கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பால் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. அது மாணவர்களை மட்டுமல்லாது , அவர்களது பெற்றோர் மற்றும் சமூகத்தின் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அந்த அறிவிப்பானது, அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பதுதான்.
பலமுனைகளிலிருந்தும் அதன் சாதக பாதகங்களை வலுவாக முன்வைத்ததை அரசும் நன்கு சீர்தூக்கி பார்த்து தற்போது அதனை ரத்து செய்துள்ளது. என்றாலும் அந்த அறிவிப்பின் பிரதிபலிப்பாக சமூகத்தில் நிகழ்ந்தவைகள் கல்வி சம்மந்தமாக சமூகம் என்ன பார்வையைக் கொண்டுள்ளது என்பது தீவிரமாக விவாதிக்கப்படக் கூடியதாகியுள்ளது. ஒரு முதிர்ச்சியான சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வியளிக்கும் முறை உள்ளதா என்பது வினாவாகித் தொடர்கிறது.
அறிவிப்பின் தாக்கங்கள்
சமச்சீர் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக செய்த சில மாற்றங்களால் எழுந்த பரபரப்பே முற்றிலும் அடங்காத நிலையில் வந்த அந்த அறிவிப்பானது, மறுபடியும் அதைப் பற்றவைத்தது. மாற்றங்களின் சவால்களைச் சந்திப்பதற்காக மாணவர்கள் முன்னை விட அதிக நேரம் ஒதுக்கியும், டியூஷன்களின் உதவியை நாடவும் வேண்டியிருந்த சூழ்நிலையில் இது அவர்களை மேலும் உடல் மற்றும் உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருப்பதோடு அவர்களது இயல்பை இழந்து, எப்போதும் தேர்வு குறித்த சிந்தனையிலேயே, புத்தகமும் கையுமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள்’ என்று பலதரப்பினரும் கருத்துரைத்தனர்
அதுபோன்றே பொதுத்தேர்வு, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த வழியென்ற கருத்தையும் ஒருசாரார் முன் வைக்கின்றனர். 10 ஆம் வகுப்பை எட்டும் வரை இத்தகைய தேர்வுமுறையை சந்திக்காத மாணவர்கள், அதுகுறித்து பெரும் கலக்கம் அடைவதைத் தவிர்க்கவும் அவர்கள் பொதுத்தேர்வினை துணிச்சலுடன் எதிர்கொள்ளவும் உதவிகரமாக இது இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், வரும் மூன்று வருடங்களுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவது உறுதி செய்யப்படும், என்று அரசுத்தரப்பில் இருந்து பள்ளிகளுக்கு ஆணையும் வந்தது. என்றாலும் கூட வேறுவிதமான பல பாதிப்புகள் உள்ளதாகக் கூறி எதிர்ப்புப் போராட்டங்களும் நடைபெறத் துவங்கின.
சாதாரணமாகவே பரீட்சை நேரத்தில் ஒரு வித பதட்ட நிலை காணப்படும் நம் வீடுகளில், இந்தப் பொதுத் தேர்வு அறிவிப்பு அங்குள்ளவர்களின் இதயத்துடிப்பை எந்தளவுக்கு எகிறவைத்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம். பகல் இரவு என எல்லா நேரமும் பெற்றோர்களின் (குறிப்பாகத் தாய்மார்கள்) சிந்தனையை ஆக்கிரமித்துக் கொள்ளும் விஷயமாக இது மாறியிருந்ததில் வியப்பேதுமில்லை.
”ஐந்தாம் வகுப்பு வந்து விட்டாய், இனி அவ்வளவு தான். விளையாட்டை எல்லாம் ஓரம் கட்டி விடவேண்டும். ’இந்த ஆண்டு உனக்கு பொதுத் தேர்வு“, என்ற பூதாகரத் தோற்றம் ஒன்றை பெற்றோர்கள் தந்து விட, வீடுகளுக்கு வெளியே ’இங்கு டியூஷன் எடுக்கப்படும்’ என்ற அறிவிப்புப் பலகைகள் பெருமளவில் காணப்படுவதுடன், வணிக ரீதியான டியூஷன் சென்டர்களும் எண்ணிக்கையில் அதிகமாகவும் இன்னும் பெரிய அளவில் இயங்குவதற்கான ஏற்பாடுகளுடனும் எழுந்து நின்றன. உடலுக்கும் மனதுக்கும் புத்துயிர் தரும் கலை, விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் எல்லாம் பொறுப்புள்ள பிள்ளைகளுக்குக் கூடாதவைகளாக கணக்கிடப்பட்டன.
ஒரு மாணவரின் மதிப்பெண்; அவரின் குடும்பம், படிக்கும் பள்ளி, கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் டியூஷன் சென்டர் ஆகியோரின் வாழ்க்கையாகவும், அதை எய்தவில்லையெனில் இவர்களின் ஒட்டுமொத்த மானமும் இழக்க அந்த மாணவரே காரணமாவார் என்ற அடிப்படையில் கல்வி திணிக்கப்படுவதாகவும் இதனால், ஒரு திகில் நிறைந்த மனநிலையில் மாணவர்கள் பெரும்பாலும் இருப்பதாகவும் சமூக மட்டத்தில் பலரும் பேச ஆரம்பித்தனர்.
இத்தகைய ஒரு பயங்கர சூழலால் தான் மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்வதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த 15 மாணவியும், சென்னையை அடுத்துள்ள பீர்க்கன்கரணையைச் சேர்ந்த 14 வயது மாணவனும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் தாங்கவொண்ணா துயரைத் தருவதாக இருக்கின்றன. காரணங்கள் குறித்து ஆராய்ந்தால், தோல்வி பயம் மற்றும் மன அழுத்தமே விடையாக வந்து விழுகிறது.
முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது ஆங்காங்கே மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நடந்தது போக, தேர்வை எதிர்கொள்ள அஞ்சி உயிரை மாய்த்துக்கொள்ளும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ளியது எதுவென்ற கேள்வி நம்முன் பூதாகரமாக நிற்கிறது.
மாணவர்களின் அறிவு வளர்ச்சியானது அவர்கள் பெறும் மதிப்பெண்களே என்ற மாயத்தோற்றத்தின் அழுத்தத்தால், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எப்பாடுபட்டாவது நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டுமென்று முயற்சிக்கையில், அதற்கு ஒரே அபயமாகத் தோன்றும் டியூஷன் சென்டர்களை நம்பி அவர்கள் வசம் தம் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள், இயற்கையை மெச்சுதல் மற்றும் உலகத்துடனான ஈடுபாட்டில் கற்றல் ஆகியவை கைவிடப்பட்டு பாடப்புத்தகங்களிலேயே தங்கள் நேரம் மற்றும் கவனத்தைக் குவிக்க வேண்டிய சூழ்நிலைக்குக் குழந்தைகள் ஆளாவதாக சமூக ஆர்வலர்கள் பேச ஆரம்பித்தனர்.
டியூஷன் சென்டர் கற்றலுக்கான மையமாகிறதா?
இந்த நிலையில் தான் டியூஷன் சென்டர்கள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. பெற்றோர்கள் ’எங்களின் பிள்ளைகளின் வெற்றி உங்கள் பொறுப்பு தான்’ என்று சுமத்தி விட இவர்கள் அதனை சாதித்தே தீரவேண்டும் என்ற அழுத்தத்தில் செயல்படும் சூழ்நிலை உருவாகியது என்று டியூஷன் சென்டர் நடத்துபவர்களிடம் பேசிய போது அறிய முடிந்தது.
தற்போது நடைமுறையில் இருக்கும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்கள் எவ்வாறு தயார் படுத்தப்படுகிறார்கள் என்று சில மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடமும் பேசிய போது அவர்கள் கூறியதாவது:
“விடியற்காலை 5-5,30 மணிக்கெல்லாம் டியூஷன் ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்ப ஒரு அரைமணி நேரம் அவகாசத்தில் தான் வீடு வருவார்கள். அதன் பிறகு மாலையில் ஆரம்பிக்கும் டியூஷன் இரவு 8-9 வரை போகும். அதோடு, வீட்டிற்குப் பயிற்சி செய்து பார்ப்பதற்கும் ‘சம்ஸ்‘ கொடுத்தனுப்புவார்கள். அத்தோடு, படிப்பைத் தவிர வேறெந்த கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கையிலும் சேரக்கூடாது, மீறினால் அவர்களுடைய மதிப்பெண் குறைவதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறுகிறார்கள். “என்றனர்.
காலப்போக்கில் இதேபோன்ற ஒரு சூழல் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வந்து விடுமோ என்கிற அச்சத்தை சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சார்ந்தோர் வெளிப்படுத்தினர்.
“இளங்கன்று பயமறியாது“என்ற பழமொழியின் பொருளே இளம் பிராயத்தில் எதைக்குறித்தும் பயமோ, தயக்கமோ இன்றி கற்றலை ஒரு வித ஆர்வத்துடன், அவர்கள் அணுகுவார்கள் என்பது தான். ஆனால், இன்று தோல்வி குறித்த ஒரு பயத்தை ஏற்படுத்திக் கற்றலை ஒருவித கலக்கத்துடன் அணுகச் செய்த பெருமை நம்மையே சாரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளை அறவே ஒழிக்கக் காரணமாகிறதா கல்விமுறை?
பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை, நடனம் மற்றும் நாடகப் பயிற்சிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வருவதாக மாணவர்கள் கூறுகின்றனர். அதுபோன்றே, இதற்காகவே முழுமுயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த தனிப்பயிற்சி மையங்கள் நலிந்து, மூடுவிழா நடத்தவோ அல்லது வேறு வியாபார முயற்சிகளுக்கான இடமாக மாறவோ முனைந்து கொண்டுள்ளன என்பதை அவர்களில் சிலருடன் கருத்து கேட்ட போது அறிய முடிந்தது.
சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிப் படிப்புடன் ஒன்றிரண்டு கலைகள் அல்லது விளையாட்டைக் கற்றுக் கொள்வதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வந்ததைக் காண முடிந்தது. குறைந்த பட்சம் அவர்கள் 10 ஆம் வகுப்பை எட்டும் வரையில் இம்மாதிரியான கூடுதல் பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது.
ஆனால், பொதுத்தேர்விற்கான அறிவிப்பால் இந்த ஆர்வம் பெருமளவு வடிந்திருந்ததைக் காண முடிந்தது. 4ம் வகுப்பில் இருக்கும் போதே இத்தகைய வகுப்புகளிலிருந்து நிறுத்தப்பட்டு, பள்ளிப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.
திருமுல்லைவாயிலில் கலைப் பயிற்று நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ஒருவர், கலை பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டதால், தனது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், சட்டென சுதாகரித்து அதையொரு டியூஷன் சென்டராக மாற்றி விட்டதாகக் கூறினார். தற்போது முன்பை விட அதிக மாணவர்கள் அங்கு வருவதாகத் தெரிவித்தார்.
அதே போன்று, இசை ஆசிரியராக தனது வாழ்வைத் துவங்கிய இளைஞர் ஒருவரும் இத்தகைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, இத்துறையை விட்டு விலகி , வேறு ஏதாவது வியாபாரத்தில் ஈடுபடுவது பற்றி யோசிப்பதாகக் கூறினார்.
அதே வேளையில், கல்வி ஆய்வாளர்கள் ஒரு முழுமையான கல்வி என்பது பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளுடன் இணைந்த கல்விமுறைதான் என்பதைக் கூறியுள்ளார்கள். கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள் மாணவர்கள் கல்வி கற்பதை எந்த வகையிலும் பாதிக்காமல் அதனை மேம்படுத்துகிறது என்கிற அறிவியல் உண்மையையும் அவர்கள் உறுதிப்படுத்துவதோடு அதன் பயன்களாக:
- மேம்பட்ட கல்வித்திறன்
- சிறந்த நேர மேலாண்மை திறன்
- புதிய மற்றும் பயனுள்ள திறன்களைக் கற்றுக் கொள்ளுதல்
- பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு
- புதிய செயல்பாடுகள் மற்றும் நண்பர்கள் அறிமுகம்
- கூடுதல் துறைகளில் வேலை வாய்ப்புகள்
- தன்னம்பின்கை மற்றும் மனவுறுதி
ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள்
கல்வித்துறையின் அந்த அறிவிப்பு வந்ததிலிருந்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்ட தாக்கத்தினைக் கூர்ந்து கவனித்து அது குறித்துத் தொடர்ச்சியாக பத்திரிகைகள் மற்றும் வலைதளங்களில் எழுதி வந்த எழுத்தாளரும், சமூக சிந்தனையாளருமான பிரியசகி அவர்களிடம் பேசியபோது, இந்த அறிவிப்பு நிச்சயமாகக் குழந்தைகளிடையே உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறியிருந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. நகரில் உள்ள பிரபல மனநல மருத்துவர் ஒருவரிடம் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் ஆலோசனை கேட்க சென்றதாகவும், அவரே அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் ஊடகத்தில் வந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன் அவர், மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தேர்ச்சியின் அடிப்படையிலேயே பள்ளியின் தரமும் நிர்ணயிக்கப்படுவதால், அதைத் தக்க வைக்க அவர்கள் தேர்ச்சி பெறாத மாணவர்களைப் பள்ளியை விட்டு அனுப்பும் சூழல் உருவாகலாம், என்று கூறியிருந்தார்.
அரசு நடுநிலைப்பள்ளியின் ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது: “நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்காவது பெற்றோரின் உதவி, மற்றும் டியூஷன் என்று தங்களைத் தயார் படுத்திக் கொள்ள முடியும், ஆனால், கிராமப்புற குழந்தைகளின் நிலை அவ்வாறல்ல. அதேசமயம், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தோல்வி குறித்த அச்சுறுத்தல் அதிகம் இன்றி ஓரளவு இயல்பாகவே இருக்கிறார்கள், ஏனென்றால் 3 வருடங்களுக்கு யாரும் அதே வகுப்பில் தக்கவைக்கப் படப்போவதில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் இதை ஒப்பிடும்போது தனியார் பள்ளி மாணவர்களின் நிலைதான் சற்று கவலைக்குரியதாக உள்ளது“, என்றார்.
ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கல்வி அவசியம்தான், ஆனால், பாடப்புத்தகங்கள் மட்டுமே அத்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றதா என்ற கேள்வியும், அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வு எதற்கு வழி செய்கிறது என்பதும் பெரும் விவாதப் பொருளாகி வந்த சூழலில் அரசு தற்போது அதனை ரத்து செய்து அறிவித்தது எல்லா தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
என்றாலும், கற்றலை வழங்கும் முறை சம்மந்தமாக கேள்வியும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டு தானுள்ளது. நல்ல பிரஜைகளையும் முதிர்ச்சியான வாழ்வு முறையையும் கொண்டு வருவதற்கான ஒரு கருவியாக கல்வி மாறும் வரை இது தொடர்வது நல்லதே.