Translated by Sandhya Raju
காலச் சக்கரம் வேகமாக சூழல, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக நம் நீராதரங்களை பாதுகாக்கும் முயற்சி முன் எப்பொழுதையும் விட மிகவும் தீவிரமாகியுள்ளது. கடந்த வருடங்களில் தண்ணீர் பிரச்சனை சென்னையை வாட்டி வதைக்க, இதை சமாளிக்க பல இடங்களிலிருந்து தண்ணீர் விநியோகிக்கும் நிலை உருவானது. இதே போல் ஒரு சூழல் மீண்டும் உருவாவதை தடுக்க, நீர் நிலைகளை காப்பதே ஆகச் சிறந்த ஒரே வழி.
இதற்கு முரண்பாடாக, நம் நகரத்தில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளை காக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டுவதாக தெரியவில்லை. கொரட்டூர் ஏரியின் சோகமான கதையே இதற்கு சாட்சியாகும். சென்னையின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் இந்த 590 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி தற்போது மரணப்படுக்கையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ரசாயனம் கலந்த நீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இந்த ஏரிக்குள் கடந்த டிசம்பரில் விடப்பட்டது தான். அருகில் உள்ள அம்பத்தூர் பகுதிக்கு கடும் மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இது வாடிக்கையாகிவிட்ட நிகழ்வு என இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிமுறைகளை பின்பற்றாமல், மக்களின் தொடர் புகார்களையும் மதிக்காமல், சிறிதும் குற்ற உணர்வே இல்லாமல் சென்னை பெருநகர மாநகராட்சி இதை மேற்கொள்கிறது. இந்தக் குற்றச்சாட்டில்: கண்டு கொள்ளாமல் இருக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஏரியைத் தூர்வாராமல் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்திய பொதுப்பணித்துறை மற்றும் இங்கு கழிவுநீர் நிலையத்தைக் கட்டாத சென்னை குடிநீர் வடிகால் வாரியமும் பங்கு கொள்கின்றன
அழிவின் கதை
கடந்த டிசம்பர் மாதத்தில் DTP காலனி கால்வாயிலிருந்து கருப்பு நிற மாசு நீர் கொரட்டூர் ஏரிக்குள் கலந்தது. இந்த மாசு நீர் அருகிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளிலிருந்து வந்த கழிவு நீர் என உள்ளூர்வாசிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவித்தனர்.
டிசம்பர் 12 அன்று இதை தானாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு பெஞ்ச், உடனடியாக மாசு நீர் கலப்பதை தடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால் மாசுபட்ட நீர் முற்றிலுமாக கலந்த பின்னரே, டிசம்பர் 24-ம் தேதியன்று மாநகராட்சி னடவடிக்கை மேற்கொண்டது. “பருவ மழையால் அண்ணாநகர் பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்க, கொரட்டூர் ஏரியின் நுழைவாயிலை திறக்க வேண்டியிருந்தது என்றும், இது மீண்டும் அடைக்கப்படும்” என்று சென்னை மத்திய மண்டல பிராந்திய துணை ஆணையாளர், பி என் ஸ்ரீதர், IAS தெரிவித்தார்.
Also read: We get 200 complaints every day on the Namma Chennai mobile app: P N Sridhar, RDC Central
கொரட்டூர் ஏரி சந்திக்கும் அழிவு நமக்கு ஆபத்தாக தெரிந்தாலும், இது புதிதல்ல என்பதே நிதர்சனம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த ஏரியில் மாசு நீர் கலப்பது வாடிக்கையாகிவிட்டது. ” இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய ரசாயனங்கள் அதிக அளவில் உள்ளதால் தகுதியற்ற ஏரிகள் பட்டியலில் கொரட்டூர் ஏரியையும் தமிழக அரசு சேர்த்துள்ளது. பால் மற்றும் நிக்கல் முலாம் நிறுவனங்களே அதிக மாசு உண்டாக்கும் நிறுவனங்கள்” என்கிறார், ஏரியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் செயலாளர் எஸ் சேகரன். இந்த இயக்கம் ஏரியை பாதுகாக்கும் முயற்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இது குறித்து தொழிற்சாலைகளை நாம் தொடர்பு கொண்ட பொழுது, இந்த விவகாரத்தை பற்றி நம்மிடம் பேச மறுத்தன.
Korattur Lake: A timeline
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத நிலை
அம்பத்தூர் பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் இல்லாததால், கழிவுநீர் ஏரிக்குள் விடப்படுகிறது. இந்த மண்டலத்தில் உள்ள நிலையத்தின் தகவலின் படி, இரண்டு கோடி லிட்டர் கழிவுநீர் இங்கு உற்பத்தியாகிறது. “கொரட்டூர் ஏரி அருகேயுள்ள ஐம்பதாயிரம் நிலத்தடி நீர் பெருக்கு முறை இல்லை. இந்த கழிவநீர் சுத்தகரிக்கப்பட்டு நீர் நிலைகளில் விடப்பட்டால், தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது” என்கிறார் கல்லூரி மாணவர் பிரதீப் குமார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மெட்ரோ நீர் நிலையத்திற்கு அரசு இரண்டாயிரம் கோடிரூபாய் ஒதுக்கியுள்ளது. “இந்த பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க அரசு முன்னுரிமை அளித்திருந்தால் , இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும்” என்கிறார் இங்கு வசிக்கும் ஹர்ஷிதா பிரசாத். இதற்கான திட்டம் குறித்து மெட்ரோ நீர் வாரிய தலைமை பொறியாளரை தொடர்பு கொள்ளும் முயற்சி கைகூடவில்லை.
தீர்வுகளை நசுக்கும் விஷயங்கள்
ஏரியில் உள்ள மாசு அளவை பற்றி விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு 2016-ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. “கொரட்டூர் ஏரியின் ஐம்பது இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை சோதிக்க ஒரு குழுவை நியமித்தோம். விதிமுறைகளை பின்பற்றாததால் முப்பது நிறுவனங்களை வாரியம் சீல் வைத்துள்ளது” என்றார் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி.
இந்நிறுவனங்களின் பெயர்களை நாம் கேட்ட போது, “இதில் சில நிறுவனங்கள் விதிமுறைகளை கடைப்பிடித்துள்ளதால் இவற்றினை மீண்டும் செயல்பட ஆணை பிறப்பிக்க உள்ளோம். ஆகையால் பெயர்களை வெளியிடுவது நன்றாக இருக்காது.” என்றார் அந்த அதிகாரி.
இத்தனை வருட காலம் இந்த ஏரி நிராகரிக்கப்பட்டாலும், ஏரியை மீட்டெடுக்கலாம் என்ற சிறிய நம்பிக்கை உள்ளது. தண்ணீரில் உள்ள இரும்பு, பாஸ்பரஸ் (துத்த நாகம்) அளவு குறைந்துள்ளது என்று நான்கு மாதங்களுக்கு முன் மெட்ரோ நீர் வாரியம் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. ஏரியை மீட்டெடுக்க மூன்று அம்ச கோரிக்கையை KAPMI முன்வைத்துள்ளது: மாசு அடைந்துள்ள மண்ணை மூன்றடி ஆழத்திற்கு தூர்வாறுதல், கழிவுநீர் கலப்பதை தடுத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளை கொண்டு ஒரு குழு அமைத்தல்.
தலைமை செயலர் கே சண்முகம் தலைமையில் குழு அமைக்க அதிகாரிகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக, தீர்ப்பாயத்தின் ஆணையை அதிகாரிகள் பின்பற்றவில்லை. ஆனால் ஏரியை காப்பாற்றவும், இப்பகுதி மக்களின் தாகத்தை போக்கவும், தீர்ப்பாயத்தின் வழிக்காட்டுதலை பின்பற்றுவது மிக அவசியம்.
Read the original article in English here.