Translated by Sandhya Raju
நீண்ட வரிசையில் வண்ணமிகு குடங்கள், காத்திருகக்கும் மக்கள் கூட்டம், இவை 2019 கோடை காலத்தில், சென்னையின் பல வீதிகளில் காணப்பட்ட காட்சி. அதன் பிறகு, நல்ல மழை, போதிய நீர் சேகரிப்பு ஆகியவை இருந்தாலும், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் தண்ணீர் விநியோகம் என்னவோ மாறா காட்சியாகவே உள்ளது.
தண்ணீர் பிரச்சனை எல்லா காலங்களிலும் எங்களுக்கு உள்ளது, கோடை காலத்தில் இன்னும் மோசமாக இருக்கும்” என்கிறார் புளியந்தோப்பில் வசிக்கும் 32 வயது கமலா. அதிகாலை 5 மணிக்கு தன் வேலையை தொடங்கும் இவர் ஐந்து பேருக்கு சமைத்து, மூன்ரு பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்ப வேண்டும். காலை 9.30 மணிக்கு தண்ணீர் லாரி சத்தம் கேட்டதும் குடத்துடன் சாலைக்கு செல்கிறார்.
“இது தான் எனது தினசரி வேலை, தண்ணீர் லாரி வரும் நேரத்தை பொருத்தே எனது மற்ற வேலைகளை செய்ய வேண்டும். நகரத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனை இது”
தண்ணீரை சுற்றி உழலும் வாழ்க்கை
இது செலவை கடந்து நேர விரயம், ஊதிய இழப்பு, தவற விட்ட வாய்ப்புகள், குறுகிய மாடிகளில் தண்ணீர் குடங்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள் என பல விஷயங்களை உள்ளடக்கியது,
“தண்ணீர் லாரி தாமதமாக வந்தால், அன்று வேலைக்கு செல்ல முடிவதில்லை, இதனால் ஒரு நாள் சம்பள இழப்பு. இதற்காக தண்ணீர் பிடிக்க முடியாவிட்டால், சமைக்க, துவைக்க, குடிக்க தண்ணீர் இருக்காது.” என கூறும் கமலா, பாரீஸ் கார்னரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் விற்பனையாளராக பணி புரிகிறார்.
சில சமயம் சுத்தமாக தண்ணீர் இருக்காது. அது போன்ற சமயங்களில் என் காணவரிடம் தனியாரிடமிருந்து தண்ணீர் வாங்க சொல்வேன்.இது பல வேளைகளில் குழந்தைகள் முன் எங்களிடையே சண்டையை உருவாக்கும். தண்ணீர் இல்லையென்றால் எங்கள் மொத்த குடும்பத்தினரின் மன நிம்மதியே பாதிப்புக்கு உள்ளாகும்” என அவர் கூறுகிறார்.
Read more: Seven reasons why Chennai should have seen this water crisis coming
“குழந்தை பிறப்பின் போது அறுவை சிகிச்சை செய்தவர்கள், அல்லது வேறு உடல் நல காரணங்களுக்காக அதிக எடை தூக்க முடியாதவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களின் கணவன்மார்கள் காலை சீக்கிரமாகவே வேலைக்கு சென்று விடுகிறார்கள். தண்ணீர் லாரியும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராது. அது வரும் போது நாங்கள் பிடித்துக் கொண்டு இரண்டு மூன்று மாடி ஏற வேண்டும்: என இதனால் ஏற்படும் உடல் பிரச்சனைகள் குறித்து ஜீவா நகரில் வசிக்கும் ஏ. கலைவாணி கூறினார்.
புளின்யந்தோப்பு வியாசர்பாடி ஜீவா நகர், கேவி பார்க், வஉசி நகர், கன்னிகாபுரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் லாரி இரண்டு நாளுக்கு ஒரு முறை தான் வரும். நகர் பகுதிகளில் தினந்தோறும் தனி நபருக்கு 135 லிட்டர் தேவை என்ற மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் பரிந்துரைக்கு மாறாக, இந்த பகுதிகளில் உள்ல மக்களுக்கு இரண்டு நாளுக்கு ஒரு முறை வெறும் 1000 லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
“எங்கள் வீடுகளுக்கு தனி தண்ணீர் இணைப்புகள் இல்லை. நிலத்தடி நீர் வசதியும் இல்லை. லாரி தண்ணீர் மட்டுமே எங்களுக்கு உள்ள ஒரே நீராதாரம்.” என்கிறார் பட்டாளத்தில் வசிக்கும் கவிதா.
ஒரிரு நாள் தண்ணீர் லாரி வரவில்லை என்றால், ஒரு கி.மீ தூரத்தில் உள்ள எல்லை அம்மன் கோவில் தெருவுக்கு சென்று மூன்று சக்கர வண்டியில் தண்ணீர் எடுத்து வர வேண்டும். புளியந்தோப்பில் உள்ள மக்களுக்கும் இதே நிலை தான்.
தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் டாங்கர்கள் மற்றும் கேன்கள்
லாரி தண்ணீரும், அக்கம்பக்கத்திலிருந்து கிடைக்கும் தண்ணீரும் தான் சமைக்கவும், துவைக்கவும், குடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. “இங்கிருக்கும் பலருக்கு மெட்ரோ தண்ணீர் குடித்து பழகிவிட்டது. ஆனால், குழந்தைகாளுக்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால் தண்ணீர் கேன் வாங்குகிறோம்” என்கிறார் புளியந்தோப்பை சேர்ந்த மோகன்.
இதனிடையே, கொடுங்கையூர், ஓட்டேரி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.” கலப்பு நீரால், சுமார் ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் பகுதியில் பாதி பேர் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டனர். மருத்தவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னரே குணம் அடைந்தனர். இதனாலேயே தாண்ணீர் கேன் வாங்குகிறோம்.” என்கிறார் மோகன்.
இங்குள்ள பெண்கள் வீட்டு வேலை, சுகாதாரப் பணிகள், சந்தைகளில் உதவியாளர்கள், தற்காலிக உணவுக் கடைகளை நடத்துபவர்கள் மற்றும் விற்பனையாளர்களாக உள்ளனர். பெரும்பாலான ஆண்கள் கட்டுமானப் பணி, தச்சர்கள், பிளம்பர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களாக உள்ளனர்.
பெண்காளின் சராசரி சம்பளம் சுமார் ₹7000 ஆகவும், ஆண்கள் சராசரியாக மாதம் ₹15000-ம் ஈட்டுகின்றனர். ஆனால் மாதம் முழுவதும் பணி இருக்கும் என சொல்ல முடியாது. இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு கூட சரியான வேலை கிடைப்பதில்லை, பெரும்பாலும் உணவு டெலிவரி வேலையில் இவர்கள் உள்ளனர், என்கிறார்கள் இங்கு வசிப்பவர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் கேன்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து விட்டது. சம்பாதிக்கும் பணத்தில் ₹1500 – 2000 இதற்கே போய்விடுகிறது. ஒரு கேனுக்கு 30-35 செலவழிக்கும் போது இது பெரிதாக படுவதில்லை.” எனக் கூறும் மோகன், கோடை காலங்களில் ₹5 முதல் 10 அதிகமாவதாக கூறுகிறார்.
Read more: Where does the water in your tap come from?
மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் விநியோகம் இல்லை
கடந்த ஆண்டு பொழிந்த மழையில் நீர் தேக்கத்தில் போதிய அளவு தண்ணீர் சேமிப்பு இருந்ததால் கோடை கால தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடிந்தது. ஆனால், விளிம்பு நிலை மக்களின் தண்ணீர் தேவை மற்றும் விநியோகம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பொருத்து நகரம் முழுவதுமுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. “காலப்போக்கில் குழந்தைகள் வளர்ந்து அவர்களுக்கும் குடும்பங்கள் உருவாகின. ஆனால், தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் அகற்றல் ஆகிய கட்டமைப்பு இந்த வளர்ச்சிக்கு ஏற்ப மாறவில்லை.” என்கிறார் சமூக ஆர்வலர் இசையரசு.
தி. நகரில் இது போன்ற ஒரு குடியிருப்பில் வசிக்கும் அமிர்தம், தண்ணீருக்காக எங்களுக்குள் போட்டி ஏற்படுகிறது. “நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்கு சாலையில் நடந்து சென்றால், குடிசையில் இருந்து பெண்கள் கை பம்ப்பில் தண்ணீர் எடுப்பதைக் காணலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 3 அல்லது 4 பானைகளுக்கு மேல் கிடைப்பதில்லை மற்றும் தண்ணீரை ரேஷன் செய்ய வேண்டும். வறட்சி காலங்களில், தண்ணீருக்காக குடியிருப்புவாசிகளுக்கிடையே சண்டைகள் ஏற்படுவதால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.”
புறநகரில் அமைந்துள்ள மீள்குடியேற்ற காலனிகளில் வசிப்பவர்களின் நிலைமை இதை விட மோசமாக இருக்கலாம். “நகரத்தில் வாழும் குடியிருப்பு வாசிகள் தண்ணீர் கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர். ஆனால் இதுவே மீள்குடியேற்ற காலனிகளில் வசிப்பவர்கள் போராட்டம் மேற்கொண்டால் கண்டு கொள்ளப்படுவதில்லை.” என்கிறார் இசையரசு.
.விநியோகம் வழக்கம் போல் சீராக உள்ளதாகவும், தட்டுப்பாடு இல்லை என்றும் குடிநீர் வாரிய அதிகார்கள் நம்மிடம் தெரிவித்தனர். கலப்பட நீர் குறித்து கேட்ட போது, பொது மக்கள் புகார் எழுப்பினால் செரி செய்யப்படும் என்றார்கள். ஆனால் சீரான தண்ணீர் விநியோகம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை.
தேவையான நடவடிக்கை
“இந்தியாவின் பிற நகரங்களோடு ஒப்பிடும் போது சென்னை போதிய அளவு மழை பெறுவதால், தண்ணீர் தட்டுப்பாடுள்ள நகரம் என முதலில் கூறக்கூடாது. ஆனால், வறட்சி மற்றும் வெள்ளம் தனித்தனியான இரண்டு பிரச்சனைகளாக அணுகுவது தான் பிரச்சனை.”என்கிறார், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (எம்ஐடிஎஸ், அடையாறு) ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் எஸ் ஜனகராஜன். “வறட்சி மற்றும் வெள்ளத்தை பிரித்து அதற்கான தீர்வுகளை காணாதீர்கள். வறட்சியை சமாளித்தால், வெள்ளத்தையும் சமாளிக்க முடியும். வறட்சி காலத்தில், அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரி சுத்தம் செய்யப்படவேண்டும். இப்படி செய்யும் போது, மழைக்காலத்தில் நீரை சேமிக்க முடியும்” என்கிறார்.
மஹிந்திரா-டெரி செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE), மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் மற்றும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் (TERI) ஆகியவற்றின் கூட்டு ஆராய்ச்சி முயற்சியால் நடத்தப்பட்ட ஆய்வில், சென்னை பெருநகரப் பகுதியிலுள்ள (CMA) நீர் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
- மழைநீர் சேகரிப்பு, கழிவு நீர் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு போன்ற நீர் பாதுகாப்பு நடைமுறைகளை பரப்புதல் மற்றும் பின்பற்றுதல், விரைவான மக்கள்தொகை மாற்றங்களால் அதிகரித்து வரும் நீர் தேவையை பூர்த்தி செய்தல்
- இயற்கையான மற்றும் நகர்ப்புறமுள்ள நீர் ஓட்ட அமைப்புகளை வலுப்படுத்த, பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் நடவடிக்கைகளை வடிவமைத்தல்
- விரிவான ஆய்வுகள் மூலம் நிலத்தடி நீர் இருப்பு, பிரித்தெடுத்தல் மற்றும் பயன்பாடு தொடர்பான தரவு இடைவெளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல்
- நீர் நிர்வாக அமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்; திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டங்கள் மூலம் வெளிப்படையான மற்றும் பங்கேற்பு முறையை நிறுவுதல்
தனிநபர் நுகர்வு பற்றிய தரவுகளின் பற்றாக்குறை மற்றும் பல குடியேற்றங்களின் முறைசாரா தன்மை, எதிர்கால விநியோகத்திற்கான திட்டமிடல் சாத்தியமற்ற செயலாக ஆக்குவதால், தண்ணீர் விஷயத்தில் பல இக்கட்டான சூழ்நிலையை சென்னைவாசிகள் சந்திக்க வேண்டியதாக ஆக்குகிறது.
பரிந்துரைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு, கீழ்நிலை அணுகுமுறையுடன் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை (IWRM) வளர்ச்சி, நீர் நிர்வாக கட்டமைப்பை பரவலாக்குதல் மற்றும் நீர் தொடர்பான தரவுத்தளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
[Read the original article in English here.]