Translated by Sandhya Raju
மரத்திலான சமையல் உபகரணங்கள், பேப்பர் மற்றும் துணியிலான பைகள், ஸ்டீல் பாத்திரங்கள் ஆகியவை பிளாஸ்டிக்கு மாற்றாக வலம் வரத் தொடங்கிவிட்டன. வணிகர்கள், உணவு விடுதிகள், மக்கள் என சென்னையில் எந்த மூலையில் பார்த்தாலும் அனைத்து தரப்பினரும் படிப்படியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு மாறத் தொடங்கிவிட்டனர்.
வணிகர்களை பொருத்த வரை, மாற்றத்தை ஏற்றுக் கொள்ள பல்வேறு கலவையான ஒரு வித குழப்பமான சூழலே நிலவுகிறது. அடையாறு ஆனந்த பவன், ஃபசோஸ், ப்லாக் பாக்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்கள் இந்த தடையை ஏற்று உடனடியாக துணி, காகித பை, அட்டை டப்பா, மர கரண்டி என மாறினாலும் சில நிறுவனங்கள் மாற்றத்திற்கு இன்னும் முழுதாக தயாராகவில்லை என்பது தான் நிதர்சனம்.
மாற்றம்
இந்த தடை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு ஆபத்தாக முடியவில்லை. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் அதிலும் காகித உற்பத்தி நிறுவனங்கள் நிறையவே வரத் தொடங்கி விட்டன. தடை அமலுக்கு வந்த முதலே மரத்தாலான சமையல் சாதனங்களும் சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களுக்கான மவுசும் கூடத் தொடங்கிவிட்டன. அமேசான் டெலிவரி நபர் கூறுகையில் காய்கறியிலிருந்து தயாரிக்கப்படும் பாக்கேஜிங்கிற்கு வரவேற்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.
விலை அடக்கமான மாற்றுக்கு செல்ல வணிக நிறுவனங்கள் நிறையவே திட்டம் போடவேண்டியிருந்தது. உதாரணமாக, ஈக்காட்டுதாங்கலில் உள்ள வசந்தம் உணவகம் பிளாஸ்டிக் போலவே அமைப்புடைய மக்கக்கூடிய மாச்சத்து கூடிய பையை உபயோகித்தது. மலிவான பிபி பைகளை தவிர்த்து கிலோ 550 விற்கு விற்பனையாகும் மாவுச்சத்து கூடிய பையை தேர்ந்தெடுத்தனர். “வாடிக்கையாளர்களிடம் ஒரு பைக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கிறோம். முதலில் தயங்கினாலும் தடை பற்றி விளக்கியதும் வாங்க முன்வந்தனர்” என்கிறார் இங்கு பணி புரியும் ஒரு ஊழியர். இந்த பைகள் மக்கக் கூடியதால் ISO சான்றிதழும் பெற்றவை.
தடை அமலுக்கு வரவுள்ள சில மாதங்களுக்கு முன்னதாகவே பிளாஸ்டிக் பைகள் வாங்குவதை பல நிறுவனங்கள் நிறுத்தி விட்டன . இருந்தாலும் சில நிறுவனங்கள் இருப்பில் உள்ள பிளாஸ்டிக் பைகள் தீரும் வரை உபயோகித்து வந்தன. தடை எந்தொவொரு பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூறுகிறார் வசந்தம் உணவகத்தின் மேலாளர்.
தடை பற்றியும், மீறினால் உண்டாகும் பாதகம் பற்றியும், சுற்றுசூழல் பற்றியும் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்சொல்ல சில நாட்கள் தேவைப்பட்டது என்றும் கூடுதலாக பணம் கொடுக்க அவர்கள் தயங்கவில்லை என்றும் கூறினார்.
கோயம்பேடு சந்தையில் சில வணிகர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தொடர்ந்தாலும் திருவான்மியூர், தாம்பரம் போன்ற சிறிய சந்தைகளில் பாரம்பரிய முறைக்கு மாறிவிட்டனர். திருவான்மியூர் சந்தையில் காய்கறிகளை மறுபடியும் பயன்படுத்தக்கூடிய டப்பாவில் வைக்கின்றனர்.
“வணிகர்கள் மாறிவிட்டாலும் சில வாடிக்கையாளர்கள் இன்னமும் காய்கறிகளை தனித்தனியாக பிளாஸ்டிக் பைகளை போடச்சொல்லி கேட்பதை விடவில்லை. மாற்றம் நம் செயலிலும் வர வேண்டும்” என்கிறார் டி.நித்யா. ஆர்கிடெக்டாக உள்ள நித்யா முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லா வாழ்க்கையை கடைபிடிக்கிறார்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிக் பாஸ்கெட், பழங்கள் மற்றும் காய்கறிகளை ஸ்டைரோஃபோம் நெட்டில் பாக் செய்து தருகிறது. பெரும்பாலான பொருட்கள் திரும்ப தரக்கூடிய அட்டை பெட்டிகளில் பாக் செய்து தரப்படுகின்றன. “டெலிவெரிக்கு எளிதாக மக்கக்கூடிய பைகளில் பாக் செய்து தருகிறோம்” என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளது பிக் பாஸ்கட்.
பசுமை கடைகள்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தன்னார்வ நிறுவனங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. வர்த்தகர்கள் எவ்வாறு பசுமைக்கு மாறலாம் என நம்ம ஊரு ஃபவுன்டேஷன் நடத்தும் நம்ம க்ரீன் கடை உதவுகிறது. திருவான்மியூரில் பிளாஸ்டிக் உபயோகிக்காமல் வணிகம் புரியும் மிருகங்களுக்கான உணவு நடத்தும் கடையை பார்த்து இந்த யோசனை நித்யாவுக்கு தோன்றியது.
தடை செயல்முறைக்கு வரும் முன்னரே தாமாகவே மாற்று வழிக்கு மாறியது திருவான்மியூரில் செயல்படும் நடராஜன் மாட்டு தீவன கடை. பிளாஸ்டிக் பாக்கட் இல்லாமல் பொருட்களை காகிதத்தில் சுற்றி தரும் முறையை இங்கு பின்பற்றுகின்றனர்.
அதிக அளவிலான பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் சொந்த பையை கொண்டு வர வேண்டும் என நிர்பந்தப்படுத்துகிறது இந்நிறுவனம். சிறிய அளவிலான பொருட்களை கட்ட வணிகதாளே போதுமானது எனக் கூறும் நித்யா சிறு வணிகர்களுக்கு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த வணிகர்கள் முழுவதுமாக பசுமை மாற்றுக்கு மாறிய பின் நம்ம ஊரு ஃபவுன்டேஷேன் இந்நிறுவனங்களை பசுமை நிறுவனம் என சான்றளிக்கிறது.
மாற்று வழிகளை குறித்து பல விஷயங்களை பகிர, அறிந்து கொள்ள சாலிட் வேஸ்ட் மானேஜ்மென்ட், நம்ம ஊரு ஃபவுன்டேஷன் போன்றவை நடத்தும் வாட்சப் க்ரூப் உதவுகிறது.
சீன ஜூட் பை எனப்படும் பாலிப்ரோப்பிலீன் பைகள் குறித்த குழப்பங்களும் விளைவுகளும் இன்னமும் இருக்கின்றன. தோற்றத்தில் மாறாக இருந்தாலும் பிளாஸ்டிக் போன்றே ஆபத்தானதாக இது கருதப்படுகிறது.
கிராண்ட் ஸ்வீட்ஸ், சரவண பவன், வசந்த பவன், பழமுதிர் நிலையம் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த வகை பைகளையே உபயோகிக்கின்றன. அடையாறில் கறிக்கடை வைத்திருக்கும் எஸ்.திருமூர்த்தி கூறுகையில் “பரிசோதனையின் போது பயன்படுத்தப்படும் பைகள் தரமானவை” என சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்ததாக கூறுகிறார். இது பற்றி அறிந்து கொள்ள சரவண பவனை தொடர்பு கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
பாலிப்ரோப்பிலீன் பைகளை விட பாலிப்ரோப்பிலீன் பிளாஸ்டிக் அபாயமானது. இவ்வகை பிளாஸ்டிக்களை விரைவிலேயே தூக்கி எறிய வாய்புகள் அதிகம். மறு சுழற்சியும் செய்ய முடியாது. பாலிப்ரோப்பிலீன் பைகள் பொருத்த வரை மைக்ரோஃபைபர் மாசுபாடு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்கிறார் ஜீரோ கழிவு என்பதை கயா மூலம் முன்னெடுத்து வரும் தர்மேஷ் ஷா. தடை என்பது ஒரு பொருளுக்கு பதில் வேறொரு பொருளை அறிமுகப்படுத்துவது என்றில்லாமல் தூக்கி எறியப்படும் பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். பாலிப்ரோப்பிலீன் பைகள் தான் மாற்று என்று பல வணிகர்கள் நினைப்பது துரதிஷ்டவசமானது. பாலிப்ரோப்பிலீன் பைகள் துணியினால் ஆனது என்றும் பிளாஸ்டிக் இல்லை என்றும் நினைக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் ISO சான்றிதழை சரி பார்ப்பது அவசியம்” என்கிறார் நம்ம ஊரு ஃபவுண்டேஷனில் தன்னார்வலராக உள்ள பிரியா ராமசந்திரன். “தடை அமல்படுத்தும் முன் ஐஐடி-எம் போன்றவற்றின் ஆலோசனையின் படி தொழில்நுட்ப மாற்றுகளை அரசாங்கம் செயல்பட்டிருத்தல் வேண்டும். பிளாஸ்டிக்கை திரும்ப பெறுதலிலும் அடக்கமான விலையில் மாற்று பொருட்களை எளிதாக சந்தையில் கிடைக்கும் படியும் திட்டமிட்டிருக்கலாம்” என்கிறார் சமூக ஆர்வலர் பிரஷாந்த் கௌதம்.