போக்குவரத்து காவல் துறை Vs குடிமக்கள் : பொறுப்பு மற்றும் உரிமை
சமீபத்தில் போக்குவரத்து காவல் அதிகாரி லஞ்சம் கேட்டு ஒரு இளைஞரை அடித்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு அதன் தொடர்ச்சியாக காவல்துறை ஆணையர் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூறியது அனைவரும் அறிந்ததே.
போக்குவரத்து அதிகாரிகளுக்கும் ஓட்டுனர்களுக்கும் நடக்கும் இது போல சம்பவங்கள் புதிதல்ல. இதற்கு முன் வலை பதிவில் உலா வந்த வீடியோ ஒன்று, தலைகவசம் அணியாததற்காக காவல் துறை ஒன்று நபரை அடித்து உதைத்த விதத்தை சுட்டி காட்டியது.
இது போன்ற தருணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், நம் உரிமை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதன் மூலம் மேலும் இந்த நிகழ்வுகளை இனியும் நடக்காமல் தடுக்க முடியும்.
என்ன செய்ய வேண்டும்:
- சரியான அதிகாரியால் தான் நீங்கள் நிறுத்தப்பட்டுள்ளீர்களா என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதிகாரிகள் சீருடையில் இருப்பதோடு அவர்களின் பெயர் மற்றும் பக்கில் எண் (buckle number) நன்றாக தெரியும் படி உள்ளதா என்பதை கவனியுங்கள்.
- சென்னை உச்ச நீதிமன்றத்தின் ஆணை படி தலைகவசம் அணிதல் கட்டாயமாகும். அப்படி அணியாததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் அதற்கான சீட்டு வழங்கப்படும். இந்த சீட்டு அன்றைய இரவு பன்னிரெண்டு மணி வரை செல்லுபடியாகும்.
- பெண் ஒட்டுனர்களின் வாகனங்களை சோதனையிடும் பொழுது ஆண் அதிகாரியுடன் கூடுதலாக பெண் காவல் அதிகாரி இருத்தல் அவசியம்.
- ஓட்டுனர்கள் அசல் ஒட்டுனர் உரிமத்தை எல்லா நேரத்திலும் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. காப்பீடு மற்றும் பதிவு பத்திரமும் அவசியம். ஆனால், இவற்றின் அசல் ஆவணங்களை தான் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை.
- மே 2018 முதல், சென்னை காவல் துறை பணமில்லா பரிவர்த்தனத்தை மேற்கொண்டுள்ளது. இதன் படி அபராத தொகையை டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட் மூலமாகவோ, பேடிஎம், மாநகராட்சி ஈ சேவா மையத்தில் ஈ சலான் மூலமாகவோ, நீதிமன்றத்தில் அல்லது தபால் நிலையத்திலோ செலுத்தலாம். காவல் துறை அதிகாரி நிறுத்தும் பட்சத்தில் பணமாக செலுத்த கூடாது. அனைத்து ஸ்பாட் அபராதத்திற்கும் சலான் வழங்கப்பட வேண்டும்.
- நூறு ரூபாய்க்கு அதிகமான அபராதம் துணை ஆய்வாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரியால் மட்டுமே வழங்கப்படும்.
- வண்டி ஓட்டும் போது புகை பிடிப்பது, கைபேசியில் பேசுவது, குடித்து விட்டு வண்டி ஓட்டுவது மற்றும் சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் செல்வது ஆகியவற்றிர்காக ஓட்டுனர் உரிமம் பறிக்கப்படலாம். இந்த சூழலில் காவல்துறை அதிகாரி அதற்கான சலானை அவசியம் தர வேண்டும்.
- தேவையான உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டும் பொழுது போக்குவரத்து அதிகாரி உங்களின் வண்டியை நிறுத்தி வைக்கலாம். அதை அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். விடுவிக்கும் ஆணை வரும் வரையில் வண்டி உரிய பாதுகாப்பில் வைக்கப்படும்.
- வண்டி ஓட்டுனர் நிறுத்தி வைக்கப்படும் பொழுது, அவரை காவல் நிலையம் கூட்டிச் சென்று 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர் படுத்த வேண்டும்.
- காவல்துறை அதிகாரி உங்களை தவறாக நடத்தினால், மூத்த அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம்.
Translated into Tamil by Sandhya Raju.
Read the original in English here.