Translated by Krishna Kumar
தேன்மொழி (புனை) அவள் பெயர், பாந்தியன் சாலையில் ஒரு துப்புரவு பணியாளி. ஒரு தேய்ந்து போன துடைப்பம், அலுமினிய கூடை மற்றும் கையுறைகள், அவளின் ஆயுதங்கள் . அவற்றின் நிலை, அவள் சென்னையின் நெருக்கடியான சாலைகளை சுத்தம் செய்யும்போது எதிர்கொள்ளும் இன்னல்களின் பற்பல கதைகள் சொல்லும்.
அன்று, நவம்பர் 28ஆம் தேதி, ஒரு புதன் கிழமை சற்று தொய்வடைந்து பெருக்கிக்கொண்டிருக்கும்போது பேசுகையில் “அடுத்தமாதம் இந்த வேலையில் நான் இருப்பேனா? என்று சந்தேகம்” என்று கூறி சலித்து பெருமூச்சு விட்டாள். சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்யப்பட்ட 8,246 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களில் ஒருவர் அவர். நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் வேலை பார்த்தால் ரூ 362 கிடைக்கும். இதில் வார விடுமுறை கிடையாது, PF கிடையாது. தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு மண்டலங்களில் குப்பை மேலாண்மையை தனியார்மயப்படுத்தும் திட்டத்தால் தேன்மொழி போன்ற பலர் மனமுடைந்துள்ளனர். தனியார்மயம் ஆகிவிட்டால் ஏற்படப்போகும் வேலையில்லா நிலையை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஏற்படும் என்று கருதி, தனியார் ஏலம் எடுக்கும் நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் சீற்றம்
ஏற்கனவே மாநகரின் 15 மண்டலங்களில் 3 மண்டலங்கள் – தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், மற்றும் அடையாறு – திடக்கழிவு மேலாண்மை Ramky Enviro Engineers இடம் ஒப்படைத்து, தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மேலும் 8 மண்டலங்களுக்கு டெண்டர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை வேலைகளை தனியார்மயமாக்க 1546 கோடி மதிப்புக்கு டெண்டர் விடுவதாக முடிவெக்கப்பட்டுள்ளது என்கிறார் பி.ஸ்ரீநிவாசலு , நடத்தாளர் ,CITU.
ராம்கி நிறுவனத்தின் வேலைப்பாட்டில் முழு திருப்தி இல்லாவிட்டாலும், தனியார் தான் மாநகரத்தின் திடக்கழிவு மேலாண்மைக்கு சிறந்தது என்ற எண்ணத்தில் உள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள்.”துப்புரவு பணியாளர்கள் வேலையை கண்காணிப்பது கடினமாக உள்ளது, ஒப்பந்தக்காரர் மேற்பார்வை இல்லாவிட்டால் சரியாக வேலை செய்வதில்லை,மேலும் அடிக்கடி வேலை விடுப்பு எடுப்பது போன்றவை தவிர்க்கப்படும்.” என்கிறார் மாநகராட்சி சார்ந்த ஒரு அதிகாரி.தனியார்மயமாக்கிவிட்டால் குப்பை எடுக்கும் செயல்முறை சீராகும்,துப்புரவு பணியாளர்களை அவர்கள் வேலைவாங்கவேண்டிய அவசியமும் இருக்காது.
“ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை பாதுகாப்பு எங்கே? எங்கள் வேலை நீடிக்கும் என்பதற்கு ஒரு உத்திரவாதமும் தரவில்லை. மாநகராட்சியிலிருந்து வந்த சுற்றறிக்கை, தேவையிருந்தால் மட்டுமே வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்கிறது”, என்று கூறுகிறார் பி ஸ்ரீனிவாசுலு.
ஆனால், தனியார்மயமாக்கப்படுகிறதோ இல்லையோ, 8,246 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தர அமைப்புக்குள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னோக்கி செல்லும் வழி: தனியார்மயமாக்கலா ? அல்லது குடிமக்கள் பங்கா ?
எனவே தனியார்மயமாக்கலால் குடிமக்கள் எவ்வாறு பயன்பெறுவர்? சென்னையில், நாட்டிலேயே அதிகமான குப்பை உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றும் ஸ்வச்ச் சர்வேக 2018 ல் 100 வது இடத்தில் வகிக்கிறது.தனியார்மயமாக்குவதால் சுத்தம் மேம்படும் வாய்ப்பு உள்ளதா? தனியார் ராம்கி செயற்பாட்டின் அனுபவம் என்ன?
“ராம்கி செயல்பாடுகளை கழிவு சுத்திகரிப்பு செயல்முறையில் சராசரிக்கு கீழ் மற்றும் குப்பை சேகரிப்பில் சராசரி என்று நான் மதிப்பிடுவேன். தனியார்மயமாக்கல் போன்ற ஆடம்பரமான வாசகங்களைத் தவிர, கழிவு மேலாண்மை அதே நிலையில் தான் உள்ளது; நகராட்சி திட கழிவு (MSW) விதிகள், 2016 பின்பற்றுவதில்லை”, என்கிறார் அடையாறு வாசியும் நம்ம ஊரு பவுண்டேஷன் நிறுவனர் பி. நடராஜன்.
ராம்கி கட்டுப்பாட்டில் இருந்த பெசன்ட் நகரில், குப்பை மேலாண்மையில் வர்க்க பாகுபாடு காண்பதாக புகார்கள் இருந்தன – மேல்தட்டு மக்கள் இருந்த இடங்கள் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டன, மீன்பிடி கிராமங்கள் சுத்தம்செய்யாமல் அப்படியே விடப்பட்டு இருந்தன. திட கழிவு விதிகளை சீராக பின்பற்றாததையும் பலர் சுட்டிக்காட்டினார் . அம் மண்டலத்தில் வசிப்பவர்கள் குப்பை பிரித்தல் மற்றும் பதம் செய்யும் முறை எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று விவரித்தனர்.
“மீன்பிடி கிராமங்கள் மட்டுமல்ல, ஸ்ரீ ராம் நகர் போன்ற உட்பகுதி சாலைகளிலும் குப்பை அகற்றப்படமல் நாறிக்கொண்டிருக்கிறது. தனியார்மயமாக்கலுக்கு பின் எல்லாவற்றையும்விட பெரிய சவாலாக இருப்பது அதிகாரிகளை அணுகுவதில் தான்.நங்கள் மண்டல அதிகாரியை அணுகினால், அவர் ராம்கி நிறுவனத்திடம் புகார் வைக்கிறார் — முழு செயல்முறையும் கணிசமான நேரம் பிடிக்கிறது”, என்கிறார் அடையாறில் குடியிருக்கும் பி . விஜயலக்ஷ்மி
ராம்கி யாரிடமும் நற்பெயரைப் பெற்றிருக்கவில்லை. ஜூன் 1 முதல் 26 வரை நகர்ப்புறத்தில் இருந்து பெறப்பட்ட 12,938 திட கழிவு மேலாண்மை புகார்களில் 40% க்கும் அதிகமானவை அவர்களை பற்றிய புகார் தான், என்று சென்னை கார்ப்பரேஷனின் புள்ளிவிவரங்களை வெளிப்படுத்துகின்றன.ராம்கியிலுருந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், ஆட்கள் தட்டுப்பாடுதான் குப்பை சீர் செய்யப்படாததற்கு காரணம் என கூறுகின்றனர்.
மேலும் பேசுகையில் “ராம்கி சேவைகளில் கணிசமான குறைபாடுகள் இருந்தாலும், மேற்கொண்டு வரும் தனியாரிடம் இது நடக்காது. டெண்டர் விண்ணப்பத்தில் சேவை தரம் பற்றிய குறிப்புக்களும் சேர்க்கப்படும், அவைகளை நாங்கள் கண்காணிப்போம்”,என்றார் மாநகராட்சி அதிகாரி.
நடராஜனின் கோணத்தில் குப்பைகளை கொட்டும் மக்கள் தனியார்மயமாக்கபட்ட பிறகு குப்பை மேலாண்மையில் எந்த
வித்தியாசத்தையும் காணமாட்டார்கள். மாறாமல் இருக்கப்போவது ஒன்று தான் – குப்பை கிடங்குகளில் உள்ள, நிலத்தடி நீரையும், காற்றையும் மாசுபடுத்திக்கொண்டிருக்கும் பிரிக்கப்படாத குப்பை தான்.
“அரசு – தனியார் கூட்டாண்மையில் வரும் தனியார் பின்பற்றும் முறைகளை பற்றி பற்பல கேள்விகள் எழுகின்றன. கழிவு சேகரிப்பு மதிப்பீடு செய்ய ஒரு தணிக்கை இருக்குமா? மக்காத கழிவுகளைச் சேகரிக்க ஒரு செயற்திட்டத்தை எதிர்பார்க்கலாமா? மக்களை குப்பையை பிரிக்க வைக்க முடியுமா?” என்று நடராஜன் கேட்கிறார்.
சென்னை குடிமக்களில் ஒரு சிறு சதவிகிதம் தான் குப்பையை பிரிக்கிறார்கள், தனியார்மயமோ இல்லையோ ஆயிரம் டன் கணக்கில் பிரிக்கப்படாத குப்பைகள் குப்பை கிடங்குக்கு செல்கின்றன.
மேலும் குப்பை மேலாண்மை நிறுவனங்கள் குடிமக்கள் மற்றும் இயற்கை சார்ந்த தொண்டு நிறுவனங்களால் கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும் அப்போது தான் நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படும். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றல் தனியார்மயமாக்கல் எல்லாம் ஒரு பித்தலாட்டம் தான் என கருதுகின்றனர் நடராஜன்.
சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்துப்படி மக்கள் தங்கள் குப்பையை பிரித்தெடுக்க மற்றும் வேண்டும். இதுதான் குப்பை மேலாண்மை தொடர்பான விஷயங்களுக்கு ஒரு முழுமையான தீர்வு. “குப்பைக்கிடங்குகளில் கழிவுகளை குறைப்பதற்கான திட்டம் குடிமக்களின் ஈடுபாட்டோடு மட்டுமே நிறைவேறும், குப்பை நமது பொறுப்பு என்பதை மக்கள் உணர வேண்டும்”, என்கிறார் ஒரு ஆர்வமுள்ள உள்ளூர் வாசி.
மறுபுறம், துப்புரவு தொழிற்சங்க உறுப்பினர்கள் தனியார்மயமாக்குவதற்கு முயற்சித்தால், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக உள்ளனர். “நாங்கள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டிருக்கிறோம்,எங்கள் வேலையை எங்களிடமிடமிருந்து பறிக்க நினைப்பது அநியாயம் இல்லையா? எங்கள் உரிமைகளுக்காக போராடுவோம்”, என்கிறார் ஸ்ரீனிவாசலு.