வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 24 வயதான தரிஷினி, தான் தினமும் குடிக்கும் தண்ணீர் தனது உடல்நலத்தை இவ்வளவு மோசமாக பாதிக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. திருநெல்வேலியைச் சேர்ந்த தரிஷினி கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் தனியாக வசித்து வருகிறார்.
ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. மதிய உணவாக சாப்பிட்ட காரமான உணவு காரணமாக இருக்கலாம் என்று கருதி, அவர் மருந்தகங்களில் கிடைக்கும் சில மருந்துகளை எடுத்துக்கொண்டு படுக்கைக்குச் சென்றார். இருப்பினும், மறுநாள் அவரது அறிகுறிகள் மோசமடைந்தன. மேலும் அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. அவர் மருத்துவரின் அறிவுரைகளின்றி தானாக மருந்து எடுத்துக்கொண்டு இருந்தார், ஆனால் நிலைமை மோசமாகிவிட்டது.
“அதிர்ஷ்டவசமாக, என்னைப் பார்க்க வந்த என் தோழி, நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் நான் கடுமையாக நீரிழப்புடன் (severe dehydration) இருப்பதாகவும், என் உடல் அதிர்ச்சியில் (in a state of shock) இருப்பதாகவும் தெரிவித்தனர்,” என்று தரிஷினி நினைவு கூர்ந்தார்.
இரத்தப் பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு டைபாய்டு (Typhoid) காய்ச்சல் இருப்பது உறுதியானது. இது அசுத்தமான தண்ணீரை உட்கொள்வதால் ஏற்பட்டிருக்கலாம். ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்த பிறகு, அவர் முழுமையாக குணமடைந்தார்.
சென்னையில் அதிகரித்து வரும் நீர் மாசுபாட்டின் பொது சுகாதார அபாயங்களை தரிஷினியின் வழக்கு எடுத்துக்காட்டுகிறது. மிகவும் சோகமான உதாரணங்களில் ஒன்று, டிசம்பர் 5, 2024 அன்று பல்லாவரம் பகுதியில் நிகழ்ந்தது. அங்கு பொது குழாய் மூலம் விநியோகிக்கப்பட்ட அசுத்தமான நீரை பருகியதாக கூறப்படும் மூன்று பேர் உயிர் இழந்தனர். அரசு அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கைகள் இந்த இறப்புகளுக்கும் நீர் விநியோகத்திற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறினாலும், இறந்தவர்களில் இருவர் கடுமையான உணவு விஷத்தால் (food poisoning) இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன; இது அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த சம்பவம் மோசமான நீரின் ஆபத்துகள் மற்றும் பொது சுகாதாரத்தில் அதன் பேரழிவு விளைவுகளை தெளிவாக நினைவூட்டுகிறது.
அதிகரித்து வரும் நீர்வழி நோய்கள்
நீர்வழி நோய்களின் வளர்ந்து வரும் நெருக்கடியை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, தமிழ்நாட்டில் கடுமையான வயிற்றுப்போக்கு நோய் (acute diarrheal disease ADD) அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாதது நீர்வழி நோய்கள் அதிகரித்து வருவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பதிவான 1,62,765 ADD வழக்குகளில், 3-5% சென்னையில் மட்டும் உள்ளன.

நீர்வழி நோய்களுக்கு தாமதமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதன் தாக்கங்கள்
சென்னை மருத்துவமனைகளில், குறிப்பாக மழைக்காலத்திலும், மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளிலும், நீர்வழி நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக Tamil Nadu Resident Doctors Association (TNRDA)-யின் பொதுச் செயலாளர் டாக்டர் எம் கீர்த்தி வர்மன் குறிப்பிடுகிறார்.
உடனடியான மருத்துவ கவனிப்புக்கு கொண்டுவராவிட்டால் வயிற்றுப்போக்கு எவ்வாறு விரைவாக ஆபத்தானதாக மாறும் என்பதை டாக்டர் கீர்த்தி எடுத்துக்காட்டுகிறார்.
மூன்று நாட்கள் கடுமையான வயிற்றுப்போக்கு, மிகுந்த பலவீனம் மற்றும் சிறுநீர் வெளியேறாமல் இருந்ததால் 48 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். கடுமையான நீரிழப்பு காரணமாக அவர் அதிர்ச்சியில் இருந்தார், மேலும் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து கொண்டிருந்தன. பின்னர் சோதனைகள் மூலம் அவருக்கு காலரா (Cholera) இருப்பது உறுதி செய்யப்பட்டது, இது மாசுபட்ட நீரிலிருந்து வரும் பாக்டீரியா தொற்று ஆகும்.
“அவருக்கு IV திரவங்கள் (IV fluids) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) வழங்கப்பட்டாலும், அவரது சிறுநீரக பாதிப்பு கடுமையாக இருந்தால் அவருக்கு அவசர டயாலிசிஸ் தேவைப்பட்டது. மூன்று டயாலிசிஸ் அமர்வுகள் மற்றும் கவனமாக மருத்துவ உதவிக்குப் பிறகு, அவரது சிறுநீரக செயல்பாடு மேம்பட்டது. மேலும் 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,” என்று டாக்டர் கீர்த்தி கூறுகிறார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வயிற்றுப்போக்கு நோயாளிகளைப் பார்ப்பதாகவும், சில நேரங்களில் உச்ச காலங்களில் இந்த எண்ணிக்கை 100 ஆக உயரும் என்றும் டாக்டர் கீர்த்தி தெரிவிக்கிறார்.
தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், சென்னை மக்களை பாதிக்கும் பிற பொதுவான நீர்வழி நோய்கள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் தொடர்புடைய அபாயங்கள் பற்றிய நுண்ணறிவுகளையும் அவர் வழங்குகிறார்.
கடுமையான இரைப்பைக் குடலழற்சி (Acute Gastroenteritis)
- அறிகுறிகள்: வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள், நீரிழப்பு
- ஆபத்து: குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் விரைவான நீரிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். நீரிழப்புக்கு விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் ஏற்படலாம்
ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ (வைரல் ஹெபடைடிஸ்) (Hepatitis A and E (Viral Hepatitis))
- அறிகுறிகள்: மஞ்சள் காமாலை, காய்ச்சல், சோர்வு, குமட்டல், அடர் நிற சிறுநீர்
- ஆபத்து: ஹெபடைடிஸ் இ கர்ப்பிணிப் பெண்களில் கடுமையானதாக இருக்கலாம்
காலரா (Cholera)
- அறிகுறிகள்: அதிக வயிற்றுப்போக்கு, நீரிழப்பு, அதிர்ச்சி
- ஆபத்து: சிகிச்சையளிக்கப்படாவிட்டால் சில மணி நேரங்களுக்குள் மரணம் ஏற்படலாம்
லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis)
- அறிகுறிகள்: காய்ச்சல், தசை வலி, சிவந்த கண்கள், மஞ்சள் காமாலை
- ஆபத்து: விவசாயிகள், துப்புரவுப் பணியாளர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள்
நீரினால் பரவும் நோய்களின் சமூக-பொருளாதார தாக்கம்
பலபேர் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவதை சமூக-பொருளாதார காரணிகள் தடுக்கக்கூடும். இது ஏற்கனவே உள்ள சமூக-பொருளாதார பிரச்சினைகளை அதிகரிக்கிறது.
மற்றொரு வழக்கில், நெம்மேலி உப்புநீக்கும் ஆலையிலிருந்து தங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் அதிகப்படியான உப்புச் சுவையுடனும், துர்நாற்றத்துடனும் இருப்பதாகவும், இது கழிவுநீர் மாசுபாட்டைக் குறிக்கிறது என்றும் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மரியம்* கூறுகிறார்.
“எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக நோய்வாய்ப்பட்டனர். எங்களுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளால், 20 லிட்டருக்கு ரூ 35-50 விலையில் உள்ள தனியார் தண்ணீர் கேன்களை வாங்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும், என் பகுதியில் உள்ள அனைவராலும் அதை வாங்க முடியாது,” என்று அவர் விளக்குகிறார். மேலும், அவர்கள் குளிக்க உப்புநீக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதால், அப்பகுதியில் உள்ள பலரைப் போலவே மரியமின் குடும்பத்தினரும் தோல் மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read more: Pallavaram tragedy highlights why safe drinking water is a luxury for this suburb
நீர்வழி நோய்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள்
நீர்வழி நோய்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க, அரசாங்கம் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது.
நீரினால் பரவும் நோய்கள் பதிவாகும் போது, ஆரம்ப சுகாதார மையங்களிலுள்ள (UPHC-களில் உள்ள) மருத்துவ அதிகாரிகள் உடனடி நடவடிக்கைக்காக சுகாதார ஆய்வாளர்களுக்கு (SI) அறிவிப்பார்கள் என்று விளக்குகிறார், சென்னை UPHC-யின் முன்னாள் மருத்துவ அதிகாரியான டாக்டர் அருளரசன்.
பின்னர் பாதிக்கப்பட்ட நோயாளியின் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிக்குச் சென்று கிணறுகள் மற்றும் ஏரிகள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து நீர் மாதிரிகளைச் சேகரிப்பது SI-யின் பொறுப்பாகும்.
இந்த மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கிண்டியில் உள்ள அரசு சோதனை மையத்திற்கு அனுப்பப்படுகின்றன.
சோதனை முடிவுகளின் அடிப்படையில், மேலும் மாசுபடுவதற்கான அபாயத்தைக் குறைக்க, பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் குளோரினேஷன் நடவடிக்கைகளைத் அதிகரித்தல் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் நீர் மற்றும் நிரம்பி வழியும் கழிவுநீர் வடிகால்களால் ஏற்படும் நீர்வழி நோய்களையும் அதன் அபாயங்களை அங்கீகரித்து, நீர் ஆதாரங்களில் குளோரினேஷன் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை டிசம்பர் 2024 இல் வெளியிட்டது.
கவனிக்கப்படாமல் உள்ள வளர்ந்து வரும் இரசாயன மாசுபாடுகள்
பாக்டீரியா மற்றும் வைரஸ் மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக இருந்தாலும், வளர்ந்து வரும் இரசாயன மாசுபாடுகளும் எச்சரிக்கைகளை எழுப்புகின்றன.
“பாரம்பரிய மாசுபடுத்திகளைப் போலல்லாமல், ஃபாரெவர் கெமிக்கல்ஸ் (forever chemicals or pre- and polyfluoroalkyl substances (PFAS) போன்ற வளர்ந்து வரும் மாசுபாடுகளை நீக்குவதில் வழக்கமான நீர் சுத்திகரிப்பு முறைகள் பயனற்றதாக உள்ளன,” என்று ஐஐடி-மெட்ராஸின் சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியரான இந்துமதி எம் நம்பி கூறுகிறார்.
பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி போன்ற முக்கிய நீர்நிலைகளில் ஃபாரெவர் கெமிக்கல்ஸ் (forever chemicals or pre- and polyfluoroalkyl substances (PFAS)) எனப்படும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதை ஐஐடி-மெட்ராஸின் ஆய்வு கண்டறிந்துள்ளது. PFAS என்பது நான்-ஸ்டிக் பான்கள், ரெயின்கோட்டுகள் மற்றும் வீட்டில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் 10,000 க்கும் மேற்பட்ட இரசாயனங்களின் குழுவாகும். தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடு, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் திறந்தவெளி குப்பைகிடங்குகள் ஆகியவை PFAS மாசுபாட்டின் முதன்மை ஆதாரங்களாகும்.
PFAS போன்ற வளர்ந்து வரும் இரசாயனங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாத தற்போதைய நீர் தர வழிகாட்டுதல்களால் இந்தப் பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது. “இந்த இரசாயனங்கள் நிலையான நீர் தர சோதனையின் ஒரு பகுதியாக இல்லை, இதனால் அவை கவனிக்கப்படாமல் குடிநீர் விநியோகத்தில் கசிகின்றன,” என்று இந்துமதி கூறுகிறார்.
அமெரிக்காவில் PFAS-வால் பாதிப்பிற்குள்ளானவர்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், கருவுறுதல் பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் பிறப்பு குறைபாடுகள் போன்ற உடல்நலன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டன. “இது சென்னையில் PFAS மாசுபாட்டைச் சமாளிக்க அவசர நடவடிக்கை மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறது,” என்று இந்துமதி கூறுகிறார்.
உங்கள் தண்ணீரின் தரத்தை சோதிக்க விரும்பினால், இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும்.
Read more: Chennai’s last lung space: Nanmangalam Lake faces an ecological emergency
தற்காலிக தீர்வுகள் மற்றும் நீண்டகால உத்திகள்
ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) நீர் சுத்திகரிப்பான்கள் போன்ற நடவடிக்கைகள் தற்காலிக தீர்வை வழங்கினாலும், அவை நிரந்தர தீர்வல்ல. “RO அமைப்புகள் மாசுபாடுகளை நீக்கினாலும், அவை நிராகரிக்கப்பட்ட நீரில் செறிவூட்டப்பட்ட இரசாயனங்களை (concentrated chemicals) விட்டுச் செல்கின்றன. RO சுத்திகரிப்பான்கள் அல்லது activated carbon வடிகட்டிகள் போன்ற தீர்வுகள் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம், ஆனால் அவை நீர் மாசுபாட்டின் பரந்த பிரச்சினைக்கு நீண்டகால தீர்வாக இருக்காது” என்று இந்துமதி குறிப்பிடுகிறார்.
குடிநீரை உட்கொள்வதற்கு முன் கொதிக்க வைப்பது, வெளிப்புற உணவைத் தவிர்ப்பது, சரியான சுகாதாரம் மற்றும் உடனடி மருத்துவ தலையீடு போன்ற பாரம்பரிய அணுகுமுறையை நிறந்தர தீர்வாக டாக்டர் கீர்த்தி பரிந்துரைக்கிறார்.
நீரினால் பரவும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு TNRDA-யின் பரிந்துரைகள்
- நகராட்சி மற்றும் கிராமப்புற நீர் விநியோக நிலையங்களில் கட்டாய நீர் தர சோதனைகள்
- கழிவுநீர் கசிவுகள், திறந்த வடிகால்கள் மற்றும் உடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்தல்
- கொதிக்கவைத்த நீரை குடிப்பது , கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது மற்றும் உணவை பாதுகாப்பாக கையாள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- கழிவுநீர் கசிவுகள், திறந்த வடிகால்கள் மற்றும் உடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்தல்
- PHC.களில் அத்தியாவசிய மருந்துகள், IV திரவங்கள் மற்றும் தடுப்பூசிகளை இருப்பு வைத்திருத்தல்; நடமாடும் சுகாதார வசதிகளை நியமித்தல்
- சுகாதாரம், நகராட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு
மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் மட்டுமே, அதிகரித்து வரும் நீர்வழி நோய்களின் அலையை மாற்றியமைக்கவும், மேலும் தீங்குகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் முடியும்.
*கோரிக்கையின் பேரில் பெயர் மாற்றப்பட்டது.