Translated by Sandhya Raju
மாற்றம் என்பது இன்று தொடங்கி நாளை முடிவதல்ல. ஒரு நகரத்தில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிலுள்ள குடிமக்களின் பங்களிப்பு மிக அவசியம். கழிவு மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர்நிலைகளின் மறுசீரமைப்பு ஆகியவற்றில் பாரம்பரிய மற்றும் நவீன முறையை பயன்படுத்தி பல்வேறு முயற்சிகளை (தெற்கு) பிராந்திய துணை ஆணையர் பதவி வகிக்கும் ஐ ஏ எஸ் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு முயற்சிகள் குறித்தும், நடைமுறைபடுத்தும் பொழுது தான் சந்தித்த சவால்கள் பற்றியும் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்டார்.
ஆல்பி ஜான் வர்கீஸ், ஐ ஏ எஸ்
சென்னையின் தெற்கு பகுதியில் ஜீரோ கழிவு முயற்சி எந்த கட்டத்தில் உள்ளது?
அடையாறு, ஆல்ந்தூர், வளசரவாக்கம், பள்ளிக்கரணை, சோலிங்கநல்லூர் என தெற்கு பகுதியை ஐந்து மண்டலங்களாக பிரிக்கலாம். இங்குள்ள மொத்த மக்கள் தொகை 17,15,799 ஆகும். இதில் 13-ஆம் மண்டலம் 5.6 லட்சம் மக்கள் வசிக்கும் அதிக மக்கள் தொகையை கொண்டது. ஏழு மாதம் முன் வரை, தெற்கு பகுதியிலிருந்து ஒரு நாளைக்கு 1500 மெட்ரிக் டன் அளவு குப்பைகள் அனுப்பப்பட்டன. இது இப்பொழுது 1250 மெட்ரிக் டன் அளவுக்கு குறைந்துள்ளது.
இந்த குப்பைகளை உரமாக மாற்ற நம்மிடம் 27 மைக்ரோ உர மையங்கள் (எம்.சி.சி) உள்ளது. இதில் 170 MT அளவு குப்பைகளை உரமாக்க முடியும். மேலும் 86 MT அளவில் 14 மையங்கள் துவங்க திட்டமிட்டுள்ளோம். இது தவிர பொருள் மீட்பு வசதி மையங்களை (Material Recovery Facilities (MRF)) தொடங்கியுள்ளோம். இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கையாள்கிறோம். இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. பல சவால்களும் உள்ளது. ஆனா நிச்சயமாக நான் சரியான பாதையில் செல்கிறோம். இலக்குகளை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்கங்கள் (RWA) பற்றி உங்களின் கருத்து? கழிவு மேலாண்மை மேற்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனரா?
குடியிருப்போர் நல சங்கங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இல்லத்தரசிகள், வீட்டு வேலை செய்பவர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை இவர்கள் தான் மேற்கொள்கின்றனர். தெற்கு பகுதியில் இந்த சங்கங்கள் உத்வேகத்தோடு செயல்படுகின்றன; நாங்கள் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. மேலும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாலமாக இவர்கள் திகழ்கின்றனர்.
குப்பையை பிரித்து வைக்கும் பணியை நூறு சதவிகிதம் இங்கிருக்கும் குடியிருப்புகளின் பல சங்கங்கள் மேற்கொண்டுள்ளன. சொல்லப்போனால் மண்டலம் 13-இல் தனியார் நிறுவனம் மேற்கொண்ட சுகாதாரப்பணியில் இருக்கும் தொய்வை பற்றி எங்களுக்கு பல புகார்கள் வந்தன, அடையார் பகுதிகளில் உள்ள குடியிருப்பு சங்கங்களின் துடிப்பான செயல்பாட்டால் நிறைய மாற்றங்களை கொண்டு வர முடிந்தது. இதே போல் நாங்கள் போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்ட பொழுது, 11-ம் மண்டலத்தில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் உதவிக்கரம் நீட்டின. ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள குடியிருப்போர் சங்கங்களுடன் நாங்கள் தினமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். குப்பையில்லா சென்னை என்ற கனவை நனவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
சிறு ப்ளாஸ்டிக் கழிவுகளை பழைய பொருட்களை வாங்குபவர்கள் எடுப்பதில்லை. மறுசுழற்சியில் ஈடுபடுபவர்களும் சிறிய எடை அளவை வாங்குவதில்லை. சாராசரி வீட்டிலுள்ள இத்தகைய மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்களை எங்கு கொடுக்க முடியும்?
மூன்று சக்கர வாகனங்களில் இதற்கென தனி சேகரிப்பு பெட்டிகள் உள்ளன, பணியாளர்கள் அவற்றை எவ்வாறு பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, MRF மையங்களில் மக்கள் இதை நேரில் வந்து கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு கழிவுகளை பொருத்த வரையில், கடந்த மாதம் இதற்கென பிரத்யேக சேகரிப்பு மேற்கொண்டோம், அவ்வப்பொழுது இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
பெங்களூரு நகரத்தை போன்று மூன்று வகை குப்பை பிரித்தல் சென்னையில் எப்பொழுது அமலுக்கு வரும்?
தற்சமயம் ஈரமான மற்றும் உலர்ந்த கழிவுகளை மட்டுமே பிரித்து வருகிறோம். நகரத்தில் பல பகுதிகளில் ஏற்கனவே மூன்று வகை குப்பை பிரித்தல் – அதாவது ஈரமான கழிவுகள், உலர்ந்த கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றை தனியாக பிரித்து சேகரிப்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மேலும் விரிவாக்கப்படும்.
தெற்கு பகுதிக்கு வெள்ள தடுப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி பற்றி கூறுங்கள்?
மொத்தம் 8.9 கோடி ரூபாய் வெள்ள தடுப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு மற்றும் சாலைகளில் மழை நீர் சேகரிப்பு, கால்வாய்கள் தூர்வாறுதல் மற்றும் ஏரிகள் புணரமைப்பு ஆகியவையும் இதில் அடங்கும். வீராங்கல் ஓடை, பக்கிங்காம் கால்வாய் என முக்கிய கால்வாய்கள் இங்கு உள்ளன. பொதுப்பணித் துறை (பி.டபிள்யூ.டி) தூர்வாறும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த கால்வாய்கள் மட்டுமின்றி பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், தேவைக்கு அதிகமாக உள்ள மழை நீரை வங்கக்கடலுக்கு கொண்டு செல்ல முக்கிய பங்காற்றுகிறது. சாலை வடிகால்களை சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அக்டோபர் இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.
குடியிருப்புகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த சென்னை மாநகராட்சி தீவிரமாக உள்ளது. தெற்கு மண்டலத்தை பொருத்த வரை இந்த திட்டத்தின் நிலை என்ன?
இந்த திட்டத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன: சமூக கிணறுகாளை சீரமைப்பது, நீர்நிலைகளை புணரமைப்பது மற்றும் ஒவ்வொரு வார்டிலும் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது. அறுபதாயிரம் பெரிய கட்டிடங்களை இது வரை பார்வையிட்டுள்ளோம். இவற்றில் 53,000 கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் செயலில் உள்ளன. 5,300 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்குள் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடந்து கண்காணித்து வருகிறோம்.
மொத்தம் உள்ள 111 நீர்நிலைகளில், 61 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. முக்கால்வாசி குளங்கள் தூர்வாரப்பட்டு விட்டன. இவற்றை பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அதை சுற்றி நடைபாதை, மரங்கள் ஆகிய பணிகளை மேற்கொள்ளவேண்டும், இதனால் மக்களும் இவற்றை பராமரிக்க வேண்டிய அவசியத்தை உணர்வார்கள். ஆறு மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
ப்ளாகிங்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். இந்த முயற்சி எப்படி உள்ளது?
இதை வழக்கமான முறையில் கையாள்கிறோம். அக்டோபர் முதல் வாரத்தில் பெசன்ட் நகர் பீச் அஷ்டலக்ஷ்மி கோயில் அருகே ப்ளாகிங்க் நிகழ்சியை நடத்தினோம். வாரத்தில் இரு முறை இதை செய்ய திட்டமிட்டுள்ளோம். ப்ளாகிங்க் என்பது ஒரு முறை சுத்தம் செய்யும் முயற்சி இல்லை, சுற்றுப்புறத்தில் குப்பை போடாமல் இருக்க போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். பொது இடத்தில் தூய்மை குறித்து நம் அனைவருக்கும் கடமை உள்ளதை இது வலியுறுத்துவதோடு, சமூக பொதுவெளி இடங்களை காக்கவும் உதவும்.
துணை ஆணையராக நீங்கள் சாதிக்க விரும்பும் மூன்று விஷயங்கள்?
நிறைய உள்ளன. ஆணையரின் அறிவுறுத்தலின் படி, நிலத்தில் கொண்டு சேர்க்கப்படும் கழிவுகளை பாதியாக குறைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளோம். இந்த பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் புணரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.மேலும் துடிப்பான நகர்ப்புற பொது இடங்கள் அமைத்தல் – உள்கட்டமைப்பு சேர்த்தல் மற்றும் குடிமக்களின் ஈடுபாடு மூலம்- இதையும் முதன்மை செயலாக செயல்படுத்த வேண்டும்.
குறிப்பு:
சென்னை மாநகராட்சி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ப்ரிரிவுக்கும் பிராந்திய இணை/துணை ஆணையர் உள்ளனர். அனைத்து பிரிவும் தலா ஐந்து மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளன. தலைமை அலுவலகத்தில் 4 துணை ஆணையர்கள் உள்ளனர். இவர்கள் பணிகள், வருவாய் மற்றும் நிதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய பணிகளை மேற்பார்வை இடுகின்றனர். பிராந்திய துணை ஆனையர்கள் மாநகராட்சியின் அன்றாட பணிகளை மண்டலங்களில் அமல்படுத்துவர். மற்ற துறைபணிகள் தலைமை அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
Read the interview in English here.