Translated by Sandhya Raju
“பல மாதங்களாக தனிமையில் வாடினேன். என் குடும்பத்தினரிடம் என்னால் மனம் விட்டு பேச முடியவில்லை. தற்கொலை எண்ணத்தை தூண்டக்கூடிய அளவில் கல்லூரி படிப்பு ரொம்பவே அழுத்தம் கொடுத்தது” என்கிறார் பிரபல கல்லூரியில் இறுதி ஆண்டு எஞ்சினீயரிங் பயிலும் ராம்.
வாழ்க்கையின் இக்கட்டான முடிவை எடுக்கும் முன், ஆன்லைனில் உதவி கிட்டுமா என்று தேடினார். “என்ன தேடுகிறேன் என்று தெரியாமல் என் பிரச்சனையை முன்வைத்து வலைதளத்தில் தேட ஆரம்பித்த பொழுது தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் நம்பர் கிடைத்தது. சும்மா முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தில் எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி தொடர்பு கொண்டேன், ஆனால் அந்த முயற்சி என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது” என்கிறார்.
WHO ஆய்வின் படி இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கைமூன்று மடங்கு அதிகம். National Crime Records Bureau (NCRB) படி.2015 ஆண்டில், 14,602 தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் நம் மாநிலம் இருந்தது. 2015 எண்ணிக்கையின் அடிப்படையில் 916 மாணவர்களும் 2673 குடும்பத்தலைவிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
இதில் சென்னை குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் 2270கும் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன. இது மொத்த மாநில எண்ணிக்கையில் பதினைந்து சதவிகிதம் ஆகும். தனக்குத்தானே துன்பம் விளைவித்துக் கொள்வதே இறப்புக்கு பிரதான காரணமாக நகர்புறத்தில் அமைகிறது.
உதவிக்காக காத்திருத்தல்
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனநலம் சான்ற பிற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு, வாழ்க்கை தினந்தோறும் போராட்டமாக இருக்கும் வாய்ப்புள்ளது. மனநலம் பற்றிய பார்வை, அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்கள் உதவி நாடுவதற்கு தடையாக அமைகிறது. சரியான நேரத்தில் ஆலோசனை இல்லாத நிலைமையை தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன்கள் மாற்ற செயலாற்றி வருகின்றன.
டிசம்பர் 2013 ஆம் ஆண்டு அரசாங்கம் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியது. தேர்ச்சி பெற்ற மருத்துவ உளவியலாளர்களை கொண்டு தொலைபேசியில் ஆலோசனை வழங்கப்படுகிறது. தனியாருடன் கூட்டு முயற்சியில் உருவான இந்த ஹெல்ப்லைன் GVK EMRI என்ற நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஒதுக்கி வைக்காமல் அவசர கால சிகிச்சை போன்று, தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனை அவசியம் என்பதை உணர வைப்பதே பெரும் சவாலாக உள்ளது என்கிறார் ஹெல்ப்லைனில் ஆலோசனை வழங்கும் ஒருவர்.
மன அழுத்ததில் இருக்கும் ஒருவர் ஹெல்ப்லைனை அழைத்ததும், மனநல ஆலோசகர் அவரின் பிரச்சனையை பொறுமையுடன் கேட்டு எவ்வாறு அணுக வேண்டும் என அறிவுரை கூறுகிறார். அழைக்கும் நபர் தீவிர தற்கொலை சிந்தனையுடன் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை நாட அறிவுறுத்தப்படுகிறார். அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் ஆலோசகர் பற்றியும் தகவல் பகிரப்படுகிறது.
“மருத்துவ கல்லூரிகள், தாலுக்கா மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் என எல்லாருமே மனநல சிகிச்சை அளிக்க தயார்படுத்தப்பட்டுள்ளனர். அழைப்பவரின் நிலைமை பொருத்து தக்க ஆலோசனையை ஆலோசகர்கள் வழங்குகின்றனர்,” என்கிறார் ஒரு அதிகாரி.
மேலும் ஆலோசனை வழங்கிய சில நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டு நிலைமையில் முன்னேற்றம் உள்ளதா எனபதையும் இவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இதற்காக பதிவேடு ஒன்றும் பராமரிக்கப்படுகிறது.
குழந்தை பேறுக்கு பிறகு, அதனை ஒட்டிய அழுத்தத்தில் ஒரு இளம் தாய் இருந்ததாகவும், அவருக்கு எதனால் அழுத்தம் ஏற்படுகிறது என்றும் தெரியாமல் இருந்தார். திடீரென்று குழந்தையுடன் பாசம் இல்லாதது போன்றும் உணர ஆரம்பித்தார். ஹெல்ப்லைனின் உதவியை நாடிய அவருக்கு தக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அவர் சகஜ நிலைக்கு திரும்பும் வரையில் அவருக்கும் வழிகாட்டப்பட்டது என்கிறார் அந்த அதிகாரி.
பரீட்சை நேரத்திலும், ப்ளூ வேல் போன்ற திடீரென்று முளைக்கும் அழுத்த சூழலிலும் ஹெல்ப்லைனுக்கு வரும் அழைப்புகள் அதிகரிக்கின்றன. 104 ஹெல்ப்லைனிலிருந்து கிளை எண்ணாக 14417 என்ற ஹெல்ப்லைன் எண் உருவானது. இந்த எண் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றியும் பரீட்சை நேர அழுத்தத்தை எதிர்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
80களிலிருந்தே ஹெல்ப்லைன் உதவி
104 ஹெல்ப்லைன் வருவதற்கு முன்பாகவே ஸ்னேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவை ஆற்றி வருகிறது. தன்னார்வ தொண்டர்களின் உதவியுடன் 24 மணி நேரமும் இது செயல்படுகிறது. தற்கொலை தடுப்பில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது ஸ்னேகா.
” பர்சனல் காரணங்களால் மிகுந்த அழுத்தத்தில் இருந்த பொழுது ஸ்னேகா ஹெல்ப்லைனை அணுகினேன். அப்போழுதெல்லாம் இது பற்றி அவ்வளவாக தெரியாது. நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை” என்கிறார் சென்னையில் தொண்டு நிறுவனம்ஒன்றில் பணியாற்றி வரும் ஆதிரா*.
ஸ்னேகா ஹெல்ப்லைனை பற்றி விழுப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் ஆதிரா அறிந்து கொண்டார். “எனக்கு ஆலோசனை வழங்கியவர் மிகுந்த பொறுமையுடன் என் பிரச்சனையை கேட்டறிந்தார். சிகிச்சை பற்றிய என் பயத்தை போக்கினார். அப்போழுதிலிருந்து தவறாமல் ஆலோசகரை நாடி அறிவுரை பெற்றுக்கொள்கிறேன், இப்போழுது மிகவும் நன்றாக உள்ளேன்”, என்கிறார் ஆதிரா.
முழுவதும் தன்னார்வலர்களின் மூலமே இந்த ஹெல்ப்லைன் செயல்படுகிறது. எந்த நேரத்திலும் இரண்டு தன்னார்வலர்களேனும் இருப்பார்கள். ஆலோசனை தருபவர்கள் குறைந்தது 40 மணி நேர பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றனர். தேவைப்படும் நேரத்தில், 104 போன்றே, அழைப்பவர்களை தகுதி பெற்ற மனநல மருத்துவரை அணுக பரிந்துரைக்கிறார்கள்.
“நாங்கள் 1986ல் தொடங்கிய காலத்தில், அவ்வளவாக தொலைபேசி ஊடுருவியிருக்கவில்லை, ஆகையால் எங்களை நேரில் சந்திக்க வருவார்கள். ஆனால் இப்பொழுது நிறைய அழைப்புகள் வருகிறது. கடந்த நான்கைந்து வருடங்களாக மின்னஞ்சல் மூலம் தொடர்ப்பு கொள்பவர்கள் அதிகரித்துள்ளனர்.” என்கிறார் ஸ்னேகா ஹெல்ப்லைனை நிறுவிய டாக்டர் லக்ஷ்மி விஜயகுமார்.
பல்வேறு தளங்கள் மூலமாக எங்களைப் பற்றி தெரிந்து கொள்கின்றனர். நெட்ஃப்லிக்ஸில் வந்த ‘13 Reasons Why’ என்ற தொடருக்கு பிறகு நிறைய அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளன என்கிறார் டாக்டர் லக்ஷ்மி.
மன உளைச்சல்களை களைவதில் முக்கிய பங்காற்றினாலும், நகரத்தில் தற்போது அதிகரித்து வரும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஈடு கட்ட இது போதாது என்பதே நிதர்சனம். அரசு நடத்தும் ஹெல்ப்லைனுக்கு தினந்தோறும் இரண்டாயிரம் வரை அழைப்புகள் வருவதால், உடனடியாக தொடர்பு கிடைக்காமல் போகும் சாத்தியக்கூறு அதிகம். அத்தகைய சூழலில் மனம் தளராமல் பொறுமையுடன் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்பதே ஹெல்ப்லைன் நடத்துபவர்களின் வேண்டுதலாக உள்ளது.
ஸ்னேகா ஹெல்ப்லைனுக்கு தினந்தோறும் நாற்பது முதல் ஐம்பது அழைப்புகள் வருகிறது. “எங்களுக்கு வரும் 40 சதவிகித அழைப்புகள் தீவிர தற்கொலை எண்ணத்தில் உடையவர்களாகவே உள்ளனர். சில சமயங்களில் 104 ஹெல்ப்லைனும் எங்களுக்கு அழைக்குமாறு பரிந்துரை செய்கின்றனர். இது போன்ற அழைப்பாளர்களிடம் நீண்ட நேரம் செலவழிக்க நேரிடும்”, என்கிறார் டாக்டர் லக்ஷ்மி.
பத்து பதினைந்து நிமிடங்கள் முதல் நாற்பத்தியைந்து நிமிடங்கள் வரை கூட சில அழைப்புகள் நீடிக்கும். அழைப்பாளர்காள் எப்பொழுது வேண்டுமானாலும் தேவையான ஆலோசனைகளுக்கு மீண்டும் தொடர்பு கொள்ளலாம்.
“மற்ற மாநிலத்தில் உள்ள மன நல மருத்துவ ஆலோசகர்களின் தொடர்பு எண்களையும் நாங்கள் வைத்துள்ளோம், இது பிற மாநிலத்திலிருது அழைப்பவர்களுக்கு உதவியாக அமைகிறது.” என்கிறார் டாக்டர் லக்ஷ்மி. 104 ஹெல்ப்லைன் ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்டுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்சிகளையும் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது
அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் ஹெல்ப்லைன்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன என்பதே உண்மை.
* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
Helplines
Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)
State suicide prevention helpline – 104 (24 hours)
iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm)
Walk-in
Sneha Foundation Trust
11, Park View road, R. A. Puram
Chennai – 600028
E-mail: help@snehaindia.org