Translated by Sandhya Raju
60 வயதான அனிதா மற்றும் அவரின் 65 வயதான கணவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதும், இது அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவர்களுக்கு அமையவில்லை. “மார்ச் 15 அன்று நியூசிலாந்த்திலிருந்து நாங்கள் திரும்பினோம். எங்களுடன் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கும் தொற்று வரும் வாய்ப்பு உள்ளதை நாங்கள் அறிந்திருந்தோம்,” என்கிறார் அனிதா.
கோவிட் தொற்றை எதிர்கொண்டதை பற்றியும், தன் அனுபவத்தையும் அனிதா விவரிக்கிறார்.
தொற்றின் ஆரம்பம்
“நியூசிலாந்த் நாட்டில் தொற்று எண்ணிக்கை அந்த நேரத்தில் அவ்வளவாக இல்லை என்பதால் நாங்கள் நாடு திரும்பிய போது சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனாலும், எங்களின் கோட்டூர்புர வீட்டில் நாங்களே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். இரண்டு நாட்களுக்கு பிறகு எங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இந்த நாட்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. எனக்கு வெகு குறைவான அறிகுறியே தென்பட்டது. முதல் நாள், 100*F வெப்பம் இருந்தது, அடுத்த நாள் 99*F ஆக இருந்தது. இந்த இரண்டு நாட்களுமே மருத்தவரின் அறிவுரைபடி பாரசெடமால் மாத்திரை எடுத்துகொண்டு அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாகவே இருந்தேன். வயிறு பிரச்சனை மற்றும் சோர்வாகவும் உணர்ந்தேன், ஆனால் இந்த நிலை இரண்டு நாள் மேல் நீடிக்கவில்லை.
என் கணவருக்கு, ஒரு வாரமாக 100-101* F என்ற நிலையிலேயே வெப்பம் இருந்தது. தொற்று ஆரம்பக்கட்டத்தில், மூக்சு திணறல் போன்ற சுவாச பிரச்சனை இருந்தால் மட்டுமே அடுத்த நிலை சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எப்பொழுதும் போல் ரத்த அழுத்ததிற்கான மாத்திரைகள் எடுத்த போதும் அவரது ரத்த அழுத்தம் தொடர்ந்த்து குறைய ஆரம்பித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பொழுது தான் அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டார். மார்பக எக்ஸ்-ரே எடுத்ததில், பிரச்சனை இருப்பதை உணர்ந்தோம். கோவிட் தொற்றுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டது, மூன்று நாட்களுக்கு பின் நன்றாக உணர ஆரம்பித்தார். தொடர் சோதனையில் இரண்டு முறையும் தொற்று இல்லை என்பது உறுதியானால் தான் மருத்தவமனையிலிருந்து விடுவிக்க முடியும் என்பதால், ஒரு வாரம் அங்கேயே இருந்தார்.
சென்னை மாநகராட்சியின் ஈடுபாடு
தொற்று உறுதியானதும், சென்னை மாநகரட்சி ஊழியர்கள் அதிக கவனம் எடுத்துக்கொண்டனர். முதலில், எங்கள் பகுதியிலும் வீட்டிலும் கிருமி நாசினி தெளித்தனர். கோட்டூர்புரம் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றியது பலருக்கு அசௌகரியமாக இருந்தாலும், தேவையான நடவடிக்கையாக இருந்தது. ஒரு வீட்டில் மட்டுமே தொற்று என்ற போதிலும் அவர்கள் அஜாக்கிரதையாக விடவில்லை.
எங்களுடைய உடல் நலத்தை விசாரித்து தினந்தோறும் மாநகராட்சியிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. மன நலம் குறித்தும் மன நல ஆலோசகர்கள் விசாரித்தனர்.
எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விவரங்களையும் மாநகராட்சியினர் சேகரித்து, அவர்களையும் தனிமைப்படுத்தி, அவர்கள் வீட்டின் வெளியில் தகவலை வெளியிட்டனர்.
கோவிட் பிறகான வாழ்க்கை
எங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர், அவர்கள் கவலையடைந்தனர். நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டதும், எங்கள் பணியாளர்களையும் அவர்களின் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கச் சொன்னோம். எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது, சோதனையில் தொற்று இல்லை என தெரிந்தது.
கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்கள் என அறிந்ததும், எங்களுடன் உரையாடுபவர்கள் அச்சமாக உணர்வதை காண முடிகிறது. தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகும் எங்களிடமிருந்து தொற்று பரவக்கூடும் என அச்சப்படுகின்றனர். எங்கள் வீட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டு வெளியே தகவல் ஒட்டப்பட்டதும், அவரையும் தொற்று வந்தவரைப்போல் பிறர் நடத்தியதாக கூறினார்.
புது தொற்று என்பதாலும், உலகம் முழுவதும் இந்த தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பார்க்கும் போதும் இந்த அச்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்பதையே இது காட்டுகிறது.
சுற்றியுள்ளவர்களின் ஆதரவு
எங்கள் பகுதி வாட்ஸ்அப் குழுவில் நாங்கள் உள்ளதால், அதன் மூலம் பகுதிவாசிகள் ஆதரவு அளித்தனர். அவ்வப்பொழுது அத்தியாவசிய பொருட்கள் தேவை குறித்து கேட்டறிந்தனர். நாங்கள் ஒதுக்கப்பட்டதாக உணரவில்லை. தொற்று பிறகான முதல் சில நாட்களில் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை – தற்பொழுது தான் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளியே வருகிறோம், மொத்தத்தில் நன்றாகவே உணர்ந்தோம்.
சிகிச்சையின் பின் விளைவுகள்
என் கணவரின் பசி முற்றிலும் போய்விட்டது. உடல் நலம் பாதிப்பில் ருசி மற்றும் நுகரும் தன்மைபோய்விட்டது. இது முதல் கட்ட அறிகுறியாக இருந்தது. மருத்துவமனையில் இருந்த பொழுது 4 கிலோ எடை இழந்ததோடு, தொற்று இல்லை என உறுதியான பிறகும், உடல் அசதியாகவும் சோர்வாகவும் உணர்ந்தார்.
இந்த தொற்று உடல் நலத்தை வெகுவாக பாதிப்பதால், முன்னதாகவே விரைவாக கண்டறிவது நல்லது. தொற்றின் கடைசி தீவிர நிலையில் தான் சுவாசக் கோளாறு தெரிய வரும். சிகிச்சை முடிந்து பத்து நாள் பிறகு தான் உடல் சற்றே தேற தொடங்கியது. மீண்டும் எடையை கூட்டும் முயற்சியில் இருக்கிறார், பத்து நாட்களுக்கு ஒரு முறை முன்னேற்றத்தை காண முடிகிறது, ஆனால் பழைய நிலையை அடைய அதிக காலம் ஆகும் என்பது புரிகிறது.
எதிர்காலம்
தொற்றுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே நமக்கான தடுப்பு மருந்து. நாங்கள் இருவரும் தினமும் உடற்பயிற்சி செய்கிறோம், கூடவே உணவில் மிளகு, மஞ்சள் சேர்க்கிறேன்.
வீட்டில் ஒரு ஆக்ஸிமீட்டர் வைத்துக் கொள்வது நல்லது, இது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை காட்டும். எந்த அறிகுறி இல்லையென்றாலும், தொற்று உள்ளதா என அறிந்து கொள்ள இது உதவும்.
இறுதியாக, முக கவசம் அணிய வேண்டும், எப்பொழுதும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவும், முடிந்த வரை வீட்டிலுள்ளேயே இருக்க முயற்சி செய்யவும். தொற்று பாதித்த பல பேர் விரைவாக குணமடைந்து வருவதை நாம் பார்க்கிறோம், ஆகவே தன்னம்பிக்கையுடன் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் இதனை கடந்து செல்ல முடியும்.
[Read the original article in English here.]