான பயிற்சி அளிப்பதற்கு மாற்றி அமைக்கும் பணியும் விரைவில் செய்திடுவோம், என்று சொன்னார்கள் .
இப்பொழுது இந்த பெற்றோர்கள் உங்கள் பள்ளிக்கு வந்து அறிவுரைகள் பெற முடியுமா என்று நான் கேட்டதற்கு. “எப்பொழுது வேண்டும் என்றாலும் அவர்கள் குழந்தையுடன் வந்தால், அந்தக் குழந்தையின் செவித் திறனை வைத்து ஆலோசனைகள் கூறுகின்றோம். ஆறு மாதங்களுக்கு அப்புறம் திரும்பவும் வரச் செய்து குழந்தையின் முன்னேற்றத்தை பரிசீலித்து அறிவுரைகள் வழங்குகின்றோம்” .
இலவசமாக இந்த பள்ளியை நடத்தி வருகிறீர்கள் , இதற்கு நிறைய பணம் தேவை படுமே, எப்படி இந்த செலவுகளை சமாளிக்கீறீர்கள் ? அரசாங்கம் எதாவது உதவி அளிக்கிறார்களா? என்று நான் கேட்டதற்கு, அவர்களும், அவர்களைப் போல நல்ல மனது உடையவர்களாலும், பள்ளியில் படித்து நல்ல வேலையில் இருக்கும் முன்னாள் மாணவர்களாலும், அரசாங்கம் அளிக்கும் மான்யங்களாலும் பள்ளி நல்ல படியாக நடந்து வருவதாக கூறினார்கள் .
ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு ஆதங்கம்தான். பள்ளியின் வைப்பு நிதியினை வைத்து, ஆசிரியர்களுக்கு, மற்ற அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கும் சம்பளத்தைப் போல் கொடுக்க இயல வில்லை என்பதுதான் .முனைவர்கள் மூவரும் கெளரவ ஆசிரியர்களாக பணி ஆற்றி வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் ATTENTION, AFFECTION AND APPRECIATION என்ற மூன்றும் இருந்தால் பிள்ளைகளிடம் எதனையும் சாதித்துக்கொள்ள முடியும் என்று சொல்வார்கள். அது மூன்றும் உங்களிடம், உங்கள் ஆசிரியர்கள் அனைவரிடமும் அதிகமாகவே இருப்பதனால் இன்று இத்துணை இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பயன் பெற முடிந்துள்ளது. உங்கள் அனைவரது சமூகப் பணிகளும் மேலும் தொடர்ந்து இன்னும் அதிக இளம் செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பயன் பெற citizenmatters.in மூலம் வாழ்த்துகிறோம் . இலவச பணியாக இதனை நடத்திக்கிறீர்கள், உங்கள் பணியின் மேன்மையை உணர்ந்து பொது நலம் கருதும் மக்கள் பெரும் அளவில் உதவிடவும், அரசாங்கமும் உங்கள் உயர்ந்த சேவையை உணர்ந்து உதவிடவும் பரிந்துரைக்கிறோம்.
Hearty Congratulations to Team BV..God bless..